அன்னதானம்

கோயில்கள், மடங்கள் போன்ற இடங்களின் ஆகப் பெரிய பயனாக நான் கருதுவது, அன்னதானம். தமிழ்நாட்டு அரசு பொறுப்பேற்று, அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இயங்கும் கோயில்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ததற்கு முன்பிருந்தே அவ்வறப்பணி பல கோயில்களில் நடந்து வந்தன. தினமும் இல்லாவிட்டாலும் விசேட தினங்களில் அன்னதானம் இருக்கும். பசித்திருப்பவர்கள் எங்கெங்கிருந்தோ வந்து உணவருந்திப் புதிதாகப் பிறந்து செல்வதைக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

கோடம்பாக்கத்தில் நான் இருக்கும் பகுதியில் ஒரு மடம் உண்டு. சாமியார் மடம் என்பார்கள். ஒரு பேருந்து நிலையப் பெயராக இதனைக் கேள்விப்பட்டிருப்பார்களே தவிர, அந்தச் சாமியார் யார், என்ன செய்திருக்கிறார், எப்படிப்பட்டவர் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. அவ்வளவு மோசமில்லை, சாமியார் மடத்தை ஓரளவு அறிவோம் என்பவர்கள்கூட அங்கே தினசரி நடைபெறும் அன்னதானத்தை மட்டுமே அறிந்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் மதிய உணவு நேரத்தில் குறைந்தது இருநூறு பேராவது அங்கே வரிசையில் காத்திருந்து உணவருந்திவிட்டுச் செல்வார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு பரமஹம்ச ஓம்கார சுவாமியைத் தெரியும் என்று சொல்ல முடியாது. யோசித்துப் பார்த்தால் அவரைத் தெரிந்திருக்கவே அவசியமில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது.பரமஹம்ச ஓம்கார சுவாமி  என்பவர் உணவின் வடிவாக அவர்கள் அத்தனை பேரின் வயிறு தொடங்கி நெஞ்சம் வரை என்றென்றும் நிறைந்திருப்பார்.

முன்னொரு காலத்தில் இந்தியாவெங்கும் எத்தனையோ மடங்களில், தரும சத்திரங்களில், கோயில்களில் உண்டிருக்கிறேன். வேறு எதனாலும் தரவியலாத மகிழ்ச்சியை அப்படி வரிசையில் நின்று கையேந்தி வாங்கி உண்ணும்போது அனுபவித்திருக்கிறேன். திருப்பதியிலும் குன்றக்குடி ஆதீனத்திலும் கோவளம் தேவாலயத்திலும் வடலூரிலும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலும் மதிய உணவு நம்ப முடியாத நல்ல தரத்தில் இருக்கும். பிகாரில் கோஸ்ரவன், ஹாஜிப்பூர் பவுத்த தருமசாலைகளில் நான்கைந்து நாள்கள் தங்கி, உண்டிருக்கிறேன். ஓசிச் சோறாகக் கருதவே முடியாது. அவ்வளவு சிரத்தையாக, ருசியாக, நேர்த்தியாகச் சமைத்துப் போடுவார்கள். போதும் போதும் என்று சொன்னாலும் நிறுத்தாமல் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

இந்தப் புண்ணியம் பெண்ணியமெல்லாம் இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும். மழைக்குக் குடை, பசி நேரத்துக்கு உணவு, வாழ்வினுக்குக் கண்ணன் என்று பாரதி சொன்னதுதான் அடிப்படை. பசி நேரத்து உணவுதான் வாழ்வின் கண்ணன். பசியை விஞ்சிய பிரம்மமும் இல்லை, அதற்கு நைவேத்தியம் செய்வதற்கு நிகரான இறைத்தொண்டும் இல்லை.

இன்றைக்குத் தைப்பூசம். கண்ணில் தென்பட்ட எல்லா சிறிய கோயில்களிலும்கூட பூஜைக் கொண்டாட்டங்களும் அன்னதானமும் பிரசாத வினியோகமும் அமர்க்களப்பட்டன. என் பிராந்தியத்துக் காவல் தெய்வமான நாகவல்லி அம்மன் கோயிலில் ஒரு சிறிய முருகன் சந்நிதி உண்டு. அபிஷேகமும் அலங்காரமும் அர்ச்சனையும் ஆரத்தியும் என்றைக்கும் உள்ளதைக் காட்டிலும் இன்று அதிவிசேடமாக இருந்தன. அன்னதானம் அதைவிட.

புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம், கேசரி, பாயசம் எல்லாம் எங்கும் கிடைக்கக் கூடியவைதான். ஆனால் தனது பக்தர்கள் சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள உருளைக் கிழங்குப் பொரியலும் அவசியம் என்று கருதும் தாயுள்ளம் நாகவல்லி அம்மனைத் தவிர இன்னொரு தெய்வத்துக்கு வராது.

கூட்டமான கூட்டம், அப்படியொரு கூட்டம். நிற்க இடமில்லாத அளவுக்கு அந்தச் சிறிய சந்து முழுதும் மனிதர்கள் நிறைந்துவிட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பூஜை ஆனதும் வரிசையில் நின்று கையேந்தி அன்னதானம் பெற்று சாலையில் நின்றவாறே உண்டு களித்தேன். வீதி கூட்டுவோர், சிறு வியாபாரம் செய்வோர், ஆட்டோ ஓட்டுவோர், அக்கம்பக்கத்தில் வசிப்போர், தொழில்முறைப் பிச்சைக்காரர்கள், இந்துக்கள், இந்து அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் – எந்த பேதமும் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. ஒரே காகிதத் தட்டு. தட்டு நிறையப் பிரசாதங்கள்.

இவ்வளவு இணக்கமானவனாக, இவ்வளவு சமத்துவவாதியாகத்தான் நமது கடவுள் இருக்கிறான். நமக்கு இவன் போதும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி