உண்மைக்கு மிக அருகில் (கதை)

பிராந்தியத்தில் அவளைப் போல் ஒரு பேரழகியை இதற்குமுன் பார்த்ததில்லை இல்லை என்று கிழவர்களே சொன்னார்கள். ‘இவளுக்கு இந்த ஜென்மத்தில் திருமணமே நடக்காது. இந்த அழகுக்கு ஈடு கொடுக்கும் ஒரு ஆண்மகன் எங்கும் இருக்க முடியாது’ என்று அவளைத் தமது மானசீகத்தில் காதலித்துக்கொண்டிருந்த ஊரின் அனைத்து வாலிபர்களும் கூடிப் பேசி முடிவு செய்தார்கள். ‘சிலதெல்லாம் மனத்துக்குள் ரசிப்பதற்காக மட்டும்தான். சேர்ந்து வாழவே முடியாது’ என்று குப்புசாமி சொன்னான். அதை அவனது நண்பர்கள் ஆமோதித்தார்கள்.

அவள் சன்னிதித் தெருவில் இருந்தாள். தினமும் மாலை ஐந்து மணிக்குத் தன் வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் சிறுவர்களுக்கு ட்யூஷன் எடுப்பாள். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சிறுவர் சிறுமியர் அவளிடம் படிக்க வருவார்கள். ட்யூஷன் முடிந்து அவர்கள் திரும்பும்போது, வாலிபர்கள் அவர்களை மடக்கி, ‘டேய் உங்கக்கா எப்படிடா?’ என்று கேட்பார்கள்.

‘நல்லா சொல்லித் தருவாங்கண்ணே. ரொம்பப் பொறுமை. தப்பு பண்ணாக்கூட திட்டமாட்டாங்க.’

ஒரு பெண்ணின் அழகில் சரி பாதி குணத்தால் வடிவமைக்கப்படுகிறது என்று குப்புசாமி சொன்னான். அதிலென்ன சந்தேகம்? அவள் அமைதியே வடிவானவள். அவளிடம் ட்யூஷன் படிக்கும் மாணவர்களைத் தவிர வேறு யாரும் அவள் குரலைக் கேட்டதில்லை. அநாவசியமாக வெளியே அலைவது, சிநேகிதிகளுடன் அரட்டை அடிப்பது, தனது அழகை யார் யார் ரசிக்கிறார்கள் என்று ரகசியக் கணக்கெடுப்பு செய்வதற்காகவே கோயில், கடைத்தெருவுக்குப் போவது எல்லாம் அவள் வழக்கத்திலேயே கிடையாது. ஊர்க்காரப் பெண்களில் சிலர் அவளை சிநேகிதம் பிடித்துக்கொள்ளுவதன் பொருட்டு அடிக்கடி அவள் வீட்டுக்குப் போய் எதையாவது பேசுவார்கள். ராணி முத்து இருக்கிறதா, ரேஷனுக்கு வருகிறாயா, என்ன படித்திருக்கிறாய், வேலைக்குப் போகவில்லையா என்று விதவிதமாகக் கொக்கி போட்டுப் பார்ப்பார்கள். அனைத்துக்கும் ஒரு சிரிப்பு. ஒரு வரியில் ஒழுங்கான ஒரு பதில். அதில் அவள் குறை வைப்பதில்லை. ஆனால் யாருக்கும் அவள் தோழியாகவேயில்லை.

அவளது தந்தை இதற்கு முன்னால் செங்கல்பட்டு சரகத்தில் எங்கோ உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைக் குன்றத்தூர் மின்சார வாரிய அலுவலகத்துக்கு மாற்றியபோது அவர்கள் குடும்பம் கோவூருக்குக் குடி வந்தது. வரும்போதே அவள் படிப்பை முடித்துவிட்டு ட்யூஷன் சொல்லிக் கொடுப்பவளாகத்தான் வந்தாள். சுந்தரேசுவரர் கோயிலுக்கு தினமும் செல்லும் அவளது அம்மா, அங்கே பழக்கமான பிற அம்மாக்களிடம் தனது மகள் டியூஷன் எடுப்பாள் என்று சொல்லி வைத்துப் பிள்ளைகளைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்திருந்தாள்.

குப்புசாமியின் அம்மாவும் சுந்தரேசுவரர் கோயிலுக்கு தினமும் செல்பவள்தான். ஒருநாள் அவள் பேரழகியின் அம்மாவிடம், ‘உங்கள் பெண்ணுக்கு வரன் பார்க்கவில்லையா?’ என்று கேட்டாள். பார்த்துக்கொண்டிருப்பதாக அவள் சொன்ன பதிலை இரவு வீட்டில் சாப்பிடும்போது சொன்னாள். ‘அந்தப் பொண்ணுக்கென்ன. அமெரிக்காவிலேருந்து யாராவது வந்து கொத்திக்கிட்டுப் போயிடுவான்’ என்று குப்புசாமியின் அப்பா சொன்னார்.

அப்படித்தான் நடந்தது. அமெரிக்காவில் உத்தியோகமும் குடியுரிமையும் பெற்ற ஒரு சொட்டைத் தலையன் ஒருநாள் தனது குடும்பத்துடன் வந்து அவளைப் பெண் பார்த்துவிட்டுப் போனான். ஊர்க்கார இளைஞர்கள் அத்தனைப் பேரும் அன்று வருந்தினார்கள். அவளது திருமணம் குன்றத்தூர் முருகன் கோயிலில்தான் நடந்தது. அனைவரும் சென்று மொய் எழுதிவிட்டு வந்தார்கள். ஓரிரு வாரங்களில் அவள் தனது கணவனுடன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போனாள்.

பிறகு அவளது தந்தைக்கு மீண்டும் பணி மாற்றம் ஏற்பட்டது. அவர் தனது மனைவியுடன் போரூருக்குக் குடி பெயர்ந்து சென்றார். அந்த சன்னிதித் தெரு வீட்டுக்கு வேறொரு குடும்பம் குடி வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு பெண் இருந்தாள். அவளது அம்மாவும் தினமும் மாலை சுந்தரேசுவரர் கோயிலுக்குப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். குப்புசாமியின் அம்மா கோயிலில் சந்தித்து அவளை நட்பாக்கிக்கொண்டு, ‘உங்க பொண்ணுக்கு வரன் பாக்கலியா?’ என்று கேட்டாள்.

இதன் தொடர்ச்சியாகக் குப்புசாமிக்கும் அந்தப் பெண்ணுக்கும் சில மாதங்கள் கழித்துத் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் சுந்தரேசுவரர் கோயிலிலேயே நடந்தபடியால், சன்னிதித் தெருவில் இருந்த அவனது மாமியார் வீட்டிலேயே அன்றிரவு அவனுக்கு முதலிரவு ஏற்பாடானது.

முன்னர் குடியிருந்த பேரழகி அந்த அறையில்தான் எப்போதும் இருப்பாள் என்பது குப்புசாமிக்குத் தெரியும். இப்போது அந்த அறையில் புதிய கட்டில் போடப்பட்டு மலர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புராதனமான பால் சொம்புடன் குப்புசாமியின் புதிய மனைவி அறைக்குள் நுழைந்தாள்.

அந்தக் கணம் அவனுக்கு அடக்கமுடியாத பெரும் சிரிப்பு வந்துவிட்டது. குமுறிக் குமுறிச் சிரித்தான். அந்தப் பெண் சிறிது பயந்துவிட்டாள். ‘ஏன் மாமா இப்படி சிரிக்கறிங்க?’ என்று கேட்டாள்.

‘ முன்ன இந்த வீட்ல வேற ஒரு பொண்ணு இருந்திச்சி. இந்த ரூம்லதான் எப்பவும் இருக்கும். ஜன்னல் வழியா பாத்திருக்கேன். காண்டாமிருகத்துக்கு சேல கட்ன மாதிரி இருக்கும். பாக்கறப்பலாம் பயந்துடுவேன். அது ஞாபகம் வந்திட்டுது…ஆனா, யு ஆர் மை டார்லிங்!  யு ஆர் வெரி ப்யூட்டிஃபுல். ‘ என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினான்.

அவள் புன்னகை செய்தாள். திருப்தியுடன் அருகே வந்து அமர்ந்தாள். குப்புசாமி மனச்சாட்சிக்கு உண்மையுடன் இல்லறம் நடத்தத் தொடங்கினான்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி