இன்னொரு கந்தசாமியின் கதை

வீதியின் இருபுறமும் குழிகள் தோண்டி, சவுக்குக் கட்டைகள் நட்டார்கள். எங்கிருந்தோ பிடுங்கிவரப்பட்ட தென்னை ஓலைகள் சரசரவென்று பின்னப்பட்டுக் கூரை ஏறின. உபயதாரர் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்குகள், பொதுவில் உருவப்பட்ட மின்சாரத்தில் மினுங்கி எரியத் தொடங்கின. லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர். ஈஸ்வரி உயிர் பெற்றதும் என் வீட்டு வாசலில் ஆடி மாதம் பிறந்தது.

நம் நாட்டில் கேள்வி கேட்க முடியாத விஷயங்களுள் இதுவுமொன்று. பக்தியைக் கூண்டில் ஏற்றுவதாவது? ஆடி மாதமென்றால் அம்மனுக்கு விசேடம். அம்மனிடம் வாக்மன் கிடையாது, ஐபாட் கிடையாது. லவுட் ஸ்பீக்கர் வைத்தால்தான் அவளுக்குச் சரிப்படும். நாய்ஸ் பொல்யூஷன் என்பீரானால் நீர் சார்வாக மகரிஷியின் வம்சத்தில் வந்த கோர நாத்திகராவீர். லவுட் ஸ்பீக்கர், மஞ்சள் ஆடை, வேப்பிலை, கூழ், வெயில் இல்லாமல் ஆடி இல்லை. தள்ளுபடிகள் இதில் சேர்த்தியில்லை.

எங்கள் வீட்டு வாசலில் ஒரு சிறு அம்மன் கோயில் உண்டு. நாகவல்லியம்மன் என்றால் பிராந்தியத்தில் யாருக்கும் தெரியும். அம்மனுக்கு அடுத்த காம்பவுண்டில் உத்தியோகம் பார்க்கும் போலீசுக்காரர்கள், என்ன வழக்கு வந்தாலும் அவ்விடம் ஒருவார்த்தை சொல்லாமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை. பல வழக்குகளுக்கு எஃப்.ஐ.ஆரே போடாமல் மிரட்டி, திருப்பி அனுப்புவதற்கும் நாகவல்லியம்மன் உத்தரவு தராததே காரணம் என்பார் பெரியோர். போலீஸ்காரர்கள் மட்டுமல்லாமல், பிராந்தியத்தில் வசிக்கும் டாக்டர்கள், திரைத்துறையாளர்கள், வர்த்தகர்கள், அவரவர் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அம்மன் வெகு நெருக்கம். மேற்படி ஆடித்திருவிழாவையே பகுதிவாழ் டாக்டர் ஒருத்தர்தான் சிரமேற்கொண்டு முன்னின்று நடத்துகிறார்.

மிகக் குறுகலான சாலையாச்சே, இரண்டு வாகனாதி வஸ்துகள் ஏக காலத்தில் நகரமுடியா நெருக்கடியாச்சே, பக்கத்தில் பள்ளிக்கூடம் வேறு இருக்கிறதே, பாலர்கள் பாடு திண்டாட்டமாச்சே என்றெல்லாம் சிந்திப்பதற்கில்லை. இது ஆடி. எனவே அடி, தூள்.

நாகவல்லியம்மன் சந்தனக்காப்பு ஏந்திக்கொண்டாள். வேப்பமரங்களுக்கு முடிதிருத்தம் செய்து வீதியெங்கும் சொருகிவைத்தார்கள். மஞ்சள் குளித்த பெண்கள், மஞ்சள் புடைவை அணிந்து, மஞ்சள் வளையல், மஞ்சள் ரிப்பன், சாமந்திப்பூ இவற்றையும் சாத்திக்கொண்டு, பால் உள்ளிட்ட காவடி எடுத்து வரும் காட்சி, கண் கொள்ளாதது. அதற்கப்புறம் நடப்பதுதான் ஆடியின் உச்சம்.

சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒருவாறு முடிவடைவதற்கு மாலை ஏழு மணி சாவகாசம் ஆகிவிடுகிறது. அதன்பிறகு மைக் செட்காரர் சன்னிதி வாசலில் ஒரு மைக்கைக் கொண்டுவந்து வைக்கிறார். பூசாரி ஹலோ மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ சொல்லிவிட்டு சைகை காட்டினால், இப்போது மீண்டும் ஸ்பீக்கரில் எல்லாரீஸ்வரி. இரண்டு நாளாக ஒலிக்கும் குரல்தான். ஆனாலும் இந்த இறுதிநாள் ஏழு மணிக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. இம்முறை பக்தர்களில் பலருக்கு அருள் வந்துவிடுகிறது. நிற்கிற நேரத்தில் சுழலும் பம்பரம் போல அவர்கள் தம்மைத்தாமே ஓரிருமுறை சுற்றிக்கொண்டு, தடால் தடாலென்று அக்கம்பக்கத்து ஆசாமிகள் மீதெல்லாம் வந்து மோதி ஆட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

‘வா தாயி. நீ ஆரு? எந்தூரு ஆத்தா?’ மைக்கில் பூசாரி கேட்டதும் ஆத்தாவாகப்பட்டவள் தன் பயோ டேட்டாவைத் தெரிவிக்கத் தொடங்குகிறாள்.

‘நா புன்னைநல்லூர் மாரியம்மா’

‘நல்வரவு தாயே. உம்புள்ளைங்கள நீதான் பாத்துக்கணும். அடுத்து ஆருப்பா அது? அந்தா பச்ச சேல.. இப்பிடி, இப்பிடி முன்ன வா ஆத்தா? நீ ஆரு? எந்தூரு?’

மருவத்தூர், எண்ணூர், உப்பிலியாபுரம், பீர்க்கங்கரணை, சமயபுரம், வேடசந்தூர், திருநின்றவூர், ஆத்துப்பாக்கம், பீளமேடு என்று எங்கெங்கிருந்தோ சாமிகள் புறப்பட்டுச் சரியாக ஏழு மணியளவில் என் வீட்டு வாசலில் வந்து நின்று அட்டண்டன்ஸ் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், என் பேட்டைவாசிகளின் நல்வாழ்வுக்கும் ஆசியளித்துத் திரும்புவதில் எனக்குப் பேச்சுமூச்சில்லாமல் போய்விடுகிறது.

இந்த ஆடிக்கு ஒரு தனி விசேஷம். அம்மன்களாக வந்துகொண்டிருந்த சமயம், திடீரென்று ஒரு ஆம்பள சாமி வேறு வந்துவிட்டார். அதுவும் மகாவிஷ்ணு. இதென்ன புதுக்குழப்பம்? பூசாரியின் தலைக்கு நாலடி உயரத்தில் எரிந்துகொண்டிருந்த குழல் விளக்கு சட்டென்று கீழிறங்கிவந்து அவர் தலைக்குள் எரிந்தது.

‘அட மகாவிஷ்ணுன்னா நம்ம ஆத்தாளுக்கு அண்ணன்லா? தங்கச்சி ஃபங்சனுக்கு வந்துட்டாப்ல. வா சாமி. இரு சாமி.’

தீர்ந்தது விஷயம்.

ஏழே முக்கால், எட்டு வாக்கில் ஆட்டம் களைகட்டத் தொடங்கிவிட்டது. எப்படியும் ஏழெட்டுப் பேருக்கு ஏககாலத்தில் சாமி வந்துவிட, அந்தச் சிறு முட்டுச் சந்தில் ஒருத்தர்மேல் ஒருத்தர் மோதிக்கொண்டு சுழன்று சுழன்று ஆடத் தொடங்கினார்கள்.

திடீரென்று ஒரு சாமி, கூட்டத்தில் நின்றிருந்த யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முன்னால் போட்டுவிட்டது.

‘ஆத்தா என்னாச்சி?’

‘இவ என்ன நம்பல. மனசுக்குள்ள சிரிக்கிறா.’

அடக்கடவுளே. இதென்ன அபாண்டம்? ஆர்டூ ஸ்டேஷனில்கூட எஃப்.ஐ.ஆர். போடமாட்டார்களே? அந்தப் பெண்மணி அழமாட்டாத குறையாகத் தன் தரப்பை நிரூபிக்க வழிதேடி, ஒருபிடி விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு டமாரென்று நட்டநடுச் சாலையில் பூசனிக்காயைப் போட்டு உடைப்பதுபோல் விழுந்துவிட்டார். எப்படியும் அவருக்கும் சாமி வந்துவிடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

‘அதெல்லாம் இல்லாத்தா… அவிங்களும் உன் பக்தைதான். நீ ஆடு. ஏப்பா.. ஸ்பீக்கர் சவுண்ட ஏத்து…இந்தாம்மா, நீ இந்தப்பக்கம் வா.’

மாடரேட்டரான பூசாரி, க்ரைசிஸ் மேனேஜ்மெண்டில் கைதேர்ந்தவர் போலிருக்கிறது.

நான் கவனித்த வரையில் கன்னிப்பெண்கள் யாருக்குமே சாமி வரவில்லை. எல்லோருமே திருமணமானவர்கள். சுமார் முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பத்தி ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். அடா புடாவென்று கத்திக்கொண்டும் தலைமுடியை முன்பின்னாகத் தூக்கிக் கடாசிக்கொண்டும் விபூதியை வாரி இறைத்துக்கொண்டும் தம்மை மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் பேச்சுரிமை மறுக்கப்பட்டவர்களாயிருக்குமோ என்று நினைத்தேன். சாமி உடனே கண்ணைக் குத்திவிடாதபடியால், நினைத்தது பிழையில்லை என்றும் உடனே நினைத்தேன். சின்ன வயசில் இவர்களையெல்லாம் நல்லதொரு டான்ஸ் டீச்சரிடம் சேர்த்து, பளபளவென்று அழைப்பிதழ் அடித்து முறைப்படி சலங்கை பூசை செய்யாதது அவரவர் தகப்பன்மார் தவறாயிருக்கக்கூடும்.

எனக்குத் தீராத வியப்பளித்த விஷயம் ஒன்றுதான்.

ஏகப்பட்ட க்ஷேத்திரங்களிலிருந்து வேலை மெனக்கெட்டு மதராசப்பட்டணத்தின் ஒரு குறிப்பிட்ட பேட்டையின் ஒரு குறிப்பிட்ட சந்திலுள்ள குறிப்பிட்ட அம்மன் கோயில் வாசலுக்கு அத்தனை அம்மன்கள் வருகிறார்களே, இந்த பூசாரியாகப்பட்டவரும் சரி, பக்தகோடிகளாகபட்டோரும் சரி, ஒரு திடுக்கிடல் காட்டமாட்டார்களோ? ஒரு பரவசம்? ஒரு கண்ணீர் மல்கல்? என்னவாவது ஒரு வேண்டுதல்? அட, ஒரு தெய்வம் நேரில் வந்தால் நாமெல்லாம் மைக் பிடித்து, ‘வா தாயி, வீட்ல என்ன விசேசம்?’ என்றா விசாரித்துக்கொண்டிருப்போம்? எத்தனை ஏபி நாகராஜன் படங்களில் பார்த்திருப்போம்? ஸ்டாப் ப்ளாக்கில் கடவுள் அல்லது அசரீரி தோன்றி மறையும்போதெல்லாம் கதாநாயக, நாயகிகள் எத்தனைப் பரவசமடைவார்கள்! நெக்குருகி, நெஞ்சுருகிப் புல்லரித்து, அரித்து, ரத்தக்கசிவு ஏற்படுமளவு ஆகிவிடுமே?

அதெல்லாம் பின்னே பொய்யா? உலகம் கந்தசாமிப் பிள்ளைகளால் மட்டுமே ஆனதா?

புதுமைப்பித்தனின் கந்தசாமி சாகவே மாட்டார் என்று உறுதிபடத் தோன்றியது. சாமி இருக்கிறவரை அந்த ஆசாமிக்கும் இருப்பிடம் உறுதி.

Share

21 thoughts on “இன்னொரு கந்தசாமியின் கதை”

 1. மற்றதெல்லாம் கூட ஒழிந்து போகட்டும். இதில் என்னால் சகிக்கவே இயலாத விஷயம், நாமே ஏதோ ஸ்பீக்கர் பெட்டியின் மீது நின்றிருப்பதை போல அதன் உதறலை உணரச் செய்யும், ஹை டெசிபலில் அலறும் அம்மன் பாட்டுக்கள்தான். அதிலும் எல்.ஆர்.ஈஸ்வரி.. கடவுளே.

 2. சரவணன்

  அதாகப்பட்டது, நம்ம ஜெயமோகன் சொல்றாப்பல ஏ.பி.நாகராகஜன் வகையறா சாமிகள் இந்து ஞான மரபில் (?) நடு பெர்த். மாரி, காளி, சூலி, நீலி வகயராக்கள் லோயர் பெர்த்.. இந்தப் பழங்குடி மரபில் சாமிகள் தோளில் கைபோட்டுக்கொண்டு, ஏண்டா போன வருசம் வெட்டறாதாச் சொன்ன கோளி என்னாச்சு?! என்று கேட்பது அரசியலில் சகஜம் சாமி! யாரும் திடுக்கிடவோ ஆச்சரியத்தில் வாய் பிளக்கவோ மாட்டாய்ங்க… அதுதான் விஷயம் நைனா…

 3. பாரதி மணி

  நன்றி, பாரா. படித்துவிட்டு நான் //நெக்குருகி, நெஞ்சுருகிப் புல்லரித்து, அரித்து//…… இப்போது சொறிந்துகொண்டிருக்கிறேன்!

  பாரதி மணி

 4. இப்படியெல்லாம் ஏதாவது எழுதித் தொலைத்து கொஞ்ச நஞ்சம் எழுதிக் கொண்டிருக்கும் என் போன்றவர்களை ‘நீயெல்லாம் ஏண்டா எழுதற’ என்று கேட்காமல் கேட்பது வன்முறையல்லவா?

 5. பாரா, ஏபி நாகராஜன் பட பக்தர்களுக்கெல்லாம் அநேகமாய் ஆயுளில் ஒரு முறைதான் கடவுள் தரிசனம் கிடைக்குமாயிருக்கும். அதான் அவ்ளோ நெக்குருகல் எல்லாம். பூசாரிக்கு வருஷா வருஷம் சம்மர் வெகேஷனுக்கு வரும் கசின்கள் போலத்தான் இந்த ஆத்தாக்களும். 🙂

  உங்க பாடு தேவலாம். உங்க வீட்டு பக்கத்தில் குடியிருப்பது ஆத்தா மட்டுமே என்பதால் ஆடி மாசம் மட்டும்தான் இந்த ப்ரச்சனை. எங்க வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோவிலில் ஷண்மார்க்கங்களின் தெய்வங்களும், இதர சில்லறைத் தேவதைகளும் ஒரு காலனி போல ஒரு சேர எழுந்தருளி அருள் பாலிப்பதால் அநேகமாய் வருஷத்தில் முன்னூத்தி அறுபது நாட்கள் இதே டார்ச்சர்தான். மீதி ஐந்து நாட்களில் சுத்து வட்டாரத்தில் யாரேனும் காலமானதற்காக சன்னிதி நடை சாத்தியிருக்கும் – அல்லது குருக்கள்/கோவில் நிர்வாகிகளின் வீட்டில் ஏதேனும் விசேஷமாயிருக்கும். அதுவும் சிவராத்திரி அன்று விடிய விடிய ஒரு பஜனை நடக்கும் பாருங்கள்… அடடா…. கேட்டு அனுபவிக்க கோடி காதிருந்தாலும் போதாது…

  ஆமா இவ்ளோ நக்கல் விட்ருக்கீங்களே, இன்னுமா எந்த தமிழ் ஹிந்துவுக்கும் சாமி வரல? ஆண்டாள் மேட்டர்லயே உங்களை ஒரு வழி பண்ணியிருக்கணும், விட்டது தப்பா போச்சு…. :))))))

 6. //மாடரேட்டரான பூசாரி, க்ரைசிஸ் மேனேஜ்மெண்டில் கைதேர்ந்தவர் போலிருக்கிறது//
  நல்ல விளக்கம்!!!!!

 7. சார் நீங்க எப்போ எங்க முட்டு சந்து கோயிலுக்கு வந்தீங்க !!!!! அடுத்த ஆடிக்கு வரும்போது வீட்டுக்கு வாங்க.

 8. சாரே..சாமி இப்போதெல்லாம் க‌ண்ணைக் குத்துவ‌தில்லை.
  தாங்க‌ள் ஒரு வார‌த்துக்கு மாவா போட‌ முடியாத‌ப‌டி வாயில் குத்தும் என்ப‌து என் க‌ணிப்பு..
  அதுவும் கும்மாங்குத்தாக‌ இருக்கும்…

  அது ச‌ரி..இதுவ‌ரை யாருமே எதிர்வினை ஆற்ற‌வில்லையே..
  ஆத்தாவுக்கு அவ்வ‌ள‌வுதான் ம‌வுஸா…

 9. ஆதிசங்கர ஞானமரபில் வந்ததாயினும் சங்கரமதத்துக்கும் அத்வைதத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் மீமாம்ச தர்க்கவாதங்கள் நெறிப்படுத்தப்பட்டன. பிரம்ம சூத்திரம் இதன் தர்க்கவாதங்களை முறைப்படுத்துகிறது.

  அபடிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் பிரபஞ்சமும் ஆத்மாவும் ஒன்றல்ல, புறவுலகின் அடிவேர்க்காரணம், கருமம் தூண்டுகையே என்றெல்லாம் வழிமொழியப்பட்டது.

  இருந்தாலும், பருப்பொருட்களின் ஒட்டுமொத்த விவாதங்களுக்கும், உட்பரிமாண வெளிநிலை விளிம்பு வெளிச்சங்களுக்கும் மத்வரின் வியாக்கியாங்களும், விஷக்கூறு நுண்வடிவம் கலந்த புறஎதார்த்த பருப்பிரஞ்சமாய் மாறி …

  அடாடா, சாரிங்ணா, ஜெமோ வெப்சைட் படிச்சுக்கிட்டிருந்தேன். அப்படியே இங்க வந்ததுல கொஞ்சம் அப்பீட் ஆகி சாமி ஆடிட்டுது!

 10. டாலர் தேசத்திருந்து உங்கள் எழுத்தின் விசிறி அல்ல! ஏசி நான்!
  எப்பிடி தல உங்ளல மட்டும் இப்பிடி எல்லாம் யோசிக்கமுடியது!
  ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

  ஆங்! என்ன பிளாக் லேஅவுட் மாதம் தோரும்மாறுது

 11. சார் செம காமெடி 🙂 அனைவரும் படும் அவஸ்தையை தெளிவா கூறி இருக்கீங்க.. அதோட தேர்வு சமயத்தில் இவர்களால் பசங்க படும் அவஸ்தை … என்னமோ போங்க சார்! 🙁

  அந்த மாரியாத்தாவும் அம்மனும் தான் இவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்கணும்

 12. //இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. //
  ஹி…. ஹி….

 13. pinnoothattula ithanai vagaigala? adhuvum Las angeles ram and parisalkaran comments shows me how to add pepper to the soup.

 14. அமர்க்களம்.

  சிறு வயதில் பம்மல் அங்காளம்மன் ஆடித்திருவிழாவின் போது, அனகாபுத்தூர்க்காரி ஜில்கி ஜில்கி என்று ஆடத்தொடங்கி பூசாரியின் காதில் ஏதோ ரகசியமாய்ச் சொன்னதும், பூசாரி பகிரங்கமாக “தயிர் கேக்குது, பாப்பாரத் தாயி போல, கொணாறேன் தாயி” என்றது நினைவுக்கு வருது… மூச் பேச் இல்லாமல் நடுங்கிக் கொண்டு பார்ப்போம்.

 15. There is a scene in Enthiran related to this…It was hilarious…Shankar’s way of fixing this problem.
  PaRa, I just started reading your blog. Amazing!!! I truly believe that you are filling the spot that Sujatha left.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *