ஜாலங்களும் ஜிமிக்கிகளும்

டிசம்பர் வந்தால் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்குச் செல்வது என்பதை ஒரு காலத்தில் வழக்கமாகக் கொண்டிருந்தேன். கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. எல்லா சபாக்களின் சீசன் டிக்கெட்களும் இலவசமாகக் கிடைக்கும். விருப்பமிருக்கும் கச்சேரிகளுக்குச் செல்வேன். விரும்பாத பாடகர்களின் கச்சேரிகளுக்கும் கேண்டீன் நிமித்தம் சில சமயம் செல்வேன். போன கடமைக்காக அவ்வப்போது விமரிசனம் மாதிரி ஏதாவது எழுதவேண்டி வரும்.

என்னளவில் இசைக்கு இரண்டே இரண்டு விமரிசனங்கள்தாம். நல்ல இசை. நன்றாக அமையாத இசை.

எழுத்து, சினிமா போன்ற நுண்கலைகளுக்கும் இதுதான் என்றாலும் ஏனோ இசையைக் கட்டுடைத்து இடம் பொருள் ஏவல் காட்டுவது விகாரமாகத் தெரிகிறது எனக்கு. இசை ஒரு சொகுசு. எழுத்து, சினிமா மாதிரி நமது பிரயத்தனங்கள் இதில் தேவையில்லை. திறந்திருக்கும் காதுகள் வழியே தானாக உள்ளே சென்று மயக்கும் அல்லது மருட்டும். விரும்பினால் தொடரலாம், அல்லது நிறுத்திவிடலாம்.

கலைஞனாக இருப்பதைக் காட்டிலும் ரசிகனாக இருப்பது சௌகரியங்கள் மிக்கது. இசையைப் பொருத்த அளவில் நான் ஒரு ரசிகன்.

சமீபத்தில் நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி என் அலுவலகத்துக்கு வந்திருந்தபோது அவருடைய ஆப்பிளிலிருந்து ஏராளமான வாத்திய இசைக்கோவைகளை அள்ளியெடுத்தேன். அவர் வந்து போன தினம் தொடங்கி இன்றுவரை இடைவிடாமல் அவற்றைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நிறைய எல்.எஸ்.[டி இருக்கவேண்டும், நியாயமாக.] கொஞ்சம் எல். ஷங்கர். மதுரை மணி. மதுரை சோமு. எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அலுப்பூட்டாத இத்தகு இசை இப்போதைய கலைஞர்களிடம் அரிதாகவே எனக்குக் கிடைக்கிறது.

ஒரு சஞ்சய் சுப்பிரமணியனுக்குப் பிறகு எனக்கு யாருடைய பாட்டிலும் ஸ்பஷ்டமும் கம்பீரமும் தென்படுவதில்லை. சந்தானத்தோடு உருக்கம் காணாமல் போய்விட்டது. சிட்டிபாபுவின் வர்ணஜாலங்களைத் தேடினாலும் பெற இயலவில்லை. வயலின் என்ற மேற்கத்தியக் கருவியை இந்திய சாஸ்திரிய இசைக்காகவே கண்டுபிடித்ததுபோல் உணரச் செய்த துவாரம் வெங்கடசாமி நாயுடு, லால்குடி ஜெயராமன், டி.என். கிருஷ்ணனையெல்லாம் கேட்டிருக்கிறீர்களா? இப்போதெல்லாம் வயலின் என்பது பி.சி. சர்க்கார் ஷோ மாதிரி ஆகிவிட்டது.

அப்புறம் பெண் கலைஞர்கள். என் ரசனையில்தான் பழுது என்று நினைக்கிறேன். எனக்கு அவர்களுடைய விதவிதமான பட்டுப்புடைவைகளும் ஜிமிக்கிகளும் அலங்கார வினோதங்களும் பிடிக்கிற அளவுக்கு ஏனோ அவர்களுடைய சங்கீதம் பிடிப்பதில்லை. வெகு காலம் முன்பு ஒரு சமயம், ஒரு ம்யூசிக் அகடமி கச்சேரியில் சுதா ரகுநாதன் நினுவினா ஆரம்பித்து, முடிக்கிறவரை எத்தனைமுறை அவரது ஜிமிக்கி ஆடியது என்று கணக்கெடுத்து எழுதியது நினைவுக்கு வருகிறது. நான் ஆணாதிக்கவாதியெல்லாம் இல்லை. ஆனால் மேடைக் கச்சேரி என்று வந்துவிட்டால் இவர்களுக்கு சங்கீதம் பாக்ஸ் மேட்டராகிவிடுகிறது, பெரும்பாலும்.

அமரர் சுப்புடு ஒரு சமயம் குமுதம் அலுவலகத்துக்கு வந்திருந்தபோது வெகுநேரம் இது பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘உனக்கு அதையும் இதையும் சேர்த்து ரசிக்கத் தெரியலே. வயசாயிடுத்தோ என்னமோ’ என்றார். ‘பிடிக்கலேன்னா கண்ணை மூடிண்டுட வேண்டியதுதானே?’ என்றும் சொன்னார். ரொம்பப் பிடித்திருப்பதுதான் பிரச்னை என்று பதில் சொன்னேன். உருப்படமாட்டே என்று ஆசீர்வதித்தார்.
அப்படியே ஆகிப்போனேன்.

இதனாலும் இன்னபிற காரணங்களாலும் கடந்த பல வருடங்களாக நான் சபாக்களுக்குச் செல்வதை அறவே நிறுத்திவிட்டேன். இலவச டிக்கெட் கிடைத்தால்கூடப் போவதில்லை. இசைக்குக் காது போதும் என்று தீர்மானம் செய்துகொண்டேன். எனக்கு வேண்டிய சங்கீதம் என் மடிக்கணினியில் எப்போதும் இருக்கும். பருவ காலங்களுக்கேற்ப என் தேர்வுகள் அமையும். எதுவும் எழுதத் தொடங்குமுன்னர் எப்போதும் யானி அல்லது சஞ்சய் சுப்பிரமணியனைக் கேட்பேன். எழுதி முடித்ததும் மதுரை மணிக்குப் போய்விடுவேன். உற்சாகமாக இருந்தால் எம்.டி. ராமநாதன். சோர்வுற்றிருந்தால் சிட்டிபாபு அல்லது சூரியநாராயணா. கோபம் வந்தால் சந்தானம். குஷி மூடில் இருந்தால் இளையராஜா. தவிரவும் வெயில் காலங்களில் வாத்திய இசை. குளிர், மழை வந்தால் குரலிசை. பகலென்றால் மேலை இசை, இரவில் மட்டும் கர்நாடக, ஹிந்துஸ்தானி இசை.

என் இசை ரசனை மிகவும் பட்சமானது என்று நண்பர்கள் சிலர் சொல்லியிருக்கிறார்கள். இருக்கலாம். ஆனால் என்னுடைய இந்தத் தேர்வுகள்தாம் என் எழுத்து சார்ந்த செயல்பாடுகளை சீரான வேகத்தில் செலுத்திச் செல்ல உதவிகரமாக இருக்கின்றன.

பிகு: நாளை மதியம் நாரதகான சபாவுக்குச் செல்லலாம் என்றிருக்கிறேன். ஞானாம்பிகா கேடரிங்குக்கும் நான் ரசிகன்.

Share

7 comments

  • //ஒரு சஞ்சய் சுப்பிரமணியனுக்குப் பிறகு எனக்கு யாருடைய பாட்டிலும் ஸ்பஷ்டமும் கம்பீரமும் தென்படுவதில்லை. //

    ஓ.எஸ்.அருண் பாடல்களிலும் இதைப் பார்க்கலாம். அவர் குரலில் வெளிப்படும் கம்பீரத்துக்கு நான் அடிமை. அண்மைக்காலங்களில், பஜனுக்கு தேவையான அழுத்தத்துடன் அதே சமயம், நெகிழ்ச்சியான நெளிவு,சுளிவுகளுடன் பாடுவதில் இவர் விற்பன்னர்.

  • //யானி அல்லது சஞ்சய் சுப்பிரமணியனைக் கேட்பேன். எழுதி முடித்ததும் மதுரை மணிக்குப் போய்விடுவேன். உற்சாகமாக இருந்தால் எம்.டி. ராமநாதன். சோர்வுற்றிருந்தால் சிட்டிபாபு அல்லது சூரியநாராயணா. கோபம் வந்தால் சந்தானம். குஷி மூடில் இருந்தால் இளையராஜா//
    யானி கேட்கும் நீங்கள் ஏ.ஆர்.ஆர். கேட்பது இல்லையா? அட ஒரு ‘மின்னலே’,அல்லது ‘பெண்ணல்ல பெண்ணல்ல’ கூட இல்லை. how about couples retreat? மடிகண்ணி அழப்போகிறது. சீக்கிரம் தரவிறக்கம் செய்யவும் அப்படின்னு @dynobuoy கூவுறார்.

    • எனக்கு எந்தக் கலைஞரும் விலக்கல்ல. ரஹ்மானையும் நிறையக் கேட்கிறேன். ஆனால் அவர் என் வீட்டுக்கு அருகே இருக்கிறாரே தவிர விருப்பத்துக்கு அருகே இல்லை. அடுத்த வரியை எதிர்பார்க்க முடியாத எழுத்தே ஆர்வம் தூண்டும் எழுத்து என்பதுபோல் இசையிலும் அடுத்ததை எதிர்பார்க்க விடக்கூடாது. ரஹ்மான் பெரும்பாலும் என் யூகங்களுக்கு ஒத்துப்போய்விடுகிறார்.

  • கிரிதரன், என் நண்பர் பாலு சத்யா ஓ.எஸ். அருணின் பரம ரசிகர். அடிக்கடி சிபாரிசு செய்வார். சில கேட்டும் இருக்கிறேன். நீங்கள் சொல்வது சரிதான். அவரிடமும் கம்பீரம் உள்ளது. ஆனால் சட்டென்று எனக்கு நினைவுக்கு வரவில்லை பார்த்தீர்களா?

  • நீங்கள் குருசரணைக் கேட்டதில்லையோ? உச்சரிப்பு சுத்தத்துடனும், பாவத்துடனும் மிக நன்றாகப் பாடுகிறாரே, நாளைய நம்பிக்கை நட்சத்திரம் அவர்தான் என்று நினைக்கிறேன். ஆனாலும் சந்தானத்தின் கம்பீரம் யாருக்கு வரும், அவர் இசைச் சிங்கம் அல்லவா?

    பெண் கலைஞர்களில் ஜெயஸ்ரீ, அருணா சாயிராமைத் தவிர வேறு யாரும் பெரிதாக ஈர்க்கும்படித் தெரியவில்லையே.

    சேஷூவோட பையனும் தேவலை.

    சினிமாப் பாட்டு பற்றி நோ கமெண்ட்ஸ். ஏன்னா, எனக்கு ஜி.ராமநாதனைத் தவிர வேற யாரும் அவ்வளவு சிலாக்கியமாப் படலை, சுப்பராமனைச் சேர்த்துக்கலாம்.

  • போங்க சாரே… ஐபாடில் எல்லாம் கேட்டு அலுப்பாடுதான் ஆகிப்போச்சு.

    ஒரு சௌம்யா அந்த மேக்கப் பூச்சோடும் லிப்ஸ்டிக்கோடும் ’உ’வன்னா வரும் போது உதடு குவிக்கறதை பாக்காம, சஞ்சய் யோட கையுயர்தி ராகங்களையும் சங்கதிகளையும் வானத்தில் இருந்து இறக்கறா மாதிரி பாவனைகளை கவனிக்காம, ஓ.எஸ். அருண்காரு கழுத்தை அந்த அபிநயத்தோட விழுக்குன்னு இழுக்கற ஸ்டைலையும் மறந்து உணர்ச்சியில்லாம ஏதோ ஒரு கம்யூட்டர் ரயில்ல தலையை ஆட்டி ரசிக்கமுடியாம நொந்து சேமியாவாகிப்போயிருகோம், இதுல சீசன் டிக்கெட் கிடைச்சும் போகலையாம். எங்க வயித்துல ஏன் இப்படி நெருப்பை அள்ளிக் கொட்டறீங்களோ :)))

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி