மாறனேர் நம்பியின் குடிசையில் இருந்து வெளியே வந்த பெரிய நம்பி, தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பொதுவாக அந்நேரத்தில் அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது. அது அவர் மட்டும் உலவும் நேரமாகவே பலகாலமாக இருந்து வந்தது. ஆனால் இன்று தனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் யாரோ போய்க்கொண்டிருப்பது போலத் தெரிகிறதே? யாராக இருக்கும்?
இருட்டில் சரியாகத் தெரியவில்லை. பெரிய நம்பி சற்று நடைவேகம் கூட்டி, முன்னால் சென்றவரை எட்டிவிடப் பார்த்தார். அந்த உருவமோ நெருங்க முடியாத வேகத்தில் நடந்துகொண்டிருந்தது. குரல் கொடுத்துப் பார்க்கலாமா என்று யோசித்தவர், ஒரு கணம் தயங்கினார். மரங்கள் அடர்ந்த அந்தப் பாதையில் சிறு குரல் கூடப் பறவைகளின் உறக்கத்தைக் கலைக்கும். அவற்றுக்குப் பதற்றம் அளிக்கும். எனவே வேண்டாம் என்று நினைத்தார். ஆனால் எப்படியாவது அந்த நபர் யாரென்று அறிந்துவிட அவர் மனம் விரும்பியது. தன் வயதை மறந்த வேகத்தில் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு திருப்பத்தில் மரங்களின் அடர்த்தி சற்றுக் குறைந்து, நிலவின் கீற்றுகள் மண்ணைத் தொட ஆரம்பித்திருந்தன. அந்த உருவம் அவ்விடத்தைக் கடந்தபோது பெரிய நம்பி பார்த்துவிட்டார். அட எம்பெருமானே! நிலவின் வெளிச்சத்தில் நான் காண்பது சூரியனையே அல்லவா! இவர் எப்போது இங்கே வந்தார்? என்னைப் பின் தொடர்ந்திருப்பாரா? நான் மாறனேர் நம்பியின் இல்லத்துக்கு வந்து சென்றதை கவனித்திருப்பாரா?
பெரிய நம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த ஒரு காரணம் இல்லாவிட்டால் ராமானுஜர் இங்கு இந்நேரத்தில் வரவேண்டிய அவசியமில்லை என்று மட்டும் தோன்றியது. ஆக, திட்டமிட்டுத்தான் தன்னைத் தொடர்ந்து வந்திருக்கிறார். அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி நாளைக் கடத்தியது பொறுக்காமல் இன்று தானே கிளம்பியிருக்கிறார்.
சரி போ, கேட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்துவிட்டார். அன்று கிளம்பும்போது மாறனேர் நம்பி சொன்னது திரும்பத் திரும்ப அவர் நினைவை வருடிக்கொண்டே இருந்தது.
‘பெரிய நம்பிகளே, நான் வெகுநாள் இனி உயிர் வாழமாட்டேன். வியாதி என்னை முக்கால் வாசி தின்று முடித்துவிட்டது. மீதியை நானே வழித்து அதற்குப் போட்டுவிடப் போகிறேன். ஆனால் ஒன்று. நான் இறந்தால் எனக்கான இறுதிச் சடங்குகளை ஓர் அந்தணன்தான் செய்ய வேண்டும்.’
‘புரிகிறது சுவாமி. மாசு பட்ட சமூகத்துக்கு சாதி அமைப்பின் அபத்தங்களைப் புரியவைத்துவிட்டுப் போய்ச்சேர நினைக்கிறீர்கள். எம்பெருமான் சித்தம் அதுவானால், நிச்சயம் நடக்கும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருந்தார். ராமானுஜர் நின்று கவனித்திருப்பாரா? இது அவர் காதில் விழுந்திருக்குமா? குழப்பமாக இருந்தது.
இரண்டொரு தினங்களில் அது நடந்துவிட்டது.
அன்றைக்கு இரவு வழக்கம்போல் பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு உணவு எடுத்துச் சென்றபோது அவர் எழுந்திருக்கவில்லை. அமர்ந்து உண்ணவும் முடியாமல் தவித்துக்கொண்டிருந்தவர், எழுந்து விண்ணேகிப் போயிருந்தார். நிறைவாழ்வுதான். வாழ்ந்த காலம் முழுவதும் குரு பக்தியிலும் அரங்கன் நினைவிலுமே கழித்த மகான். அவர் ஒரு மகான் என்பதே அரங்க நகரில் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதைப் பெரிய நம்பி எண்ணிப் பார்த்தார். ‘மாறனேர் நம்பியா? அவர் அரிஜன குலத்தவர் அல்லவா?’ என்பார்கள். நலம் தரும் சொல்லைக் கண்டுகொண்ட மனிதரின் குலம் மட்டும்தான் உலகுக்குத் தெரியும்.
நல்லது. ஊரைத் திருத்துவது பிறகு. முதலில் பெரியவரின் இறுதிச் சடங்குகளை நடத்தியாக வேண்டும்.
‘நம்பிகளே, நான் இறந்தால் என் இறுதிச் சடங்குகளை ஓர் அந்தணன்தான் செய்ய வேண்டும்.’ மீண்டும் மீண்டும் காதுகளில் ஒலித்த குரலை ஒரு கணம் தியானத்தில் நிறுத்தினார். இது ஒரு தருணம். சாதி அமைப்பின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிற சமூகம் அதிர்ந்து அலறவிருக்கிற தருணம். என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எத்தனை பெரிய கலவரமும் சாத்தியமே. ஆனால் என்ன நடந்தாலும் மாறனேர் நம்பி இறுதியாகச் சொன்னது மட்டும் நடக்காமல் போய்விடக் கூடாது.
பெரிய நம்பி ஒரு முடிவுக்கு வந்தார். இன்னொருத்தரை எதற்குத் தேடவேண்டும்? இதோ, நான் இருக்கிறேன். என் தந்தைக்குச் செய்ததைக் காட்டிலும் மாறனேர் நம்பிக்குச் செய்வதில் உள்ள புனிதத்தன்மை புரிந்தவன். இதைக் காட்டிலும் பெரும் புண்ணியம் வேறில்லை. இதைக் காட்டிலும் மகத்தான திருப்பணி இன்னொன்று இருக்க முடியாது. ஆளவந்தாரின் சீடர்களுக்குள் பிரிவினை கிடையாது. பேதங்கள் கிடையாது. சாதி உள்ளிட்ட எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அத்தனை பேரும் எம்பெருமானின் பாததூளிகளாகப் புரண்டெழுந்தவர்கள். ஒரு வைணவனுக்கு அடையாளம் அதுதான். வாழ்வின் அர்த்தமும் அதுவேதான்.
அவர் யாரையும் எதிர்பார்க்கவில்லை. யாருக்கும் சொல்லவும் இல்லை. தனது தள்ளாமையை நகர்த்தி வைத்துவிட்டுக் காரியங்களில் வேகமாக இறங்க ஆரம்பித்தார். பிரம்ம மேத சம்ஸ்காரம். இறந்த அந்தணருக்கு, இன்னொரு அந்தணர் மட்டுமே செய்கிற வழக்கமுள்ள இறுதிச் சடங்கு. இதோ இதை நீங்கள் தாழ்ந்தவர் என ஒதுக்கிவைத்த மாறனேர் நம்பிக்கு நான் செய்கிறேன். ஆனதைப் பார்த்துக்கொள்ளுங்கள்.
பரபரவென இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தன. முதலில் அந்தப் பிராந்தியத்தில் வசித்து வந்த அரிஜன மக்கள் அதைக் கண்டார்கள். வியப்பில் வாய் பிளந்து சற்று நேரம் நின்றுவிட்டு ஓடோடிச் சென்று காண்போரிடமெல்லாம் சொல்லத் தொடங்கினார்கள்.
‘சேதி தெரியுமா? மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சடங்கு செய்கிறார்!’
‘உண்மையாகவா? இதென்ன அக்கிரமம்! பெரிய நம்பி பிராமணர் அல்லவா? ஒரு கீழ்ச்சாதிக் கிழவருக்கு இவரெப்படி இறுதிச் சடங்கு செய்ய முடியும்?’
‘நடக்கிறதப்பா. போய்ப் பார் அங்கே!’
தீயின் நாவேபோல் திருவரங்கமெங்கும் பரவித் தீண்டியது அந்தச் செய்தி. கொதித்துப் போனார்கள் அந்தணர்கள்.
‘ஓய் பெரிய நம்பி! இப்படி ஒரு கேடுகெட்ட காரியத்தை நீர் செய்வீர் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இனி அக்ரஹாரத்துப் பக்கம் தப்பித்தவறியும் வந்துவிடாதீர்!’
‘அந்தணருக்கு உரியதைப் பஞ்சமருக்குச் செய்வதுதான் உமது ஆசாரமோ? இது உமக்கல்ல; உமது ஆசாரியர் ஆளவந்தாருக்கே அவமானம்.’
என்னென்னவோ பேச்சுகள். எத்தனை எத்தனையோ சாபங்கள். பெரிய நம்பி எதற்கும் பதிலே சொல்லவில்லை.
சிறு குறையும் வைக்காமல் காரியத்தை முடிப்பதிலேயே அவரது கவனம் இருந்தது. அது முடிந்தநேரம் விவகாரம் அவர் எதிர்பார்த்தபடியே முற்றி வெடித்திருந்தது.
(தொடரும்)