
புராதனமான அந்த நாள்காட்டியை அவன் பரணில் இருந்து எடுத்தான். அது எப்போது எப்படி அங்கே வந்தது என்று தெரியவில்லை. அப்பாவோ, அவரது மூதாதையர் யாரோ உபயோகித்திருக்க வேண்டும். சுடுமண் பலகையில் அந்நாள்காட்டி எழுதப்பட்டிருந்தது. எழுத்துகளுடன் சில சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. விளக்கப்படங்களாக இருக்கலாம் என்று நினைத்தான். பலகை பெரும்பாலும் சிதைந்திருந்தது. சந்தேகமின்றி ஒரு தொல்பொருள். ஜாக்கிரதையாக அதனைக் கீழே இறக்கினான். நெடி உக்கிரமாக நாசியைத் தாக்கியது. தும்மல் வந்தது. ஒரு துணியால் முகத்தை மூடிக்கொண்டு நன்றாகத் தட்டி, சுத்தம் செய்தான். கூர்ந்து படித்துப் பார்க்க முயற்சி செய்தான். மொழி புரியவில்லை. தவிர, எழுத்துகள் மங்கிப் போயிருந்தன. தனக்குத் தெரிந்த மொழி வல்லுநரிடம் அதைக் கொண்டு சென்று, என்ன எழுதியிருக்கிறது என்று படித்துச் சொல்லக் கேட்டான். ஆர்வமுடன் அவர் அதை ஆராய்ந்தார். பிறகு சொன்னார், “இது நமக்குப் பின்னால் வந்த மாயன் நாகரிக காலத்தில் உருவாக்கப்பட்ட நாள்காட்டி. உலக அழிவுக்கான தேதி இதில் குறிக்கப்பட்டிருக்கிறது.”
“அப்படியா? அந்தத் தேதியில் உலகம் அழிந்ததா?” ஆர்வம் பொங்கக் கேட்டான்.
“தெரியவில்லை. புதைக்கப்பட்ட பிறகு நான் பேப்பர் படிப்பதை நிறுத்திவிட்டேன்.”
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.