பொலிக! பொலிக! 53

‘ஆ, வரமா! உண்மையாகவா? அரங்கனே வாய் திறந்து வரம் தருவதாகச் சொன்னானா? என்ன அற்புதம்! என்ன அற்புதம்! இதைப் போய் எங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சுவாமி!’

சீடர்கள் மிகவும் பரவசமாகிப் போனார்கள். விஷயம் கேள்விப்பட்டு மடத்துக்கு வெளியில் இருந்தும் பலபேர் உள்ளே வந்து நின்றுவிட, எதை எப்படிச் சொல்லுவதென்று புரியாமல் உடையவர் திகைத்துப் போனார்.

சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று அவர்கள் விடாமல் நச்சரிக்கவே அவருக்கு வேறு வழியில்லாது போனது.

‘சொல்லக்கூடாது என்ற எண்ணமில்லையப்பா! சலவைத் தொழிலாளிக்கு வாய்த்த அனுபவம் நமக்கு வாய்க்கவில்லையே என்று வருத்தப்படுவீர்களே என்று எண்ணித்தான் தவிர்த்தேன்.’

‘உண்மைதான் சுவாமி! இது பெரிய விஷயம். அந்தத் தொழிலாளி தமது பணிக்குள் பரமனைக் கண்டிருக்கிறார். அதனால்தான் நம்பெருமாள் அவரிடம் பேசியிருக்கிறான். அதுசரி, அவர் என்ன வரம் கேட்டார்?’

உடையவர் புன்னகையுடன் கூரத்தாழ்வானைப் பார்க்க, அவர் சொல்லத் தொடங்கினார்.

‘நம்மிடம் இப்படி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நாம் என்ன கேட்போம்?’

‘இதிலென்ன சந்தேகம் கூரேசரே? நமக்கு நல்ல கதி கொடுக்கச் சொல்லிக் கேட்போம். மோட்சத்தினும் சிறந்தது வேறென்ன உள்ளது?’

‘அதுதான் விஷயம். ஆனால் அந்த சலவைத் தொழிலாளி தனக்கு மோட்சம் கேட்கவில்லை.’

‘பிறகு?’

‘அரங்கப் பெருமானே, நீயேதான் கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் என்று உடையவர் சொன்னார். கிருஷ்ணாவதாரத்தில் நீ அடித்துக்கொன்ற சலவைத் தொழிலாளிக்கு இப்போதேனும் மோட்சம் கிடைக்கச் செய் என்று அவர் வேண்டிக்கொண்டிருக்கிறார்!’

ஆஹா என்று சிலிர்த்துப் போனது சீடர் குழாம்.

நடந்தது ராமானுஜருக்கே வியப்புத்தான். ஓர் அற்புதம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யாரும் நம்பமுடியாத சம்பவம். பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரமாத்மா வாய் திறந்து பேசுகிறான். வில்லிக்குக் கண் திறந்து காட்டிய அதே அரங்கன். சுத்த பக்தர்கள் யாரானாலும் சரி, எந்தக் குலத்தவரானாலும் சரி, அவர்கள் எனக்கு முக்கியம் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கிற பரமாத்மா.

அவனே வாய் திறந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறபோது அந்த சலவைத் தொழிலாளி கேட்ட வரம் ராமானுஜரைத் தூக்கிவாரிப் போடச் செய்துவிட்டது.

‘ஏனப்பா, அரங்கனே வரம் தருகிறேன் என்று சொல்லுகிறபோது உனக்கு மோட்சம் கேட்காமல், எந்த யுகத்திலோ இறந்துபோன சலவைத் தொழிலாளிக்கு மோட்சம் கேட்கிறாயே, இது என்ன வினோதம்?’ என்று அவனிடம் கேட்டார்.

‘நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி. அந்த யுகத்து சலவைத் தொழிலாளி யாரோ என்னமோ நான் அறியேன். ஆனால் எங்கள் குலத்தில் பிறந்து கிருஷ்ணர் கையால் அடிபட்டு இறந்திருக்கிறார். பகவான் கேட்டு, மறுத்த பாவத்தை எப்படியோ செய்து தொலைத்துவிட்டார். இது எங்கள் குலத்துக்கே ஒரு களங்கமல்லவா?’

‘அப்படியெல்லாம் ஏன் நினைத்துக்கொள்கிறாய்? கிருஷ்ணர் கையால் இறப்பதென்பது அவனது விதியாக இருந்திருக்கிறது. கிருஷ்ணர் கால் பட்ட காளிங்கனுக்கே மோட்சம் கிடைத்திருக்கிறதே, கைபட்ட சலவைத் தொழிலாளிக்கா கிடைத்திருக்காது? எப்படியோ நீ ஒரு வரத்தை வீணாக்கிவிட்டாயப்பா.’

‘இல்லை சுவாமி. ஒருவேளை அவன் நரகம் போயிருந்தால்? இன்றைக்கு எங்களை நேர் வழியில் செலுத்தவும் நல்லது சுட்டிக்காட்டவும் மோட்சத்தின் பாதையைப் புலப்படுத்தவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த அப்பாவி சலவைத் தொழிலாளிக்கு அப்படி ஒரு ராமானுஜர் அன்று இல்லையே? அதனால்தானே கிருஷ்ண பரமாத்மாவையே கோபமுறச் செய்தான்? அவன் சொர்க்கம் போக அன்றைக்கு வழி இருந்திருக்காது. அதனால்தான் இன்று எனக்குக் கிட்டிய வாய்ப்பை அதற்குப் பயன்படுத்தி அவனை அனுப்பிவைத்தேன்.’

‘அதுசரி. நீ எப்படி சொர்க்கம் போவாய்?’

‘அதற்கென்ன சுவாமி! எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதெல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள். எங்கள் கதி, யதிராஜ முனி!’ என்று சொல்லி அவர் பாதம் பணிந்தான்.

அவனை அப்படியே தூக்கி நிறுத்தி ஆசீர்வதித்தார் ராமானுஜர்.

நடந்ததை கூரத்தாழ்வான் சொல்லி முடிக்கவும் சீடர்கள் பேச்சு மூச்சற்றுப் போனார்கள். நம்பிக்கை என்றால் இதுவல்லவா? பக்தி என்றால் இதுவல்லவா? சரணாகதி என்பதும் இதுவேயல்லாமல் வேறென்ன?

‘உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பதை உணர்ந்திருக்கிறார் அந்த சலவைத் தொழிலாளி. அவர் என்ன குலம்? அவரது சீலம் இந்தத் திருவரங்கத்து அந்தணர்களுக்கு வருமா? அவருக்கு வாய்த்தது இங்கே வேறு யாருக்கு வாய்க்கும்?  சாதியா அவரை அந்த உயரத்துக்குக் கொண்டு சென்றது? இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? இந்நேரம் ஊரைக் கூட்டி பறைசாற்றியிருக்க மாட்டார்களா? ஆனால் அந்த சலவைத் தொழிலாளி யாரிடமாவது வாய் திறந்தாரா? அவரது மனைவி மக்களுக்கே சொல்லியிருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான்.’ கூரத்தாழ்வான் சிலிர்ப்புற்றுப் பேசிக்கொண்டே போனார்.

‘கூரேசா, நமது குருகுலத்தில் உள்ளவர்களுக்கு முதலில் இது புரியவேண்டும். மாறனேர் நம்பியோ, அந்த சலவைத் தொழிலாளியோ, நமது வில்லிதாசரோ அடைந்த உயரம் மிகப் பெரிது. இடைவிடாத பக்தியும் தடையிலாது சரணாகதி செய்தலுமே மோட்சத்தின் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவை. இது புரிந்துவிட்டால் சாதி பேதம் பார்க்கிற வழக்கம் நின்றுவிடும்.’ என்றார் ராமானுஜர்.

பரபரவென்று காரியங்கள் நடக்கத் தொடங்கின. கோயில் திருப்பணியில் இன்னும் அதிகமாகப் பல சாதிக்காரர்களைக் கொண்டு வந்து சேர்த்தார் உடையவர். பெருமாளுக்கு தினமும் ஒரு புதிய மண் பாண்டத்தில்தான் அமுது செய்விக்க வேண்டும். குயவர்கள் உள்ளே வந்தார்கள். தச்சு வேலைகளுக்காக ஆசாரிகள் வந்தார்கள். வண்ண மாடங்களுக்கும் நின்ற நெடுமதில்களுக்கும் சுண்ணமடிக்க ஆள் வந்தார்கள். தேரைப் பராமரிக்கவும் கோபுரங்களை கவனிக்கவும் இன்ன பிற கட்டுமானம் சார்ந்த பணிகளைச் செய்யவும் பல சாதிக்காரர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.

அத்தனை பேரையும் கோயிலுக்கு அருகிலேயே தங்க வைத்தார் ராமானுஜர். அரங்கனைச் சுற்றி அந்தணர்கள் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று யார் சொன்னது? நான் சொல்கிறேன், அரங்க நகரத்தைச் சுற்றிய காவிரியின் அத்தனைத் துளி நீரும் காவிரியேதான் என்பதுபோல் அரங்கனைச் சுற்றியிருக்கும் அதனை பேரும் பாகவத உத்தமர்கள்தாம். சாதி சொல்லிப் பிரிப்பதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.

விஷயம் காட்டுத் தீயேபோல் எங்கெங்கும் பரவியது. எங்கெங்கிருந்தோ ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு ராமானுஜரைப் பார்க்க திருவரங்கம் வரத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி