புத்தக அறிமுகம் புத்தகம்

மொழி ஆளுமை – வ.உ.சியின் பாரதி நினைவுக் குறிப்புகள்

வ.உ. சிதம்பரம் பிள்ளையின் ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். பிள்ளை இதனை எந்த வருடம் எழுதினார் என்ற குறிப்பு இந்நூலில் இல்லை. அவர் 18.11.1936ல் மறைந்தார். எனவே 1935க்கு முன்பு எழுதப்பட்ட புத்தகம் என்று வைத்துக்கொள்ளலாம். இன்றைக்கு எண்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்நூல், நேற்று எழுதப்பட்டது போன்ற தெளிவும் எளிமையும் கொண்டிருப்பது திரும்பத் திரும்ப வியப்பளிக்கிறது. ஒரு சொல்கூட இன்று வழக்கில் இல்லாமல் இல்லை. ஒரு சொற்றொடர்கூடப் புரியாமல் இல்லை. புரிவது மட்டுமல்ல. வ.உ.சியின் மொழிநடை பல இடங்களில் ஏக்கமுறச் செய்யும் அளவுக்குப் பிரமாதமாக இருக்கிறது. மொழியின்மீது இம்மனிதருக்கு எப்பேர்ப்பட்ட ஆளுமை இருந்திருக்கிறது!

பாரதியுடன் பழகியவர்கள் அவரைக் குறித்து எழுதிய பெரும்பாலானவற்றை வாசித்திருக்கிறேன். வ.ராவுடையது, யதுகிரி அம்மாளுடையது இரண்டும் சிறப்பான வரலாற்றுப் பதிவுகள். சுவாரசியமானவையும்கூட. ஆனால் ஒரு வரலாறாக மட்டுமே அவை நிற்கும். வ.உ.சியின் இச்சிறு நூல், பாரதி என்ற காலஞ்சென்ற கவிஞனைத் திரும்ப உயிர் கொடுத்து இழுத்து வந்து நிறுத்தி நடமாட வைத்து, பேச வைத்துக் காட்டும் பெரும் வித்தையைச் செய்கிறது. அவர்களுக்குள் மாமன், மச்சான் என்று பேசிக்கொள்ளும் நெருக்கம் இருந்திருக்கிறது. இந்நெருக்கம், அரசியல் ரீதியில் அவர்களுக்கு இருந்த ஒத்த கருத்தால் உருவாகியிருக்கிறது. என்னதான் இரு தரப்புத் தந்தையர் காலத்தில் இருந்து அறிந்த குடும்பங்கள் என்றாலும் கருத்தொற்றுமையே அவர்களை நெருக்கமாகப் பிணைத்திருக்கிறது. இந்த நெருக்கம் தரும் சௌகரியமே சங்கடத்துக்குரிய செய்திகளைக் கூட மிகவும் அநாயாசமாக விவரித்துக்கொண்டு போக உதவுகிறது.

ஓர் எடுத்துக்காட்டு –

“மாலை சுமார் 3 மணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக்கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு சிறு ‘அமிருதாஞ்சன்’ டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. ” அது என்ன மாமா?” எனக் கேட்டேன். “அதுவா, மோக்ஷலோகத்திற்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்” என்றார் மாமா. எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. “அட, பாவிகளா! எலுமிச்சங்காய் அளவா? நீங்கள் நாசமா…” “எல்லாம் உனக்குப் பயந்துதான் இந்தச் சிறிய அளவு. இல்லாவிட்டால்…” என்று சாமியார் முதுகில் ஒரு அடி கொடுத்துக்கொண்டே மாமா வெறி பிடித்தவர் மாதிரி சிரித்தார். மாமாவின் மாற்றத்திற்கு இம்மருந்துதான் காரணம் என்று நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது.”

அந்தச் சாமியார் குள்ளச் சாமி என்று பாரதியால் குறிப்பிடப்படும் நபர் என்பதும் அந்த எலுமிச்சங்காய் அளவு லேகியம் என்பது கஞ்சாவோ அபினோ என்பதும் எளிதில் புரிந்திருக்கும். நான் சுட்டிக்காட்ட விரும்புவது வேறு. பிள்ளையின் மொழியைக் கவனியுங்கள். மூன்று சொற்களை அவர் மிகச் சரியான இடங்களில் தூவுகிறார். 1) பேயிரைச்சல் 2) கொம்மாளம் 3) அடப் பாவிகளா

உச்ச போதையில் இரண்டு பேர் புரியும் ஆரவாரங்களை, அட்டகாசங்களை வெறும் மூன்று சொற்களைக் கொண்டு கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட முடிகிறது அவரால். பாரதியின் இச்செயல் தனக்குப் பிடிக்கவில்லை என்பதை தனிச் சொல்லே இல்லாமல் உட்பொருளாக உணர்த்திவிடுகிறார். எழுத்து லாகவம் என்றால் இதுதான்.

சூரத் காங்கிரஸ் மாநாட்டில் மிதவாதிகள் தரப்பினர் நடந்துகொண்ட விதத்தைக் குறித்து ஓர் அத்தியாயம் எழுதுகிறார். திலகர், அரவிந்தர், பாரதி போன்றவர்களை அவமரியாதை செய்யும் விதத்தில் ராஷ் பிகாரி கோஷ் எழுதி வாசித்த உரையையும் அதனை எதிர்த்து எதிர்த் தரப்பினர் மேற்கொண்ட நடவடிக்கையினையும் குறித்த அத்தியாயம். இந்த அத்தியாயத்தில் ஓரிடத்தை மிகவும் ரசித்தேன். ‘அப்போது நடைமுறையில் இருந்த காங்கிரஸ் மகாசபையின் விதிப்படி….’ என்று எழுதிக்கொண்டு போகும் பிள்ளை, ‘நடைமுறை’ என்ற வெகுஜன சொல் எங்கே புரியாமல் போய்விடப் போகிறதோ என்று அடைப்புக் குறிக்குள் அமலில் என்ற பண்டைய பிரயோகத்தைச் சேர்க்கிறார். எண்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர்!

திலகரைக் குறித்து எழுதும் இடத்தில் இப்படி ஒரு பத்தி உள்ளது:

“திலகருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றை இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். (இது இக்காலக் காங்கிரஸ் தலைவர்களது கண்ணிலும் படுவதாக!) அவர் எக்காரியத்தைச் செய்ய விரும்பினாலும், அக்காரியத்தைப்பற்றி முதலில் தம்முடைய சிஷ்யர்களைக் கலந்து ஆலோசனை செய்வார். தமது கருத்தும், அவர்களது அபிப்பிராயமும் மாறுபடுமாயினும் தமது அபிப்பிராயத்திற்கு அனுசரணையான விஷயங்களையெல்லாம் காரணகாரியத்தோடு எடுத்துச்சொல்லி விவாதிப்பார். தமது அபிப்பிராயம் அவர்களால் நிராகரிக்கப்படுமாயின், தமது சிஷ்யர்களின் அபிப்பிராயப்படியே முடிவு செய்வித்து அதனையே தாம் முன்னின்று முடிப்பார்.”

இக்கால காங்கிரஸ் தலைவர்கள் கண்ணில் படுவதாக என்று அன்றே வ.உ.சி சொல்லியிருக்கிறார். இக்காலத்துக்கும் இது பொருந்தும் அல்லவா? காங்கிரஸ்காரர்களுக்கு மட்டுமல்லாமல் அத்தனைக் கட்சிக்காரர்களுக்குமே.

இந்தளவு ஒரு புத்தகத்தில் ஊறித் திளைத்து நான் வாசித்து வெகுகாலம் ஆகிவிட்டது. மொழி ஆளுமை என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு இதைவிட ஓர் எளிய உதாரண நூல் இருக்க முடியாது.

(பாரதிக்கும் எனக்கும் பழக்கம் / வ.உ. சிதம்பரம் பிள்ளை / அழிசி ஈபுக்ஸ் வெளியீடு / ரூ. 49.)

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி