கிறுக்குத்தனம்: 2004 வர்ஷன்

பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் ஐடிகளைச் சில மாதங்களாக டெலிட் செய்து வருகிறேன். என்ன ஒரு ஐந்து பத்து ஐடி இருக்குமா, இது ஒரு ப்ராஜக்டா என்று உங்களுக்குத் தோன்றலாம்.

ஜிமெயில் அறிமுகமான காலத்தில் அதன் 15 ஜிபி இடம் என்பது ஒரு பயங்கரமான போதைப் பொருளைப் போல என்னைத் தாக்கியது. எப்படியாவது ஒரு பத்தாயிரம் ஜிபியை வளைத்துப் போட்டுவிட வேண்டும் என்று வெறிகொண்டு என்னென்னவோ பெயர்களில் அக்கவுண்ட் திறந்துகொண்டிருந்தேன். அநேகமாக தினசரி மூன்று அல்லது நான்கு.

இதில் இன்னும் கொடூரம் என்னவென்றால் எனக்குப் பிடித்த அத்தனை வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களிலும் ஒவ்வொரு அக்கவுண்ட் உருவாக்கிக்கொண்டேன்.  உதாரணமாக சல்மான் ருஷ்டி அட் ஜிமெயில் டாட்காம். குந்தர் கிராஸ் அட் ஜிமெயில் டாட் காம். எர்னஸ்ட் ஹெமிங்வே அட் ஜிமெயில் டாட்காம்.   செத்துப் போன ஹெமிங்வே மன்னித்துவிடுவார். ஆனால் உயிருடன் இருக்கும் உத்தமர்கள் அவர்தம் பெயருக்கு ஒரு ஐடி உருவாக்க எண்ணினால் பெயர் கிடைக்காமல் போய்விடுமே என்றெல்லாம் அப்போது உறைக்கவேயில்லை.  இந்த வகையில் எவ்வளவு எழுத்தாளர்களின் சாபத்துக்கு ஆளாகியிருக்கிறேன் என்பதும் தெரியவில்லை.

என் தவறு புரிவதற்குச் சில காலம் பிடித்தது. சரியாகச் சொல்வதென்றால் சுமார் ஐந்து வருடங்கள் இடைவிடாமல் பயன்படுத்திய பின்பும் என்னுடைய முதன்மை ஐடியான ரைட்டர்பாரா அட் ஜிமெயில்டாட்காமின் 15 ஜிபி நிரம்பவேயில்லை. அது நிரம்புவதற்கு நெருங்கிய நேரத்தில் யாஹூ, கூகுள் மெசஞ்சர் பயன்பாடுகள் அதிகரித்து, மின்னஞ்சல் தொடர்புகள் குறையத் தொடங்கின.  பிறகு வாட்சப் வந்து அனைத்தையும் வழித்துத் தின்றுவிட்டுப் போய்விட்டது.

ஆனால் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர்களுக்குச் செய்த துரோகம் எப்போதாவது குத்தும். பிறகு அதுவும் மெல்ல மறைய ஆரம்பித்துவிட்டது. 

இப்போது இதனை எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தற்செயலாக நேற்று மதியம் ஒரு பழைய மின்னஞ்சல் முகவரி நினைவுக்கு வந்தது.  ஜார்ஜ் ஆர்வெல் அட் ஜிமெயில் டாட்காம். சரி டெலிட் செய்துவிடலாம் என்று முயற்சி செய்யத் தொடங்கினேன். பாஸ்வர்ட் மறந்துவிட்டது. பாஸ்வர்ட் ரெகவரி ஆப்ஷன் என்று போனால் ஒன்றே ஒன்றுதான். வேறொரு மின்னஞ்சல் முகவரி. ஏனெனில் அந்நாளில் என்னிடம் இன்றைய போன் நம்பர் கிடையாது. இந்த டூ ஃபேக்டர் ஆத்தண்டிகேஷன் எல்லாம் அப்போது வரவில்லை.

இதில் என்ன உச்சம் என்றால் அந்த ஜார்ஜ் ஆர்வெலுக்கான ரெகவரி ஈமெயில் ஐடியாக ரைட்டர்பாரா அட் ரீடிஃப் மெயில் டாட் காம் என்று கொடுத்திருக்கிறேன். எதைத்தான் விட்டு வைத்திருக்கிறேன்?

சரி ஒழிகிறது என்று பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக எட்டிக்கூடப் பார்த்திராத ரீடிஃப் மெயிலுக்குச் சென்று லாகின் செய்யப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக அதன் பாஸ்வர்ட் நினைவில் இருந்தது.  ஆனால் அந்தப் பரதேசி ஒரு நிபந்தனை விதித்தான்.

அப்பனே, நீ பல காலமாக என்னைப் பயன்படுத்தவில்லை. உன் கடையைக் கட்டித் தூர எறிந்துவிட்டோம். திரும்பத் திறக்க வேண்டுமானால் நீ நாற்பத்தொன்பது ரூபாய் மொய் வைக்க வேண்டும்.

நியாயமாக நான் செய்த தவறுக்கு இது சிறிய தண்டம்தான். ஆனால் நாற்பத்தொன்பது ரூபாய் கட்டி ரீடிஃப் அக்கவுண்ட்டைத் திரும்ப வாங்கி என்ன செய்யப் போகிறேன்?

நிச்சயமாக ஒன்றுமில்லை. எனவே ஜார்ஜ் ஆர்வெலின் ஆவியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ரீடிஃப் மெயிலை நிரந்தரமாகத் தலைமுழுகிவிட்டு வந்தேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter