முன்னொரு காலத்தில் நான் கல்கி வார இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பணி நிமித்தமாக ஒருமுறை ராமேஸ்வரத்துக்குப் போய்வர நேர்ந்தது. இரண்டு நாளோ மூன்று நாளோ நீடித்த பணிதான். ஆனால் அந்நகரம் என்னை அப்போது வெகுவாக பாதித்தது. காரணம் தெரியவில்லை. இன்னொரு முறை போகலாம் என்று தோன்றியது.
சென்னை திரும்பி எழுத வேண்டிய கட்டுரைகளை எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த வார இறுதியிலேயே மீண்டும் ஒருமுறை ராமேஸ்வரத்துக்குப் போனேன். இம்முறை கடமை ஏதுமில்லை. வெறுமனே சுற்றி அலைய மட்டுமே சென்றேன். இரண்டு நாள் இரவும் பகலும் கால் தனியே கழண்டுவிடுமளவுக்கு அத்தீவை நடந்தே சுற்றி வந்தேன். பிரம்மாண்டமான ஓர் ஆலயத்தை அஸ்திவாரமாகக் கொண்டு எழுப்பப்பட்ட மண் சார்ந்த கதைகளின் ஈரம் இன்னும் அத்தீவில் வீசும் காற்றில் கலந்திருப்பதைச் சொற்களற்று உணர்ந்தேன்.
ஆனால் சமகாலம் அத்தீவின் அற்புதங்களைக் காப்பாற்றும் யோக்கியதை கொண்டதாக இல்லை. தொட்ட இடமெல்லாம் மொட்டுவிடும் அழகிய தேவதைக் கதைகளைக் காலம் அரிதாரம் பூசிக் கற்பழித்துவிட்டது. புராதனச் சின்னங்கள் யாவும் அற்ப சுத்திக்கான இடங்களாகியிருந்தன. கோயில், ஊழியர்களின் உடைமையாகிவிட்டபடியால் மந்திரங்கள் மலிவு விலைக்கு விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. வாழ்வு சார்ந்த தேவைகளுக்கு நிகராக வேறெதுவும் இன்றியமையாததல்ல என்னும் கன்னத்தில் அறையும் யதார்த்தம் மட்டுமே மேலோங்கியிருந்தது.
மீண்டும் மீண்டும் ராமேஸ்வரம் சென்றபோதெல்லாம் இந்தச் சிந்தனை பூதாகாரமாக உருக்கொண்டு என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
அது இலங்கையில் யுத்த காலம். உள்நாட்டு அரசியலே முழுதும் புரிந்திராத ராமேஸ்வரத்து மக்கள் இலங்கை அரசியலின் விளைவுகளை ஒரு சிறு பகுதியேனும் நேரடியாகச் சந்திக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத அத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்தது. ஆகவே மீன்களும் மந்திரங்களுமே அங்கு விலைபோகும் சரக்குகளாயிருந்தன. தவிரவும் விலை போகாத எதுவும் அர்த்தமுள்ளதல்ல என்னும் மனப்பான்மையும் பொதுவில் உருவாகி வேரோடிவிட்டிருந்தது.
ஓரிரு வருட இடைவெளியில் மீண்டும் இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து ஏராளமான மக்கள் அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு வந்து இறங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் ராமேஸ்வரம் சென்றேன். அம்முறை உள்ளூர் அரசியல் தன் பங்குக்கு எந்தளவு அத்தீவைச் சுரண்டித் தின்றுகொண்டிருந்தது என்பதை நேரடியாகக் காண முடிந்தது. செய்திக் கட்டுரை எழுதும் நோக்கில்தான் நான் அப்போது போயிருந்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. எழுதத் தொடங்கியபோது அது ஒரு கதையாக வர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அது என்னைக் கொண்டு தன்னை எழுதிக்கொண்டது.
கல்கியில்தான் இதைத் தொடராக எழுதினேன். எழுத ஆரம்பித்த இரண்டாவது வாரமே கல்கியில் இருந்து நான் விலகிவிட்டேன். ஆனாலும் தொடர் முழுமையாக வெளிவந்து நிறைவு கண்டது.
அப்போதெல்லாம் அநேகமாக மாதம் ஒருமுறையாவது ராமேஸ்வரத்துக்குப் போய்வந்துகொண்டிருந்தேன். அந்நகரின் இண்டு இடுக்குகள் அனைத்தும் எனக்கு அத்துப்படி. ஆரவாரமற்ற கடலும் அமைதியற்ற நகரமும் அத்தீவின் நிரந்தரக் குறியீடுகள். அந்தப் பேரமைதியையும் பெரும் சத்தத்தையுமே இந்நாவலின் மொழியாக உருமாற்றம் செய்தேன். பல நாள் தனுஷ்கோடிக் கரையில் இரவெல்லாம் பகலெல்லாம் கடலைப் பார்த்தபடி வெறுமனே அமர்ந்து கிடப்பேன். சத்ருக்னன் சங்குக்குள் கிரகப்பிரவேசம் செய்து சென்ற காட்சியை அங்கேதான் தரிசனமாகப் பெற்றேன். மிகச் சிறிய குறியீடுதான். ஆனால் அந்த ஒரு காட்சிதான் இந்த முழுக்கதைக்குமே அஸ்திவாரமாக அமைந்தது.
கல்கி ஆசிரியர் சீதாரவிக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இக்கதை இந்த வண்ணம் உருப்பெற்றிருப்பதற்கு என்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் அன்புமே காரணம். பல்லாண்டு காலமாக இந்நாவல் மறு பிரசுரம் இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் மதி நிலையம் மூலமே இது சாத்தியமாகியிருக்கிறது. மெய்யப்பனுக்கு என் அன்பு.
பா. ராகவன்
ஜனவரி 05, 2015