நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் காலனி மெயின் ரோடில் பன்னிரண்டு பேர். பிறருக்குக் குறிப்பிட்ட இருப்பிடம் கிடையாது. சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பவர்கள்.
பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தனை பேரும் வாகனதாரிகளாக வேண்டும், யாரும் கால்நடையாக எங்கும் சென்று அவதியுறக் கூடாது என்னும் நல்லெண்ணம் கொண்டவர்கள் இவர்கள். யாராவது வெறுங்காலை எடுத்து வெளியே வைத்தால் தீர்ந்தது. குறைந்தது நூறடி தொலைவுக்கு ஓட வைத்து அழகு பார்ப்பது இவர்களது குல வழக்கம். இவ்வகையில் சமஸ்தானவாசிகளின் தேகநலனே இவர்களது முதன்மை நோக்கம் என்றுதான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பன்னெடுங்காலமாக இப்படித்தான் உள்ளது நிலவரம். சமீபத்தில்தான் ஒரு புதிய நாயன்மார் இங்கே குடிவந்திருக்கிறார். அவரது வீரம் இதர இனத்தாருடன் ஒப்பிடவே முடியாதது. நடந்து செல்வோரை மட்டுமல்லாமல் இரு சக்கர வாகங்களில் செல்வோரையும் அவர் துரத்த வல்லவர். தவிர அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இதர நாயர்களின் நான்கடிக்குச் சமானமானது.
கடந்த பத்து நாள்களில் மூன்று முறை நான் இவரால் துரத்தப்பட்டேன். இத்தனைக்கும் நான் வாகனதாரி. அதனாலென்ன? அவர் கண்ணில் பட்டுவிட்டால் அனைத்து மானிடர்களும் கறித் துண்டங்களே. பிய்த்துத் தின்னும் அடங்காத வேட்கையுடன் அப்படியொரு பேய்ப் பாய்ச்சல் பாய்வார்.
சற்றுமுன் ஒரு வீட்டு வேலை செய்வதன் பொருட்டு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். இப்பிராந்தியத்தின் நாயர்களுக்கு இரவு பகல் பேதமெல்லாம் கிடையாது. கண்ணில் சிக்காமல் சிட்டெனப் பறந்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டுதான் வண்டியை ஓட்டினேன். என்ன சிக்கலென்றால் இங்கே ஆறடிக்கு ஒரு வேகத்தடுப்பு போட்டிருப்பார்கள். அது சில இடங்களில் படுத்திருக்கும் கர்ப்பஸ்திரி போலவும் இன்னும் சில இடங்களில் இரண்டாகப் பிளந்த தேங்காய் மட்டை போலவும் இருக்கும். ஒரு மேடேறி இறங்கினால் அடுத்த ஆறாவது அடியில் ஒரு பள்ளம் இறங்கி ஏற வேண்டும். கணப் பொழுது இதற்காக பிரேக்கடித்தாலும் அந்நாயர் பாய்ந்துவிடுவார்.
எனவே பிரேக்கையே தொடாமல் ஏறி இறங்கி, ஏறி இறங்கித் தொப்பை குலுங்க விரைந்துகொண்டிருந்தேன். சேம்பர்ஸ் காலனி எல்லையைத் தாண்டிவிட்டால் ஜிஎஸ்டி சாலை வந்துவிடும். அங்கே மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்கள், தப்பித்துவிடலாம் என்பது திட்டம்.
ஆனால் என் திட்டத்தைச் சிதறடிக்கும் உத்தேசத்துடன் மேற்படி வீர நாயர் சுமார் இருபதடி தொலைவில் என்னைப் பார்த்துவிட்டார். அதுவும் நேருக்கு நேர். சரி போ, அவன் நம்மை அளித்துக் காப்பான் என்று நான் வேகத்தைக் குறைக்காமல் எதிரியைக் குறி வைத்து முன்னேறும் ஏவுகணை போலப் பாய்ந்தேன்.
இங்கே ஒரு திருப்பம். சம்பவத்தில் அல்ல. சாலையில். அந்த இடத்தில் ஒரு தெலுங்கு கிறித்தவர் சம்மேளன தேவாலயம் ஒன்று உள்ளது. மிகச் சிறிய சந்து. ஒரு புடைவைத் தலைப்பு அளவே அகலம் கொண்டது. அந்தச் சந்திலிருந்து ஒரு பெண் குறுக்கே நடந்து வந்தாள். நான் அவளை நெருங்கும் கணத்தில் வீர நாயரும் நெருங்கிவிடவே, என் காலுக்கு பதில் அவருக்கு அவளது துப்பட்டா கிடைத்துவிட்டது.
கணப் பொழுதுகூட இராது. அச்சத்தில் அவள் அலறிக்கொண்டு விழ, அவளைவிட பலமாக (எதுவும் நேராத) நான் அலற, நாயன்மார் தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தார். அவர் வாயில் கவ்வி எடுத்துக்கொண்ட அவளது துப்பட்டா மட்டும் இருந்தது.
ஒழிகிறது; தொடைக்கு வந்தது துப்பட்டாவுடன் போயிற்று என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுப் போனேன்.
நிற்க. நேற்று நடைபெற்ற பம்மல் நகராட்சிக் கூட்டத்தில் இப்பிராந்தியத்தின் நாய்த் தொல்லை குறித்து விவாதிக்கப்பட்டதாக தினத்தந்தியில் செய்தி கண்டேன். பல்லாண்டுகளாக இப்படி விவாதித்துக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை நாய் வண்டி என்று ஒன்று வரும். தெரு நாய்களை அள்ளிப் போட்டுக்கொண்டு போய் எங்கேயாவது நகருக்கு வெளியே விட்டு வருவார்கள். இப்போது நகரமே அந்தப் பக்கம் திருப்பதி முதல், இந்தப் பக்கம் செங்கல்பட்டு வரை விரிந்துவிட்டதால் எங்கே கொண்டு விடுவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் போலிருக்கிறது.
ஊருலகில் மனிதர்கள் பேதமில்லாமல் நாய் படாத பாடு படுகிறார்கள். குரோம்பேட்டைவாசிகளோ, நாயால் மட்டுமே படாத பாடு படுகிறார்கள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.