குச்சுப்புடி காண்டம்

முன்னொரு காலத்தில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளி வருடாந்திர விளையாட்டு தினத்தில் ஸ்லோ சைக்கிள் ரேஸ் என்றொரு பந்தயம் இருக்கும். நூறு மீட்டர் தொலைவை சைக்கிளில் கடக்கவேண்டும். யார் கட்டக்கடைசியாக வருகிறாரோ அவரே ஜெயித்தவர் என்பது விதி. ஒரு மிதி அழுத்திப் போட்டால் போச்சு. பெடலைப் பெண் மாதிரி தொடவேண்டும். அழுத்தாமல் வருடவேண்டும். அங்குல அங்குலமாக நகர்த்தவேண்டும். இடையே பேலன்ஸ் தவறிக் காலைக் கீழே வைத்தாலும் போச்சு. அக்கம்பக்கத்தில் நம்மைப்போலவே சைக்கிளில் குச்சுப்புடி ஆடும் சக வித்தியார்த்தியாகப்பட்டவன் ஹேண்டில்பாரை வளைத்து நெளித்துத் திருப்புகையில் அது நம் வண்டியின்மீது பட்டாலும் குடை சரிந்துவிடும். அவன் தள்ளிவிடுவது பொருட்டல்ல. நாம் கீழே விழுந்தால் நாம்தான் அவுட் என்னும் அசகாய அழுகுணி ஆட்டம் அது.

எப்படியாவது ஸ்லோ சைக்கிள் ரேஸில் பரிசு வாங்கிவிடவேண்டும் என்று கி.பி. 1980 தொடங்கி 1985வரை மிகக் கடுமையாகப் பல பயிற்சிகள் செய்து, ஒவ்வொரு வருடமும் எல்லைக்கோட்டுக்கு இரண்டடி முன்னால் விழுந்துவிடுவது என் வழக்கமாயிருந்தது. நிச்சயமாக 1986ல் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஐ.எஸ்.ஐ. சதியினால் அந்த வருடம் நான் பள்ளியிலிருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது.

எனவே, தகுதியும் ஆர்வமும் வேகமும் இன்ன பலவும் இருந்தும் எனக்குப் பரிசில் பெறும் பாக்கியமின்றிப் போனது. ஆனால் பயிற்சிக் காலத்தில் அநேகமாக தினமும் யோசிப்பேன். இந்தப் போட்டி என்னத்துக்கு? எந்தச் செயலுக்கும் என்னவாவது ஒரு காரணகாரியமும் நோக்கமும் விளைவும் இருந்தாக வேண்டும். இத்தனை மெதுவாக சைக்கிள் ஓட்டிப் பழகி நானென்ன ஜம்போ சர்க்கஸிலா சேரப்போகிறேன்? அங்கே யானைகூட வேகமாகத்தான் சைக்கிள் விடும். இடுப்புக்கு ஒன்றேமுக்கால் அங்குலம் கீழே வரைக்கும் உடையுடுத்திய உருசிய நாட்டு அழகிகள் பாலே ஆடுவதுபோல ஒற்றைச் சக்கர சைக்கிளில் உருண்டாடும் உள்ளூர் அழகிகளும் ஏகத்துக்கு அங்குண்டு. மெதுவாக சைக்கிள் ஓட்டுவதில் விற்பன்னனேயானாலும் எனக்கு அங்கு இடமிருக்கப் போவதில்லை.

அப்படியும் எதற்கு இதை விடாமல் பழகுகிறேன்?

பழகியபடி யோசித்துக்கொண்டிருப்பேன். அப்போது அதற்கு விடை கிடைக்கவில்லை. கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இடைவெளி விட்டு, காலம் இன்று அதற்கு பதில் சொல்கிறது.

என் வசிப்பிடத்திலிருந்து நான் உத்தியோகம் பார்க்கும் தலமானது சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தொலைவை நான் என் இரு சக்கர வாகனத்தில் கடப்பதற்கு மேற்சொன்ன ஸ்லோ சைக்கிள் பயிற்சி மிகவும் உதவுகிறது.

மாலை ஆறு மணி சுமாருக்குக் கோடம்பாக்கம் மேம்பாலத்தை வண்டியேறிக் கடப்பது என்பது ஒரு சாதனைச் செயலாகும். நீங்கள் ஏறத் தொடங்கும்போது எங்கிருந்தோ ஒரு லாரிக்காரன் திடும்மென அருகே உதித்து பொய்ய்ய்ங் பொய்ய்ய்ய்ய்ய்ங் என்பான். பகற்பொழுதில் இப்படியெல்லாம் நெருக்கடிச் சாலையில் லாரி போகக்கூடாதென்றொரு சட்டம் இருக்கிறதே என்று யோசிக்கத் தொடங்குவதற்குள் மறுபுறம் ஒரு மீன்பாடி வண்டியில் நீளநீளமான இரும்புக் கழிகள் கொலைகார உத்தேசத்துடன் வெளியே நீஈஈஈஈஈட்டிக்கொண்டு அசைந்து நகரத் தொடங்கும். இடப்புறம் நகர்வதா, வலப்புறம் நகர்வதா என்கிற சாய்ஸ் பெரும்பாலும் நமக்கு இருக்காது. நின்ற இடத்தில் ஜீரோ வேகத்தில் தரையில் கால் பதிக்காமல் அப்படியே தவமிருக்க வேண்டியதுதான்.

நான் அப்படித் தவமிருப்பதில் நிபுணன் என்பதால் எனக்குப் பிரச்னையில்லை. ஆனால் தினமும் என்னருகே வண்டியோட்டி வரும் சக கோடம்பாக்கர்களுக்குத் தவபலம் இல்லையே? எனவே, அவர்களுக்கு உடனே மீன்பாடி வண்டியோட்டி மீதும் ராட்சத லாரியர் மீதும் கட்டுக்கடங்காத கோபம் உண்டாகிவிடும். விட்டேனா பார் என்று அவர்கள் உடனே மேம்பாலத்தைச் சோழவரம் மைதானமாக பாவித்துவிடுவார்கள். வ்வ்ர்ர்ர்ர்ரூம் என்று ஆக்சிலேட்டரை உடைக்குமளவு திருகி ஒரு சத்தம் கொடுப்பார்கள் பாருங்கள், குஞ்சு குடலெல்லாம் நடுங்கி ஒடுங்கிவிடும். ஆயினும் என் விரதத்தை நான் விட்டுக்கொடுப்பவனல்லன். நின்ற திருக்கோலத்திலிருந்து இம்மியும் அசையமாட்டேன்.

டிராஃபிக் இல்லாதுபோனால் பதிமூன்று வினாடிகளில் கடந்துவிடக்கூடிய பாலம்தான். ஆனால் தினமும் இப்பாலத்தை ஏறிக்கடக்க எனக்கு இருபத்தி இரண்டு நிமிடங்கள் ஆகிவிடுகின்றன.

பாலத்தோடு கதை முடிந்துவிடவில்லை. பாலம் இறங்கியதும் இடப்புறத்தில் பல எதிர்பாராத திடுக்கிடும் சந்துகள் உண்டு. பொதுவாக அந்தச் சந்துகளிலிருந்து கார்கள்தான் வரும். சென்னை நகரக் காரோட்டிகளைப் பொறுத்தவரை, சாலைகள் என்பவை அவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. சிக்னல்கள் என்பவை மட்டும் பிறருக்காக உருவாக்கப்பட்டவை. பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய மூவண்ணமும் அவர்களுக்குப் பச்சையாக மட்டுமே தெரிவது வழக்கம். எனவே சொய்யாங்கென்று யாருமே எதிர்பார்க்க முடியாத முழு சிவப்பு சிக்னல் சமயத்தில் இடப்புறம் வண்டியை வளைப்பார்கள். அவர்களை எதிர்பார்க்காமல் நாம் நம் சிக்னலுக்கு மதிப்புக் கொடுத்து வண்டியை விடுவோமானால் மறுகணமே பரமபிதாவின் பாதாரவிந்தங்களைச் சேரவேண்டி வரும்.

இதில் இன்னொரு விசேடமுண்டு. சில கார்காலக் கதாநாயகர்களுக்கு அமெரிக்காவில் வண்டியோட்டுவது போன்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அவர்கள் சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் சமயத்தில் வலப்புறமும் வண்டியைத் திருப்புவார்கள்.

திரும்பி முடித்தபிறகுதான் அவர்களுக்கு இது இந்தியா என்பதே நினைவுக்கு வரும். எனவே ரிவர்ஸ் எடுத்து வண்டிக்கு திசையொழுங்கு கொடுப்பதற்கான அவகாசத்தையும் அவர்களுக்கு நாம்தான் கொடுக்கவேண்டும். இதற்கெல்லாம் ஆத்திரப்பட்டு ஹாரன் அடிப்பவர்கள், நான் முன்பே சொன்னதுபோல் தவ வலிமையற்றவர்கள். ஸ்லோ சைக்கிள் பந்தயப் பயிற்சி பெற்றிருக்கும் ஒரே காரணத்தால்தான் என்னால் இத்தகு எதிர்பாராத இனிய அதிர்ச்சிகளையெல்லாம் ஒழுங்காகச் சமாளிக்க முடிகிறது.

வடக்கு உஸ்மான் சாலை – பசூல்லா சாலைச் சந்திப்பும் இந்த விஷயத்தில் கோடம்பாக்கம் சிக்னலுக்கு சற்றும் சளைத்ததல்ல. விவேக்ஸ் கடைக்கு நேரெதிரே உள்ள அந்த நாற்சந்தியில் ஒரு சந்திக்கு வெகுநாளாக உடம்பு சரியில்லை. மேயராக இருந்து பிரமோஷன் பெற்று துணை முதல்வராகவே ஸ்டாலின் ஆகிவிட்ட பிறகும் இந்த நாலாவது சந்தியில் ஒரு பாலம் இன்னும் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே ஒரு காலுடைந்த நாற்சந்தி என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.

இந்த சந்திக்கு நியாயமாக ஒரு சிக்னல் இருக்கவேண்டும். அல்லது ஒரு போலீசுக்காரராவது இருக்கவேண்டும். எப்போதும் திருப்பதி க்யூ மாதிரி ஒரு கூட்டம் அம்முகிற இடம். தவிரவும் இந்தச் சாலையாகப்பட்டது, கவர்ச்சி நடிகைகளின் இடுப்பு போலப் பல வளைவுகளையும் குழிகளையும் கொண்ட தன்மையது. ஒரு குழிக்காக நீங்கள் உங்கள் வண்டியின் வேகத்தைக் குறைப்பீர்களானால் பின்னால் வரும் கார்புருஷர் அதைச் சகியார். ணங்கென்று கணக்கு வாத்தியார் கொட்டுவதுபோல் வண்டியின் பின்புறத்தில் ஒன்று விழும். நின்று ஸ்டாண்ட் போட்டுச் சண்டை போட அவகாசமிருக்காது. இதுவும் பாகிஸ்தான் எல்லை மாதிரி ஓர் அபாயப் பிரதேசமே.

பல்லாவரம் பேருந்து நிறுத்தம், வடபழனி சிக்னல், கோயம்பேடு சிக்னல், அண்ணாசாலை மேம்பாலத்தின் இடப்புறக் கீழ்ப்பகுதி,, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையும் சேத்துப்பட்டு எல்லையும் சந்திக்கும் பிராந்தியம் என்று நான் பிரயாணம் போகிற பகுதிகளிலெல்லாம் என்னுடைய ஸ்லோ சைக்கிள் வித்தையைக் காட்ட அளப்பரிய சந்தர்ப்பங்கள் தினசரி கிடைத்துவிடுகின்றன. சக டிராபிக் ஜாமர்கள் என் சாமர்த்தியத்தைப் பார்த்து வியந்து வியந்து மாய்கிறார்கள். இது தனிப்பட்ட முறையில் எனக்குக் குதூகலம் தருவதாகவும் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. மேலும் மேலும் நின்றவண்ணம் வித்தை புரியத் தூண்டுகிறது.

எனில் என் மகிழ்ச்சியை நான் மேலும் அதிகரித்துக்கொள்ளலாமே? விரைவில் ஒரு சைக்கிளே வாங்கிவிடலாம் என்றிருக்கிறேன். மீன்பாடியல்ல. திமிங்கலபாடியே அதன்பின் அருகே வந்தாலும் அசையாமல் நின்று சாதிக்க முடியும்.

யார் கண்டது? நாளைக்கு என்னவாவது சாதித்துக் கிழித்தேனென்றால், அண்ணாசாலை மேம்பாலத்துக்குக் கீழே கழுதையின்மீது ஒருத்தர் உட்கார்ந்திருக்கிறாரே, அந்த மாதிரி கோடம்பாக்கம் மேம்பாலத்துக்குக் கீழே நான் சைக்கிளில் உட்கார்ந்திருக்கிற சிலையொன்றை யாராவது வைக்காமலா போய்விடுவார்கள்?

Share

13 comments

 • :))))))))

  டிராபிக் டென்சனை இப்படியெல்லாம் பொறுமையாக அனுபவித்து பார்த்தால்தான் நிம்மதியாக வாழமுடியும் போல சென்னையில்!

  சர்க்கஸ்ல இருக்கவேண்டிய பாதி பேர் கையில ஸ்டீயர்ங் + கால்ல ஆக்ஸிலேட்டர் டச்’க்கிட்டு அங்கிட்டு திரிஞ்சுகிட்டிருக்காங்கங்கறது நிசம்தான்!

 • நிஜமாகவே நீங்க எல்லாம் வரம் வாங்கி வந்தவங்க தான். எங்க கோயம்புத்தூர்ல இவ்ளோ போக்குவரத்து நெருக்கடி எல்லாம் இல்லை. பின்ன எதுக்கு சொல்றேன்னா எவ்ளோ அழகா உங்க பால்ய கால நினைவுகளை அசை போட்டு அப்படியே இப்ப தலைநகரத்துல இருக்கிற ஒரு பொது பிரச்சனை பற்றி அலசி, மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. எழுத்து உங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றால் அதை நீங்கள் எங்களிடம் பகிர்வது, எங்களுக்கு கிடைத்த வரம்……!
  இருந்தாலும் மிகவும் வருந்துகிறேன் உங்களின் இந்த குச்சிபுடி ஆட்டத்தை பார்த்து.

 • ”மீன்பாடியல்ல. திமிங்கலபாடியே அதன்பின் அருகே வந்தாலும் அசையாமல் நின்று சாதிக்க முடியும்”

  Super sir.sema comedy.

 • சாலைக‌ளை மிக‌ப்பெரிய‌ அள‌வில் அக‌ல‌மாக்குவ‌து த‌விர‌ ச‌ல‌ச்சிற‌ந்த‌ தீர்வு ஏதும் இல்லை. இத‌ற்கு பொதும‌க்க‌ளின் ஒத்துழைப்பு மிக‌ அவ‌சிய‌ம், அத‌ற்கு அவ‌ர்க‌ள் போர்க்கொடி பிடித்தால் இத்த‌கைய‌ குச்சுபிடி த‌விர்க்க‌ முடியாத‌து.பெங்க‌ளூரில் உள்ள‌ ஒசூர் சாலையை விரிவு ப‌டுத்திய‌ பின்ன‌ர் 2 ம‌ணி நேர‌த்தில் க‌ட‌க்க‌ நேரிட்ட‌ 6 கி.மீ தூர‌த்தை 10 நிமிட‌ங்க‌ளில் க‌ட‌க்க‌ முடிகிற‌து.

 • ஒரு சீரியஸான பிரச்னையை உங்களின் வழக்கமான நகைச்சுவை நடையினால் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். சிரித்து ரசித்தேன்.

 • மிக நல்ல படைப்பு… பல நாளைக்குப் பிறகு சுஜாதாவின் எழுத்தைப் படித்த மாதிரி அனுபவம்… நன்றிகள்.

 • காமன்வெல்த் போட்டியில் ஸ்லோசைக்கிள்ரேஸில் தங்களுக்கு தங்கம் கிடைக்க வாழ்த்துக்கள்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter