ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்

[சற்று முன்னதாகவே இங்கு வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்துக்குக் காரணம் மடினிப் பழுது.]

அயோத்தி தீர்ப்பு. காமன்வெல்த் குளறுபடிகள். தஞ்சை கோயிலின் ஆயிரமாவது பர்த் டே. தடியூன்றும் வயதிலும் இளவரசராகவே இருக்கும் சார்லஸ் வந்தது. கொடநாட்டு தேவதை குடியிருப்புக் கேந்திரங்களுக்கு இறங்கிவந்து போராடத் தொடங்கியது. மதராசில் மழை. ஈக்வடாரில் புரட்சி. பர்வேஸ் முஷரஃபின் புதுக்கட்சி –

எதையாவது தங்கத் தமிழர்கள் பொருட்படுத்தினார்களா? இவையெல்லாம் எந்திரன் ரிலீஸ் சமயம் நடந்தது யார் பிழை? அலகாபாத் நீதிபதிகளில் தொடங்கி இங்கிலாந்து இளவரசர் வரைக்கும் யாருக்குமே விவரம் போதாது. அட, கலைஞர் கூட ராஜராஜன் திருவிழாவைக் கொஞ்சம் தள்ளியோ முந்தியோ வைத்திருந்தால்தான் என்ன?

தொலைக்காட்சிகள், வானொலிகள், தினசரிகள், வாராந்திரிகள், மாசாந்திரிகள், இணையத் தளங்கள், வலைப்பதிவுகள், ட்விட்டர், ஃபேஸ்புக், எருமை சாப்பிடும் போஸ்டர்கள், ஹோர்டிங்குகள், பேனர்கள், பிட் நோட்டீசுகள் யாவிலும் எந்திரன். ஒரு பரம்பொருள் மாதிரி தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்துவிட்ட ஒரே செய்தி. ஒரே பேச்சு. ஒரே சிந்தனை.

படம் ரிலீசாகி, அதிகாலை நாலு மணிக்கு சிறப்புக் காட்சி பார்த்துவிட்டு சூப்பர் ஹிட் என்று முதல் எஸ்.எம்.எஸ். அனுப்பியபிறகுதான் தமிழகத்தின் ஜுரவேகம் சற்று மட்டுப்படத் தொடங்கியது.

ஒரு காலத்தில் வடவர் தேசத்தில் அமிதாப் பச்சனுக்கும் காவிரி பாயும் கர்நாடகத்தில் ராஜ்குமாருக்கும் இதே மாதிரியான தொடக்கம் சித்தித்திருக்கிறது என்று பழங்கால சூப்பர் ஸ்டார் ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒரு நடிகரின் படம் வெளியாகும்போதெல்லாம் மாநிலத்தையே பண்டிகை  ‘மோடு’க்குத் திருப்பிவைக்கும் சங்கதி அதிகம் நிகழ்வதில்லை. அட ஒரு ஆர்நால்டோ, லியனார்டோ டிகாப்ரியாவோ எத்தனை மெனக்கெட்டாலும் அவர்களுக்கு கட்டவுட் பாலாபிஷேகப் பிராப்தி உண்டாகுமா? தியேட்டர் வாசலில் கற்பூரம் ஏற்றி, தேங்காய், பூசனிக்காயெல்லாம் உடைத்து, சரம் வெடித்து, காசு, காகிதம் பறக்கவிட்டு, தலைவா என்று நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து அங்கப்பிரதட்சணம் செய்து அங்கீகரிப்பார்களா?

சென்னை கமலா தியேட்டர் வாசலில் ஒரு ‘பக்தரு’டன் சற்றுப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அதிகாலை அல்லது நள்ளிரவு ஒரு மணிக்கே குளித்து முழுகி மயிலை கற்பகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். பொறுப்பற்ற கோயில் நிர்வாகம், அந்நேரத்தில் சன்னிதியைத் திறந்து வைத்திருக்கவில்லையாதலால் வெளியிலிருந்தே விழுந்து வணங்கி மானசீக பூஜை நிகழ்த்தியிருக்கிறார். காவி வேட்டி, வெள்ளைச் சட்டை. இடுப்பிலொரு காவித் துண்டு. தேசிய நெடுஞ்சாலையை விண்வெளியிலிருந்து படமெடுத்தாற்போல நெற்றியில் துலங்கிய வெகுநீள விபூதிப்பட்டை. நடுவே குங்குமமும் சந்தனமும்.

அவர் செருப்பு அணிந்திருக்கவில்லை. வழக்கமில்லாமல் இல்லை. ஆனால் ஏனோ தமிழ் சமூகம் வழிபாட்டினுள் பாதுகையைச் சேர்ப்பதில்லை.

‘இதுதான் சார். இந்த ஒரு நாளுக்காகத்தான் சார் ரெண்டு வருசமா காத்திருக்கேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. எதற்காக உணர்ச்சிவசப்படுகிறார் என்று எளிதில் புரிந்துகொண்டுவிட முடியாது. ஆராதனை மனோபாவத்தின் உச்சத்தை உணர்தல் அத்தனை எளிதல்ல. சீ என்று புறந்தள்ளுவதும் நகர்ந்துசென்று கிண்டல் செய்வதும் தலையில் அடித்துக்கொண்டு பரிதாபப்படுவதும் அநாவசியம். இது தமிழகம். நாம் தமிழர்கள்.

இன்னொரு ரசிகர் தன் பாக்கெட்டிலிருந்து நான்கு டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினார். காலை சிறப்புக் காட்சிக்கானது ஒன்று. காலை ரெகுலர் காட்சிக்கானது மற்றொன்று. மதியக் காட்சிக்கு ஒன்று. மாலைக் காட்சிக்கு ஒன்று. ‘நைட் ஷோ டிக்கெட்டை என் தங்கச்சி எடுத்துக்கிச்சி சார்’

இது என்னவிதமான மனநிலை என்று ஆராயவேண்டியது அவசியம். ஓர் இந்துத்துவ இணையத்தளத்தில், படத்துக்கு விமரிசனம் வெளியாகியிருந்தது. அறிவு ஜீவிகள் தம் வழக்கப்படி ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்க, வீறுகொண்ட ஒரு ரசிகர், இந்துத்துவத்துக்காக ரஜினியை எதிர்ப்பீர்களெனில், எனக்கு இந்து மதமே தேவையில்லை என்று அறிவித்தார். இன்னமும்கூட ஒரு படி மேலே போகலாமே? ‘என் தாய் எனக்குத் தமிழைத்தான் சொல்லிக்கொடுத்தாள். தமிழ்ப் பண்பாட்டை போதித்தது என் தலைவன்தான்.’

ரஜினி போதித்த தமிழ்ப் பண்பாடு குறித்து ஏதாவது பல்கலைக் கழகத்தில் யாராவது முனைவர் பட்டத்துக்கு அவசியம் ஆய்வு செய்யவேண்டும். குறைந்தது, இந்த ரசிகர்களின் மனோபாவத்தைப் பற்றியாவது. வெட்டி விடலைகள் என்று புறந்தள்ளிவிட்டுப் போவது நிச்சயமாக ஆபத்து என்று சொல்லுவேன். இவர்கள், ரசிகர் சமூகத்திலேயே மெஜாரிடிகள். தி.மு.ககாரர்கள், அ.திமுக காரர்கள், பாமககாரர்கள், பாஜககாரர்கள், காங்கிரஸ்காரர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிருத்தவர்கள், ஆத்திகர்கள், நாத்திகர்கள், நல்லவர்கள், வல்லவர்கள், நோஞ்சான்கள், ஆபீஸ் போகிறவர்கள், தொழில் செய்பவர்கள், கூலி வேலையாட்கள், வேலையில்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவிலிருந்தும் வருகிறவர்கள். ஒரு பொழுதுபோக்குத் துறை சார்ந்த கலைஞரைத் தம் வாழ்வின் ஆதர்சமாக ஏற்றுக்கொண்டு ஆயுள் சந்தா விசுவாசம் செலுத்துபவர்கள். அவர் ருத்திராட்சம் அணிந்தால் இவர்கள் ருத்திராட்சம் அணிவார்கள். அவர் ராகவேந்திரரை வணங்கினால் இவர்கள் ராகவேந்திரரை வணங்குவார்கள். அவர் பாபா என்றால் இவர்கள் இரண்டு விரலை உயர்த்துவார்கள். அவர் தலை வாராவிட்டால் இவர்கள் வாரமாட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், ரஜினியைக் காட்டிலும் முக்கியமானவர்கள். அவர்களது ஆற்றல் பிரமிப்பூட்டக்கூடியது. தமது அரசியல், சமூக, மத அடையாளங்களை நகர்த்திவைத்துவிட்டு ரசிகன் என்னும் ஒற்றைப் புள்ளியில் யாரோடும் இணைந்து அவர்களால் என்னவும் செய்ய முடியும். இந்தச் சக்தியின் முக்கியத்துவத்தை முன்னதாக ஒரு தேர்தலே நமக்கு நிரூபித்திருக்கிறது. ஆனபோதிலும் தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் ரஜினி ரசிகர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்லிவிடுவார்கள். விசிலடிக்கும் கலை எத்தனை கஷ்டமானது என்பது அவர்களூக்குத் தெரியாது.

ஆராதனை மனோபாவம் என்பது அத்தனை எளிதில் கூடிவிடுவதல்ல. தன் சுயத்தை அழித்து அல்லது மறைத்து அல்லது பின்னுக்குத் தள்ளி இன்னொருவரைத் தோளில் ஏந்திக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமல்ல. வெட்க உணர்வு, அவமான உணர்வு, குற்ற உணர்வு போன்றவற்றுக்கு இங்கே இடமில்லை. மனம் விரும்பும் ஒன்றை மூடி மறைக்காமல் அப்பட்டமாக வெளிப்படுத்துவது ஓர் உன்னத நிலை.

சென்னை மெலோடி தியேட்டர் வாசலில் எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவரை முதல்நாள் முதல் காட்சி சமயம் காண நேரிட்டது. அவரால் நிற்கவோ, நகரவோகூட முடியவில்லை. தள்ளாமை. எதிரே உள்ள போஸ்டர் எழுத்துகளைக்கூட அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் பேலன்ஸ் தவறாமல் நிற்க முடியவில்லை.

ஆனாலும் அவருக்கு முதல் நாள் படம் பார்க்க வேண்டியது அவசியம். முதல் காட்சியே பார்க்கவேண்டியது அவசியம். நிச்சயமாக இது இருபது, இருபத்தி ஐந்து வருடங்களாக நீளும் வழக்கமாக இருக்கக்கூடும். ரஜினிக்குமுன் அவர் எம்.ஜி.ஆர். ரசிகராகக்கூட இருந்திருக்கலாம். அதற்கும்முன்னால் பாகவதர் ரசிகராக.

சூப்பர் ஸ்டார்களல்ல. அவர்களைத் துதித்துக் கொண்டாடும் மனநிலை மட்டுமே இங்கு முக்கியம்.

இம்மாதம் முதல் தேதி, எந்திரன் வெளியான கணத்தில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தேன். மிகக் குறுகலான அச்சாலையில் சட்டென்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கார்களும் பேருந்துகளும் இரு சக்கர வாகனங்களும் பாதசாரிகளும் தேசியகீதம் இசைத்தாற்போல அப்படி அப்படியே நின்றார்கள். ஒரு மாபெரும் கூட்டம் திரையரங்க வாசலில் வந்து கூடியது. மிகப்பெரிய பட்டாசுக் கட்டு ஒன்றைப் பிரித்து சாலையெங்கும் பரப்பியது. காவலுக்கு இருந்த போலீஸ்காரர் அவர்களுக்கு உதவி செய்து, கூட்டத்தை ஒழுங்கு படுத்தினார்.

வினாடிப் பொழுதில் சாலையை நிறைத்த வாகனங்கள் வெகு தொலைவுவரை நீண்டுவிட்டன. யாரிடமும் ஒரு முணுமுணுப்பும் இல்லை. அலுத்துக்கொள்ளவில்லை. பட்டாசு பற்றவைக்கப்பட்டது. படபடபடபடவென்று வெடித்துச் சிதறிய சத்தமுடன் ஏராளமான விசில் சத்தங்களும் சேர்ந்துகொண்டன. போலீஸ்காரரும் தம் பங்குக்கு அரசு கொடுத்த விசிலை ஊதினார். உள்ளே படம் ஆரம்பித்துவிட்டது.

ஒருநாள் திருவிழாதான். குறைந்தது இரண்டாண்டுகள் இதற்காகக் காத்திருக்கும் மனநிலையை என்னவென்பீர்?

ரஜினி ரசிகர்களை நம் கலாசார அடையாளங்களுள் ஒன்றாக அரசு அறிவித்துவிடலாம்.

20 comments on “ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்

 1. Unmaivirumpi

  அருமையான தொகுப்பு, ஆனா நீங்களும் தியோட்டர் தியோட்டரா ரிலீஸ் அன்னிக்கி காலைல போனதா தெரியுது :-), படம் பார்க்க இல்ல ஆனா இந்த பதிவுக்காக

 2. basheer

  === ரஜினி ரசிகர்களை நம் கலாசார அடையாளங்களுள் ஒன்றாக
  அரசு அறிவித்துவிடலாம்.===

  வெறுப்பேத்தாதீங்க சார்.

 3. ஆயில்யன்

  🙂

  நிறைய கவனிச்சிருக்கீங்க! [ரசிச்சிருக்கீங்கன்னும் சொல்லலாமா?!] இப்படித்தான் ரஜினி படம் வந்தா ரஜினி ரசிகர்களை விட்ட மற்றய சமகால ரசிகர்களும் கூட ரஜினியை கொண்டாடி மகிழ்கின்றனர் !

 4. Anas

  //// சற்று முன்னதாகவே இங்கு வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்துக்குக் காரணம் மடினிப் பழுது /////

  இந்த பதிவிர்க்கு மடினிப் பழுது இன்னும் தொடர்த்து இருக்கலாம். நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை ஆனா ஒண்ணு //// ரஜினி ரசிகர்களை நம் கலாசார அடையாளங்களுள் ஒன்றாக அரசு அறிவித்துவிடலாம் //// செம்மய ரஜினியை கலாச்சிடிங்க

  குறிப்பு
  கமல்,விஜாய்,அஜித், நான் எந்த குருப்பும் இல்லை.

 5. Anas

  எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் நீங்கள் முதல் இடத்தில் இருப்பவர். ஒரு மிகப் பெரிய எழுத்தாளர் இந்த மாதிரியான பதிவை தவிர்க்கலாம்.

 6. யுவகிருஷ்ணா

  🙂

  சூப்பர். கமல் ரசிகர்களை பற்றிய உங்கள் மதிப்பீட்டையும் சொல்லிட்டீங்கன்னா கொஞ்சம் ‘உஷார்’ ஆகிக்கலாம். மன்மதன் அம்பு வேறு டிசம்பர் மாதம் எய்யப்படுகிறதாம்.

 7. Mohan Murugadoss

  This is not healthy situation for country, we must think why we have to spend money to see such a film, they earning money by using the people ignorance. Thats why we still in poor position.

 8. sathish

  na.pa! na.paa!:-)
  did your .maayavali’and dollar desam realesed as e.book by kezhaku? if so pl give me the link!
  thanks

 9. Rajesh Chandra

  Ask these “so-called” fans to get up this early for their family chores…I can see how they will react. I know this argument may sound absurd, but this post itself is an absurd.

  Thanks
  Rajesh

 10. yesosuresh

  Been reading your books for quite long time. It was such a great experience while reading ‘அலகிலா விளையாட்டு’ novel. But I never written anything to you. But today after reading this article, I can’t resist myself. Its an unique, clear, matured way of portraying rajini fans to this world.

  “மனம் விரும்பும் ஒன்றை மூடி மறைக்காமல் அப்பட்டமாக வெளிப்படுத்துவது ஓர் உன்னத நிலை.”

  Excellent write-up.

  Thanks,
  Suresh

 11. simple fan of superstar!

  ரொம்ப புத்திசாலித்தனமா கலாய்க்கிறதா நினைப்போ…

  ரசிகனுக்கு எல்லாம் தெரியும். எப்போது எதற்கு எந்த அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று.

  உங்களைப் போன்றவர்கள்தான் பாபாவுக்கு ஒரு மாதிரியாகவும் சிவாஜிக்கு ஒரு மாதிரியாகவும் குசேலனுக்கு வேறு மாதிரியாகவும் எந்திரனுக்கு ஒரு மாதிரியாகவும் வேடம் போடுவார்கள் என்பதும் தெரியும்.

 12. ariyaluraan

  தங்களை போன்ற ஒரு மதிப்புள்ள எழுத்தாளரிடம் இருந்து இது போன்ற சில்லறை தனமான எதிர்ப்பை எதிர்பாக்கவில்லை. இது ஒன்றும் ஐரோப்பியா அல்ல எழுத்தாளர்களை தூக்கி வைத்து கொண்டாட. சுஜாதா வின் இடத்தை உங்களால் பிடித்தால் மட்டுமே அந்த பெருமை கிட்டும். அதை விடுத்து ஒரு கலைஞனை அவனது உழைப்பு நைச்சியம் பேசி வரும் புகழ் உங்களுக்கு தேவை இல்லை. அதை விடுத்து டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம் போன்ற படைப்புகளை உருவாக்குங்கள். உங்களை காலமெல்லாம் நினைவில் வைத்து இருப்போம். உங்கள் எழுத்தாளர் சகாக்களுக்கும் சொல்லுங்கள். சுஜாதா, கமல் போன்ற கலைஞனையும் திருப்தி படுத்தினார். என்போன்ற சாமானியனையும் திருப்தி படுத்தினார். அது புரியாமல், தொடர்குறி, நிறுத்தற்குறி போட்டு எழுத தெரியாத இலக்கிய எழுத்தாளர்கள் ( சொல்லிக்கராங்கோ) ரஜினி யை பற்றி தரக்குறைவாக பேசியும் எழுதியும் வருவது வெறுப்பாக உள்ளது. உங்களுக்கு என் இந்த கொதிப்பு என்று. ஆயிரம், ரெண்டாயிரம் பேருக்கு புத்தகம் எழுதிவிட்டு (பாதி காபி, பேஸ்ட்) தன்னை தாங்க வேண்டும் என்று நினைக்கும் எழுத்தாளர்களுக்கு. ரஜினி எத்தனை கோடி மக்களை சந்தோஷப்படுத்துகிறார் என்று நினைக்க தோன்றுவது இல்லை ஏன்? வேண்டாம் இந்த விளையாட்டு. தங்களது மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள். மோரு, சாணி யை போன்று. (I have typed these in google transliteration, excuse me for the spelling mistakes.)

 13. sankar

  hats off gentle man nice critics about the cinema and about the fan clubs i don think its against rajini or to thier fans ita completely about the nature of the tamil cinema fans………..thank you very much for giving such a nice post

 14. Vassan

  அறிவு முதிர்ச்சியுடன் எழுதப்பட்ட ஒரு பதிவு. உங்கள் நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக படிக்க வேண்டிய எழுத்தாக்கம். ஒரு தலைமுறை தமிழர்கள் சிந்திக்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டார்களோ என ஐயம் வருகிறது. இங்கு கூட, தமிழர்கள் நிறைய வாழும் நியு ஜெர்ஸி மாநிலத்தில், அண்மையில் (தற்காலிகமாக) புலம் பெயர்ந்த ஒரு
  சில தமிழர்கள் திரைப்பட நடிகனின் படத்தின் மேல் பாலூற்றி மகிழும் படத்தைக் கண்டேன்.

 15. Sriram Varadarajan

  Just seeing the comments make me think how bad we are in taking positive criticism.

  Hats off para. All this time i had a total aversion to this kind of hero worship specially attributed to Rajni and to a certain extent to all other TN cine stars. But you have made me look at it from a totally different angle.

  ஆராதனை மனோபாவம் என்பது அத்தனை எளிதில் கூடிவிடுவதல்ல. தன் சுயத்தை அழித்து அல்லது மறைத்து அல்லது பின்னுக்குத் தள்ளி இன்னொருவரைத் தோளில் ஏந்திக்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமல்ல. வெட்க உணர்வு, அவமான உணர்வு, குற்ற உணர்வு போன்றவற்றுக்கு இங்கே இடமில்லை. மனம் விரும்பும் ஒன்றை மூடி மறைக்காமல் அப்பட்டமாக வெளிப்படுத்துவது ஓர் உன்னத நிலை.

  This definitely is a trance state not unlike when people are praying. Great analogy.

  Sriram Varadarajan

Leave a Reply

Your email address will not be published.