பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் இப்படி தினமொரு திருமணம் அனுபவம் நேர்ந்ததில்லை. அல்லது, கூப்பிடுகிற அத்தனைபேர் வீட்டுக் கல்யாணத்துக்கும் போகிறவனாக நான் இருந்ததில்லை. இந்தவருஷம் நான் திருந்தியிருக்கவேண்டும். அல்லது ரொம்பக் கெட்டுப்போயிருக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்த சில உத்தமோத்தமர்கள் இருக்கிறார்கள். இம்மாதிரி பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விசேடங்கள், விழாக்கள் என்று எதற்கு அழைப்பு வந்தாலும் குறித்து வைத்துக்கொண்டு, குறித்த தினத்தில், குறித்த நேரத்தில் அழகாக டிரெஸ் பண்ணிக்கொண்டு ஆஜராகிவிடக்கூடியவர்கள். இன்னும் சில உத்தமர்களையும் எனக்குத் தெரியும். அமெரிக்க ஜனாதிபதியே நேரில் வந்து கூப்பிட்டாலும் ஆபீசில் வேலை ஜாஸ்தி என்று சொல்லிவிட்டுப் போகாதிருந்துவிடும் கர்மயோகிகள்.
நான் இந்த இரு தரப்பினருக்கும் இடைப்பட்ட ஒரு நூதனவாதி. தவிர்த்தால் வீட்டில் அடுத்த வேளை சோறு கிடைக்காது என்கிற நிலைக்குக் கொண்டுபோய்விடக்கூடிய திருமணங்களுக்கு மட்டும் கண்டிப்பாகப் போய்விடுவேன். மற்றபடி அழைப்பவரின் திருமணத்துக்குச் சற்று முன்னோ பின்னோ தொலைபேசியில் கூப்பிட்டு வாழ்த்திவிடுவது என் தமிழ் மரபு. சமயத்தில் அதைக்கூடச் செய்ய மறந்து எதிர்பாராத சூழலில் வினோத இக்கட்டுகளில் சிக்கிக்கொள்ள நேர்வது என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிவைத்த குறுங்காவியம்.
சமீபத்திய தொடர் திருமணப் பயணங்களில் அப்படியொரு இக்கட்டும் நேர்ந்தது. நெருங்கிய நண்பர் ஒருவரின் மகனுக்குத் திருமணம். நான் மட்டுமல்லாமல் குடும்பத்துடன் போயே தீரவேண்டிய கட்டாயம். திருமணத் தேதியைக் குறித்துவைத்து, ரிமைண்டரெல்லாம் போட்டு வைத்து, மறந்துவிடாதிருக்க தினசரி தியானம் மாதிரி விடிந்து எழுந்து பல் துலக்கும்போது மூன்றுமுறை மனத்துக்குள் நினைவு படுத்தி சொல்லிப் பார்த்துக்கொண்டு, கரெக்டாகக் குறிப்பிட்ட தினத்தன்று சீவி சிங்காரித்துப் புறப்பட்டும் விட்டேன்.
பாதி வழியில், புராணகால அசுரர்கள் முனிபுங்கவர்களின் யாகங்களுக்கு ஊறு விளைவிப்பது மாதிரி என்னைப் போகவிடாமல் தடுப்பதற்காக துர்தேவதைகள் ஒன்றுசேர்ந்து ஒரு பேய் மழையை அனுப்பிவைத்தன. கொட்டு கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்த மழையில் முழுக்க நனைந்து, உடலெல்லாம் நடுங்கிய வண்ணம், உடைகள் உடலோடு ஒட்டி, கவர்ச்சியைக் கூடுதலாகக் காட்டிக்கொண்டிருந்தது பற்றிய நாண உணர்வுடன் ஒருவாறு மண்டபத்துக்குப் போய்ச்சேர்ந்தேன்.
நண்பர் ஓர் எழுத்தாளர். எனவே மண்டபம் முழுதும் தமிழ் எழுத்தாளர்களால் நிறைந்திருந்தது. எல்லாரும் மழைக்கு முன்னால் வந்துவிட்டிருந்த பாக்கியவான்கள். பளபளவென்று மேக்கப்பும் ஆடை ஆபரணாதிகளும் ஜொலிக்க ஜெகஜ்ஜோதியாக கும்பல் கும்பலாகக் கூடியிருந்து குளிர்ந்துகொண்டிருந்தார்கள். லேட்டாகவும் லேட்டஸ்டாகவும் போய்ச்சேர்ந்த அபாக்கியவானான நான், மணமக்களை வாழ்த்த வரிசையில் நின்று உஸ்ஸு உஸ்ஸென்று என் குளிரை நானே விரட்டப் போராடிக்கொண்டிருக்கையில், தொலைவிலிருந்து ஒரு நண்பர் கையசைத்தார். அவரும் ஓர் எழுத்தாளர்.
அடடே, வணக்கம் சார். நலமா என்று நான் அபிநயம் பிடித்ததும் எதிர்பாராத தாக்குதலாக அப்புறமிருந்து ‘உம்பேச்சு கா’ என்று எதிரபிநயம் வந்தது. இது ஏதடா விவகாரம் என்று ‘என்ன ஆச்சு? என்ன ஆச்சு?’ என்று பதற்ற அபிநயம் காட்டினேன். பதில், அவரது திருமதியிடமிருந்து வந்தது. பெண்களுக்கே உரிய பிரத்தியேக மூக்கு மற்றும் முகவாய் இடிப்புச் சைகையுடன் வெடுக்கென்று இன்னொரு பக்கம் திரும்பிக்கொண்டார்.
பகீரென்றது எனக்கு. நிச்சயமாக எதோ பெரிய விவகாரம்தான். அவர்கள் அப்படியெல்லாம் குடும்ப சமேதராகக் குற்றம் சாட்டுபவர்கள் அல்லர். நான் என்னவாவது தப்பு செய்திருந்தாலொழிய இத்தனை பெரிய கூட்டத்திலும் இப்படி இடித்துக் [தன் தோளில்தான்] காட்டமாட்டார்கள். எனவே என் தரப்புப் பிழை என்னவாக இருக்கும் என்று சற்றுத் தொலைவில் நின்றிருந்த என் மனைவியிடம் திரும்பி ஜாடையில் கேட்டேன். அபிநயஸ்ரீயான அவளும் ஒரு கணம் மேடையைக் கண்ணால் காட்டி மறுகணம் அவர்களைச் சுட்டி, அபய ஹஸ்தத்தை ஹரிஸாண்டலாகப் போட்டு, உதட்டை ஒரு சுழிப்பு சுழித்துப் புரியவைத்தாள்.
அடக்கடவுளே. அவர்கள் மகனுக்கும் சமீபத்தில் திருமணம். அழைப்பு வந்தும் நான் போகவில்லை. ஆனால் நிச்சயமாக அது மறந்துபோனதால் போகாதிருந்த திருமணமில்லை. திடீரென்று வந்த ஒரு பரதேசப் பயணத்தினால் முடியாமல் போனது. திரும்பி வந்ததும் தொலைபேசியில் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். அல்லது நேரில் போயாவது வாழ்த்தியிருக்கலாம்.
அது என்னவோ இந்தக் கல்யாண விஷயங்களில் என் ஞாபகசக்தியாகப்பட்டது எப்போதும் என்னைக் கவிழ்த்துவிடும் விஷயமாகவே உள்ளது. [சொந்தக் கல்யாண நாள் விஷயத்திலும் அங்ஙனமே. அது தனிச்சோகப் பெருங்கதை.] சக உத்தியோகர்கள் யாராவது ஒருத்தர் ஒவ்வொரு மாதமும் பத்திரிகை கொடுப்பார்கள். கண்டிப்பா வரணும் சார் என்பார்கள். கண்டிப்பாகப் போக நினைத்தாலும் கரெக்டாக அந்த தினத்தில் அது மறந்து தொலைக்கும். அன்னார் ஹனிமூனெல்லாம் போய்விட்டு சம்சார சாகரத்தில் முத்தெடுக்க ஆரம்பித்து, போரடித்து, ஆபீசுக்கு வந்ததும் முதற்கண் என்னிடம்தான் வந்து கேட்பார். ஏன் வரலை?
என்னத்தைச் சொல்லுவேன்? ஒழுங்கீனங்களை ஒழுக்கத்துடன் கடைப்பிடிப்பவனின் அவஸ்தைகள் வெகுஜனங்களுக்கு அவ்வளவாகப் புரிவதில்லை.
திண்டுக்கல்லில் நடந்த கல்யாணம் ஒன்றையும் இதே வரிசையில் சொல்லிவிடுகிறேன். இதுவும் வேண்டப்பட்ட நண்பர் திருமணம். முன்னதாக அன்று காலைதான் தூத்துக்குடியில் ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருந்தேன். ரிசர்வ் செய்யவெல்லாம் வழியில்லாமல், கிடைத்த பேருந்தில் இரவு ஏறி, மறுநாள் ஒருவழியாகத் திருமணத்துக்குப் போய்ச்சேர்ந்திருந்தேன். என் பொறுப்புணர்வை, ஆச்சரியகரமாக என் தீவிர விமரிசகரான என் மனைவியே பாராட்டினாலும் என்னால் என்னைப் பாராட்டிக்கொள்ள முடியாது போனது. காரணம், முகூர்த்த நேரம் அதிகாலை ஆறு மணி என்பதை கவனிக்காமல் இரவு பத்து மணிக்குமேல் பஸ் ஏறி, சாப்பாட்டு நேரத்துக்குப் போய்ச்சேர்ந்ததுதான்.
இன்று நேற்றாக அல்லாமல், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்குக் கொஞ்சம் பிந்தி நான் தோன்றிய காலம் முதலாக உறவினர் மற்றும் நண்பர்களின் திருமணங்கள் எனக்குப் பல்வேறு விதமான இக்கட்டுகளைத் தவறாமல் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. இந்த ஆவணியில் என் மீது படிந்த கல்யாணக் கறைகளை முற்றிலுமாகத் துடைத்துவிட முடிவு செய்து, அழைத்த அத்தனை பேர் வீட்டுத் திருமணங்களுக்கும் தவறாமல் போய்க்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே இது மிகவும் பேஜாரான விஷயம்தான். முழி பிதுங்கிவிடுகிறது. தனியொரு மனிதனின் அன்றாட ஜனநாயகக் கடமைகள் அனைத்தும் பலியிடப்படவேண்டி வருவது பற்றி யாருக்குமே சற்றும் கவலையில்லை. மாதம் பிறந்த கணம் முதல் நான் ஒழுங்காக எழுதுவதில்லை. எப்போதும்போல் படிக்க முடிவதில்லை. ராத்திரி படுத்தால் காதுக்குள் நூறு குண்டு மேளகர்த்தாக்கள் டமடமடமவென்று கெட்டிமேளம் வாசிக்கிறார்கள். இன்று என்ன வேலை என்று யோசிக்காமல், இன்று யார் கல்யாணம் என்று யோசித்தபடி பொழுது விடிகிறது. டிசம்பர் சங்கீத சீசன் வந்தால் எப்படி நல்லி செட்டியாரும் தூர்தர்ஷன் நடராஜனும் எல்லா சபா மேடைகளிலும் தவறாமல் காட்சி தருவார்களோ, அப்படித் தமிழ்கூறும் நல்லுலகில் எங்கே, யார் கல்யாணம் நடந்தாலும் அந்த இடத்தில் நான் ஆஜராகிவிடுகிறேனோ என்று அபாயகரமாகத் தோன்றுகிறது.
இந்த சீசனுடன் இந்த வழக்கத்தை முடித்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். கட்டுப்படியாகவில்லை. முழி பிதுங்கிவிடும் போலிருக்கிறது. ஒழுங்கீனத்தை வாழ்க்கை விதியாக வைத்துக்கொள்வதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. முழுப்பட்டியல் வேண்டுவோர் தனியஞ்சல் அனுப்பினால் தவறாமல் பதில் போடுவேன்!
பிர-மாதங்கள் பல.
//தாவணிகளுக்கு // அட நிசமாவா? எல்லாரும் கல்ச்சர் மாத்திக்கிட்டாங்களா? எங்களுக்கெல்லாம் ஆஃப் சாரி பார்க்கும் கொடுப்பினையின்றி அரபுதேசம் வந்து அடைந்து கிடக்கிறோம் 🙂
கல்யாண சாப்பாடு தின்றதுக்குன்னே போற என்னைய மாதிரி ஜீவன்களுக்கு இப்படி தொடர் வாய்ப்புக்கள் ஏனோ கிட்டுவதில்லை 🙁
//அபய ஹஸ்தத்தை ஹரிஸாண்டலாகப் //
சூப்பர் )
நல்லா இருக்கு..ஆனால் கல்யாணத்திற்குப் போகும்போது கிடைக்கும் சந்தோஷமான முகங்களைப் பார்க்கக் கிடைக்கும் மகிழ்ச்சியை இழப்பீர்களே, பரவாயில்லையா?
ஹாஸ்ய கலக்கல் 🙂
எழுதுவதில் ஒழுங்கீனத்தைக் கடைபிடிப்பது எப்படி என்று என்னிடம் தனிமடலில் கேட்டால் தவறாது பதில் அனுப்புவேன் 🙂
//ஒழுங்கீனங்களை ஒழுக்கத்துடன் கடைப்பிடிப்பவனின் அவஸ்தைகள் வெகுஜனங்களுக்கு அவ்வளவாகப் புரிவதில்லை.// புரிகிறது ஐயா ;))
//முகூர்த்த நேரம் அதிகாலை ஆறு மணி என்பதை கவனிக்காமல் இரவு பத்து மணிக்குமேல் பஸ் ஏறி, சாப்பாட்டு நேரத்துக்குப் போய்ச்சேர்ந்ததுதான்// சேம் ப்ளட்
ஒழுங்கீனத்தை வாழ்க்கை விதியாக வைத்துக்கொள்வதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. ///
உண்மை தான். எல்லோருமே அதை கடை பிடிக்க துவங்கி விட்டால்?
செம்மை காமெடியாக எழுதி இருக்கிறீர்கள். :))
உங்கள் ப்ளாகில் Archive என்ற ஒன்று உள்ளது. பெரும்பாலான மனிதர்கள் அதை கிளிக் செய்து உங்கள் பழைய பதிவுகளை பார்க்க மாட்டார்கள். அவர்கள் கண்ணில் நேரடியாக எது முதலில் படுகிறதோ அதை மட்டும் பார்ப்பார்கள். அதை மட்டும் படிப்பார்கள். உங்கள் பிளாகின் வடிவத்தை அந்த oviam solution நபர்களிடம் சொல்லி மாற்றலாமே… எப்படி என்றால் உங்கள் பிளாகில் கட்டுரைகளின் தலைப்புகளை மட்டும் தோன்றுமாறு செய்து அந்த தலைப்புகள் எல்லாவற்றையும் உங்கள் பிளாகின் முதல் பக்கத்திலேயே தோன்றுமாறு செய்யலாம். That is instead of showing both post title and its content you just show just post title only.
see my demo blog below. http://dineshkarthi.blogspot.com/
I have just shown only post titles in home page. I can show all post titles just in the home page itself. Or I can set 50 or 100 post titles per page.
இந்த வருடம் எல்லா திருமணங்களிலும் பங்கேற்றது (வழக்கமான பழக்கத்தை விட்டுவிட்டு)நம்ம வீட்டில் சமீபத்தில் நடந்த திருமணத்தால் தான் என்கிறார்களே!!!