நீரில் மிதக்கும் தேசம்

நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே, கலிங்க, காந்தார, சாவக, கடார தேசங்களிலே எவ்வெப்போது என்னென்ன அழிவுகள் நேர்ந்திருக்கின்றன என்று உட்கார்ந்து யோசித்து அல்லது கூகுளாண்டவரைச் சரணடைந்து ஒரு பட்டியல் தயாரித்தளிக்கலாம்.

ஒன்று தெரியுமா? உலக சரித்திரம் அல்லது பூகோளம் இதற்குமுன் காணாத மகத்தான இயற்கைப் பேரழிவு என்பது சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்ததுதான்.

பாகிஸ்தானிலா? என்ன நடந்தது? என்று கேள்விகளால் வேள்வி செய்வதற்கு நம்மில் ஒரு மாபெரும் மக்கள் சமூகம் உண்டு. பிழை அவர்கள் மீதில்லை. வேளைக்கொரு புத்தம்புதுப் படம் பாருங்கள், சுதந்தர தினத்தைக் கொண்டாடித் தீருங்கள் என்று தொலைக்காட்சிகளும், பட்டப்பகலில் சங்கிலிப் பறிப்பு, காதலனுடன் எஸ்கேப் ஆன மணப்பெண் போன்ற சர்வதேச முக்கியத்துவம் மிக்க செய்திகளாலும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் பிரம்மாண்டத் திரைப்பட விளம்பரங்களாலும் பக்கங்களை நிறைக்கும் பத்திரிகைகளும்தான் காரணம்.

விஷயம் எளிது. இந்த வருஷம் ஆகஸ்டு பதினாலாம் தேதி பாகிஸ்தானியர்கள் தமது சுதந்தர தினத்தைக் கொண்டாடவில்லை. ஒப்புக்கு ஒரு கொடியேற்றிவிட்டு ஒதுங்கிவிட்டார்கள். அதையேகூட ஒளிந்து நின்றுதான் ஏற்ற வேண்டிய நிலைமை. மழையென்றால் பேய் மழை. வெள்ளமென்றால் பிசாசு வெள்ளம். இங்கே அங்கே என்றல்ல. தேசமே நாசமாகிப் போன பெரும் அழிவு. சேத மதிப்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை, வீடு போனவர்களின் புலம்பல்கள், காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு இன்னோரன்ன சமாசாரங்களுக்காகவெல்லாம் சேர்த்து நாலு முறை உச்சு, உச்சு, உச்சு, உச்சுவென்று சொல்லிவிடவும். கிட்டத்தட்ட ஒரு கோடியே பதினேழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்திலே சொல்லிவைக்கலாம்.

ஏற்கெனவே பொருளாதார சமாசாரங்களில் குவார்ட்டர் அடித்துவிட்டுக் குப்புறக் கிடக்கும் குடிமகன் மாதிரி பாகிஸ்தான் சுருண்டு கிடக்கிறது. இந்த அழிவுக்குப் பிறகு எழுந்து நிற்க எத்தனைக் காலமாகும் என்று எளிதில் சொல்லுவதற்கில்லை.

அமெரிக்கா உதவுகிறதா, சரி. சீனா பணம் தருகிறதா சந்தோஷம். இந்தியா எதாவது செய்யணுமா? ம்ஹும். நேரடியாக வேண்டாம். ஐநா மூலம் அனுப்புங்கள் போதும் என்று விடாத மழையிலும் அடாத அசிங்க அரசியல் நிகழ்ந்தாலும், இது கரித்துக் கொட்டும் சமயமல்ல. நாசமாய்ப் போன அரசியல் எப்போதும் அப்படித்தான். மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்தப் பக்கம் பஞ்சாபில் ஆரம்பித்து, அந்தப்பக்கம் பத்தானியர்கள் பிரதேசம் வரைக்கும் இண்டு இடுக்கு விடாமல் அள்ளிக்கொண்டு ஓடிவிட்டது வெள்ளம்.

இது தொடர்பான பல காட்சிகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. சாலைகளில் கடல் போல் கொந்தளித்தபடி ஓடிவரும் தண்ணீர், ஒரு கொத்து மக்களை அப்படியே அள்ளிச் சுருட்டி மடக்கித் தள்ளுகிறது. ஐயோ என்று கதறுகிறார்கள். மாபெரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அடியில் யாரோ குழி தோண்டி நகர்த்தியது மாதிரி கொடகொடகொடகொடவென்று சரிந்து நீரில் விழுந்து காணாமல் போகிறது. நூற்றுக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் தண்ணீரில் அடித்துச் சுழற்றியபடி இறுதி ஊர்வலம் போகின்றன. இரண்டு பேருந்துகள், பத்திருபது லாரிகள் முதலை வாய் பிளப்பதுபோல் குப்புற மிதந்து நகர்கின்றன. பலப்பல பாலங்கள் இடிந்து பொடிப்பொடியாகிக் கிடக்கின்றன. வானில் கொடகொடத்து உணவுப் பொட்டலங்களை வீசும் ஹெலிகாப்டரை ஓட்டுபவர் கண்ணிலும் மரணபயம் தெரிகிறது. கீழே அவர் வீட்டாருக்கு என்ன ஆச்சென்று சொல்வதற்கில்லை. நுரை ததும்பத் ததும்பச் சுழித்து ஓடும் வெள்ளத்தில் சடாரென்று மிலிட்டரி ஜவான் ஒருவர் பாய்கிறார். கடற்கரையில் நண்டு பிடிக்கிற பாவனையில் விரல்களால் எதையோ துழாவி அவர் வெளியே மீளும்போது கையிலொரு கைக்குழந்தை!

அந்தக் கதறல்களும் ஓலங்களும் அவலங்களும்கூடப் பரவாயில்லை. குறிப்பிட்ட இந்த வெள்ள வீடியோக் காட்சிகளுக்கு அடியில் நமது உடன்பிறப்புகள் சிலர் எழுதியிருக்கும் கமெண்டுகள்கூட சரித்திரம் காணாதவை. மாதிரிக்குச் சில:

· இயற்கைக்கே நீங்கள் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை போலிருக்கிறது.

· ஆஹா, இது இறுதித் தீர்ப்புநாள். தயவுசெய்து வாய்தா கேளாமல் பஞ்சாயத்தை அட்டண்ட் பண்ணிவிடுங்கள்.

· சொர்க்கத்தின் சுந்தரக் கன்னியர் கண்ணில் தென்பட்டால் மறக்காமல் ஒரு ட்வீட்டாவது போடவும்.

· உலக மக்கள் தொகைப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் ஆண்டவன் கண்டிப்பாக அருள் பாலிப்பான்.

· சுரண்டித் தின்றதெல்லாம் செரிக்க வெள்ள நீர் அருந்துங்கள்.

இன்னும் பல உள்ளன. இயற்கையாலுமேகூட நிகழ்த்த முடியாத இப்படிப்பட்ட பேரழிவுகளையும் பெருஞ்சிதைவுகளையும் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? யூ ட்யூபில் பார்க்கலாம். எல்லாம் நம் சொந்தச் சகோதரர்கள்தாம்.

சினிமாவில் செந்திலும் வடிவேலுவும் அடிவாங்கினால் ரசித்துச் சிரிக்கலாம். வில்லனைக் கதாநாயகன் உதைத்துத் துவைத்தால் கைதட்டி மகிழலாம். கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றால் விசிலடிக்கலாம். ஒரு மாபெரும் இயற்கைப் பேரழிவில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வும் வளமும் நாசமாவதைக் கண்டு கைகொட்ட முடியுமா! இறந்த குழந்தை ஒன்றின் சடலம் காட்டப்படும் வீடியோவுக்கு அடியில் ஒரு புண்ணியாத்மா இப்படி எழுதுகிறார்: ‘நாளைய தீவிரவாதிகளுள் ஒருவன் இல்லை.’

இது என்ன நெஞ்சம்!

பாகிஸ்தான் மீதான நமது வஞ்சமும் நம் மீதான அவர்களது வஞ்சமும் ரத்த அணுக்களுக்குள் கலந்திருக்கின்றன. இதை அடித்துச் செல்லுமளவு வல்லமை மிக்க வெள்ளம் ஒன்று இதுகாறும் வரவில்லை. பிரச்னையில்லை. குறைந்தபட்சம் நாம் கற்கால மனோபாவத்திலிருந்தேவா இன்னும் மீண்டெழவில்லை? புரியவில்லை.

உலகில் முதல் முதலில் நாகரிகம் தோன்றிய பகுதியான மொஹஞ்சதாரோ இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. அல்லது நேற்று பாகிஸ்தானில் இருந்தது. வெள்ளம் அதையும் விட்டுவைக்கவில்லை. சரித்திரப் பிரசித்தி, தொல்லியல் பிரசித்தி பெற்ற அந்த இடுகாடு இன்று ஒரு மாபெரும் ஏரியாகிவிட்டது.

இங்கே நாகரிகமே அடித்துச் செல்லப்பட்டுவிட்ட பிறகு, அங்கே நாகரிகம் தோன்றிய பகுதி நன்றாயிருந்தாலென்ன, நாசமாய்ப் போனாலென்ன என்கிறீர்களா?

ஜெய் ஹிந்த்.

Share

26 comments

  • ஃபேஸ்புக்கிலும் இப்படிப்பட்ட சில கமென்டுகளைப் பார்த்தேன். நம்மவர்கள் தான். வெறுப்பாக இருக்கிறது! 🙁

  • மனதை சம்மட்டி கொண்டு அடித்துள்ளீர்கள்.

    வெட்கமாகத்தான் இருக்கிறது இந்த மனதை நினைக்கையில். பெயர் அறிந்திடாத நாட்டில் யாருக்கோ வேதனை என்றால் கூட பரிதாபப்படும் மனது, 65 வருடங்களுக்கு முன் சகோதரனாய் இருந்தவனுக்கு துன்பம் என்கையில் ஒரு கணம் குரூரமாய் சிரிக்கிறது. இது எதனால்? அமெரிக்காவில் இரட்டை கோபுரம் எரிந்த போது கூட இது மாதிரி ஒரு மனப்பான்மை பல நாட்டு மக்களிடம் காண முடிந்ததை சுஜாதா குறிப்பிட்டிருந்தார்.

    நாகரிகம் எல்லாம் மேல் பூச்சு தான். உள்ளே கசடு தான் மண்டிக்கிடக்கிறது. நான் நல்லவன் என்று நம்மை நாமே பாராட்டி போலி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் வரை நாம் ஒரு படி கூட மேலே வரப்போவதில்லை.
    இன்னும் சிறிது காலத்தில் பாகிஸ்தான் கூட வேண்டாம்; கேரளாவிலோ கர்நாடகாவிலோ அழிவு என்றால் கூட சந்தோஷப்பட ஆரம்பித்து விடுவோம் என நினைக்கிறேன்.

    எதற்கு என்றே தெரியாமல், ஒரு நிமிடம் கூட நின்று யோசிக்காமல், பொருள் தேடி சுயநலமே குறியாய் ஓடிக்கொண்டிருக்கும் வரை நாகரிகம் என்பது பசப்பு மட்டுமே.

    ‘The world has enough for everybody’s need but not enough for everybody’s greed’

  • Dear Para sir

    I am a chartered accountant, i live and work in dubai.After coming over to dubai and living in a multi ethnic society, my perception about other countrymen,especially a pakistani, has undergone lot of change. an average pakistani is as good or as bad as we are.Pak.pathans are simple,hard working fellas and they stand by their promise.They (pakistanis)are proud about their country but envy us-indians for the progress we have made since independence.they ,grudgingly agree that education has made all the difference between both the countries.

    BTW, the recent floods in Pakistan is a national calamity beyond comprehension.Dubai has contributed substantially. However, they are some schools of thought that says that the donations we maske will reach the hardcore talibans’ hands and not to feed the poor floor victims.

    anbudan.

    raju-dubai

  • அன்புள்ள பாரா, என்னய்யா இது? மனிதர்கள் இப்படியுமா இருப்பார்கள்?! அழிவின் அடியில் எழுதப்பட்ட வாசகங்கள்தான் மனித நேயத்தின் அழிவு. அப்பா, என்ன ஒரு கட்டுரை, என்ன மொழி வல்லமை உமக்கு! என்ன ஒரு மகத்தான மனித நேய உணர்விருந்தால் இப்படி எழுத முடியும்? பாகிஸ்தானில் செத்த, செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மகத்தான சேவை செய்துவிட்டீர்.

  • சரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்டுள்ள கட்டுரை. இயற்கையின் இந்த தாறுமாறான நிலைக்கு இன்றைய உலக மக்களே பொறுப்பு. இதிலும் குளிர்காயும் கேடுகெட்ட அரசியல். வெட்கமாகத்தான் உள்ளது. இந்த பதிவை பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளேன். நன்றி.

  • உண்மையில் மன வருத்தம் தருகிறது ராகவன் , உங்கள் பதிவு. என் அண்ணன் இருப்பது லடாக்கில். லே-யில் நிகழ்ந்த cloud burst இல் அவர் தப்பியது மிக பெரிய விஷயம். அப்போது மனம் பதைத்தது போல் தான், பாகிஸ்தான் வெள்ளத்தின் போதும் மனம் வலித்தது.

    ஆனால் வட இந்தியாவில் பாகிஸ்தான் மீது நிறைய வெறுப்பு உண்டு. இந்து- முஸ்லிம் கசப்புணர்வின் வெளிப்பாடு இது.
    தொழில் சார்ந்த விஷயம் என்றாலும் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் குர்கானில் ஒரு இந்தோ -பாகிஸ்தான் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஹரியானா முதல்வர் ஹூடா கலந்து கொண்ட நிகழ்ச்சி. அதற்கான பேனர், போஸ்டர் எல்லாவற்றையும் நான் டிசைன் செய்தேன். இந்தியாவின் அசோக சக்கரத்தையும் பாகிஸ்தானின் பிறை நிலவு நட்சத்திரத்தையும் ஒரே அளவில் சமமாக நான் வடிவமைத்த போது விழாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு typical அரசியல்வாதி என்னிடம், பாகிஸ்தானின் பிறைநிலவின் அளவை குறைக்க சொன்னார். இரண்டு சின்னங்களையும் சரி சமமாக பார்க்க ஜீரணிக்காதவர்கள் இந்தியர்கள். நமக்கு காட்டப்படும் பாகிஸ்தான் அப்படி. குறிப்பிட்ட விஷயங்களில் அவர்களது போக்கு வெறுப்பூட்டுவது தான் என்றாலும், பேரழிவு நேரத்திலும் பரிதாபப்படாமல் பரிகாசம் செய்பவர்கள் நிச்சயம் மனிதர்களாக இருக்க முடியாது.

  • மனம் கலங்க வைத்தது இந்தக் கட்டுரை. அரசியல் சல்லடையில் வடிகட்டப்படாத பொது ஜனமே எல்லா தேசத்திலும் பரிதாபத்துக்குரியவர்கள். மனிதம் சோரம் போவது குழு மனப்பான்மையில்தான்.

  • அன்புள்ள பாரா,

    நீங்கள் எழுதியுள்ள ”நீரில் மிதக்கும் தேசம்” படித்தேன். எந்த இயற்கை அழிவு விளைவிக்கும் மானுட சோகத்தையும் ’ “உனக்கு தண்டனை கிடைச்சுருச்சு” பாத்தியா? ‘ என்று சந்தோஷிக்கும் வக்கிரம் எவரையும் தலை குனிய வைக்க கூடியது என்பதில் ஐயமில்லை. அதை நியாயப்படுத்துவதை நினைத்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதனை ஏதோ சில முகம் தெரியாத வக்கிரங்களின் கோழைத்தனம் என்ப்தற்கு மேல் ஏதோ நாம் ஒட்டு மொத்தமாக கற்கால மனோபாவத்தை விட்டு மேலே வரவில்லை என எழுதியிருக்கிறீர்கள்.

    இதோ என் மேசையில் மோகன் சி லாசரஸ் என்கிற புகழ் பெற்ற கிறிஸ்தவ பிரச்சாரகர் நடத்தும் Jesus Redeems என்கிற பத்திரிகையின் பிப்ரவரி 2005 ஆம் ஆண்டு இதழ் கிடக்கிறது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மோகன் சி லாசரஸ் யாரோ ஒரு முகம் தெரியாத இணைய வக்கிரம் அல்ல. முக்கியமான மதப்பிரச்சாரகர். இவரது கூட்டங்களில் துணை முதல் இசுடாலின் கூட கலந்து கொள்கிறார். அதில் பெருமை படுகிறார். அந்த மோகன் சி லாசரஸ் சுனாமியின் இரத்த காயம் ஆறுவதற்கு முன்னால் இந்த இதழில் எழுதுகிறார்: “Look at our nation The land is grieving due to the curses of sin….Instead of worshiping the God who created heaven and earth they worship demons and evil spirits as their God. Is it not humiliating to God when we worship His creations birds and animals as gods instead of the creator Himself?” கட்டுரையின் பெயர் “Tsunami Why this Disaster”

    அதே காலகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கைதாகி சிறையில் இருந்தார். “என்னை கைது செய்ததால் சுனாமி வந்தது” என்று அவர் சொல்லவில்லை. “மக்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்கள் ஆதம சாந்திக்காக உபவாசம் இருக்கிறேன்” என்றார். பல எவாஞ்சலிக்கல் இணைய தளங்கள் சுனாமியால் மகிழந்தன. “ஏசுவின் நற்செய்தியை கொண்டு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு” என எழுதின. அண்மையில் ஹெய்தியில் பேரழிவு நடந்த போது அமெரிக்காவின் முக்கியமான மதப்பிரச்சாரகரான பாட் ராபர்ட்ஸன் என்கிற முக்கியமான

    எதற்கு சொல்கிறேன் என்றால் நீங்கள் சொல்கிற இணைய வக்கிரங்களை வைத்து நாம் இன்னும் கற்காலத்திலிருந்தே வெளிவரவில்லையா என ஆதங்கப்படுகின்றீர்கள். அட, இந்த வக்கிரம் ஒரு இறையியலாகவே மனதில் வேரூன்றி இருக்கிறது, கோட்டு சூட்டு போட்டதால் பண்பாடடைந்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிற (அல்லது குறைந்தது நம்மில் பெரும்பான்மையோர் நினைத்துக் கொண்டிருக்கிற-குறிப்பாக ஈவெரா, எம்.ஆர்.ராதா விவேக் வகையறா போலி-பகுத்தறிவுகள் இந்த எண்ணத்தை எய்ட்ஸ் போல பரப்புகிறவர்கள்-) பலர் இந்த மனநிலையில்தான் வாழ்கிறார்கள்.

    அப்புறம் மொகஞ்சதாரோ மட்டுமே சிந்து சமவெளியுமல்ல அது உலகநாகரிகத்தின் தோற்ற இடமும் அல்ல. கிமு 3000ங்களில் உலகத்தின் தொன்மை நாகரிகப் படுகைகளில் அதுவும் ஒன்று அவ்வளவுதான்.

    சரி பாகிஸ்தானிய இயற்கை பேரழிவின் போதும் அங்கு காஃபீர் ஹிந்துக்களை கொடுமை படுத்தும் ஈமானிய கடமையை இஸ்லாமிய பெருமக்கள் துறக்கவில்லை என்பதையும் இங்கே சொல்லவேண்டும். இதோ டைம்ஸ் ஆஃப் இந்தியா சுட்டி: http://timesofindia.indiatimes.com/city/jaipur/Hindus-are-being-targeted-in-flood-hit-Pak-/articleshow/6442492.cms

    இந்திய எதிர்ப்புக்கு பெயர் போன பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிகையே (ஆகஸ்ட் 28 2010) தனது தலையங்கத்தில் இப்படி எழுதியது:

    மறுபக்கம் நிவாரண உதவிகள் வழங்குவதில் திட்டமிட்ட பாரபட்சம் காட்டப்படுகிறது என செய்திகள் வருகின்றன. வெள்ள அழிவின் போது அகமதியாக்களுக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்கிற புகார் ஏற்கனவே வந்துள்ளது.இப்போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு வட்டிக்கான் மிஷினரி அமைப்பு கிறிஸ்தவர்களின் பெயர்கள் கூட நிவாரண நிதி உதவி வழங்கும் ரிஜிஸ்டர்களில் எழுதப்படவில்லை என கூறுகிறது. இது நம் அரசியல் சட்டத்துக்கே விரோதமானது. சிந்திப்பகுதியில் சாதி மத வேறுபாடில்லாமல் ஹிந்துக்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால் நம் அரசாங்கமோ மத அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்றால் நாம் எந்த அளவு கீழே சென்றுவிட்டோம் நம் மானுடத்தை இழந்துவிட்டோம் என்பதைதான் அது காட்டுகிறது.

    நிவாரண உதவி என்கிற பெயரில் ஹிந்துக்களின் அகதிகள் முகாமில் பசு இறைச்சி வழங்கவும் பாகிஸ்தானிய அரசு தயங்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்களுக்காக வட்டிக்கான் இருக்கிறது குரல் கொடுக்க. ஆனால் சோனியாவின் எடுபிடியாக நடத்தப்படும் இந்திய அரசு பாகிஸ்தானிய ஹிந்து-சீக்கியர்களுக்காக குரல் கொடுக்குமா? அதை விடுங்கள். இத்தனை பெரிய மானுட சோகத்தின் போதும் சக-பாதிக்கப்பட்டவனை மத ரீதியாக எப்படி அடிப்பது என நினைக்கும் ஈமானிய பண்பாட்டின் வக்கிரத்தின் பார்க்க நீங்கள் சொல்லும் இணைய வக்கிரங்கள் எம்மட்டு? எதற்காக வருத்தப்பட வேண்டும் சொல்லுங்கள்.

    பாகிஸ்தானிய இயற்கை பேரழிவு மதப்பிரிவுகளூக்கு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் என் நெஞ்சம் இந்த இயற்கை பேரழிவிலும் இஸ்லாமிய மதவெறியால் பீடிக்கப்படும் என்ம் ஹிந்து சீக்கிய மக்களுக்காகவே பதைக்கிறது. இந்த பதைபதைப்புக்கு முன்னால் இணைய வக்கிரங்கள் எதுவுமில்லை.

    அன்புடன்
    அரவிந்தன் நீலகண்டன்

  • நல்ல கட்டுரை சார்! நம்மில் (நானும்) கூட பெரும்பான்மையானவர்கள் எழுதவில்லை. பிரச்சனை நமக்கு என்று வரும் போது தான் துடிப்போமோ!

    பாக் அரசு நம்மிடம் நடந்து கொள்ளும் முறையும் சரி இல்லை.. இவர்கள் அரசியலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.

  • The article is Quite true and timely. I had visited Pakistan some 5 years back to deliver training to a Bank. The problems is getting a visa and the requirements to enter – Indians have to visit the local police station within a day and get our entry registered, and the same for Pakistanis here – all made me a bit sick of the whole visit.
    But the warmth of the people there is quite unforgettable. The trainees were more than cordial and went an extra mile to make my stay memorable. They were emotionally closer to India than I was to Pakistan, as I am from the South of India and quite distant. Many of their kith and kin were living across the border in Punjab and Gujarat…
    I could feel the People to People contact acting stronger than the Politician to Politician handling of Indo – Pak affairs. Likewise, they were also complaining about their politicians mishandling.
    Even the well educated were openly displaying anger against US and not surprisingly against India.
    Pray the people would get over this natural calamity soon

  • பழைய குருடர் அரவிந்தன் நீலகண்டன் வந்துவிட்டார் பிரிவினைவாத வக்கிரத்துடன். இது போன்ற கடைந்தெடுத்த இந்துத்துவா கிரிமினல்வாதிகளுக்கு உங்கள் தளத்தில் இடமளிக்கவேண்டுமா பா.ரா. அவர்களே?

    • Commenter, உங்கள் கருத்தில் நான் எடிட் செய்திருக்கும் பகுதிகளைப் பாருங்கள். அது அவசியமானதுதானா? தனிநபர் தாக்குதல்களைத் தவிர்க்கப் பழகுவது நல்லது. அரவிந்தன் என்றில்லை. யாருடைய கருத்துடனும் முரண்பட எல்லோருக்கும் உரிமையுண்டு. ஆனால் வெளிப்பாட்டில் நாகரிகம் இன்றியமையாதது. இதனை நான் பிரசுரிக்காதிருந்திருக்கலாம். அடித்தலுடன் பிரசுரித்ததன் ஒரே காரணம் உங்கள் கருத்தையும் நான் மதிப்பதுதான்.

  • புதிய குருடன் வந்திருக்கிறேன் பா.ராகவன் அவர்களே,

    அரவிந்தன் சொல்வதில் எந்தப் பிரிவினை வாதமும் இல்லை. அவரென்ன பாகிஸ்தானை இரண்டாகப் பிரி என்றிருக்கிறாரா, இல்லையே.
    இணையத்தில் பிற தளங்களில் பின்னூட்டமாக இடப்பட்ட “வக்கிர வரி”களை நீங்கள் சரியாகவே சாடும்போது, அரவிந்தன் பாகிஸ்தானில் உள்ள பாகிஸ்தானிய மக்களில் சிலர் அவர்கள் ஹிந்துக்கள் என்ற ஒரே “தகுதிக்காக” கொள்ளையடிக்கப் படுவதும், உணவு மறுக்கப் படுவதுமாகக் கொடுமைப்படுத்தப் படுவதை சரியாகவே சாடுகிறார். இதில் என்ன ஹிந்துத்வா கிரிமினல் வாதம் இருக்கிறது?

    “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்று பொத்தாம் பொதுவாக இந்த Commenter அரவிந்தனையும் ஹிந்துக்களையும் சாடுவது, அந்த “வக்கிர வரி”களுக்குச் சிறிதும் சளைத்ததல்ல. இவர் வகையினர்தான் இணயத்தில் இப்படியெல்லாம் வெறுப்பு வரிகளுக்கு வித்திட்டு, நீர் பாய்ச்சி, பிரிவினை நச்சை வளர்க்கிறார்கள். இப்படி வளர்க்கப் பட்ட பிரிவினை நச்சுதான் கிரிமினல் நடவடிக்கைகளுக்குக் காரணமாகின்றன.

    கட்டுரையைப் படித்து மனம் வருந்தும் வேளையிலும் இப்படி எழுதுவது, பிணத்திடமும் கொள்ளையடிக்கும் புத்தி சிலருக்குப் போவதில்லை என்பதைக் காட்டுகிறது.

  • அன்புள்ள ரூமி

    உங்கள் உத்வேகமும் உணர்ச்சியும் நெகிழ வைத்துவிட்டன. மனிதர்கள் இப்படியுமா இருப்பார்கள் என நீங்கள் வேதனைப்படுவது உங்கள் சர்வதேச மானுட நேய உணர்வை காட்டுகிறது. உங்கள் மென்மையான மனித நேய உணர்ச்சி கொண்ட இதயம் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை ஹிந்துக்களுக்கும்ம் சீக்கியர்களுக்கும் அங்குள்ள அரசாங்கத்தாலேயே இயற்கை பேரழிவில் பாரப்ட்சம் காட்டப்படுவதை எப்படி சகித்துக் கொள்ளுமோ தெரியவில்லை. இருந்தாலும் இணைய லும்பன்களின் கமெண்ட்களுக்கே இப்படி துடித்து ஓடி வரும் நீங்கள், ஈமானின் பெயரால் செய்யப்படும் வக்கிரத்துக்கு கட்டாயமாக துடித்து பதறி எழுந்து ஒரு கட்டுரையை எழுதிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

    அன்புடன்
    அரவிந்தன் நீலகண்டன்

  • I am very happy to see our friends views on the old and new blind.

    They should learn from us.

    Dear Aravindan and cementer.

    Learn to be a different blind like us. We have turned blind to the plight of kashmiri Hindus. We behave as if that they dont exist.

    We turn blind when refugees are hindus – no matter wherever they are.

    Learn from us. For all other refugees ” nanga pongi ezhunduduvom – aduthan murpokku”

  • வழக்கம்போல நம்முடைய அரவிந்தன் நீலகண்டன் எழவு வீட்டில் வெத்தலை கிடைக்குமா என்று எட்டிப்பார்க்க வந்துவிட்டார்.

    வெள்ளக் காட்சிகளுக்கு அடியில் கமெண்டு போட்டவர்கள் முகமறியாதவர்கள். இவர் முகத்தை காட்டி இங்கே கமெண்டு போடுகிறார். இவ்வளவுதான் வித்தியாசம்!

  • //அதே காலகட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் கைதாகி சிறையில் இருந்தார்//

    ஆமா அவரு சுதந்திர போராட்டத்துல கைதாகி தானே உள்ள போனாரு அரவிந்தன் சார் ?

  • //ஹிந்துக்களை கொடுமை படுத்தும் ஈமானிய கடமையை இஸ்லாமிய பெருமக்கள் துறக்கவில்லை //

    ஈமான் ல எங்கயுமே யாரையும் கொடுமை படுத்த சொல்லவில்லை . அப்டி யாரவது பாகிஸ்தானியர்கள் செய்தால் அதற்கு இஸ்லாம் பொறுப்பல்ல

  • பாகிஸ்தானியர் துன்பத்தினை கண்டு மனம் பதைப்பவர்களின் மனிதாபிமானம் புரிகிறது.அந்த மனிதாபிமானிகள் இத்துயரத்திலும் கூட மத அடிப்படையில் பாகுபாடு காட்டி முஸ்லீம்கள் அல்லோதோரை இன்னும் துயரத்திற்குள்ளாகுவோரையும் கண்டிக்க வேண்டும்.பாகிஸ்தானின் துயரை துடைக்க இந்திய அரசு செய்த உதவிகளையும் இங்கு குறிப்பிட வேண்டும்.ஈமான் சொல்கிறதோ இல்லையோ பாகிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகள் சிறுபான்மையினரை நடத்தும் விதம் சரியானது அல்ல.

  • Hi appavi,
    If a country tortures the minorities, then its not an islamic country at all. Islam has laid down clear rules on governing minorities. Their protection is the sole responsibility of the islamic government.

  • Excellent article,i come across lot of pakistanis they are
    also like us.This does not mean they are loving us.we should always project positivity in life.That is the article showing.Today when discussions came on babri majid verdict i told my north indian friend our state tamilnadu will be peaceful whatever will be the verdict.Try to grow humanism.Then only peace will prevail.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி