சாலை ஓரமாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். முதல் வரிசையில் ராமானுஜரும் அவருடைய புதிய சீடர்களும் சென்றுகொண்டிருக்க, மூத்த சீடர்கள் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். வழி முழுதும் பாசுர விளக்கங்கள். நடந்தபடி வேதாந்த விசாரம். குளம் கண்ட இடத்தில் தாகம் தணித்துக்கொண்டு, பிட்சை கிடைத்த இடத்தில் உணவு உண்டுகொண்டு, சாலையோர சத்திரங்களில் படுத்துத் தூங்கி, விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
ராமானுஜருக்குத் திருமலை யாத்திரை மிகுந்த உற்சாகத்தை அளித்தது. காஞ்சி வழியே செல்லப் போகிறோம் என்ற எண்ணம் நடை வேகத்தை அதிகரித்தளித்தது. திருக்கச்சி நம்பி எப்படி இருக்கிறாரோ என்னமோ. பார்த்தே பலகாலம் ஆகிவிட்டது. அவரில்லாவிட்டால் இந்த ஜென்மம் இந்நேரம் என்ன ஆயிருக்கும்?
‘அவர் எப்படி இல்லாதிருந்திருப்பார் சுவாமி? உங்களை எங்களுக்கு அளிக்கவே அருளாளன் அவரை உலகுக்கு அளித்திருக்கிறான் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை.’
‘அற்புதமான ஆத்மா. அருளாளனைத் தவிர வேறு நினைவே இல்லாத மனிதர். சன்னிதியில் ஆலவட்ட கைங்கர்யம் செய் என்று ஆளவந்தார் அவரிடம் சொன்னாராம். இன்று வரை ஒரு நாளும் அவர் அதில் தவறியதே இல்லை. அருளாளனுக்கா வியர்க்கப் போகிறது? ஆனால் காஞ்சியில் வீசுகிற குளிர்க்காற்றெல்லாம் திருக்கச்சி நம்பியின் ஆலவட்ட கைங்கர்யத்தால் வீசுவதுதான்!’
பேசிக்கொண்டே நடந்தார்கள். ஒரு காட்டுப்பகுதியைக் கடந்து ஏதோ ஒரு கிராமத்தின் எல்லையை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது அன்று மாலை ஆகியிருந்தது.
ராமானுஜர் ஒரு சீடனை அழைத்தார். ‘பிள்ளாய், இந்த ஊரில் நமது மடத்தில் பயின்ற மாணவன் ஒருவன் இருக்கிறான். யக்ஞேசன் என்று பேர். அவன் வீட்டுக்குப் போய் நமது குழு வந்துகொண்டிருக்கிற விவரத்தைச் சொன்னால் இரவு உணவுக்குச் சிரமம் இராது. தவிர இன்று நாம் இரவு தங்குவதற்கும் ஓர் இடம் வேண்டும். இங்கே சத்திரங்கள் ஏதும் இருக்காது என்று தோன்றுகிறது.’
‘நீங்கள் மெதுவாக வாருங்கள் சுவாமி. நான் முன்னால் சென்று ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன்.’ என்று சொல்லிவிட்டு சீடன் முன்னால் விரைந்தான்.
சேரன் மடத்தில் பயின்ற யக்ஞேசன் வீடு எங்கே என்று கேட்டு விசாரித்துக்கொண்டு போனவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அது வீடல்ல. மாளிகை. யக்ஞேசன் அந்த ஊரில் ஒரு பெரிய நிலச்சுவாந்தாராக இருக்கிற விஷயம் அந்தச் சீடனுக்கு அப்போதுதான் தெரியவந்தது.
பார்க்க வேண்டும் என்று சொன்னதும் காவலாளி உள்ளே அழைத்துச் சென்றான்.
‘யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?’
‘ஐயா நான் உடையவரின் மாணாக்கன். உடையவர் தமது சீடர்களுடன் திருமலை யாத்திரை புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார். இன்றிரவு இங்கே…’
அவன் சொல்லி முடிப்பதற்குள் யக்ஞேசன் தனது பணியாளர்களை அழைத்தார். ‘என் குருநாதர் இன்று நமது இல்லத்துக்கு வருகிறார். விருந்து அமர்க்களப்பட வேண்டும்.’
அதோடு நிறுத்தாமல் உடனே ராமானுஜரை வரவேற்க, பரிவாரங்களை உபசரிக்க ஏற்பாடுகள் செய்யப் போய்விட்டார். ‘குருநாதர் அசந்து போகும்படியாக உபசாரங்கள் இருக்க வேண்டும். புரிகிறதா? அவரோடு கூட வருகிறவர்கள் வாழ்நாளில் இப்படியொரு ராஜ விருந்தை உண்டிருக்கக்கூடாது! சீக்கிரம் நடக்கட்டும் எல்லாம்!’
அடுப்படிக்கே சென்று உத்தரவிட்டார். தமது மனைவியிடம் விவரத்தைச் சொல்லி, அவளையும் தயாராகச் சொன்னான். உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அத்தனை பேருக்கும் ஆளனுப்பித் தகவல் சொன்னான். உடையவர் வருகிறார். என் பழைய ஆசிரியர். வந்து சேவித்து ஆசி பெற்றுக்கொள்ளுங்கள். இன்னொரு முறை இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்காது. நீங்கள் சேரன் மடத்துக்குப் போனால் அங்கே பத்தோடு பதினொன்று. இங்கே என்னைத் தேடி அவரே வருகிறபடியால் என்னைச் சார்ந்தவர்களுக்கு என்று பிரத்தியேகமாக சிறப்புச் சொற்பொழிவே ஒன்றை ஏற்பாடு செய்கிறேன்.
பரபரவென்று விருந்து தயாராக ஆரம்பித்தது. யக்ஞேசன் வீட்டுக்கு யார் யாரோ வந்து சேரத் தொடங்கினார்கள். உடையவர் வருகிறார் என்று முன்னால் வந்து தகவல் சொன்ன சீடனை யக்ஞேசர் மறந்தே போனார். கால் கடுக்க நடந்து வந்தவனுக்குக் குடிக்க அங்கே ஒரு வாய் நீர் கூட யாரும் தரவில்லை. நெடு நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு சலிப்படைந்து திரும்பிவிட்டார்.
இதற்குள் ராமானுஜரும் அவரது பரிவாரங்களும் ஊர் எல்லைக்கு வந்துவிட்டார்கள்.
‘சுவாமி, அதோ பாருங்கள்!’ சீடர்கள் சுட்டிய திசையில் முன்னால் போன மாணவன் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தான்.
‘வாவா. யக்ஞேசனைப் பார்த்தாயா? நாம் வருவதைச் சொல்லிவிட்டாய் அல்லவா?’
‘மன்னிக்க வேண்டும் சுவாமி. தேடி வந்தவருக்குக் குடிக்க நீர் அளிக்க வேண்டும் என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.’ என்று தொடங்கி நடந்ததை முழுதுமாக எடுத்துச் சொன்னார்.
ராமானுஜர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.
‘என்ன செய்யலாம்? நாம் வேறு எங்கேனும் போய்விடலாமா?’ என்று இன்னொரு சீடர் கேட்க, அந்த வழியே சென்ற ஒருவரை நிறுத்தி, ‘அப்பா! இந்த ஊரில் இரவு தங்கிச் செல்ல ஏதேனும் இடம் இருக்கிறதா?’ என்று வேறொருவர் விசாரித்தார்.
‘பணக்காரர்களுக்கு யக்ஞேசர் என்பவரின் வீடு எப்போதும் திறந்திருக்கும். ஏழைபாழைகள் என்றால் வரதன் வீட்டுக்குத்தான் போயாக வேண்டும்.’ என்றான் ஊர்க்காரன்.
‘அது யாரப்பா வரதன்?’ என்றார் ராமானுஜர்.
‘இந்த ஊர்க்காரர்தான் ஐயா. பரம ஏழை அவர். ஆனால் யாராவது பசிக்கிறது என்று போனால் ஏதாவது செய்து ஒரு கவளம் உணவு இட்டுவிடுவார்.’
‘அப்படியா? அவர் வீடு எங்கே இருக்கிறது?’
அவன் வழி சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ராமானுஜரும் சீடர்களும் வரதன் வீட்டைத் தேடிக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.
அவர்கள் கதவைத் தட்டியபோது வரதன் வீட்டில் இல்லை. உள்ளிருந்து, ‘யாரது?’ என்றொரு குரல் கேட்டது. வரதனின் மனைவி.
‘அம்மா, திருவரங்கத்தில் இருந்து உடையவர் தமது பரிவாரங்களுடன் வந்திருக்கிறார். வரதன் வீட்டில் இருக்கிறாரா?’
அந்தப் பெண் கதவை மிகக் கொஞ்சமாகத் திறந்தார். ‘அவர் வீட்டில் இல்லை. ஆனால் நீங்கள் வரவேண்டும். அதற்குமுன்…’ என்று இழுத்தவள் சட்டென்று கதவை மூடிவிட்டாள்.
அரைக் கண நேரம்தான். கதவைத் திறந்ததும் பின்னால் மறைந்திருந்து முகத்தை மட்டும் சட்டென்று வெளியே காட்டி ஒருவரி பேசிவிட்டு அவள் உள்ளே இழுத்துக்கொண்டதும்.
அந்தச் சிறு அவகாசத்தில் ராமானுஜருக்குப் புரிந்துவிட்டது. சட்டென்று தம் தலையில் சுற்றியிருந்த பரிவட்டத்தைப் பிரித்து உள்ளே வீசினார்.
(தொடரும்)