வெளிப்பட்ட எல்லா அத்தியாயங்களிலும் வசவுகளுக்கும், நக்கலுக்கும், நையாண்டிக்கும், ஏமாற்றத்திற்கும், ஏளனத்திற்கும் தன்னை ஒப்புக் கொடுத்து அழுது புலம்பிய கோவிந்தசாமி இந்த அத்தியாயத்தில் விஸ்வரூபம் எடுத்து ”சங்கி என்றால் சாணக்கியத்தனம்” என சொல்லிக் கொண்டு திரிபவர்களுக்கு இன்னொரு சாட்சியாகி இருக்கிறான். கடவுளை விட, பிரமனை விட தானே உயர்ந்தவன். தன் படைப்புகள் அனைத்தும் ”தோன்றின் புகழோடு தோன்றுபவை” என காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு திரிந்த சூனியனை அவன் உருவாக்கிய பாத்திரங்களே குழப்பியடிக்கின்றன. ஒரு கட்டத்தில் ”பைத்தியம் பிடிக்க வச்சுராதீங்கடா” என வடிவேலுவைப் போல புலம்ப ஆரம்பிக்கிறான்.
தனக்கு கிடைக்க இருந்த பதவிக்கு வேட்டு வைத்த கோவிந்தசாமியின் உச்சகட்ட ஆக்ஷனில் சாகரிகாவும், தன் படைப்புகளின் அடாவடிகளால் சூனியனியும் திகைத்துப் போகின்றனர். சூனியனுக்கான கிரிடிட்டை சாகரிகா கேட்டதும் அந்த திகைப்பும் கரைந்து போய்விடுகிறது. ஒருவழியாக எல்லா குழப்பங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு ”சாகரிகா கோவிந்தசாமி ரசிகர் வட்ட” சமஸ்தானத்திற்குள் நுழைய வருபவர்களை கோவிந்தசாமியின் நிழல் வரவேற்கிறது. நிழலும், நிஜமும் இணைந்து அனைவருக்கும் வேட்டு வைக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டு வாசித்தால் கோவிந்தசாமி நம் நினைப்பை பொய்யாக்கி விடுகிறான். அடியோடு அழிப்பது என முடிவெடுத்தபின் நிழலுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?
சிட்டி ரோபோவாக இருந்த தன் படைப்புகள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டை மீறி இயங்கி வந்ததால் குழப்பமும், கோபமும் கொண்ட சூனியன் தன் படைப்புகள் உள்பட அனைவரின் சோலியையும் முடிக்க பூகம்பச்சங்கோடு நுழைகிறான். சூனியனின் அந்த கோபக்கனலுக்கு தன் நிழலையும் பலி கொடுத்த கோவிந்தசாமி மாயத்தடாகத்தில் தன்னையும் மாய்த்துக் கொள்கிறான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.