மலர்களே மலர்களே

தீபாவளி மலர்களை ஒரு காலத்தில் வெறித்தனமாக நேசித்திருக்கிறேன். புதுத்துணியோ பட்சணங்களோ, பாப்பையாக்களின் பட்டிமன்றங்களோ, புதுரிலீஸ் படங்களோ அல்ல. கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஓம் சக்தி, குண்டூசி, விஜயபாரதம் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை விரும்பக்கூடியவனாக இருந்தேன். ஒவ்வொரு மலரையும் எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தடவித் தடவி கடைசிப்பக்கம் வரை முதலில் ஒரு புரட்டு.

அதிலேயே சுமார் இரண்டொரு மணி நேரங்கள் ஓடிவிடும். அதன்பிறகு கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு ஜனநாயக தீபாவளிக் கடமைகளை ஆற்றிவிட்டுத் திரும்பி வந்து உட்கார்ந்து மீண்டும் ஒவ்வொரு மலரையாக எடுத்து அட்டையை மட்டும் தனியே ஒரு தரம் பாதாதிகேசம் ரசிப்பது என்பது இன்னொரு பரவச அனுபவம்.

பாரம்பரியப் பத்திரிகைகள் பெரும்பாலும் தம் மலர் அட்டைகளில் அழகிய பெண்களின் வண்ண ஓவியங்களைப் பிரசுரித்திருக்கும். கன்னம் முதல் எல்லாம் குண்டு குண்டாக இருந்தாலும் பார்க்க லட்சணமாக இருக்கும் புராணக் கதாபாத்திரங்கள். உள்ளே சுகி சிவம் அல்லது புலவர் கீரன் மாதிரி யாராவது ஒருத்தர் அட்டையில் காட்சிதரும் அழகு நாரீமணி சம்பந்தப்பட்ட படக்காட்சிக்கு விளக்க உரை எழுதியிருப்பார். உரையில் என்ன இருக்கிறது? நமக்கு அட்டைப்படம் போதும். சாமியார்களின் அருள்வாக்குகள், யாராவது கல்வியாளர் அல்லது பொருளாதார நிபுணரின் தேசநலன் சார்ந்த வருடாந்திர அக்கறைக் கட்டுரைகள் அவசியம் இருக்கும். எதற்கு என்று கேட்கப்படாது. சரி அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும் என்று புரட்டிவிடுவேன்.

என் ஆர்வம் தொடங்குவது சிறுகதைகளில். பொதுவாக தீபாவளி மலர் சிறுகதைகள் சற்றே மேம்பட்ட தரத்தில் இருப்பது எண்பதுகளின் வழக்கம். தடாலென்று புது ஆசாமிகள் யாரும் அப்போது வரமாட்டார்கள். கல்கி என்றால் ஒரு செட், கலைமகள் என்றால் ஒரு செட், அமுதசுரபி என்றால் ஒரு செட். ஒவ்வொரு செட்டிலும் யார் இருப்பார்கள் என்பது எனக்கு அத்துபடி. நான் படிக்க வேண்டிய வரிசையைத் தீர்மானிப்பது ஒன்றே என் வேலையாக இருக்கும். இந்த செட் எழுத்தாளர்களில் சிலர் எல்லை தாண்டி அடித்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரே எழுத்தாளர் இரண்டு, மூன்று, நான்கு மலர்களில்கூட ஓராண்டு சிறுகதை எழுதியிருப்பார்.

பல தீபாவளி மலர்களில் கதையெழுதும் எழுத்தாளரே அந்தாண்டுப் பிரபல எழுத்தாளர் என்று கருதும் வழக்கம் அன்று வாசகர்களிடம் இருந்தது. எனவே மலர்கள் வந்ததும், பிரபலத்தை முதலில் கண்டுகொண்டு அதன்பின் அபிரபலங்களை நோக்கி நகர்வதே என் பள்ளிநாள் வழக்கமாக இருந்தது.

கல்கி மலர்களில் எப்படியும் அமரர் கல்கியின் சிறுகதையொன்று இருக்கும். அந்நாளில் இருபது பக்கங்களுக்குக் குறையாமல் தம் கட்டிக் கதையெழுதிய பெரிய எழுத்தாளர். நாமெல்லாம் இத்தனை நீளத்துக்கு எழுதினால் தூக்கிக் கடாசிவிடுவார்கள் என்று எனக்கு நானே தீர்மானித்துக்கொண்டு கொஞ்சநேரம் சுயசோகம் வளர்த்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது. அப்போது என் முதல் சிறுகதையைக் கூட நான் எழுதிப் பார்த்திருக்கவில்லை என்பது இங்கே முக்கியமானது. மறுபுறம் வண்ணநிலவன், அசோகமித்திரன் மாதிரியான எழுத்தாளர்கள் வாய்ப்பு இருந்தும் ஏன் ஒன்றரை, ஒண்ணேமுக்கால் பக்கங்களுக்குமேல் எழுதமாட்டேனென்கிறார்கள் என்றும் யோசிப்பேன். சாந்தன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். இலங்கைக்காரர். அரைப் பக்கம், முக்கால் பக்கம். மிஞ்சிப்போனால் முழுப்பக்கம். ஒருபோதும் அந்த எல்லையை அவரது கதைகள் தாண்டவே தாண்டாது. ஆனால் இன்றைய வாரப்பத்திரிகை ஒரு பக்கக் கதைகள் போன்றதில்லை அவை. வெகு நிச்சயமாகச் சிறந்த கதைகள். சாந்தனின் சில கதைகளில் சர்வதேசத் தரம் பார்த்த நினைவிருக்கிறது.

அமுதசுரபி மலர்களில் நான் விரும்பி வாசித்தவை லா.ச. ராமாமிருதத்தின் கதைகள். லாசரா, அமுதசுரபிக்கு ஒரு கல்கி. அதாவது பக்க எண்ணிக்கையில். ஒரு நாலைந்து சிட்டிங் போட்டுத்தான் அவருடைய கதைகளை முடிக்கவேண்டியிருக்கும். விட்ட இடத்திலிருந்து சட்டென்று தொடரவும் முடியாது. கொஞ்சம் முன்பாரா பின்பாரா சேர்த்துப் படித்தால்தான் வேலைக்கு ஆகும். ஆனாலும் பேனா மையில் அரை அவுன்ஸ் அபின் கலந்து எழுதுகிற மனிதர். அது என்ன அப்படியொரு மயக்கும் வாசனையோ தெரியாது. என் வாழ்நாளில் அவரது கதைகளைப் பார்த்துப் பொறாமையில் புழுங்கியதுபோல் இன்னொருத்தர் என்னை பாதித்ததில்லை.

இந்திரா பார்த்தசாரதி இருப்பார். சிவசங்கரி இருப்பார். அனுராதா ரமணன் இருப்பார். சுஜாதா இருப்பார். பாலகுமாரன் இருப்பார். (நான் மலர் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் சிறுகதைகளையும் நிறுத்திய காலத்தில் விசிறி சாமியார் கதைகளையும் எழுதிக்கொண்டிருந்தார்.) அமுதசுரபியில் நா. ராமச்சந்திரன், கங்கா ராமமூர்த்தி என்ற இரு எழுத்தாளர்கள் அவசியம் இருப்பார்கள். இவர்களது கதைகளை நான் அமுதசுரபி தீபாவளி மலர் தவிர உலகில் வேறெங்கும் கண்டதில்லை.

தீபாவளி மலர்களை வண்ணமயமாக்குவது பயணக்கட்டுரைகள். ஆன்மிகப் பயணங்கள் தனி, ஜாலிப் பயணங்கள் தனி. இதற்கும் தனித்தனி செட் எழுத்தாளர்கள் உண்டு. சொல்லிவைத்த மாதிரி ஒரே விதமான கட்டுரைத் தொடக்கங்களை இக்கட்டுரைகளில் பார்க்கலாம் என்பதை சுமார் பத்தாண்டு மலர் வாசிப்பு அனுபவத்தில் தெரிந்துகொண்டேன். பின்னாளில் பத்திரிகைப் பணிக்குச் சென்றபோது இத்தகு பயணக்கட்டுரைகளை எழுதப் பயணம் மேற்கொள்ளவேண்டிய அவசியம்கூட இல்லை என்பதையும் தெரிந்துகொண்டேன். ஆனால், கல்கி போன்ற சில பத்திரிகைகளில் தீபாவளி மலர் பயணக்கட்டுரைக்கென்றே நிருபர்களுக்கு டிக்கெட் வாங்கிக்கொடுத்து எங்காவது தூரதேசம் அனுப்புகிற வழக்கம் இருந்தது. அவர்களும் ஆபீஸ் செலவில் ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு, கண்டறியாதன கண்டேன் என்பது போன்ற தலைப்பில் நாலைந்து பக்கங்களுக்கு என்னவாவது எழுதிவிடுவார்கள்.

என் சிறு வயதுகளில் வாசிக்கும்போதே மிலிட்டரி மிடுக்குடன் உட்கார்ந்து வாசிக்க வைத்த பல கட்டுரைகளை விஜயபாரதம் மலரில் கண்டிருக்கிறேன். கட்டுரைத் தலைப்போ, எழுதியவர் பெயரோ இப்போது நினைவில்லை. ஒரு குறிப்பிட்ட ஆண்டு விஜயபாரதம் மலரில் ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு மறுநாள் பஸ் பிடித்து பதான்கோட்டுக்குப் போய் பாகிஸ்தான்காரர்களுடன் சண்டைபோடும் உத்தேசத்துக்கே சென்றுவிட்டேன். பதான் கோட்டுக்கு பஸ் ரூட் என்னவென்று தெரியாத காரணத்தால் தேசம் ஒரு சுத்த வீரனை அன்று இழந்தது. அசுத்த எழுத்தாளனைக் கண்டடைந்தது.

ஓம் சக்தியில், குண்டூசியில் படித்த ஆன்மிகக் கட்டுரைகள், கல்கியில் படித்த ரா. கணபதியின் கட்டுரைகள், கலைமகள் மலரில் கிடைத்த அபூர்வமான சில மொழிபெயர்ப்புக் கதைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன.

தொண்ணூறுகளுக்குப் பிறகு தீபாவளி மலர்களின் முகம் மாறத்தொடங்கியது. கிடைக்கும் விளம்பரங்கள் பக்க அளவைத் தீர்மானித்தன. டிவி சீரியலுக்காக எழுதி, எடுக்கப்படாத பக்கங்களைச் சிறுகதைகள் என்று எழுத்தாளர்கள் முத்திரை மாற்றி அனுப்பத் தொடங்கியிருந்தார்கள். பல பக்கங்களை சினிமாக்காரர்கள் ஆக்கிரமித்தார்கள். வண்ணப்படமும் வண்ணமயமான அனுபவங்களும். பல பக்கங்களில் பலவேறு சினிமாக்காரர்கள் கொளுத்திவைத்த கொசுவர்த்திச் சுருள்களின் நெடி மலர் முழுதையும் ஆக்கிரமித்தது. புராதன வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் சென்று பார்த்து எழுதப்பட்ட பயணக்கட்டுரைகளை குளுகுளுப் பிரதேசப் பயணக்கட்டுரைகள் மொத்தமாகப் பிடித்துக்கொண்டன. க.தோ.ம.தோ காலத்திலிருந்து வருணித்து வருணித்து இயற்கை நைந்துபோய்விட்டபடியால் எதுவும் வாசிக்கும்படியாக இல்லை.

படிப்படியாக நான் வாங்கிக்கொண்டிருந்த தீபாவளி மலர்களின் எண்ணிக்கையைக் குறைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சாலமன் பாப்பையா பக்கம் திரும்பவும் ஆரம்பித்தேன். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு சற்றும் எதிர்பாராத பல பத்திரிகைகள் தீபாவளி மலர்களைக் கொண்டு குவிக்கத் தொடங்கின. சீயக்காய்ப் பொடி, கோபால் பல்பொடி, கோபுரம் பூசுமஞ்சள் தூள், செவனோகிளாக் எட்ஜ்டெக் பிளேடு (நிரோத் இருந்த நினைவில்லை.) உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை இலவசமாகச் சேர்த்து தீபாவளி மலர்களையே பட்டாசு மூட்டை மாதிரி வழங்க ஆரம்பித்தார்கள். இலவசப் பொருள் கொடுத்த அத்தனை நிறுவனங்களின் விளம்பரங்களும் மலர்களை அலங்கரித்தன. இடமிருந்தால் சினிமாக் கட்டுரைகள், சினிமா பேட்டிகள், சினிமா நடிகைகளின் அழகுப் படங்கள்.

இந்தக் கலாசாரப் புரட்சிக்குத் தமிழ்ப் பெண்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஐயாயிரம், பத்தாயிரம் பிரதிகளுக்குமேல் ஒரு காலத்தில் மலர்கள் அச்சடிக்க மாட்டார்கள். டிமாண்ட் இருந்தாலும் அவ்வளவுதான். ஆனால் இலவசப் புரட்சிக் காலத்துக்குப் பின் தீபாவளி மலர்கள் லட்சங்களில் அச்சடிக்கப்பட்டுக் கடைகளை நிறைத்தன. ஒவ்வொரு கடை வாசலிலும் மலர்க்காலத்தில்  சாக்கு மூட்டையில் இலவசச் சாமான்கள் இருக்கத் தொடங்கின. இதன் விபரீத விளைவு என்ன ஆச்சென்றால் நவம்பர் மாசத்து மளிகைச் சாமான்களுக்காகவே தீபாவளி மலர் என்றாகிப் போனது. என் மாதிரி மலர்ப் பைத்தியங்கள் தாற்காலிகமாக சோகம் கொண்டாட வேண்டியிருந்தது.

வெறுத்துப் போய் மலர்கள் வாங்குவதை நிறுத்தியது அப்போதுதான். பின்னாளில் இலவசமாகப் பிரதி கிடைத்தால்கூடப் படிக்கத் தோன்றாமல் போய்விட்டது.

வெறும் வாசகனாக இருந்த காலத்தைவிட, எழுதுபவனாக மாறிய பிறகு மலர்கள்மீது மோகம் இன்னும் அதிகரித்தது உண்மையே. தீபாவளி மலரில் கதை அல்லது கட்டுரை வரும்போதெல்லாம் பாரதிராஜா படத்து கிராம தேவதை போலத்தான் வீதியில் மிதப்பது வழக்கம். காலப்போக்கில் அந்த ஆர்வமும் குறையத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட வருடம் – 2005 என்று நினைவு – ஆறு பத்திரிகை மலர்களுக்குக் கதை கேட்டுக் கடிதங்கள் வந்தன. எம்பெருமான், ஒரு மலருக்குக் கூட எழுதவிடாதபடிக்கு மூடைக் கெடுத்து மூட்டை கட்டி வைத்துவிட்டான். மலர்களும் எப்போதும் வருகிற வார இதழ்களின் கல்யாணகுணங்களையே கொண்டிருந்ததுதான் காரணம் என்று தோன்றியது. அதற்காக ஏங்கி, அதற்காகக் காத்திருந்து, வந்ததும் பாய்ந்து எடுத்துப் புரட்டுவதில் கிடைக்கிற சுகானுபவத்தைத் தற்போதைய மலர்கள் ஏனோ தருவதில்லை.

ஆயிரத்தித் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு என்று நினைவு. கல்கி மலரில் லா.சு. ரங்கராஜன், இரண்டாம் உலகப்போர் சமயம் ஜப்பான்மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் கொண்ட பெரிய கட்டுரை. ஆனால் ஒரு வரிகூட அநாவசியமாகவோ, அலட்சியமாகவோ எழுதப்பட்டிருக்கவில்லை. இன்றுவரை ஒவ்வொரு கட்டுரை எழுதும்போதும் அந்தக் கட்டுரையின் நினைவு வருவது தவிர்க்க முடியாததாக உள்ளது. செய்தியாக இருந்து சரித்திரமாக மாறிய ஒரு விஷயத்தைப் புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிற கட்டுரை. இன்றும் புதிதாக எழுத வருபவர்களுக்குத் தவறாமல் அந்தக் கட்டுரையை வாசிக்கச் சொல்லி சிபாரிசு செய்வது என் வழக்கம்.

அம்மாதிரியான சரக்கெல்லாம் தீபாவளி மலர்களில் இப்போது வழக்கொழிந்துவிட்டது. இந்த வருடம் நான் எந்த மலரையும் வாங்கவில்லை. இரண்டு மலர்கள் தபாலில் எனக்கு வந்ததுடன் சரி. இதை எழுதிக்கொண்டிருக்கிற வினாடி வரை ஏனோ எடுத்து வாசிக்கத் தோன்றவேயில்லை.

Share

3 comments

 • பதான் கோட்டுக்கு பஸ் ரூட் என்னவென்று தெரியாத காரணத்தால் தேசம் ஒரு சுத்த வீரனை அன்று இழந்தது. அசுத்த எழுத்தாளனைக் கண்டடைந்தது

 • //பதான் கோட்டுக்கு பஸ் ரூட் என்னவென்று தெரியாத காரணத்தால் தேசம் ஒரு சுத்த வீரனை அன்று இழந்தது. அசுத்த எழுத்தாளனைக் கண்டடைந்தது//

  பாகிஸ்தான் தப்பித்தது..!! :))

 • தமிழின் இந்த தேக்க நிலைக்கு காரணம் உண்டு..

  எழுத்தாளன் சமூகதை பிரதிபலிக்க வேண்டும்..சமூகம் எப்படி இருக்க இருக்கிறது என சொல்ல வேண்டும்..அல்லது எப்படி இருக்க வேண்டும் என்றாவ்து சொல்ல வெண்டும்..
  ஆனால் மக்கலிடம் இருந்து அன்னியப்பட்டு, ஒரு கற்பனை உலகில் வாழ ஆரம்பித்தது எழுத்துக்கு மரியாதை குறைய காரனம்,.

  தொழிலாளி அம்பிகாவின் மரணத்தை கண்டுகொள்ளமல் விட்டு விட்டு, கோவை என்கவுண்டர் மேட்டரில், இவர்கள் அடைந்த ஆக்ரோஷம் சுத்தமாக அவர்கள் மரியாதையை குறைது விட்டது…

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி