வழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத சித்தாந்தி. தனக்குள் இறைவனைக் காண விரும்பி, தன்னையே இறைவனாகக் கருதிக்கொண்ட அகங்காரத்தின் பிடியில் தன்னைக் கொடுத்தவர். ஆனால் சந்தேகமின்றி சன்னியாசி. அந்தணர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்ட குடுமியோ, பூணூலோ அவருக்குக் கிடையாது. ஜாதி துறக்க முடிந்தவருக்கு மீதி துறக்க முடியாது போனதுதான் பிரச்னை.
ஆனால் வயோதிகம் அவருக்குச் சற்று நிதானத்தை அளித்திருந்தது. அதுநாள் வரை செய்த காரியங்கள் பற்றிய மீள் பரிசீலனையில் தன்னைத் தானே அவர் வெறுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆணவம், கல்வியால் வந்தது. தானறிந்த வேதமும் தனையறிந்த உலகமும் என்றும் தன்னை உச்சத்தில் உட்கார வைத்திருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், வேதத்தின் உச்சத்தில் உள்ளவன் வேறொருவன் அல்லவா? என்றும் உள்ளவனும் எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது? சாமரத்தை வீச வேண்டிய திருப்பணியில் உள்ளவன், தனக்கே வீசிக்கொள்ள நினைப்பது விபரீதம். ஊர் சிரிக்கும். அதுதான் நடந்தது. உலகு எள்ளி நகையாடும். அதுவும் நிகழ்ந்தது. நேரில் கும்பிட்டு நகரும் ஜனங்கள் முதுகுக்குப் பின்னால் அவரது ஆணவத்தைக் குறிப்பிட்டு இழித்துப் பேசியதை அவர் அறிய நேர்ந்தபோதுதான் அவருக்குத் தனது தவறு புரிந்தது.
மறுபுறம், தன்னிடம் பயில வந்த ராமானுஜன் தனியொரு பாதை அமைத்து மேலே மேலே போய்க்கொண்டிருந்ததையும் அவர் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தார். ஆணவமற்ற ஆத்மா. அத்தனை பேரையும் அரவணைக்கிற ஆத்மா. ஒரு காழ்ப்புண்டா? சிறு துவேஷமுண்டா? பழி வாங்கும் சிந்தையுண்டா!
‘அம்மா, நான் அவனைக் கொல்ல நினைத்ததை அவன் அறிவான். ஆனாலும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று என்னிடம் அவன் இருந்த இறுதி நாள் வரை கேட்கவில்லை.’
இரவெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார்.
‘மகனே, தன்னை மையப்படுத்தி உலகைப் பார்க்கிறவர்களுக்கும் பரம்பொருளான நாரணனை மையமாக்கி அவன் பாதாரவிந்தங்களில் தன்னைச் சேர்க்கத் துடிக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவர் இல்லாது போனால் உனக்கு நல்லது என்று நீ நினைத்தாய். அவர் இருந்தால் ஊருக்கு நல்லது என்று இறைவன் நினைத்தான். யார் நினைப்பு வெல்லும்?’
அன்றிரவு முழுதும் யாதவர் தூங்கவில்லை. தாம் செய்த பாவங்களுக்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் இம்மாபெரும் பூமியை முழுதாக ஒருமுறை பிரதட்சணம் செய்வதுதான் என்று அவருக்குத் தோன்றியது.
விடிவதற்குச் சற்று முன்னால் அவர் கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. கனவில் கேட்ட குரல் திடுக்கிட்டு எழவைத்தது.
‘யாதவப் பிரகாசா! நீ பூமியை வலம் வருவதும் எனது பக்தனான ராமானுஜனை வலம் வந்து பணிவதும் ஒன்றேதான்.’
அதன்பிறகுதான் அவர் கிளம்பினார். ஆனால் அப்போதும் மனத்தில் சிறு குழப்பம். ஒருவேளை பிரமையாக இருக்குமோ? ராமானுஜர் இதனை ஏற்பாரா? தன்னை அங்கீகரிப்பாரா? தனது பாவங்களை மன்னிப்பாரா?
காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் நேரே திருக்கச்சி நம்பியைச் சந்தித்துத் தனது சந்தேகத்தைக் கேட்டார். நேரடியாகக் கூடச் சொல்லவில்லை. அதிலும் பூடகம்.
‘என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது சரியா என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்வீர்களா?’
என்ன சந்தேகம் என்றி திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்?
‘ஆகட்டும் சுவாமி. நீங்கள் நாளை வாருங்கள்.’ என்றார் திருக்கச்சி நம்பி.
யாதவர் காஞ்சியிலேயே காத்திருந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு திருக்கச்சி நம்பியை ஓடோடிச் சென்று சந்தித்தார். ‘அருளாளனைக் கேட்டீர்களா? உமக்கு என்ன பதில் கிடைத்தது?’
‘அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்து விடை சொல்லிவிட்டானாமே? அதையே செய்யச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.’
ஒரு கணம்தான். கதறிவிட்டார் யாதவப் பிரகாசர். எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்? அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல் ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அன்று அது நடந்தது.
‘ராமானுஜரே! நான் யாதவப் பிரகாசன் வந்திருக்கிறேன்.’
மேனி நடுங்க தனது முன்னாள் சீடரின் எதிரே கூனிக் குறுகிப் போய் வந்து நின்றார் யாதவர்.
‘சுவாமி வரவேண்டும். நலமாயிருக்கிறீர்களா?’
சொற்களைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த யாதவப் பிரகாசர், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தனது அகங்காரத்தை உருவி எடுத்து ராமானுஜரின் முன்னால் வைத்து வணங்கினார். ‘நான் கதி பெற வழிகாட்டுங்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள். சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மத்திலேயே நாம் மீண்டும் ஆரம்பித்தாக வேண்டும்.’
ராமானுஜர் புன்னகை செய்தார். தன்னருகே இருந்த கூரத்தாழ்வானைப் பார்த்தார். ‘இவர் உமக்கு அனைத்தையும் விளக்குவார்’ என்று சொன்னார்.
ஆழ்வான் ஓர் அறிவுக்கடல். பெரும் பண்டிதர். தனது ஞானம் முழுதும் தன் குரு ராமானுஜரின் ஆசியெனப் பணிந்து வாழ்பவர்.
அன்று கூரத்தாழ்வான் யாதவரின் அனைத்து சந்தேகங்களுக்கும் ராமானுஜரின் சார்பில் பதில் சொன்னார். தத்துவச் சந்தேகங்கள். சிந்தாந்தச் சிடுக்குகளின் மீதான சந்தேகங்கள். வேதாந்த உட்பொருள் சார்ந்த விளக்கங்கள். சத்தியமும் ஞானமும் மட்டுமல்ல. சகலமும் பரம்பொருளின் குணங்கள்தாம். உலகம் ஒரு மாயை அல்ல. ஏன் அப்படி எண்ணிக்கொள்ள வேண்டும்? கயிறு ஏன் பாம்பாகத் தெரியவேண்டும்? கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும் பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும்? மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம்.
கூரத்தாழ்வான் வைணவத்தின் சகல தரிசனங்களையும் யாதவர் முன் விளக்கி முடித்தபோது யாதவர் கைகூப்பி எழுந்து நின்றார். ‘ராமானுஜரே! நீர் யார் என்பதை உமது சீடரின் விளக்கங்கள் எனக்குப் புரியவைத்துவிட்டன. இனி நான் யாராக இருக்கவேண்டுமென்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்’ என்று சொல்லி ராமானுஜரை வலம் வந்து தாள் பணிந்தார்.
ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். கோவிந்த ஜீயர் என்ற பெயர் வழங்கி, தன்னோடு சேர்த்துக்கொண்டார்.