திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!

ஒரு காலத்தில் நூறு. பிறகு ஐம்பது சேர்ந்தது. மேலும்கூடி இருநூறானபோது செய்தியில் வந்தது. பிறகு ஸ்கோர் என்னவென்று கேட்காத குறை. இந்த வருடப் பட்டியல் இங்கே இருக்கிறது. பிரம்மாண்டத் தமிழ்ப் படங்களின் பாடல் காட்சிகளில் பின்னணியில் குதிப்போர் வரிசை போல் இவ்வருட புத்தகக் கண்காட்சி வரிசை அமையவிருக்கிறது. சந்தேகமில்லாமல் திருவிழா. கால்வலி நிச்சயம்.

எத்தனை சுற்றினாலும் ஏதேனுமொரு வரிசையைத் தவற விட்டதுபோல எப்போதும் தோன்றும். வெளியே வரும்போது காலருகே நாய்க்குட்டிபோல் ஒரு திருப்தியின்மை தொக்கி நிக்கும். அலுத்துப் போய்த் திரும்பி மறுமுறை வந்தாலும் அதே உணர்வு ஆட்கொள்ளும்.

எனக்கல்ல. பலர் சொல்லக்கேள்வி.

புத்தகக் கண்காட்சியை முழுதுமாக அளக்கச் சில பிரத்தியேக வழிகள் உள்ளன. எதையும் தவறவிடாமல், காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டு ஓடும் உணர்வில்லாமல் நிறுத்தி நிதானமாகவே சுற்றலாம், ஆராயலாம், எடுத்துப் படிக்கலாம், வாங்கி வரலாம். மூன்று மணிநேரம் போதும்.

இவை, ஒரு வாசகனாக நான் கடைப்பிடிக்கும் உத்திகள். உங்களில் சிலருக்கு உபயோகமாகக்கூடும்.

* வாங்க நினைத்து, குறித்து வரும் புத்தகங்களை மட்டும் முதலில் வாங்கிவிடுவது. ஒவ்வொன்றும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் சரி. அதனை மட்டும் குறிவைத்து முதல் பயணம். முடிந்தால் பாதி வேலை தீர்ந்தது.

* எந்தெந்தப் பதிப்பகங்களில் நுழையவேண்டாம் என்று முன்னதாக முடிவு செய்துகொண்டு விடுவது. நமது ரசனைக்கு இங்கே தீனி இல்லை என்று தெளிவாகத் தெரியும்பட்சத்தில், தூர இருந்து ஒரு கும்பிடு.

* உள்ளே நுழையுமிடத்தில் பொடி எழுத்துகளாலான பெரிய போர்ட் ஒன்று வைத்திருப்பார்கள். பதிப்பகங்களும் அரங்க எண்களும். இருக்கட்டும். நீங்கள் நிற்கும் தொடக்கப்புள்ளியில் இருக்கும் அரங்கின் எண் என்னவென்பதைப் பாருங்கள். அதன் எதிர் வரிசை முதல் கடையின் எண்ணைப் பாருங்கள். உதாரணமாக 1-150 என்று எதிரெதிரே வருமானால் வரிசைக்கு எழுபத்தைந்து என்று பொருள். கொஞ்சம் தளை தட்டலாம். ஆனாலும் இது கிட்டத்தட்ட சரியான கணக்கு. இதனடிப்படையில் நீங்கள் பார்க்க விரும்பும் முக்கிய அரங்குகளின் எண்களை மட்டும் எழுதிக்கொள்ளுங்கள். எதற்கு அடுத்தது எது, எங்கிருந்து எதற்குப் போவது சுலபம் என்று இரண்டு நிமிடத்தில் தெரிந்துவிடும்.

* ஒவ்வொரு அரங்கிலும் உள்ளே தட்டுகளின் மேல் வரிசையில் இருக்கும் புத்தகங்களை கவனமாகப் பாருங்கள். வேகமாகவும் பார்த்துவிட இயலும். முக்கியமானவையெல்லாம் ஐந்தடி உயரத்தில்தான் இருக்கும். கடைக்காரரே பிரமோட் செய்ய விரும்பும் புத்தகங்களும் கண்காட்சிக்கென வந்திருக்கும் புத்தகங்களும் வெளியே டிஸ்பிளேவில் இருக்கும். ஏதேனும் அபூர்வமான, பழைய நூலைத் தேடுகிறீர் என்றால் கண்டிப்பாக அடியில் மட்டும் தேடுங்கள்.

* இலக்கிய வாசகரென்றால் எந்த எழுத்தாளரின் புத்தகம் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கும் என்று அநேகமாகத் தெரிந்திருக்கும். மற்றத் துறைகளில் இத்தனை சரியாகப் பிடிப்பது கடினம். எனவே, இருக்கிற அரங்குகளில் நீங்கள் மதிக்கக்கூடிய ஒரு பெரிய டிஸ்ட்ரிப்யூட்டரின் அரங்கத்தைத் தேர்வு செய்து முதலில் அங்கே ஒரு நடை சென்று பார்த்துவிட்டால், ஒரு தோராயத் திட்டம் அகப்பட்டுவிடும். பதிப்பக அரங்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் நூல்கள்தான் இருக்கும். வினியோகிப்பாளர் அரங்குகளில் எல்லாம் கிட்டும். அல்லது அனைத்துப் பதிப்பகங்களின் முக்கியமான வெளியீடுகள் எல்லாம்.

* மிகப்பெரிய பதிப்பகங்கள், மக்கள் அதிகம் செல்ல விரும்பும் கூடங்களில் நுழைவதே சிரமமாயிருக்கும். கூட்டம் இடித்துத் தள்ளும். வரிசையில் பார்த்துக்கொண்டே போவது மிகவும் அலுப்பூட்டும். திருப்தியே இருக்காது. இதைத் தவிர்க்க ஒரு வழியுண்டு. அந்தக் கூடத்தில் என்ன ஸ்பெஷல் என்று முதலில் தெரிந்துகொண்டு விடுவது. எளிய வழி, பில் கவுண்ட்டர் அருகே பத்து நிமிடங்கள் நிற்பது. பில்லுக்கு வரும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தாலே உள்ளே இருக்கும் சரக்கு விவரம் தெரிந்துவிடும். அவற்றுள் நீங்கள் வாங்க விரும்பும் நூல் ஏதேனும் இருக்குமானால், வாங்கி வருபவர் அதை எங்கே எடுத்தார் என்று கேட்டுவிட்டு, கூட்டத்தைத் துருவிக்கொண்டு உள்ளே போய் கரெக்டாக அதை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து விடலாம். பிறகு தேவைப்பட்டால் காலை நேரத்தில் இன்னொரு முறை சென்று நிதானமாக முழுக்கப் பார்க்கலாம்.

* கண்காட்சி தொடங்கும்போது உள்ளே நுழைந்துவிடுவது நல்லது. நுழைந்ததும் முதல் வரிசையிலிருந்து புறப்படாமல், வேகமாக இறுதி வரிசைக்குச் சென்று அங்கிருந்து ரிவர்ஸில் பார்த்து வாருங்கள். கூட்ட நெரிசலில் தப்பிக்க இது ஒரு நல்ல வழி.

* முன்பெல்லாம் ஒரே வழியில் உள்ளே புகுந்து இன்னொரு வழியே வரவேண்டியிருக்கும். இப்போது ஐந்து வழி மூன்று வாசல் உத்தி அமலாகிவிட்டது. ஏழெட்டு நுழைவுகள். ஒவ்வொரு நுழைவிலும் ஒரு வரிசை. எனவே எந்த வழியில் புகுந்தாலும் எதிர்த்திசையிலிருந்து ப்யணத்தைத் தொடங்குவது நலன் பயக்கும்.

* மலையேறும்போது குறுக்கு நெடுக்காக ஏறச் சொல்லுவார்கள். கால் வலிக்காது என்று காரணமும் சொல்லப்படும். அது உண்மையா என்று எனக்குத் தெரியாது. கண்காட்சியில் எதிரெதிர்க் கடைகளாகப் பார்த்துச் செல்வது எப்போதும் நல்லது. முழு வரிசை முடித்துவிட்டு அடுத்ததற்கு வரலாம் என்று நினைத்தால் பெரும்பாலும் விடுபட்டுவிடும். நமது மன அமைப்புப்படி இடது பக்கக் கடைகளாகவேதான் கால் நம்மைக் கொண்டு செல்லும். ஒரு வரிசை முடிந்ததும் இடதுபுறம் இயல்பாகத் திரும்பிவிடுவோம். அடுத்த வரிசையின் இடதுபுறம்தான் அடுத்தது. இதனைத் தவிர்க்கவே எதிரெதிர் உத்தி.

* இந்த வருடம் என்னென்ன ஸ்பெஷல் என்று உத்தேசமாகத் தெரிந்துகொண்டு உள்ளே நுழைய விரும்புவீரானால் எந்தத் தினமானாலும் பிற்பகல் கிளம்புங்கள். டிக்கெட் வாங்கியதும் நேரே கேண்டீனுக்குச் சென்று விடவும். காலைப் பொழுது சுற்றி ஓய்ந்து அங்கு வந்து அமர்ந்திருப்பவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து [கையிலிருக்கும் கவரை கவனித்து] பேச்சுக்கொடுத்தாலே போதுமானது. அநேகமாகச் சரியான தகவல்கள் கிடைத்துவிடும்.

* மேலும் சில நல்ல உத்திகள் உள்ளன. துரதிருஷ்டவசமாகத் தொழில்தர்மம் அவற்றை வெளியிடத் தடுக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் பிறகு பார்ப்போம்.

Share

8 comments

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter