ஆயிரம் அப்பள நிலவுகள்

கீதையிலே பகவான் சொல்கிறான், எது ருசியானதோ, அது உடம்புக்கு ஆகாது. எது எண்ணெயில் பொறிக்கப்பட்டதோ, அது கொழுப்பைக் கூட்டி, இடையளவை ஏடாகூடமாக்கும். நேற்று கடைக்காரனிடம் இருந்த அப்பளம் இன்று உன் வீட்டு வாணலியில் பொறிபடும். நாளை அது உன் வயிற்றில் ஜீரணமாகி, நாளை மறுநாள் டாக்டர் பாக்கெட்டுக்குப் பணமாக மாறிச் செல்லும். நீ உன் பெண்டாட்டியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, வயிற்றைக் கட்ட வழி தெரியாது விழிப்பது உலக நியதியாகும்.

இது எந்த கீதை, யார் இந்த உடான்ஸ் பகவான் என்று கேட்கப்படாது. ஆனால் மேற்சொன்ன கீதாசுலோகம் அல்லது சாதாசுலோகம் பரம சத்தியமானது. ஆனால் சத்தியமானதெல்லாம் சகாயமானதாகிவிடுமா என்ன?

எம்பெருமான், பூமியை நீரிலிருந்து கண்டெடுத்தான். பூமியைப் போலவே உருண்டையான தோற்றம் கொண்ட என்னை எண்ணெயில் கண்டெடுத்தான் என்று நினைக்கிறேன். சின்ன வயதிலிருந்தே இந்த வறுத்தது, பொறித்தது வகையறாக்களைக் கண்டால், பருத்தது மறந்து போய்விடும் எனக்கு. [ இடையில் கொஞ்சநாள் டயட் இருந்து இளைத்ததெல்லாம் கெட்ட கனவு.]

வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கைப் பார்த்தால், அது காய் வகை, கிழங்கு வகை என்றே தோன்றாது. பஜ்ஜி வகை என்றுதான் புத்தி முதலில் சொல்லும். எங்காவது மாவு அரைபடும் சத்தம் கேட்டால், இட்லிக்கு அரைக்கிறார்கள் என்றுதான் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும். எனக்கோ, யாரோ வடைக்கு அரைக்கிறார்கள் என்று அஞ்ஞான திருஷ்டி சொல்லும். அப்பளத்தைச் சுட்டு சாப்பிடலாம், ஒரு தப்புமில்லை என்று எத்தனையோ பேர், எத்தனையோ காலமாகச் சொல்லிவிட்டார்கள். உளுந்து உடம்புக்கு நல்லது. கேட்பேனா? வாணலியில் புத்தம்புது எண்ணெய் ஊற்றி, பளிச்சென்று பொறித்தெடுத்தால்தான் எனக்கு அப்பளம், அப்பளமாகும். குழம்பு சாதம், ரசம் சாதம், மோர் சாதம் என்று அனைத்துச் சாதங்களுக்கும் தலா இரண்டு அப்பளங்களை நொறுக்கிப் போட்டுச் சாப்பிட்டால்தான் சாப்பாடு இறங்கும்.

இதுதான் பிரச்னை என்றில்லை. மோர் பிடிக்காது. தயிர் பிடிக்கும். பால் பிடிக்காது. அதன்மீது படரும் ஏடு பிடிக்கும். வெண்ணெய் பிடிக்கும். நெய் அதைவிடப் பிடிக்கும். ஐஸ்க்ரீம், ரசமலாய், பால்கோவா, அல்வா, அப்பம், அதிரசம் – விதி பாருங்கள். கேக்குகள் பிடிக்காது; குலோப் ஜாமூன் பிடிக்கும், ஜாங்கிரி பிடிக்கும், ஜிலேபி பிடிக்கும். பட்டியல் போட்டால் ஒரு முழுப் பக்கத்துக்கு வந்துவிடும். சுருக்கமாகச் சொல்கிறேன். எண்ணெய் அல்லது நெய் சேர்த்த கெட்ட வஸ்துகள் உலகில் என்னென்ன உண்டோ, அனைத்தையும் விரும்பி சாப்பிடக்கூடியவனாகவே என் பாலகாண்டம் முதல் இருந்து வந்திருக்கிறேன்.

வீட்டின் ஒரே மூத்த பிள்ளை என்று, என்னைப் பெற்ற எம்பெருமாட்டி நான் ஆசைப்பட்டதையெல்லாம் உண்ணக் கொடுத்து, வஞ்சனையின்றி, பகையின்றி, சூதின்றி, வையக மாந்தரெல்லாம் பார்த்துக் கண்ணு போடுமளவுக்கு என் சுற்றளவைப் பெருக்கப் பண்ணிவிட்டாள். இது தர்மத்தின் தலைவிக்குப் பொறுக்குமோ?

திருமணமாகி வந்த நாளாக என் மனைவியின் மாறாத செயல் திட்டங்களுள் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது, என் ஆவலாதி ஆயில் பொருள்களுக்கு, சாத்தியமான சமயங்களில் எல்லாம் நூற்று நாற்பத்தி நான்கு போடுவதுதான். முடியவே முடியாது என்று சொல்லும் வழக்கமில்லை. ஆனால் நாக்கில் விட்ட சொட்டுத் தேனை நெஞ்சில் இறங்கவிடாமல் அணை போடுகிற அசாத்திய சாமர்த்தியசாலி.

ஓர் உதாரணம் சொல்லுகிறேன். தினசரி அப்பளம் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நான். ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து, மனைவியாகப்பட்டவள், இனி வாரம்தோறும் பிரதி ஞாயிறு அன்று மட்டுமே அப்பளம் உண்டு என்று ஒரு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரவே, வெலவெலத்துப் போனேன். அன்னா ஹசாரே மாதிரி உண்ணாவிரதம் இருந்து காரியம் சாதிக்கவெல்லாம் நமக்கு வக்கில்லை. எனவே கெஞ்சி, கொஞ்சி, கூத்தாடி, வாரமிருமுறைப் பத்திரிகைகள் வரும் நாள்களில் மட்டுமாவது அப்பளத்துக்கு அனுமதி வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

ம்ஹும். ஒருநாளென்றால் ஒருநாள்தான். தீர்மானமான உத்தரவு அது.

வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளவேண்டியதானது. ஞாயிற்றுக்கிழமைக்காகத் திங்கள் முதல் காத்திருப்பது ஒரு சுகமாகத்தான் இருந்தது என்றாலும் பல சமயம் அப்பளமில்லாத வாழ்வு அர்த்தமில்லாததாகத் தோன்றியது. ஒழியட்டும், மற்றவற்றை வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணினேன்.

என்ன அழிச்சாட்டியம்! அன்று முதல் திடீரென்று வீட்டில் எண்ணெய் டின் மாறிவிட்டது. ஒரு குட்டிக்குரா பவுடர் டின் உசரத்துக்கு இருந்த டப்பா அது. திடீரென்று சாஷே பாக்கெட்டைக் காட்டிலும் சற்றுப்  பெரிய அளவுக்கு வந்துவிட்டது. வாரம் கால் கிலோ வாங்கி வைக்கும் நெய்யெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை. அப்படீ போகிற வருகிற வழியில் தென்படும் பலகாரக் கடைகளில் பக்கோடா, மிக்சர், முறுக்கு என்று வாங்கி வந்து நிரப்பி வைக்கும் வழக்கம் சத்தமில்லாமல் வீட்டினின்று விடைபெற்றது. குர்குரே, பிங்கூ என்று குழந்தைக்காக எப்போதாவது வாங்கும் சிப்ஸ் வகையினங்களுக்கும் மறைமுகத் தடை உண்டாகியிருந்தது.

ஒருநாள், இரண்டு நாள், ஒருவாரம், ஒரு மாதம் – பத்னீ இதற்கு பதில் எனக்குப் பட்னி போடலாம் நீ என்று பரிதாபமாகப் பலமுறை பார்த்தும் பலனில்லை. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குச் சில விருந்தாளிகள் வந்தார்கள். என்னை திரேதா யுகத்திலிருந்தே நன்கறிந்தவர்கள் என்பதால் லக்ஷ்மி விலாஸ் ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா பாக்கெட் ஒன்றும் சுடச்சுட அப்போதுதான் வாணலியிலிருந்து எடுத்துக் கொட்டிய பக்கோடா பொட்டலம் ஒன்றும் வாங்கி வந்திருந்தார்கள்.

சொல்லும்போதே நெஞ்சடைக்கிறது. வந்த விருந்தாளிகள் விடைபெற்றுப் போன மறுகணம், என் கண் எதிரிலேயே வீட்டு வேலை செய்யும் பெண்மணியை அன்போடு அழைத்தாள் என் மனைவி. ‘லஷ்மிம்மா, இந்தாங்க. உங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் பேரனுக்குக் குடுங்க. நீங்களும் சாப்பிடுங்க.’

எந்த வீட்டில் இப்படி பாக்கெட் பிரிக்காத திருநெல்வேலி அல்வா கொடுப்பார்கள்? அந்தப் பெண்மணி பரவசத்திலேயே பத்து சுற்று பருத்திருக்கவேண்டும். நான் தான் துக்கத்திலும் துயரத்திலும் துவண்டுபோய்ச் சுருண்டு கிடந்தேன். விதி விதி விதி மகனே, வேறெது சொல்வேன் அட மகனே என்று என் மனக்கண்ணில் மகாகவி பாரதி உருக்கமாகப் பாடிய பாடல் என் மனைவிக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை வந்தது. எனவே மதிய உணவில் அப்பளமும் இருந்தது. போந்தும் போதாததற்குப் பழைய பக்கோடா பாக்கெட்டிலும் கால்வாசி மிச்சமிருந்தது. [அதை என்னைத் தவிர உலகிலுள்ளோர் அனைவரும் ஒரு துளியாவது ருசித்திருந்தனர் என்பதைப் பதிவு செய்தே தீரவேண்டும்.]

பழகிய பாவத்துக்காவது ஒரு பிடி போடுவாள் என்று காலை முதல் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். உணவு நேரம் வந்ததும் முதலில் ஒரு கேள்விக்கணை வந்தது. ‘அப்பளம் இருக்கு, பக்கோடாவும் இருக்கு. ரெண்டுல எது வேணும்?’

நான் பதில் சொல்லவில்லை. எனவே தட்டில் ஒரே ஒரு அப்பளம் மட்டும் இரண்டாகத் துண்டிக்கப்பட்டு இரண்டு சாதங்களுக்கு ஒன்றாகப் போடப்பட்டது. இது மேலும் அதிர்ச்சியளித்தது.

இரண்டு அப்பளம் என்றிருந்தது ஒன்றானது எப்போது?

இன்று முதல் என்று பதில் வந்தது. ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று என்னை நானே அமைதிப் படுத்திக்கொண்டேன். கண்ணெதிரே ஒரு நிலவுக் குவியலாக ஏராளமான அப்பளங்கள். தட்டில் மட்டும் பிசுநாறித்தனம் மேலோங்கிய இரண்டு சிறு துண்டுகள். ஏதும் பேசவில்லை. அமைதியாகவே சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.

இதில் ஒரு சூட்சுமம் வைத்திருந்தேன். மிச்ச அப்பளங்கள் அப்படியே டப்பாவில்தான் இருக்கும். அது நமுத்துப் போக விடமாட்டாள் நல்ல பத்தினி. எனவே பரிதாபம் பார்த்தேனும் தினமும் இப்படி அரைத் துண்டு கிடைக்கும் அபார சாத்தியம் இதில் இருக்கிறது. கேட்டால்தானே வராது? இனி, கேளாமல் வரட்டும்.

ஆனால் மறுநாள் அப்பளம் வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. மூன்றாம் நாளும்.

நான் மறந்தே போய்விட்டேன். எல்லாம் பழக்கம்தான் காரணம். இப்போது அப்பளம் இல்லாமலும் உண்ணப் பழகிவிட்ட உன்னத புருஷன் அல்லவா?

அடுத்த வார சனிக்கிழமை மதிய உணவுக்குப் பிறகுதான் முதல் முதலாக அந்த விஷயத்தைப் பற்றிப் பேச்செடுத்தாள் என் மனைவி.

‘டப்பால அப்பளம் இருக்கு.’

உண்மையிலேயே எனக்கும் அப்போதுதான் அது நினைவுக்கு வந்தது.

‘சரி, இருந்துட்டுப் போகட்டும்’ என்றேன். இது நிச்சயம் நல்விளைவு உண்டாக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. குறைந்தபட்சம் மறுநாள் ஞாயிறு அல்லவா? மதிய உணவில் சற்று தாராள குணம் கடைப்பிடிக்கப்படக்கூடும்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏது இனி?

மறுநாள் உணவு வேளைக்குச் சரியாக நான் சாப்பிடச் சென்றபோது பக்கத்து வீட்டு ஆண்ட்டியுடன் என் மனைவி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

‘அவர் சுத்தமா ஆயில் ஐட்டம்ஸ் சாப்பிடறதை நிறுத்திட்டார் தெரியுமா? இனி நான் அப்பளம் வாங்கவே போறதில்லை.’

பகீரென்றது. பண்டைய பிரெஞ்சு கிரிமினல் சட்டங்களின்படி தீவாந்தர தண்டனை பெறும் அதிபயங்கரக் கைதிகளுக்கு இப்படித்தான் உணவைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து,  தப்பித்து ஓடச் சக்தியற்றுப் போகுமளவு தேகமெலிவு பண்ணிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.

என் மனைவிக்கும் என் தேகமெலிவுதான் நோக்கம். ஆனால் தப்ப நினைக்காத உத்தமோத்தமனுக்கும் ஏன் இந்தக் கொடுந்தண்டனை என்பதுதான் புரியவில்லை.

Share

30 comments

  • ரைஸ்பிரான் ஆயில் பயன்படுத்தினால் தினம் இரண்டு வேளை அப்பளம் சாப்பிட்டாலும் எந்தக் கொலஸ்ட்ராலும், ஃபேட்டும் தம்மாத்தூண்டு கூட வராது. நாங்கள், அடை, பஜ்ஜி என்று ஜமாய்க்கிறோம்.

    http://kgjawarlal.wordpress.com

  • தினமும் ஆயில்பாத் எடுக்கும் அப்பளத்துக்கும் கட்டுப்பாடா! ஒரு வேளை சனி நீராடு என்று ஔவையார் சொல்லியிருக்கிறார் என்பதால் வாரம் ஒருநாளானதோ.

    ஆயிரம் சொல்லுங்கள். பெற்று வளர்த்த அன்னபூரணி, அகிலாண்டேஸ்வரி, ராஜமாதா, அவளுக்கு மட்டுந்தான் பிள்ளைகளின் வயிறு தெரிந்திருக்கிறது.

    இப்படிச் சோற்றுக்குப் பதிலாக ஓட்ஸ், அப்பளத்துக்குப் பதிலாக கார்ன் பிளேக்ஸ், புல் மீல்ஸ்க்குப் பதிலாக கிண்ணத்தில் சோறு, சப்பாத்தி என்று பலவித கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இரத்தசோகை வந்த கணவர்களும் உண்டு.

    இதற்கெல்லாம் ஒரே வழிதான் உள்ளது. அதாவது மோட்டார் சுந்தரம்பிள்ளை, அக்னி நட்சத்திரம் விஜயகுமார் ஆகியோர் காட்டிய வழிதான் அது. 🙂

  • ஒரு சாண்(?!) வயிற்றுக்கு இவ்வளவு பிரச்சினையா..?!அந்தோ பரிதாபம். 🙂

  • குடும்பதலைவி இப்போது குடும்ப மருத்துவர் ஆகிவிட்டார்…உங்கள் நலன் கருதி…!!!

  • திரு கோ. ராகவன்: உங்கள் கமெண்ட்டை என் மனைவி படித்துவிட்டு, உங்களுக்குக் கோயில்பட்டி வீரலட்சுமி தெரியுமா என்று கேட்கச் சொன்னாள்.

  • என்ன… கோயில்பட்டி வீரலட்சுமியா… ஐயோ… ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா.

    பேசாமல் பெண்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்கள் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தாலாவது அப்பாவிக் கணவர்கள் பிழைக்கக் கூடும்.

  • உங்களில் கால் பகுதி உருவமாகயிருக்கும் எனக்கும் இதே தடா தான் !

  • ஆக, அதிவிரைவில் நீங்கள் “Size Zero Figure” ஆகிவிடுவீர்கள் என்று சொல்ல வருகிறீர்கள் ???

  • இந்தப் பதிவு என் வூட்டம்மா பார்வையில் பட்டுவிட்டால் எனக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அம்பிகா அப்பளம் பொறித்து எடுத்தது கிடைக்கமலேயே போய்விடும்!

  • பாரா, இப்படி எல்லாம் நடக்கும்-ன்னு தெரிஞ்சு இருந்தா, பேசாம நம்ம வேற வீட்டுல பொண்ணு எடுத்து இருக்கலாம் பாரா. என்ன செய்றது, ப்ராரப்த கர்மா-ன்னு ஒரு கர்மம் இருக்கே?

    அத விடுங்க. கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம். இதில் எது எதற்கு பெஸ்ட் காம்பினேசன், சொல்லுங்க பார்க்கலாம்.

  • அடடாஆஆ …

    நேத்துத்தான் எண்ணெய் கத்திரிக்காய் வத்தக்குழம்புக்கு அப்பளம் பொரிக்கச்சொன்னார் என் சகதர்மிணி. இல்லையென்றானதும் நானே மனமுவந்து வற்றல் (கூழ்வற்றல்) பொரித்து தொட்டுக்கொண்டு உண்டோம்.

    ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல …. அட உக்காருங்க பாரா. இதுக்கெல்லாமா காதுல பொகையோட எழுந்துக்கறது ? சரி சரி … ஒரிஜினல் ல.வி.தி.அல்வாவைகூட வாயில காட்டாமல், தனக்கு மிஞ்சித்தான் என்ற ஆன்றோர் வாக்கையும் மீறி தானதர்மம் செய்த திருமதி பாராவுக்கு (சே..சே கண்டனம்லாமா தெரிவிச்சிடுவோம் நாங்க … அதுவும் கோ.ப.வீ.ல பத்தின குறிப்பெல்லாம் கொடுத்தப்புறமும்?) சில கெஞ்சல்கள் கூடிய சிபாரிசுகள் மட்டும்.

    பரிவுடன்
    முத்துக்குமார்

  • பரவாயில்லை. நான் தனியன் என்று நினைத்தேன்.. எனக்கும் ஜோடி இருக்கு…. உங்களுக்கு அப்பளம் எனக்கு சிகரெட், முதலில் ஒருநாளைக்கு ஒன்று… அப்பறம் ஒன்றுவிட்டநாள், பின் வாராந்தவிடுமுறை, அரசவிடுமுறை நாட்கள் அப்பறம் எப்பறம்???????

    என் மனைவிக்கு என் தேகஆரோக்கியம்தான் நோக்கம்.

    //ஆனால் தப்ப நினைக்காத உத்தமோத்தமனுக்கும் ஏன் இந்தக் கொடுந்தண்டனை என்பதுதான் புரியவில்லை// – இது எனக்குப் பொருந்தாது 🙂

  • If you eat lunch at home, avoid it. Like Thangavelu (in “Kalyana Parisu”) who bluffed to his wife that he was working and therefore, carried lunch and ate at the park, you may try that trick. Obviously, the lunch box would not have “papads”, and when you are outside home, you cannot get any at your will. The second trick to hate “papads” forever is to microwave them – you cannot eat more than one or two.

  • உங்கள் கட்டுரையை பெண்கள் யாரும் படிப்பதில்லையா? பின்னூட்டம் இடுபவர் அனைவரும் ஆண்கள்!
    பி.கு.:உங்கள் படத்தைப் பார்த்தால் அப்பள கட் எபக்ட் ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லையே?

  • உங்கள் கட்டுரையை பெண்கள் யாரும் படிப்பதில்லையா? பின்னூட்டம் இடுபவர் அனைவரும் ஆண்கள்! thomas alwa edison thotrar po enna oru arumaiana kandupidippu

  • அப்பளம் “பொறி”க்கச் சொன்னதால் நடக்க வில்லையோ? மென்மையாகப் “பொரி”க்கச் சொல்லிப் பாருமேன்.

  • எனக்கு தெரியும் சார் இதுக்கு முன்னால் ஒரு பின்னூட்டத்தில நான் சொன்னேனே உடல் நலத்துல அக்கறை செலுத்துங்கன்னு. இந்த 5 வருஷத்தில உங்க வயசு 25 கூடினமாதிரி தெரியுது. தயவு செய்து தர்மபத்தினிக்கு கட்டுப்படுங்க.அது ஏனோ தெரியில புருஷன் ஆரோக்யமா இருக்கணும் ரொம்பவருஷம் வாழணும்னு நினைக்கிற மனைவிகளின் மேல் நிறைய கணவன் மார் கடுப்பிலேயே இருக்காங்க !! அம்மாக்கள் எல்லாம் புள்ளையோட வயித்த நிரப்ப தான் பாப்பாங்க அந்த பாசத்திலே புள்ளையோட ஆரோக்யம் அவங்க எண்ணத்திலேயே வராது. எங்களை போன்ற வாசகர்களுக்கு உங்க எழுத்தின்மேல் தான் கவனம் வயித்தின் மேல் இல்லை !!!.

  • பாரா, அஹ்மத் சொல்றாருன்னு ஏடா கூடமா எதுவும் செய்யாதீங்க. எக்ஸ்ட்ரா ரெண்டு மூணு வருஷம் இருந்து என்னத்த கிழிக்க போறோம் அதுவும் வயதாகி! ஜென் மாதிரி இன்று இன்றை அனுபவியுங்கள்.

  • It is all in the genes! Recent research suggests that thin persons get more heart diseases than normal looking ones. Tell your wife this and ask her to count the calories in the appalam and reduce that much from your rice intake!

  • oil only spOILs our health. excellent humorous articles in the last couple of days…really enjoyed it. please continue your adventures.

  • கடுமையான உணவுக்கட்டுப்பாடு, தினசரி 2மணி நேரம் ஜிம்முக்கெல்லாம் போயி 77கிலோ இருந்த நான் 3மாதத்தில் 12கிலோ குறைத்திருக்கிறேன். இப்போ என் தர்மபத்தினி என்ன சொல்றா தெரியுமா? இன்னும் 1மாதம் டைம், பழையபடி 77கிலோ வரணுமாம். பின்னே அவளோட எடை 75கிலோ ஆச்சே.என்ன கொடுமை சார் இது.

  • பா.ரா சார் உங்க இடுப்பளவு 40 இன்ச்?.
    இல்ல இந்த வன்கொடுமை என்னக்கும் நடக்குது.
    வாரம் ஒரு முறை அப்பளம்.மாதம் ஒருமுறை பூரி.
    காலையில் காபி கட்.அதுக்கு பதிலா டீ,அதுவும் யாரோ ஒரு புண்ணியவதி சீனிக்கு பதிலா தேன் நல்லதுன்னு சொல்ல இப்ப சீனிக்கு பதிலா தேன் டீ.
    அரசியல் வாழ்க்கைலே இதெல்லாம் சகஜம் சார்.

  • //இதற்கெல்லாம் ஒரே வழிதான் உள்ளது. அதாவது மோட்டார் சுந்தரம்பிள்ளை, அக்னி நட்சத்திரம் விஜயகுமார் ஆகியோர் காட்டிய வழிதான் அது. :)//

    ஆஹா! புரிஞ்சுபோச்சு!

    ஆயிலுக்கு ஒண்ணு!
    ஆயுளுக்கு(ம்) ஒண்ணு!!

  • காய்கறிகளும் சுவையான பழங்களும் இருக்க எதற்கு இப்படி எண்ணெய் பண்டங்கள் மீது நமக்கு ஈர்ப்பு. கடுமையான உடல் உழைப்பு இல்லையெனில் கொலஸ்டிரால் கெடு வைப்பது உறுதி.

  • என்னது இப்பவும் உங்கவுட்ட்ல அந்தம்மாதான் சமையல் செய்றாங்களா ?
    இந்த கதை கற்பனையின்னு கண்டிப்பா போட்டுக்கணும் இன்னு தெரியலையா !

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி