புவியில் தனக்கான சமஸ்தானத்தை அமைத்துக் கொண்டு நீலவனத்தில் குடியுரிமை பெற்றிருக்கும் தன் இரசிகர்கள் மூலம் வெண்பலகை வழியே அங்கும் தன் புகழை பரப்பச் செய்து வரும் எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாட்டையும், மாடலையும் தனக்கான முன் மாதிரியாக சாகரிகா எடுத்துக் கொள்கிறாள். நிழலை நம்பி ”சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் தனக்கான சமஸ்தானத்தை முறைப்படி அமைக்கிறாள்.
கோவிந்தசாமியின் நிழலுக்கு இருக்கும் தன் மீதான காதலை மெளனமாய் கடத்தி விட்டு விட வேண்டும் என்றும், நிழலை விடச் சிறந்த தற்காப்பு ஆயுதம் ஒன்று கிடைத்தால் வனத்திலேயே அதைக் கொன்று புதைத்து விடவும் சாகரிகா திட்டமிடுகிறாள். தன் சமஸ்தானத்தில் குடியேற மக்களுக்கு அவள் கொடுக்கும் விளம்பர அறிவிப்புகள் புதிய மனை விற்பனைக்கு பூமிப் பந்தில் செய்யப்படும் அறிவிப்புகளுக்கு நிகர்த்தவைகள்!
நிழல் தனக்கு நிரந்தர விசுவாசியாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் சாகரிகாவிடம், நிழல் இன்னொரு காதலில் விழுந்து விட்ட விபரத்தை சொன்ன ஷில்பா, கூடவே, சமஸ்தானத்துக்கு இன்னொரு சமஸ்தானாதிபதியை நியமிக்கும் ஆலோசனையையும் கூறுகிறாள். திராவிடம் என்றாலே கடவுள் மறுப்பும், சித்தாந்த முரணும் என்ற அடையாளத்தின் வழியேயான உரையாடல் அற்புதம்! ஷில்பா சொல்வதை ஏற்க மறுக்கும் சாகரிகா நிழலைச் சந்தித்துப் பேசுகிறேன் என்கிறாள்.
சந்தித்தாளா? நிழலை சந்திக்கும் போது அதனுடன் கோவிந்தசாமியும் இருந்தால் சாகரிகாவின் மனநிலை எப்படி இருக்கும்? கோவிந்தசாமியின் நிழல் தன்னை சூனியன் என்று சொல்லியிருப்பதால் தன் திட்டத்தை தன் எதிரியிடமே சாகரிகா விவாதிக்கப் போகிறாளா? என்ற சுவராசியங்களுக்கும் வரும் அத்தியாயங்களில் விடை கிடைக்கலாம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.