விட்டது சனி

சனியன் பிடித்த ஐபிஎல் நேற்று ஒரு வழியாக முடிந்தது என்பதை ட்விட்டரில் கண்டுகொண்டேன். எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்துப் பாட்டி மாலை வேளைகளில் இனி பழையபடி கோயிலுக்குப் போய் விளக்கேற்றுவார். ஹெர்குலிஸ் ச.ந. கண்ணன் இறக்கிவைத்த குடும்ப பாரத்தையும் அலுவல் வீரத்தையும் மீளச் சுமப்பான். ஜெய்சங்கர் தெரு சாயிபாபா கோயில் வாசலடிப் பக்கிரி தருமம் செய்வோரை வாழ்த்த மறந்து ஸ்கோர் கேளாதிருப்பான். லலித் மோடிகளும் சசி தரூர்களுமாக நிரம்பி வழிந்த செய்தித் தாளின் சொற்குப்பைகளுக்கிடையே புதிய மாணிக்கங்கள் அகப்படக்கூடும்.

கவிதையைப் போலவே எனக்குக் கிரிக்கெட்டும் பிடிக்கும். அது நன்றாயிருந்த காலங்களில் திருப்தியாக ரசித்திருக்கிறேன். வர்த்தகமாகிவிட்டதில் பிரச்னையில்லை. வாழ்வின் சகல சுக துக்கங்களையும் மறந்து தள்ளிவைத்துவிட்டு, எடுத்து வைத்துக்கொண்டாடுமளவுக்கு அதிலென்ன என்றுதான் புரியவில்லை. கழிந்த தினங்களில் கண்ணில் தென்பட்ட மானிட்டர்கள் அனைத்திலும் க்ரிக்கின்ஃபோ கணக்கு அட்டை தவறாமல் இருந்தது. விவாதங்களிலும் விதண்டாவாதங்களிலும் கிரிக்கெட் ஒன்றைத் தவிர வேறில்லை. சச்சின், தோனி, பொலாக், ஹைடன். கைவைக்காத ரவிக்கையணிந்த கவர்ச்சிப் பாட்டி சுனந்தா புஷ்கர். இந்தக் காதல் வந்த பிறகு அவர் காற்றில் மிதக்கும் சிறகு. ஐபிஎல் அழகுப் பதுமைகளின் ஆட்டங்களெல்லாம் போன இடம் தெரியவில்லை. ஓர் அரைக்கிழவி அள்ளிக்கொண்டு போய்விட்டாள். செய்தி மோட்சப் ப்ராப்திரஸ்து என்று எந்த மாமுனி கமண்டல நீர் தெளித்துச் சொல்லிப் போனானோ.

மிகுபணம் குவியும் கேந்திரங்களில் பித்தலாட்டங்கள் தவிர்க்க இயலாதவை. அதிர்ச்சிகொள்ள ஒன்றுமில்லை என்று அன்னைபூமி மக்கள் புரியவைத்தார்கள். யார் கவலைப்பட்டது? சீச்சீ இந்தக் கிரிக்கெட் கசக்கும் என்று நாதஸ்வரம் சீரியல் பார்க்க நகர்ந்தோர் எத்தனை பேர்? அமெரிக்கக் கிழக்குக் கடற்கரையோரம் உத்தியோகப் பிராப்தி பெற்று, பெண்டாட்டி பிள்ளை குட்டிகளோடு சௌக்கியமாக வாழ அருளப்பட்ட என் சிநேகிதன் ஒருவன் தனது கூகுள் டாக் ஸ்டேடஸ் மெசேஜாக, ஆட்ட தினங்களில் சென்னையில் இல்லாதது பற்றி மாதம் மும்மாரி அங்கலாய்க்கிறான்.

கிரிக்கெட் நமது தேசிய அடையாளமாகிவிட்டதை முதல் முதலில் எழுத்தில் பதிவு செய்தவர் காலமாகிப் போன திரு சுஜாதா. அதே கிரிக்கெட் நமது தேசிய வியாதியாகிவிட்டதைப் பதிவு செய்ய என்னப்பன் இட்டமுடன் என் தலையில் எழுதிவைத்தான்.

அலுவலகங்களில், வீடுகளில், கடைகளில், சாலைகளில், பேருந்துகளில், தொலைபேசி அழைப்புகளில், குறுஞ்செய்திகளில், கூட்டங்களில், கோயில்களில், குழாயடிகளில், திரையரங்குகளில் கூடியிருந்து குளிரக் கிட்டும் அபூர்வத் தருணங்களில் அங்கிங்கெனாதபடி நான்குகளும் ஆறுகளும் அவுட்டுகளும் அப்பீல்களும் சிந்தை மைதானங்களில் சொற்களை விரட்டி ரன் குவித்த வேகத்தை பிரமிப்புடன் கண்டேன்.

நான் தோற்றேன். கப்பலேறிப் போகுமுன் ஏகாதிபத்தியப் பெரியவாச்சான் பிள்ளைகள் விட்டுச்சென்ற எச்சம் இத்தனை வீரியமானதா?

இந்தத் தினங்களில் வீணான இந்திய மனித நேரங்களைப் பத்து நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். மோடி மஸ்தான்கள் சுருட்டியதைக் காட்டிலும் கூடுதலாகப் பெருக்கியிருக்கலாம். மோடி மஸ்தான் வேலைகளேதும் செய்யாமலேயே.

Share

19 comments

  • நீங்கள் படிப்பதை நிறுத்திய பின்பு நல்ல கவிதைகள் நிறைய வருவதற்கும், நீங்கள் பார்ப்பதை நிறுத்திய பின்பு நல்ல கிரிக்கெட் வீரர்கள் நிறைய வருவதற்கும் ஏதேனும் மாயதந்திர காரணம் இருக்குமா ஐயா?

  • நானும் IPL பார்க்காமல் மூணு வருடங்களை ஒட்டி விட்டேன்!! ஆனால் நேற்று அறை நண்பர்கள் தொந்தரவால் இறுதி போட்டி பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன், எனக்கும்  பிடித்திருந்தது. நம் சினிமாக்களில் இருக்கும் மசாலா போல, இதில் அனைவரையும் ஈர்க்கும் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எந்த அணியும் வெல்ல வாய்ப்பு இருப்பதால், ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 
    "சனி" தொலையாது என்பது என் கணிப்பு. இதில் உள்ள வர்த்தகத்தை பார்க்கும் பொழுது, இனி வருடம் இரு முறை/மூன்று முறை IPL நடக்க வாய்ப்புகள் உண்டு!! 
    நம்மை தொற்றிய நோய் என்றாலும், இதற்கு மருந்து இருப்பதாய் தெரியவில்லை. 

  • நானும் கிரிக்கெட் பிரியன்தான். ஆனால் அதற்காக மனித நேரத்தை வீணடிக்கும் அளவு பைத்தியம் இல்லை. எங்க தல சச்சின் 500+ ரன் எடுத்தும்கூட இந்த சீரீஸில் (அதற்கு முந்தைய இரண்டு ஐபிஎல்களிலும்கூட) ஒரு மேட்ச்கூட பார்க்காததற்காகப் பெருமைப்படுகிறேன். உங்கள் பதிவைக் கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன் 😉
    – என். சொக்கன்,
    பெங்களூரு.

  • 1. I P L இல் இருந்து நாதஸ்வரம் பக்கம் ஊர் போகவேண்டும் எனத் தாங்கள் நினைப்பதன் உள்குத்து என்னவோ?
    2. உங்கள் நிம்மதி சாஸ்வதமற்றது. மே1 ஆஃப்கானிஸ்தானுடன் அதே கிரிகின்ஃபோ அட்டைகள் சிரிக்கும். தெருவெங்கும் அட்டைக்கத்தி மாவீரர்கள் போர்புரிவர்.
    3. பிடிக்கிறது, பார்க்கிறேன், வேறு விஷயமில்லாதபோது பேசுகிறேன். கிரிக்கெட் பேச குற்ற உணர்ச்சியெல்லாம் இல்லை, வராது 🙂

  • விட்டது சனியே என்றாலும் விடியும்பார் ஞாயிறாய். உலகக்கோப்பை என்ன சாம்பியன்ஸ் லீக் என்ன, இன்னும் இருக்குதடா ஏராளம்.

  • நீங்கள் படிப்பதை நிறுத்திய பின்பு நல்ல கவிதைகள் நிறைய வருவதற்கும், நீங்கள் பார்ப்பதை நிறுத்திய பின்பு நல்ல கிரிக்கெட் வீரர்கள் நிறைய வருவதற்கும் ஏதேனும் மாயதந்திர காரணம் இருக்குமா ஐயா? – ஹரன்பிரசன்னா என்ற கவிஞர்
     

  • எனக்கு வேறொரு பயம்.
     
    ஐ.பி.எல் நடந்து கொண்டிருந்ததால் கவிதை எழுதியதை கொஞ்சம் காலத்திற்கு ஒத்திவைத்திருந்த கவிஞர்கள் பேனாவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன் 🙁

  • எனக்கென்னவோ விட்டு விட்டார் போலில்லை!
    அடுத்தடுத்து தயாராக இருக்கிறார்கள்!  போதையில் விழுந்துவிழுந்து விட்டோம்.  எழுவது கடினம்!

  • ஊடகங்கள் உருவாக்கிய  மயக்கங்களில் வாழபழக்கிவிட்ப்பட்டிருக்கும்  இன்றைய சமுகத்திற்கு இது விட்டால் இன்னொரு சனி பிடித்துக்கொள்ளபோகிறது. புதிய சனிக்கு 'பிடித்துபோன் சனி' ந்ல்லது இல்லையோ
    ரமணன்

  • ":இந்தத் தினங்களில் வீணான இந்திய மனித நேரங்களைப் பத்து நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். "

    அதான், இறுதி ஆட்டம் முடிஞ்சுருசே,, இனி எல்லா இந்தியர்களுக்கும் உழைக்க நேரம் கிடைத்து விட்டது அல்லவா…  இந்தியா வல்லரசு ஆகி விடும் அல்லவா ? 

  •  
    //கப்பலேறிப் போகுமுன் ஏகாதிபத்தியப் பெரியவாச்சான் பிள்ளைகள் விட்டுச்சென்ற எச்சம் இத்தனை வீரியமானதா? //
    எச்சத்தோடு கூட விழுந்த விதை முளைத்து பலமாய் வேர்விட்டு கிளைகளும் பரப்பிவிட்டது.
    பெருசுகள் கிரிக்கின்ஃபோ பார்த்துச் பரவசமடைவதை விடுங்கள். இன்னும் மூணு இலை விடாத சிறுசுகள் விவரணையாய் சிலாகிப்பதை பார்த்தால்..
    எப்போதைக்கும் விடாத சனி மாதிரிதான் தெரிகிறது.

  • // Comment by ஹரன்பிரசன்னா நீங்கள் படிப்பதை நிறுத்திய பின்பு நல்ல கவிதைகள் நிறைய வருவதற்கும், நீங்கள் பார்ப்பதை நிறுத்திய பின்பு நல்ல கிரிக்கெட் வீரர்கள் நிறைய வருவதற்கும் ஏதேனும் மாயதந்திர காரணம் இருக்குமா ஐயா? – ஹரன்பிரசன்னா என்ற கவிஞர்//
    முதலில் உள்ள கமெண்ட்டுதான் நான் போட்டது. 7வதாக வந்த கமெண்ட் நான் போட்டதில்லை. என்னையும் ஒரு ஆளா மதிச்சு என் பேர்ல அனானி கமெண்ட்டு போட்ட அனானி நினைச்சி எனக்கு அழுவாச்சியா வருது. தைரியமா நேருக்கு நேராவே கேக்கிறேன், பாவம் என்னை விட்டுடுங்க. 🙂

  • நல்ல பதிவு. வேறு இரு கட்டுரைகளும் இந்த டாபிக்கில் நேற்று படித்தேன்.
    http://www.satyamargam.com/1440
    http://vettippechu.blogspot.com/2005/04/blog-post_09.html

    கொஞ்சமாய் மக்களுக்குப் புரிந்தாலும் போதும் – ஏராள மணித்துளிகள் மிச்சமாகும். பார்ப்போம்!

  • "ஐ.பி.எல் நடந்து கொண்டிருந்ததால் கவிதை எழுதியதை கொஞ்சம் காலத்திற்கு ஒத்திவைத்திருந்த கவிஞர்கள் பேனாவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்களோ என்று அஞ்சுகிறேன்"

    அச்சப்பட தேவை இல்லை….   ஐ பி எல்லுக்கும் எங்கள் கவிதைக்கும் சம்பந்தம் இல்லை….


    எழுத்து துறையில் வாய்ப்பு கிடைக்கும் வரை, எங்கள் கவிதை ( ! ? ) பணி தொடரும்…  வாய்ப்பு கிடைத்தவுடன், கவிதை எழுதுவதை  நிறுத்தி விட்டு,  சக பதிவர்களை கிண்டல் செய்யும் பணியை ஆரம்பிப்போம்…  ( நாங்கள் அவர்களில் ஒருவராக இருந்தோம் என்பதை மறந்து விடுவோம் ) 
    இப்படிக்கு . இணைய கவிஞர் சங்கம்   ( வருங்கால இலக்கியவாதிகள் சங்கம் ) 


  • சனி தற்காலிகமாக தான் விட்டிருக்கிறது . மீண்டும் முருங்கை மரம் ஏறும் நாள் மிக அருகில். ஆனால் இந்த சனியனுக்கும் அபரிமிதமான துணை பாரத கண்டத்தில் இருக்கிறது .இதை சிலாகிக்கா விட்டால் நீங்கள் மோஸ்தர் இல்லை என்ற நிலை . celluloid தின்ற எருமை மாடு கதை தான் நினைவுக்கு வருகிறது…நீங்கள் ஒத்து கொண்டு ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் .. இனி விதிகள் நிச்சயம் மாறும் .. சற்றுபொறுங்கள் பா ரா !!

  • //கப்பலேறிப் போகுமுன் ஏகாதிபத்தியப் பெரியவாச்சான் பிள்ளைகள் விட்டுச்சென்ற எச்சம் இத்தனை வீரியமானதா?
    Yes because cricket is a brahmin-baniya conspiracy against games played by dravidians (e.g. foot ball, volley ball). Cricket.tennis,chess. badminton are aryan games while foot ball,volley ball,kabadi are dravidian games.

  • ஏப்ரலில் ஒரு மூன்று வாரங்கள் சென்னை / பெங்களூரில் இருந்த நான், இந்த கிரிக்கெட் படுத்தும் பாட்டை யாராவது கண்டிக்க மாட்டார்களோ என்று பல முறை புழுங்க நேர்ந்தது. ஆஃபீஸ் மீட்டிங்களில், ஏர்போர்ட்டில், பார்களில், சந்து பொந்துகளில், ஐயோ ஆண்டவா, என்ன ஆயிற்று இந்த தேசத்திற்கு?!
    நீங்கள் சொல்வது போல், ஒரு காலத்தில் ஒழுங்காக இருந்த கிரிக்கெட் ஊர் மேயப்போய் காசு பார்க்க ஆரம்பித்துக் கோடிகளில் மூழ்கிக் கச்சடா ஆகி விட்ட கண்ணறாவி, தாங்கவே முடியவில்லை! ஊருக்குக் கிளம்புகிற நாளன்று ஜிம்கானாவில் பெரிய சைஸ் டீவியில் ஃபைனல்ஸ் மேட்ச் பார்க்க நண்பர்கள் வற்புறுத்தி அழைத்திருந்தும், எனக்கு இருந்த வெறுப்பில், நான் போகவில்லை.
    ஒரு தேசமே தன்னிலை மறத்து பைத்தியம் பிடித்துத் தலை விரித்து ஆடுகிறது. மகா கேவலம். அமெரிக்காவில் இந்த மாதிரிக் கேவலங்கள் சகஜமென்றால், இந்தியாவும் அப்படியே மா(நா)றிப் போயிருப்பது துரதிர்ஷ்டம்!
    இது பற்றிப் பதிவு போட நினைத்திருந்தேன். அதற்குள் நீங்களாவது கண்டித்ததில் எனக்குப் பெரும் சந்தோஷம்!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி