தொற்று

முகக் கவசம் அணிந்தேன். ஆனாலும் கொரோனா பிடித்துக்கொண்டது.

ஆம். நடக்கும்.

யாரையும் நெருங்கிப் பேசவில்லை. கை குலுக்கவில்லை. இருப்பினும் அது வந்தது.

ஆம். வரும்.

தியேட்டருக்குப் போகவில்லை. மாலுக்குப் போகவில்லை. கும்பலில் சேரவில்லை. அவசர, அத்தியாவசிய வேலைகளுக்கு மட்டும்தான் வெளியே சென்றேன். இருப்பினும் பாதிக்கப்பட்டேன்.

சாத்தியம்தான்.

நாளெல்லாம் அலைந்து திரிந்து உழைக்கும் எத்தனையோ பேருடன் ஒப்பிட, என் அலைச்சல் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் எனக்கு வந்தது.

வியப்பில்லை.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் வந்தது.

இதுவும் வியப்பில்லை.

நண்பர்களே, யாரையும் கலவரப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் இதை எழுதாமல் தவிர்த்தேன். இப்போது எழுதக் காரணம், சொல்லப்படுவதைக் காட்டிலும் நிலவரம் மோசமாகிக்கொண்டிருப்பதுதான். நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 6600 என்று செய்தியில் சொன்னார்கள். சென்ற வருடம் இதே நாளில் 1075 என்று இருந்திருப்பதை ஃபேஸ்புக் நினைவுக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது. அதற்கே அன்று அஞ்சி நடுங்கியிருக்கிறோம். தொற்று உண்டாகி மருத்துவமனைக்குச் சென்ற பல பேர் படுக்கை இல்லை என்று அல்லாடுகிற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எனக்குத் தெரிந்த சிலருக்கே இந்த அனுபவம் நேர்ந்தது. இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படக்கூடிய சில சொந்த அசௌகரியங்களை (என்னவென்று கேட்காதீர்கள். அது உங்களுக்கு அவசியமில்லை.) எண்ணிப் பார்க்கிறேன். அதை மீறி உங்களை எச்சரிக்க வேண்டியது கடமை என்று தோன்றுவதால் எழுதுகிறேன்.

கடந்த மாதத் தொடக்கத்தில் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டதை நீங்கள் அறிவீர்கள். அதற்குச் சில நாள்களுக்குப் பிறகு என்னை கோவிட் தொற்று தாக்கியது. ஒதுங்கி இருந்து, ஒழுங்காக மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு சரியாகிவிட்டது. முற்றிலும் குணமாகிவிட்டதை மருத்துவரிடம் சென்று மறு பரிசோதனை செய்து, உறுதிப்படுத்திக்கொண்ட பின்புதான் வாக்களிக்கச் சென்றேன். சோர்வு மட்டும் இன்னும் சிறிது மிச்சம் உள்ளது. take care, get well soon போன்ற சொற்களால் ஒரு பயனும் இல்லை. வந்தால் அனுபவிக்க வேண்டியதுதான்.

என்னை நீங்கள் அறிவீர்கள். நாளெல்லாம் வீட்டிலேயே இருப்பவன். என் பணி இருந்த இடத்தில் இருந்தபடி செய்வதுதான். மிகவும் தவிர்க்க முடியாத வேலை வந்தால் மட்டுமே வெளியே போவது வழக்கம். அப்படியும் வந்தது. அது, தடுப்பூசிக்குப் பிறகு வந்ததில்தான் சிறிது குழம்பிப் போனேன். ஆனால் மருத்துவர் தெளிவாகச் சொன்னார். தடுப்பூசி எந்த வகையிலும் தொற்று ஏற்படுவதைத் தடுக்காது. (ஏனெனில், தடுப்பூசி தயாரிக்கப்பட்ட காலத்தில் இருந்த கொரோனா வைரஸின் குணமும் தன்மையும் வேறு. இன்றைய புதிய வடிவமெடுத்திருக்கும் கொரோனாவின் குணாதிசயங்கள் வேறு.) ஆனால் உயிர் போகும் அபாயத்தை அது கணிசமாகக் குறைக்கும்.

சரி வந்துவிட்டுப் போகட்டும் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. இது படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. என் வாழ்வில் இந்தளவு உபாதையால் நான் வேதனைப் பட்டதே இல்லை. டைபாய்டு வந்திருக்கிறது. இதர குறுஙகாய்ச்சல்களைக் கண்டிருக்கிறேன். கால் உடைந்து இரு முறை படுத்திருக்கிறேன். ஒவ்வாமைப் பிரச்னையில் பல ஆண்டுகள் அவதிப்பட்டிருக்கிறேன். இன்னும் என்னென்னவோ. ஆனால் எந்தச் சிரமமும் இதற்கு நிகரில்லை. அப்படியே முறுக்கிப் பிழிந்து உலர்த்திவிடுகிறது. காய்ச்சல்கூடப் பெரிதல்ல. இருமல் ஒன்று வருகிறது பாருங்கள். ஜுராசிக் பார்க்கில் டைனோசர் வருவது போன்றது அது. இரண்டு சொற்கள் பேசினால் உடனே இருமத் தொடங்கி, இருபது நிமிடங்களுக்கு அடங்குவதே இல்லை. இருமிக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் எலும்புகள் பெயர்ந்து உதிர்ந்துவிடுவது போல அப்படி ஒரு வலி. ருசியற்று, மணமற்று இருப்பதெல்லாம் இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை.

ஏதோ பேலியோவில் இருந்து சேர்த்து வைத்த சிறிதளவு ஆரோக்கியம் (கட்டுக்குள் சர்க்கரை, கட்டுக்குள் ரத்த அழுத்தம், பாதிப்பில்லாத hscrp அளவுகள்) பெரிய பிரச்னை இல்லாமல் தப்பிக்க உதவியது. ஆனால் கிருமி கண்டறியப்பட்டதும் மருத்துவர் பேலியோவைத்தான் முதலில் விடச் சொன்னார். (நான் சென்றது ஆயுர்வேத சிகிச்சைக்கு. அந்த மருந்தாதி கஷாயங்களுக்கு இது அநாசாரம்.) இந்த ஒரு மாத காலமாக வழக்கமான கார்போஹைடிரேட் உணவுதான் உள்ளே செல்கிறது. வியக்க ஒன்றுமில்லாமல் கணிசமாக எடை ஏறியிருக்கிறது. சர்க்கரை அளவும் ஏறியிருக்கும். குறைத்துவிடலாம்; அது ஒரு பிரச்னை இல்லைதான். இருப்பினும் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது இது.

நான் கிருமி கண்ட அதே காலக்கட்டத்தில் கோவிட் பாதிப்புக்கு உள்ளான என்னுடைய நண்பர்களில் சிலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்குச் சென்றார்கள். ஒப்பீட்டளவில், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்ட நான் சிறிது வேகமாகக் குணமடைந்திருக்கிறேன். மூச்சுத் திணறல், இதய நோய் உள்ளிட்ட, தீவிரமான – அட்மிட் ஆகவேண்டிய கட்டாயம் இல்லாத கட்டத்தில் உள்ளோர் ஆயுர்வேதத்தை நம்பிச் செல்லலாம். இதில் பக்க விளைவுகள் கிடையாது. பெரும்பாலும் அபாயக் கட்டத்துக்குப் போகாமல் தடுத்து, காப்பாற்றிவிடுகிறார்கள். ஆனால் ஒழுங்கு மரியாதையாகத் தனிமைப்படுத்திக்கொண்டு சமைந்த பெண்ணாக மூன்று வாரம் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அந்த நாள்களில் என்னால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை. சீரியல்களுக்கு விடுப்பு சொன்னேன். கபடவேடதாரிக்கு விடுப்பு சொன்னேன். எழுதிக்கொண்டிருக்கும் குறுங்கதைகளை நிறுத்தினேன். ஜீரோ டிகிரிக்கு அடுத்த 15 புத்தகங்களை மறுபதிப்புக்காகத் தர வேண்டியிருந்தது. அந்த சரி பார்ப்புப் பணிகள் நின்றன. ஃபேஸ்புக் பக்கம்கூட வரவில்லை. எல்லாம் அப்படி அப்படியே. வாழ்வில் முன் எப்போதும் இப்படி யோசிக்கக்கூட சக்தியற்று இருந்ததில்லை. எனக்கு என்ன ஆனது என்று விசாரிக்க அழைத்த நண்பர்கள் யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை. பேசினால் உடனே இருமல். கொலை வலி.

ஒருவாறு மீண்ட பிறகு, தினசரித் தொடர்பில் உள்ள நண்பர்கள் பிரசன்னா, மாமல்லன், சாரு, ராம்ஜி, சிஎஸ்கே ஆகியோருக்கு மட்டும் சொன்னேன். சந்தேகப்பட்டுக் கேட்ட சொக்கனுக்குச் சொன்னேன். பிறகு இப்போது உங்களுக்கும் சொல்ல ஒரே காரணம் – எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி எச்சரிப்பதுதான்.

பிழைப்பு முக்கியமே. பிழைத்திருப்பது அனைத்திலும் முக்கியம்.

O

என்ன செய்யலாம்?

1. தலை போகிற அவசியம் இல்லாத பட்சத்தில் வீட்டை விட்டு வெளியே போகாதீர்
2. மாடிப்படி கைப்பிடிச் சுவர், லிஃப்ட் பொத்தான், நண்பர்களின் கரங்கள், காதலியின் கன்னம் உள்பட எதையும் தொடாதீர். தொட்டால் உடனே கையை சோப்புப் போட்டுக் கழுவவும்
3. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் இருவேளை ஆவி பிடியுங்கள். பாவிகளின் ஒரே புகலிடம் அதுதான். அமேசானில் ஆவி பிடிக்கும் மிஷின் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது.
4. கூடியவரை வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
5. மாஸ்க் இல்லாமல் வெளியே தலை காட்ட வேண்டாம். யாருடனாவது பேசும்போது அது மிகவும் அவசியம்.
6. கை கழுவ வசதி இல்லாத இடங்களில் சானிடைசர் பயன்படுத்தவும். 25 ரூபாய் டப்பா ஒரு மாதம் வருகிறது. எப்போதும் கையில் ஒன்று வைத்திருங்கள். கடைகளில், மற்ற இடங்களில் ஆளுக்கொரு பிராண்ட் வைத்திருப்பார்கள். அனைத்திலும் கை நனைக்காதீர். சருமப் பிரச்னை ஏற்படலாம். ஒரே பிராண்ட் சொந்த டப்பாவே நல்லது.
7. இத்தனைக்குப் பிறகும் தொற்று உங்களைத் தொட்டால் தாமதமின்றி மருத்துவரைப் பாருங்கள்.
8. அரசு மருத்துவமனைகளில் தரப்படும் அதே மருந்து மாத்திரை சிகிச்சைதான் பணக்கார தனியார் மருத்துவமனைகளிலும் தரப்படுகிறது. தண்டத்துக்கு அங்கே சென்று சொத்தை இழக்காதீர்.
9. தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். அது உயிர் காக்கும்.
10. அவ்வளவுதான்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!