விபூதி யோகம்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு அடிக்கடிச் செல்வேன். காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வழக்கமாகியிருந்தது. அப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம் ஐந்து நாள்கள் வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வெள்ளிக்கிழமை மாலை ரயில் ஏறினால் சனிக்கிழமை காலை பதினொன்றரைக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்துவிடலாம். ஞாயிறு மாலை வரை அங்கு இருந்துவிட்டுக் கிளம்பினால் திங்கள் முதல் மீண்டும் அலுவலகம், வேலை.

ஈழப் போரின் காரணமாக அகதிகள் வரத்து அப்போது அதிகம் இருந்தது. ஒரு செய்தியாளனாகத்தான் முதல் முறை அங்கே சென்றேன். அடுத்த முறை சென்றதும் செய்தி சேகரிப்பதன் பொருட்டுத்தான் இருந்தது. ஆனால் மிக விரைவில் செய்திகளிலிருந்து மனம் விலகத் தொடங்கிவிட்டது. ராமேஸ்வரம் செல்வதற்குக் காரணம் வேண்டாம் என்று தோன்றியது. எதுவோ ஒன்று மௌனமாக அங்கிருந்து அழைத்துக்கொண்டே இருப்பது போல ஓர் எண்ணம். பிடிபடாததொரு பூடகம். என்னவானால் என்ன. அடிக்கடிப் போக ஆரம்பித்தேன். ஒரு முறை ஒரு நாவலுக்கான யோசனை அங்கே கிடைத்தது. பிறகு அதையே ஒரு காரணமாக வைத்துக்கொண்டு மீண்டும் சென்றேன். இன்னொரு முறை திரும்பவும் செய்தியாளனாகப் போக நேர்ந்தது. அம்முறைதான் முன் சொன்ன உள்ளுணர்வுக்கான காரணத்தை அறிய முடிந்தது. அந்தத் தருணத்துக்குச் சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஒரு சித்தரை மீண்டும் அங்கே கண்டேன். அவரது உண்மைப் பெயர் எனக்குத் தெரியாது. அவர் சொன்னதில்லை. திருச்சிராப்பள்ளி சுற்று வட்டாரத்தில் சிலர் அவரை சொரிமுத்து வைத்தியர் என்றார்கள். யதியில் அந்தப் பெயரைத்தான் அவருக்குத் தந்திருந்தேன்.

நான் சந்தித்த நாள்களில் திருச்சி – மதுரை இருப்புப் பாதை வழியில் ஊருக்கு வெளியே ஒரு சிறு குடிசையில் இருந்தார். அது நிரந்தர வசிப்பிடமெல்லாம் இல்லை. அவருக்குத் தெரிந்த யாரோ ஒருவருடைய குடிசையாக இருக்கலாம். அந்தப் பக்கம் வரும்போது அங்கே தங்குவார். அவ்வளவுதான். எங்கே இருக்கிறாரோ, அங்கே வைத்தியத்துக்கு செலவு செய்ய முடியாத மிக மிக எளிய மனிதர்களின் சாதாரண தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல்களை சொஸ்தப்படுத்துவார். பலரது வியாதிகளை அவர் உச்சந்தலையைத் தொட்டு குணப்படுத்திவிட்டு, அதை அவர்கள் உணராதிருக்க விபூதி கொடுத்து அனுப்பியதை நேரில் கண்டிருக்கிறேன். உண்மையில், வாழ்வின் ஆகப்பெரிய வலிகளில் இருந்து உரியவர்களுக்கு விடுதலை தரும் பணியை மேற்கொண்டிருந்தவர் அவர். சிலவற்றைச் சொன்னால் அறிவியலுக்கு முரண் என்று ஓடி வருவார்கள். ஆனால் அவர் ஒரு செருப்புத் தொழிலாளியின் புற்று நோயைக் குணப்படுத்தியிருக்கிறார். எனக்குத் தெரிந்தது அது ஒன்று. தெரியாமல் எவ்வளவோ இருக்கலாம்.

அவரோடு உரையாடக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் தவறாமல் கேட்ட கேள்வி, ‘எதற்கு இப்படி விபூதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்? அதில் ஒன்றும் இல்லை என்பதை நான் அறிவேன். உங்களைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதில் கவனமாக இருக்கிறீர்கள். அதை ஒப்புக்கொள்ளுங்கள்.’

பதில் சொல்ல மாட்டார். சில சமயம் சிரிப்பார். பெரும்பாலும் அதுவும் இருக்காது. ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்று, விடைபெற்றபோது என்னைக் கைநீட்டச் சொல்லி விபூதி கொடுத்தார். அதற்கு முன் அவர் எனக்கு விபூதி தந்ததில்லை. நானும் ஒன்றும் சொல்லாமல் வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டேன். (பொதுவாக நான் குங்குமம் மட்டும்தான் நெற்றியில் வைப்பேன். 13-14 வயது முதல் அதுதான் பழக்கம்.) ஏனோ அம்முறை அவர் சிரித்தார். அது எனக்குப் புரியவில்லை. அதன்பின் அவர் எனக்குத் தென்படப் போவதில்லை என்பதைக் குறிப்பால் சொல்லியிருக்கலாம்.

எல்லாமே பூமி சுழல்வதைப் போல இயல்பாகத்தான் நடந்தது. படிப்படியாக சாமியார்களைத் தேடிச் செல்வதைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கினேன். எத்தனைக் குட்டிக்கரணம் அடித்தாலும் உன்னால் ஒரு சன்னியாசி ஆக முடியாது; நீ கற்பனையில் வாழ்பவன் என்று மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி தபஸ்யானந்தா ஒருமுறை சொன்னார். அவர் சொன்னதற்கேற்ப என் கவனம் முழுவதும் படிப்பில் திரும்பிவிட்டது. மெல்ல மெல்லக் கதைகள் எழுதிப் பார்க்க ஆரம்பித்தேன். அசோகமித்திரனைச் சந்தித்தேன். அற்புதங்களை அந்தரத்திலிருந்து அல்லாமல் சாதாரண மனிதர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக் காட்ட முடியும் என்பதை அவரது எழுத்தில் பயின்றேன். பிறகு எழுத்தே என் மீட்சிக்கு வழி என்று தெரிந்துகொண்டு இந்தப் பக்கம் ஒதுங்கிவிட்டேன்.

அது இருக்கட்டும். அந்த ராமேஸ்வரம் பயணத்தைக் குறித்துச் சொல்ல வந்தேன். அது மூன்றாவது முறையாக ஒரு செய்தியாளனாக மட்டும் நான் அங்கே சென்றிருந்த சமயம். அம்முறை என் நண்பன் பிரகாஷ் (தேர்ட் ஐ பிரகாஷ் என்றால் பத்திரிகை உலகில் அனைவருக்கும் தெரியும்.) புகைப்படம் எடுக்க உடன் வந்தான். நாங்கள் அங்கே சென்றபோது ஏ.எஸ். பன்னீர் செல்வம், பிரசாந்த் பாஞ்சியார் போன்ற பல ஆங்கிலப் பத்திரிகையாளர்களும் ராமேஸ்வரத்தில் முகாம் இட்டிருந்தார்கள்.

ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான மக்கள் இலங்கையில் இருந்து கள்ளப் படகுகளில் வந்து நான்காம் திட்டில் இறங்கிக்கொண்டிருந்தார்கள். வீடு, நாடு, உடைமை, உறவுகள் அனைத்தையும் அடுத்து என்னவென்று தெரியாமல் விட்டுவிட்டு உயிருக்காக மட்டும் ஓடி வருவது என்றால் என்னவென்று நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. ஏனெனில் நம் நாட்டில் என்ன இல்லாவிட்டாலும் குடி மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்பு இருக்கிறது. எவ்வளவு மோசமானாலும் ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லாத தேசத்தவரின் துயரம் ஒப்பீடே இல்லாதது. இரண்டு நிமிடம் பேசுவதற்குள் அழுதுவிடுவார்கள். அவர்களின் முகம் சொல்லாத எதையும் பேசிச் சேகரிக்க முடியாது என்று எனக்கு மண்டபம் முகாமிலேயே தோன்றிவிட்டது. இருப்பினும் பத்திரிகைக் கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அவர்கள் வந்திறங்கும்போதே சந்தித்துப் பேசுவதன் பொருட்டு நான்காம் திட்டுக்குச் செல்ல ஆயத்தமானேன்.

என்னோடு சேர்த்து சுமார் ஏழெட்டுப் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் கடற்படை விசைப் படகில் அதிகாரிகள் துணையுடன் நான்காம் திட்டுக்குச் சென்று வர அனுமதி கிடைத்தது. அந்தப் பயணமும் அன்று நான் பெற்றவையும் தனிக்கதை. அதற்கு அப்பால் ஒரு சம்பவம் நடந்தது. அதுதான் இந்தக் கட்டுரைக்கு சாரம்.

அன்று நான்காம் திட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது கரையில் இருந்து படகுக்கு ஒரு செய்தி வந்தது. ‘கல்கி பத்திரிகையாளருக்குச் சென்னையில் இருந்து ஒரு அவசரச் செய்தி வந்திருக்கிறது.’

அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். வடபழனி விஜயாவில் அட்மிட் செய்திருந்தார்கள்.

உண்மையிலேயே அப்போது நிலை குலைந்துவிட்டேன். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல அந்த நண்பகல் பொழுதில் பேருந்துகள் இல்லை. அன்றைய ரயிலுக்கு என்னிடம் டிக்கெட் இல்லை. வேறு வழியே இல்லை; கிடைக்கிற வண்டியில் தொற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்றிறங்கி, சென்னையை அடைய வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். செல்போன் வந்திராத காலம் என்பதால் தகவல் தொடர்பும் அவ்வளவு எளிதல்ல. நான் கிளம்பிவிட்டேன் என்று வீட்டுக்கு போன் செய்யும்படி பிரகாஷிடம் சொல்லிவிட்டு வண்டி பிடிக்க ஓடினேன். கோயில் வாசலைக் கடந்த சமயம் நின்று கும்பிட்டுவிட்டுப் போகக்கூடத் தோன்றவில்லை. அவ்வளவு பதற்றம். ஆனால் மதில் சுவரின் எல்லையை நெருங்கியபோது பேயடித்தாற்போல நின்றுவிட்டேன்.

சொரிமுத்து சித்தரின் முகம் பத்தாண்டுகளுக்குப் பிறகு அன்று என் கண்ணில் படுகிறது. மதில் சுவரின் ஓரம் ஒரு சிவப்பு நிறக் காசித் துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு அவர் குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இடது கையில் அவர் எப்போதும் வைத்திருக்கும் உருட்டாந்தடி. முழங்கால் வரை உயர்த்திக் கட்டிய பழுப்பேறிய காவி வேட்டி. மேலுக்கு ஒன்றுமில்லை. தலை வாரிப் பின்னிக்கொண்ட பிறகு பெண்கள் சுருட்டி எறியும் உதிர்ந்த கூந்தலைப் போல நெஞ்செங்கும் சுருண்டு கிடந்த கருப்பு வெள்ளை முடி.

கண்ணில்தான் தென்பட்டாரா, அல்லது நினைவில் தோன்றினாரா என்று இப்போது வரை தெரியாது. உண்மையில் அவரை அப்போது நான் நினைக்கவேயில்லை. அவரேதான் வந்திருக்கிறார். பதறிப் போய், தென்பட்ட இடத்தை எட்டி அடைந்தபோது அவர் இல்லை. ஒரு சிறிய தாளில் யாரோ விபூதியைக் கொட்டி அந்த ஓரமாக வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். அது அவராகவும் இருக்கலாம். வேறு யாராவதாகவும் இருக்கலாம். தெரியாது. அதைப் பார்த்தபோதுதான் நான் கோயிலுக்குச் செல்லவில்லை; வெளியில் நின்று கும்பிடக்கூட இல்லை என்பதே நினைவுக்கு வந்தது.

அந்தத் தாளை எடுத்துக்கொண்டேன். சிறிது விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு மிச்சத்தை மடித்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். இப்போது அவரை மானசீகத்தில் வேண்டிக்கொண்டேன். அப்பாவுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவர் பிழைத்துவிட வேண்டும்.

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த ஏதோ ஒரு வண்டியில் ஏறி, பாதி வழியில் இறங்கி வேறொரு பேருந்தில் மதுரைக்குச் சென்று, அங்கிருந்து விழுப்புரம் வரை இன்னொரு வண்டியில் பயணம் செய்து, விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்து, வடபழனியை அடைந்து எப்படியோ மறுநாள் காலை ஏழு மணிக்கு மருத்துவமனைக்குப் போய்விட்டேன். அப்பாவைப் பார்க்க அனுமதித்ததும் அந்த விபூதியை எடுத்து அவர் நெற்றியில் வைத்தேன்.

இது நடந்தபோது அவருக்கு அறுபத்திரண்டு வயது. 2017ல் தனது எண்பத்திரண்டாவது வயதில் அவர் காலமானார். இடையில் இன்னொரு முறை அவருக்கு மாரடைப்பு வந்ததேயில்லை.

அன்று அவர் நெற்றியில் நான் வைத்த விபூதிக்குப் பிறகு அவர் விபூதி வைத்துப் பார்த்த நினைவில்லை. அன்று முதல் நான் விபூதி வைக்காமலும் இருந்ததில்லை.

அந்த ராமேஸ்வரம் பயணம் என்னால் என்றுமே மறக்க முடியாதது. அற்புதம் என்றால் அற்புதம். இல்லை என்றால் இல்லை. எல்லாம் அவரவர் தேர்வு. ஆனால் நியாயமாக எண்ணிப் பார்த்தால் அன்று எனக்கிருந்த துயரத்தைவிட நான்காம் திட்டில் நான் கண்டவர்களின் துயரம் மிகப் பெரிது. ஒப்பிடவே முடியாதது. அன்று அதை நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லோருக்குமான மந்திரித்த விபூதியை ஏனோ எந்தச் சித்தரும் பொதுவில் கொட்டி வைப்பதில்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி