“ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ
ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ
ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய
விநாச காலே விபரீத புத்திஹி”
(சாணக்கிய நீதி, அத்யாயம் – 16, ஸ்லோகம் – 5)
ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட பெண் சாகரிகா. எனக்கென்னவோ இந்தப் பெயரை வாசிக்கும் போதெல்லாம் ‘சாகறீயா?’ என்றே வாசிக்கிறேன். ஒவ்வொரு அத்யாயத்திலும் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் தம் எழுத்து வலிமையால் வாசகரை அடித்துத் துவைத்துச் சாகடிக்கிறார். இந்த இருபதாம் அத்யாயத்தில் ஏறத்தாழ இந்த நாவலில் இதுவரை உருவாகிவந்த அனைத்துக் கதைமாந்தர்களும் உணர்வு அடிப்படையில் ஒன்றுகூடுகின்றனர். அதாவது நாவல் இங்கிருந்துதான் தன் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்கிறது எனலாம்.
கணியன் பூங்குன்றனார் கூறியிருப்பதுபோல, ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவற்றை ‘எழுதியும் அடையலாம்’ என்பதற்கு இந்த எழுத்தாளரே சாட்சி. இந்த நாவல் புத்தகமாக வெளிவரும்போது இந்த எழுத்தாளர் உலகத்தின் பாதிப் பேரால் சபிக்கப்படுவார். மீதிப் பேரால் வாழ்த்தப்படுவார்.