இது ஒரு பிரச்னை. எப்போதும் இருப்பதல்ல. இப்போது சிறிது காலமாகத்தான் இவ்வளவு ஞாபக மறதி. வயதானால் நினைவுகள் ஒவ்வொன்றாக உதிரும் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அப்படியொன்றும் தனக்கு வயதாகவில்லை என்று உடனே நினைத்துக்கொண்டான். இருந்தாலும் மறந்துவிடுகிறது.
நேற்றுக் காலை பல் துலக்கிய பின்பு பிரஷ்ஷை அதன் வழக்கமான இடத்தில் வைக்காமல் எடுத்து வந்து டிவி ஸ்டாண்ட் அருகே வைத்துவிட்டான். மறுநாள் நெடுநேரம் பிரஷ்ஷைத் தேடிக்கொண்டே இருந்துவிட்டுப் பிறகு விரலால் பல் துலக்கும்படி ஆனது.
அன்றைக்கு அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் ஒருத்திக்குப் பிறந்த நாள் என்று முந்தைய தினமே ப்யூன் தகவல் சொன்னான். அவளுக்கு மகிழ்ச்சி தரத்தக்க வகையில் திடீரென்று கேக் வெட்டிக் கொண்டாட முடிவு செய்திருப்பதாக அவன் சொன்னது பிடித்திருந்தது. இன்ப அதிர்ச்சிகள் பிடிக்காதோர் இருக்க முடியாது. எதிர்பாராத கேக்குக்கு எல்லோருடனும் சேர்ந்து அவனும் பணம் போட்டான். இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவளுக்குத் தான் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பரிசளிக்கலாம் என்று தோன்றியது. பணிக்குச் சேர்ந்த நாளாகப் பெரிதாக அவளுடன் பேசியதில்லை. அவளுக்கு அவளது வேலை. அவனுக்கு அவனது வேலை. ஒரே அறையில் வேறு வேறு உலகத்தில் வாழ்பவர்களிடையே சொற்களுக்கு அதிகம் இடமிருப்பதில்லை. தெரிந்த ஒருத்தியை நட்பாக்கிக்கொள்ள அந்த எதிர்பாராத பரிசு உதவும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் மறுநாள் அது மறந்து போனது. அலுவலகத்தில் கேக் வெட்டும்போதுதான் நினைவுக்கு வந்தது. மிகவும் சோர்ந்து போனான்.
வேறொரு சமயம் அவனது அப்பாவின் திதி நாள் வந்தபோது அவன் டூரில் இருந்தான். சடங்கு சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை கிடையாது அவனுக்கு. ஆனால் அவன் தந்தைக்கு அது நிறையவே இருந்தது. திதி என்பதென்ன. இறந்தவர் திருப்திக்குச் செய்வதல்லவா? இறந்த பின்பு ஒருவருக்குத் திருப்தி அல்லது திருப்தியின்மை எல்லாம் இருக்குமா என்று தெரியாது. எல்லோரும் சொன்னார்கள். எனவே, அவர் இறந்த மறு வருடம் முதல் ஒழுங்காக அதனைச் செய்து வந்தான். அந்த முறை டூரில் இருக்க நேர்வதால் ஏதேனும் ஒரு நீர் நிலைக்குச் சென்று யாராவது ஒரு ஐயரை வைத்துத் திதி கொடுத்துவிடு என்று தெரிந்தவர்கள் சொல்லி அனுப்பியிருந்தார்கள். ஒருவேளை அது முடியாமல் போனால் யாராவது ஒரு ஏழை அல்லது பிச்சைக்காரர் அகப்பட்டால் ஒரு வேட்டி துண்டுடன் இரண்டு வாழைக்காய்களை வைத்துக் கொடுத்துவிடும்படியும் சொன்னார்கள்.
இரண்டுமே முடியாமல் போய்விட்டது. குறிப்பிட்ட நாள் விடிந்தது முதலே அவனுக்கு வேலை கழுத்தைப் பிடித்தது. அப்பாவின் திதியை மறந்து அவன் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தான். தவிரவும் திதி தினத்தன்று தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்த அனைத்தையும் அவன் அன்று உண்டிருந்தான். இரவு இது நினைவுக்கு வந்தபோது துக்கம் தாளாமல் சுவரில் முட்டிக்கொண்டு கதறித் தீர்த்தான்.
இது ஒரு வியாதியா, அல்லது இது மட்டும்தான் வியாதியா என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஏனெனில், ஞாபகங்களைப் போலவே அவனுக்கு நகமும் அடிக்கடி இப்படித்தான் உதிர்ந்துவிடும். நகம் மட்டுமல்லாமல் தலைமுடியும். ஒருநாள் காலை கண் விழித்து எழுந்ததும் வழக்கம்போலத் தனது உள்ளங்கையைப் பார்த்தான். பளிச்சென்று மூன்று ரேகைகள் எப்போதும் இருக்கும் அதில் அன்றைக்கு இரண்டு ரேகைகள் மட்டுமே இருந்தன. பதறி எழுந்து போர்வையை விலக்கித் தேடியபோது, உள்ளங்கையில் இருந்து விழுந்த ரேகை படுக்கையில் கிடந்ததைக் கண்டான். சிறிது ஆசுவாசமாகி எடுத்துப் பொருத்திக்கொண்டான்.
என்ன பிரச்னை என்றால் எல்லா சமயத்திலும் இப்படி உதிர்வது உடனே கிடைத்துவிடுவதில்லை. அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குத் திருமணம். அலுவலகத்தில் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய பெண். அன்றைக்கு அவளுக்குத் தர மறந்து போன பரிசுப் பொருளை இன்று கண்டிப்பாகச் சேர்த்துத் தந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். மறக்காதிருப்பதற்குத் தனது மொபைல் போனில் ரிமைண்டரும் போட்டுக்கொண்டான்.
நல்லவேளை மறக்கவில்லை. மறுநாள் அவள் திருமணத்துக்குக் கிளம்பும்போது பரிசுப் பொருள் அங்காடிக்குச் சென்று இரண்டு அற்புதமான பரிசுகளை வாங்கித் தனித்தனியே பேக் செய்துகொண்டான். அங்கிருந்து ஆட்டோ பிடித்து நேரே திருமண மண்டபத்துக்குப் போனான். அலுவலக சகாக்கள் அனைவரும் வந்திருந்தார்கள். பெரும்பாலானோர் அவரவர் மனைவியுடனும் சிலர் குழந்தையுடனும்கூட வந்திருந்தார்கள். எப்போதும் அவனிடம் சிடுசிடுக்கும் அலுவலக மேலாளர்கூட ‘நீ ஏன்யா இன்னும் ஒண்டிக்கட்டையாவே இருக்க?’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார்.
திருமணம் சிறப்பாக நடந்தது. அத்தனை பெரிய கூட்டத்தை அவன் பார்த்ததில்லை. அனைவரும் சிரிப்பும் உற்சாகமுமாக இருந்தார்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்ததைக் கண்டான். எல்லாம் பிரமிப்பாக இருந்தது. எல்லாம் புதிதாக இருந்தது. எல்லாம் சரியாக இருந்திருந்தால் அவனுக்கும் வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும். இனியும்கூட நடக்கலாம்தான். ஆனால் கண் எட்டிய தொலைவில் அப்படியொரு வாய்ப்பு இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.
சாப்பிடப் போவதற்கு முன்னால் மேடைக்குச் சென்று அவளுக்குப் பரிசைக் கொடுத்தான். மறக்காமல் இரண்டாவது பார்சலையும் கொடுத்து, ‘பிறந்த நாள் அன்று கொடுக்க மறந்தது’ என்றும் சொன்னான். அவள் சிரித்தாள். நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டாள். தனது புதிய கணவனுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
சாப்பிட்டுவிட்டுச் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். எல்லோரும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். சட்டென்று வாழ்வில் ஒருநாள் இப்படி பரபரப்பான மனிதர்களிடையே சும்மா உட்கார்ந்திருப்பதும் நன்றாக இருப்பது போலப் பட்டது. கிளம்பும்போது வெளியே விட்டிருந்த செருப்பை மறக்காமல் தேடி அணிந்துகொண்டான். அது சந்தோஷமாக இருந்தது. எப்போதும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவன் செருப்பைத் தவறவிட்டுவிடுவது வழக்கம். இன்று அது நடக்கவில்லை என்பதே தனக்கு வயதாகிவிடவில்லை என்ற எண்ணத்தை உறுதிப் படுத்தியது. மகிழ்ச்சியுடன் கிளம்பிப் போனான்.
வீடு சென்றடைந்தபோதுதான் திரும்பிப் பார்த்தான். திக்கென்றிருந்தது. அவனது நிழலைக் காணவில்லை. பதறிக்கொண்டு மீண்டும் திருமண மண்டபத்துக்கு ஓடினான். செருப்பை விட்ட இடத்திலேயே தேடிப் பார்த்தான். இல்லை. பரிசுப் பொருள் வாங்கிய கடைக்குச் சென்று தேடினான். அங்கும் இல்லை. அவனுக்குப் பைத்தியம் பிடித்தாற்போல இருந்தது. நிழல் இல்லாமல் எப்படிக் காலம் தள்ள முடியும்? எனவே சிறு வயது முதல் தான் போன இடங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து நிழலைத் தேடிப் போகத் தொடங்கினான். பிறகு அவனுக்கு வயதானது.