பொலிக! பொலிக! 29

பேரமைதி.

படபடவென சிறகடித்து மாடம் மாறி அமரும் கோபுரத்துப் புறாக்களும் அசையாது அமர்ந்திருந்தன. உற்சவ களேபரத்தில் இருந்த கோயிலும் சட்டென்று அமைதி கொண்டது. அத்தனை பேரும் கோபுர வாசலுக்கு வந்து குழுமிவிட்டார்கள். கோபுரத்தின்மீது மோதி திசை நகர்ந்த காற்றின் மெல்லிய ஓசை தவிர ஒன்றுமில்லை. என்ன சொல்லப் போகிறார் ராமானுஜர்?

ஓம் நமோ நாராயணாய.

அவர் ஆரம்பித்தார். சில நிமிடங்களுக்கு முன்னர் திருக்கோட்டியூர் நம்பி தன்னை எதிரே அமர வைத்து ரகசியமாகச் சொல்லிக் கொடுத்த மூலமந்திரத்தின் பொருள் விளக்கம் முழுவதையும் வீட்டுக்கு வந்து நினைத்துப் பார்த்து, சொல்லிப் பார்க்கிற மாணவனைப் போல கடகடவென உச்சரிக்கத் தொடங்கினார்.

‘கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்! ரகசியம் ரகசியம் என்று சொல்லி யுகம் யுகமாகப் பூட்டிவைத்த பெருங்கதவு இது. புனிதம் என்பது ரகசியத்தில் இல்லை. புனிதம் என்பது புரிந்துகொள்வதில் உள்ளது. இதனை அறிந்தால் மோட்சம் நிச்சயம் என்றால், மக்கள் அத்தனை பேருக்கும் இதனை அறியும் உரிமை இருக்கிறது. இதில் சாதி முக்கியமில்லை. அந்தஸ்து முக்கியமில்லை. பரமனின் பாதாரவிந்தங்களே கதியென்று எண்ணக்கூடிய அனைவரும் வாருங்கள். எது அனைவருக்கும் நலம் தருமோ, அது அனைவருக்கும் பொதுவானது. அதை நான் இப்போது உங்களுக்குத் தருகிறேன்.’

நாராயணா! நாராயணா! என்று மக்கள் உணர்ச்சி வயப்பட்டு உரக்கச் சொன்னார்கள். பாற்கடல் பெருக்கெடுத்தாற்போல அவரது வாய் திறந்து திருமந்திர உட்பொருள் வெளிப்படத் தொடங்கியது. எதையெல்லாம் குருகைப் பிரான் அவருக்குத் தந்தாரோ, அதெல்லாம். எதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தாரோ, அதுவெல்லாம். எதைச் செய்தால் உனக்கு நரகம் நிச்சயம் என்று எச்சரித்தாரோ அது.

சொல்லி முடித்து ராமானுஜர் கோபுரத்தின்மீதிருந்து கீழே இறங்கி வந்தபோது கோபம் தகிக்க நம்பியின் சீடர் ஒருவர் எதிரே வந்து நின்றார். ‘ஆசாரியர் உம்மை அழைத்து வரச் சொன்னார்.’

‘அப்படியா? இதோ வருகிறேன்.’

திருக்கோட்டியூர் நம்பியின் மாளிகைக்கு ராமானுஜர் மீண்டும் சென்றபோது வாசலிலேயே நம்பிகள் வெடித்தார்.

‘நில் நீசனே! ஆசாரிய அபசாரம் செய்தவன் வாழத்தகுதியற்றவன். உன்னை நம்பி உனக்கு ரகஸ்யார்த்தங்களை நான் போதித்தது பெரும்பிழையாகிவிட்டது. இப்படியா ஊரைக்கூட்டி அதைப் பொதுவில் உரக்கச் சொல்லுவாய்? மதிப்புத் தெரியாதவனுக்கு போதித்துவிட்டேன். உன் அகம்பாவம் அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன்.’

‘மன்னித்துவிடுங்கள் ஆசாரியரே. இதனை அறிந்தால் இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தாங்கள் சொன்னீர்கள். திருமந்திர உட்பொருள் தெரிந்தவனுக்கு மோட்சம் நிச்சயம் என்றீர்கள். மோட்சத்தின் கதவு திறக்கும் சாவி இதுதான் என்றால் இது மக்கள் அத்தனைபேர் கையிலும் இருக்கவேண்டிய சாவியல்லவா? பசியிலும் ஏழைமையிலும் ஒதுங்க ஓர் இடமற்ற வெறுமையிலும் அவதிப்படுபவர்கள், மரணத்துக்குப் பிறகாவது நிம்மதியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்க வேண்டாமா?’

‘இது தர்க்கமா? இது அபத்தம். வெறும் அபத்தம். தராதரம் என்ற ஒன்றில்லையா? ஓட்டைப் பாத்திரங்களில் அமிர்தம் கொடுத்தனுப்ப விரும்பியிருக்கிறீர். தகுதி பாராமல் தருகிற தானமே தரமற்றது. மக்கள் கூட்டம் என்பது நீசர்களை உள்ளடக்கியது. நாத்திகர்களை உள்ளடக்கியது. பிரித்தறியத் தெரியாத மூடரா நீர்?’

‘நீசர்களும் நாத்திகர்களும்கூட நற்கதி பெற வழி செய்வது நல்லது என்றே நினைத்தேன். பிறக்கும்போது யார் நீசன்? காலம் அப்படி உருமாற்றுகிறது. சந்தர்ப்ப சூழல் ஒருவனைத் தடம் மாறிப் போகச் செய்கிறது. நம்மிடம் மருந்து இருக்கிறபோது நோயுற்றவனுக்கு அதை வழங்குவதில் என்ன பிழை?’

‘நீர் செய்தது குரு துரோகம்.’

‘ஆம் ஆசாரியரே. அதில் சந்தேகமில்லை. உமது சொல்லில் நான் நின்றிருந்தால் நீங்கள் உவக்கும் மாணவனாக இருந்திருப்பேன். ஆனால் உலகம் உய்ய இதுவே வழி என்று கருதியதால் குரு துரோகப் பிழையை அறிந்தேதான் செய்தேன்.’

‘இதற்கு என்ன தண்டனை தெரியுமா உமக்கு?’

‘அறிவேன் சுவாமி. நான் கற்ற திருமந்திரப் பொருள் எனக்கு உதவாது போகும். நான் நரகம் புகுவேன். இதில் எனக்கு சந்தேகமில்லை.’

‘முட்டாள்! இது தெரிந்துமா அதை பகிரங்கப்படுத்தினாய்?’

‘ஆம். நான் ஒருவன் நரகம் போனாலும் நாடு நகரமெல்லாம் சொர்க்கம் போகுமல்லவா? அத்தனைப் பெருங்கூட்டமும் அரங்கனுக்குள் அடைக்கலமாவதற்காக நான் ஒருத்தன் நரகத்தை ஏற்பதில் பிழையில்லை என்று நினைத்தேன். அதனால்தான் இப்படிச் செய்தேன். இது பாவமென்றால் அது என்னைச் சேரட்டும். இது துரோகமென்றால் நான் துரோகிப்பட்டம் சுமக்கிறேன். இதற்குத் தண்டனை நரகம்தான் என்றால் மகிழ்ச்சியோடு நான் அங்கு செல்ல இப்போதே தயாராகிறேன்!’ என்று சொல்லி அவரது பாதம் பணிந்தார்.

திகைத்துவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.

பல நிமிடங்கள் அவருக்குப் பேச்சே வரவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! எம்மாதிரியான மன அமைப்பு இது! தன்னலத்தின் சிறு சாயல்கூட இல்லாத படைப்பு என்று ஒன்று உண்டா! இது கருணைப் பெருங்கடல். கட்டுப்படுத்த இயலாதது. நியாய தருமம் என்று வழி வழியாக வகுத்து வைத்திருந்த இலக்கணச் சட்டங்கள் எதுவும் இவருக்குப் பொருந்தாது என்பது புரிந்துவிட்டது.

‘ராமானுஜரே! இப்படி வாரும்!’ கண்ணீர்த் திரை தெரிய அவர் இருகரம் நீட்டி அழைத்தார்.

ஊர் கூடி வேடிக்கை பார்க்க, ராமானுஜர் மெல்ல அவரை நெருங்கினார். அப்படியே அவரைக் கட்டியணைத்துக் கதறிவிட்டார் திருக்கோட்டியூர் நம்பி.

‘எம்பெருமானைக் கருணைக்கடல் என்போம். நான் உம்மைச் சொல்வேன் இனிமேல். அவன் எம்பெருமான். நீர் இனி எம்பெருமானார்! வைணவம் என்னும் வாழ்வியல் இதுவரை வைணவ தரிசனம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நான் சொல்கிறேன், இனி இது எம்பெருமானார் தரிசனம் என்று சொல்லப்படும். உமது பாதை புதிதானதுதான். ஆனால் புதிர்களற்றது. பூட்டுகளற்றது. புனிதம் நிரம்பியது. உலகை உம் வீடாகக் கருதும் நீரே உலகம் உய்ய வழி காண்பீர்!’

நெகிழ்ந்து போய்த் தாள் பணிந்தார் ராமானுஜர். சுற்றியிருந்த அனைவரும் பக்திப் பரவசத்தில் நாராயணா, நாராயணா என்று கூக்குரலிட்டார்கள்.

வைணவ சித்தாந்தமே அதன்பின் ராமானுஜ சித்தாந்தம் என்று ஆகிப் போனது.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!