அபினுக்கு அப்பால்

கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் என்ற பொதுத் தலைப்பில் சீனி விசுவநாதன் பாகம் பாகமாக பாரதியின் படைப்புகளைச் செம்பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். அவை வெளியான காலத்தில் உடனுக்குடன் ஒவ்வொரு பாகத்தையும் ஆர்வமுடன் வாங்கினேன். ஆயினும் எப்படியோ சில பகுதிகள் விடுபட்டுவிட்டன. இந்தக் காலவரிசைப்படுத்தலின் முக்கியத்துவம் என நான் கருதுவது, ஒரு கலைஞனின் சிந்தனை காலக்கட்டம் தோறும் எப்படி வளர்ந்து, இறுதியில் என்னவாக மலர்ந்து நிறைந்திருக்கிறது அல்லது வாடிச் சுருங்கியிருக்கிறது என்பதை அறிய முடிவதுதான்.

நேற்று, என்னுடைய புத்தக அடுக்குகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சீனி விசுவநாதன் பதிப்புகளை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். தனது வாழ்வில் மூன்று சித்தர்களை பாரதி நேரில் சந்தித்துப் பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர்கள் அவருக்கு உண்மை ஞானம் என்பது என்னவென்று தெரிந்துகொள்வதற்கான பாதையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்தத் தருணங்களுக்குப் பிறகு பாரதி எழுதிய பாடல்களில் மட்டுமே ‘ஆன்மிகம்’ வருகிறது. அதற்கு முன்பு அவர் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்தும் வெறும் துதியாக உள்ளன. கண்ணன் மீது, விநாயகர் மீது, முருகன் மீது, இதர பல தெய்வங்களின்மீது அவர் பாடிய எதுவும் ‘தேறித் தெளிந்தவனின்’ சொற்களாக அல்லாமல் உணர்ச்சிமயத்துக்கு அப்பால் வேறெதையும் அறியாத வேறொரு கவிஞனையே சுட்டிக்காட்டுகின்றன.

பாரதி சந்தித்த மூன்று சித்தர்களைப் பற்றிய குறிப்புகள் அவரது சுய சரிதையில் வருகின்றன. குள்ளச்சாமி என்றொரு சித்தர். கோவிந்தசாமி என்றொரு சித்தர். பிறகு யாழ்ப்பாணச் சாமி என்பவர்.

இதில் குள்ளச்சாமி, பாரதியை மிகவும் பாதித்தவர் என்று எண்ண முடிகிற விதமாக அவரைக் குறித்துச் சற்று நிறையவே எழுதியிருக்கிறார்.

‘சாமி, நீங்க யாருன்னு எனக்குப் புரியல. ஒரு பார்வைல பரமசிவனா தெரியறிங்க. இன்னொரு பார்வைல பைத்தியக்காரனாட்டம் தெரியறிங்க. சின்னப் பசங்களோட ரோட்ல திரியறிங்க. சொறிநாய்ங்க கூடல்லாம் விளையாடிட்டிருக்கிங்க. உங்கள கேடகரைஸ் பண்ண முடியல. நீங்களே சொல்லிடுங்க, யார் நீங்க?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கேட்கிறார்.

சித்தர் அப்போது நல்ல மூடில் இருந்திருக்கிறார். சரி, வா என்று ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். புராதனமான, இடிபாடுகள் மிகுந்த, யாரும் வசிக்காத இடம். அங்கே ஒரு கிணறு இருந்திருக்கிறது. அதனருகே பாரதியை அழைத்து வரும் குள்ளச்சாமி, ‘மேல பாரு’ என்று சொல்லவும் பாரதி அண்ணாந்து பார்த்திருக்கிறார்.

‘என்னா தெரியுது?’

‘சூரியன்.’

‘குனி. அப்புடியே கிணத்துத் தண்ணியப் பாரு.’

பாரதி பார்க்கிறார்.

‘இப்ப என்னா தெரியுது?’

‘அதே சூரிய வெளிச்சம்தான் தண்ணில விழுது.’

‘அவ்ளதான் மேட்டர். போ.’

சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி எழுதுகிறார்:

தேசுடைய பரிதிஉருக் கிணற்றினுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை, அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தச் சித்தர் எப்போதும் சுமந்து வரும் அழுக்கு மூட்டை குறித்து பாரதி அவரிடம் கேட்டிருக்கிறார்.

‘எதுக்குங்க இந்த கப்படிக்கற மூட்டைய எப்பம்பாரு தூக்கிட்டுத் திரியறிங்க? சித்தர்னா இப்படித்தான் இருந்தாகணும்னு எதாச்சும் ரூல் இருக்குதா?’

அதற்குக் குள்ளச்சாமி சொல்கிறார், ‘டேய் நானாச்சும் வெளிய, முதுகுல தூக்கிட்டு சுத்தறேன். நீ உள்ளார இல்ல குவிச்சி வெச்சிருக்கற?’

புறத்தே நான் சுமக்கின்றேன் அகத்தினுள்ளே
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ

– என்பது பாரதியின் விவரிப்பு. சம்பவங்களை, அவை நடந்த விதத்திலேயே கவிதையில் அவர் விவரிப்பதைப் படிப்பது பேரனுபவமாக இருக்கிறது.

பாரதி சந்தித்த இன்னொரு சித்தர், கோவிந்த சாமி. இவர் சற்று வேறு மாதிரி போலிருக்கிறது. கவிஞரை முதலில் திகைக்க அடித்துவிட்டு, அதன் பிறகுதான் உபதேசிக்கத் தொடங்கியிருக்கிறார். அதாவது, பாரதியின் (மறைந்த) தாய் தந்தையின் உருவத்தைத் தான் ஏந்தி அவர்முன் காட்சியளித்திருக்கிறார்.

‘செத்துப் போன உன் அப்பன் ஆத்தாள பாத்துக்க.’

இது எப்படி சாத்தியம்? பாரதியின் பெற்றோரை சித்தருக்குத் தெரியாது. அவர்கள் வாழ்ந்தது வேறு காலம். இறந்தவர்களின் உருவைத் தன் முகத்தில் ஏந்தி, அவர்களது பிள்ளைக்கு ஒரு மனிதன் காட்டினால் அவன் சுருண்டு காலில் விழுந்துவிட மாட்டானா?

அதுதான் நடந்திருக்கிறது.

… இறந்த எந்தை
தன்னுருவம் காட்டினான் பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவம் உற்றான்
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி உடையனென்றும் அறிந்துகொண்டேன்
மன்னவனைக் குருவென நான் சரணடைந்தேன்
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன்.

இதில் ‘மரணபயம் நீங்கினேன்’ என்கிற சொற்கள்தாம் சாரம். எதுவும் அழிவதில்லை; உடலைத் தவிர என்கிறது கீதை. இந்த சாமி அதை பாரதிக்குப் புரிய வைத்த விதத்தில் சிறிது மேஜிக் கலந்திருந்தாலும் சொல்ல நினைத்தது சரியாகச் சென்று சேர்ந்துவிட்டதுதான் முக்கியம்.

யாழ்ப்பாணச் சாமி என்ற மூன்றாவது சித்தரைக் குறித்து எழுதும்போது, தங்கத்தால் இழைத்துக் கோயில் கட்டி, லிங்கப் பிரதிஷ்டை செய்து நீங்கள் கும்பிடுகிறீர்கள். எனக்கு இவன் கண்கள் போதும். இவனைப் பார்ப்பதும் சிவனைப் பார்ப்பதும் எனக்கு ஒன்றுதான் என்று சொல்லிவிடுகிறார்.

பாரதியின் சித்தர் தொடர்புகளைத் தொட்டால் உடனே நம் நினைவுக்கு வருவது குள்ளச்சாமி அவருக்கு அபின் கொடுத்தார் என்கிற விவரம்தான். அதைத்தான் பல ஆய்வறிஞர்கள் விரித்து விவரித்துக் களித்திருக்கிறார்கள். வ.உ. சிதம்பரம் பிள்ளைகூடத் தனது புத்தகம் ஒன்றில் இது குறித்து மிக விரிவாகச் சொல்லி, அந்தக் கருமத்தை விட்டுத் தொலையப்பா என்று நண்பருக்கு அக்கறையுடன் அறிவுரை சொன்னதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

குள்ளச்சாமியிடம் பாரதி பெற்றது அபின் மட்டுமல்ல. ஆனால் துரதிருஷ்டவசமாக பாரதியின் வாழ்வில் அந்தக் கட்டத்தைத் தோண்டி எடுத்து நாம் பெறுவது அது ஒன்றைத்தான்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading