ஞானம் அடைய என்ன வழி?

ஆன்மிக விஷயமாக யாராவது என்னவாவது பேசத் தொடங்கினால் நான்கு வரிகளுக்குள் ஞானமடைவது என்கிற விவகாரம் வந்துவிடும். ஆனால் சிறிது யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக் குறித்து ஒரு ஜென் கதை இருக்கிறது. தடுக்கி விழுந்தால் ரத்தம் வரலாம். ஞானம் எப்படி வரும்? அற்ப மூளைக்கு அது புரியாது.

நமது நாட்டில் ஞானிகளுக்குக் குறைவில்லை. தியானம் செய்து, தவம் இயற்றி ஞானம் பெற்ற பலரைக் குறித்து அறிவோம். அது என்ன ஞானம்? இறைவனைக் காணுதல், தன்னை அறிதல், உலகை உணர்தல், இயற்கையுடன் மனிதனுக்கு உள்ள தொடர்பை அறிதல் என்று என்னவாகச் சொன்னாலும் மேகப் பொதி போலத்தான் எல்லாமே. ஏதோ இருப்பது போலத் தெரியும். என்ன என்று சரியாகத் தெரியாது. ஒரே பஞ்சடைப்பாக இருக்கும். சட்டென்று ஒரு கேள்வி வரும். இந்த புத்தர், மகாவீரர், ஓஷோ போன்றவர்களும் ஞானமடைந்தவர்களாகச் சொல்லப்படுபவர்கள்தாம். ஞானம் பெற்ற பின்பு அவர்கள் பேசியதன் சாரத்தை எடுத்து சட்டையைக் கழட்டிப் பார்த்தால் அதில் கடவுளுக்கு இடம் இருப்பதில்லை. என்றால், ஞானம் என்பது கடவுள் தொடர்பற்றதா? படித்தால் அடைவது விஞ்ஞானம். என்ன செய்தால் கிடைப்பது மெய்ஞானம்? உண்மையில் மெய்யான ஞானம் என்பதுதான் என்ன?

தீராக் குழப்பம். நான் அஞ்ஞானி என்பதில் எனக்குச சந்தேகமில்லை. தெரிய வேண்டியது, நிஜ ஞானம் பெற என்ன வழி? குரு முகமாகப் பெறுவது, தவத்தின் மூலம் அடைவது என்று திரும்பவும் ஜாங்கிரி பிழியத் தொடங்கிவிடுதல் தகாது. கடவுள் உள்பட எப்பேர்ப்பட்ட பேருண்மையையும் – அது உண்மையாக உள்ள பட்சத்தில் – விளக்கிவிட முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. முடியாது என்றால் அது நமது போதாமை. அவ்வளவுதான்.

இந்த எண்ணத்துடன்தான் ஒவ்வொரு ஞானியின் போதனைகளையும் எழுத்தையும் அணுகுவேன். இந்த எண்ணமே தவறு என்பதால்தான் நமக்கு இன்னும் எதுவும் புரியாதிருக்கிறதோ என்றும் தோன்றும். ஆனால் இல்லை.

இந்த ஞானமடைதல் விவகாரத்தில் ஓரளவு புரிந்துகொள்ளக்கூடிய விதமாக ஒருவர் விளக்கியிருக்கிறார். ஏனோ அது பரவலாகவில்லை. அவர் பெயர் பரமஹம்ஸ ஓம்கார சுவாமிகள்.

பரமஹம்ச ஓம்கார சுவாமிகள்

கோடம்பாக்கத்தில் எனது அலுவலகம் உள்ள பகுதிக்கு சாமியார் மடம் என்று பெயர். அது இவருடைய மடம்தான். அந்தப் பெயரில் ஒரு பேருந்து நிறுத்தமும் உள்ளது என்பதால் பெயரளவில் அவ்விடம் பிரபலமே. தவிர, தினமும் மதியம் அன்னதானம் நடக்கும் என்பதால் பிராந்தியத்தில் வசிக்கும் ஏழை எளியவர்கள் அங்கே வந்து கூடுவார்கள். அவர்களது தேடல் பசி சார்ந்து இருக்கும். மடத்தில் கிடைக்கும் உணவு அவர்களுக்கு பிரம்மத்தைக் காட்டித் தரும். அவ்வளவுதான்.

ஆனால் இந்த சுவாமிகள் மிகத் தீவிரமான, ஆழ அபாயங்கள் மிகுந்த விவகாரங்களை நம்ப முடியாத அளவுக்கு எளிமையாக விளக்கியிருக்கிறார்.

1921ம் ஆண்டு திருத்தணிக்கு அருகே தும்மலசெருவு கண்டிரிகா என்னும் கிராமத்தில், அஸ்தி வெங்கட ராஜு – சுப்பம்மா தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவரது இயற்பெயர் செல்ல ராஜு. கல்லூரிப் படிப்பு வரை அந்நாளில் படித்திருக்கிறார். அரசு உத்தியோகஸ்தரும்கூட. ஏதோ ஒரு கட்டத்தில் அனைத்தையும் விடுத்து, ஆத்ம விசாரத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் சண்முகானந்தா என்கிற துறவியை அவர் சந்திக்க நேர்ந்தது தற்செயலாக இருக்க முடியாது. விதித்திருந்தது. அது வரை எப்போதும் ராமநாம ஜபம் செய்துகொண்டிருந்த செல்ல ராஜு, சண்முகானந்தாவின் தொடர்பும் மந்திரோபதேசமும் கிடைத்த பின்பு ‘ஓம் ராம’ என்று ஜபிக்க ஆரம்பித்தார். ராம ஜபத்துடன் ஓம் சேர்த்துச் செய்வோர் இன்று யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் அப்படித்தான் செய்திருக்கிறார்.

உத்தியோக நிமித்தம் சென்னைக்கு வந்தவர், இடையர்பாளையம், திருவொற்றியூர், ஆவடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் வசித்திருக்கிறார். ஏதோ ஒரு நாள் நிர்விகல்ப சமாதி கைகூடியிருக்கிறது. ராமர் காட்சியளித்திருக்கிறார். தமது மகா சமாதி தினத்தை மூன்றாண்டுகளுக்கு முன்பே அறிந்து அதற்கு அரசிடம் முறைப்படி அனுமதியும் பெற்றிருக்கிறார். (1967ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி. அப்போது தமிழ் நாட்டின் முதலமைச்சர், பக்தவச்சலம்.) தமது சீடர் ஜோதியுடன் ஐக்கியம் அடையும் நிகழ்ச்சியை, குருநாதரான சண்முகானந்த சுவாமிகளே முன்னின்று நடத்தி வைத்ததாக ஓம்கார சுவாமிகளின் வரலாறு கூறுகிறது. நமக்கு மிகச் சமீப காலத்தில் நடந்த சம்பவம்தான். ஏனோ இது பரவலாகத் தெரியவேயில்லை.

ஓம்கார சுவாமிகள் ஜோதியில் ஐக்கியமான இடம்தான் இன்று சாமியார் மடம் என்று அழைக்கப்படுகிறது. 1949ம் ஆண்டு அவர் அந்த இடத்தில்தான் தமது ஞானோதய மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். தமிழ் ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்பட நிறைய மொழிகள் அறிந்தவர். பல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
ஞானமடைவதற்கான வழிகளை விளக்கி அவர் வகுத்துக்கொடுத்தவற்றைத் தொகுத்து யோசித்தால் எளிமையாகப் புரிகிறது. கவனம். புரியத்தான் எளிமை. கடைப்பிடிப்பது அல்ல. புரியும்போதே அதுவும் சேர்த்துத் தெரிந்துவிடுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

முதலாவது, சுய நினைவுடன் வாழ்க்கையை வாழ வேண்டும். அதாவது எதையும் விழிப்புணர்வுடன் செய்வது. இரண்டாவது, இன்னொருத்தர் வழியைப் பின்பற்றுவதைக் காட்டிலும் ஜபத்தின்போதும் தியானத்தின்போதும் நமக்குள்ளே இருந்து என்ன தோன்றுகிறதோ, அதைப் பின்பற்றுவது பலன் தரும். பரிசுத்தமான மனம் என்பதை மூன்றாவது கட்டளையாக வைக்கிறார். அது எப்படிக் கைகூடும் என்றால் பிறரை எக்காரணம் கொண்டும் நிந்திக்கக்கூடாது. உண்மை, அன்பு, கருணை, சாந்தம், ஜீவகாருண்யம். இவற்றை எப்போதும் பின்பற்றுவதன் மூலம் முன்சொன்ன பரிசுத்தத்துக்குப் பக்கத்தில் போகலாம். கடவுள் வெளியே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்வது. அனைத்து உயிர்களையும் இறைவனாகப் பார்ப்பது. அல்லது அனைத்திலும் இறைவனைப் பார்ப்பது. எப்போதும் ஓம்கார சிந்தனை. கூடியவரை மௌனம். கூடிய வரை சாத்விக உணவு. முடிந்த போதெல்லாம் உண்ணா விரதம்.

பக்தி -> ஜபம் -> தாரணம் -> தியானம் -> சமாதி என்பதே ஞானத்தை அடையும் நேர்வழி மற்றும் ஒரே வழி. இதற்கு சத்தியம், அன்பு, ஜீவகாருண்யம், தன்னலமற்ற சேவை, சாந்தம் என்பவற்றை அடிப்படை தருமங்களாகக் கொள்ள வேண்டும். இதைச் சரியாகச் செய்ய வேண்டுமென்றால் ஐந்து நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை, சாத்வீகமான உணவை மட்டுமே உண்ணுதல். பெரும்பாலும் மௌனமாக இருத்தல். அடிக்கடி உண்ணாவிரதம். எப்போதும் ஏகாந்தம். மிகவும் முக்கியமானது, வைராக்கியம்.

வைராக்கியம் என்றால் என்ன என்றும் விளக்கம் சொல்லி விடுகிறார். சுவை, ஒளி, ஸ்பரிசம், வாசனை இவற்றை முற்றிலுமாகக் கட்டுக்குள் வைத்தல். எதற்கும் அடிமையாகி விடாமல் இருப்பது.

இவ்வளவிலும் சரியாக இருந்துவிட்டால் ஞானமடைய நாம் தயார். ஆத்ம விசாரணை, குரு அருள், வைராக்கியம் இவற்றை ‘நிபந்தனைகள்’ என்றே சொல்கிற சுவாமிகள் இறுதியாக ஒரு முத்திரை பதிக்கிறார். ஞானமடைய பிராப்தம் வேண்டும்!

சாமியார் மடத்தில் எனக்குப் பல முறை பிரசாதம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிராப்தம்தான் இன்னும் கிடைத்தபாடில்லை.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!