இரண்டாம் வகுப்பு அம்மாக்கள்

அந்தப் பெண்கள் அத்தனை பேருக்கு இடையிலும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அத்தனை பேரின் மகன் அல்லது மகளும் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். ஒரு தோராய மனக்கணக்குப் போட்டு அந்த அத்தனை அம்மாக்களுக்கும் சுமார் முப்பது வயது இருக்கும் என்று தீர்மானம் பண்ணியிருந்தேன். பெரும்பிழை. பல சீனியர் அம்மாக்கள் இருக்கிறார்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை இப்போது இரண்டாம் வகுப்பில் இருக்கலாம் அல்லவா? எனவே, முப்பத்தி ஐந்து வயது அம்மாக்கள். முப்பத்தி ஏழு வயது அம்மாக்கள். ஆனால் நிச்சயமாக நாற்பது யாரும் இல்லை. சரியாக அளவெடுத்தாகிவிட்டது.

முதலில் முப்பதுதான் என்று அறுதியிட்டு உறுதி செய்ய நேர்ந்ததின் காரணம், இந்த இரண்டாம் வகுப்பு அம்மாக்களின் தோற்றம். கால் நகத்திலிருந்து கவனித்தாக வேண்டும். அப்போதுதான் சொல்ல வருவது விளங்கும். நகப்பூச்சு அணிவது மட்டுமல்ல நாகரிகம். பூச்சை எடுப்பித்துக் காண்பிக்க ஒரு கூழாங்கல்லின் முனை போல நகத்தை வளர்த்து ஒழுங்கு செய்திருப்பார்கள். கடும் அரக்கு நிறம் சிலாக்கியம். அதுதான் முப்பதுக்காரர்களிடையே செல்வாகுப் பெற்றது. அணியும் மெட்டியின் நுனியில் மயில் கொண்டைபோல ஒரு குட்டிச் சலங்கை. அது சத்தம் தராது. ஆனால் இருப்பது தெரியும். மேற்சொன்ன கடும் அரக்கு நிற நகப்பூச்சு இந்த மெட்டிக் கொண்டைக்கு எடுப்பான பின்னணியைத் தரும். அப்புறம், அணியும் சுடிதார்கள். இது பளபளப்பாக இராது. அதே சமயம் பழையதாகவும் இராது. ஒரு நடுவாந்தரத் தோற்றத்துக்காக மிகவும் மெனக்கெடுவார்கள் என்று நினைக்கிறேன். தவிரவும் ஒரு நாள் அணிந்த சுடிதாரைக் குறைந்தது அடுத்த பத்து தினங்களுக்குத் தொடமாட்டார்கள். ஆ, அந்தத் துப்பட்டா. அது நிச்சயமாக முழங்காலுக்குக் கீழ் வரை தொங்கவேண்டும். பார்க்கும்தோறும் எனக்கு சசிகலா நடராசன் நினைவுக்கு வந்துவிடுவார். அவர்தான் அந்த ஸ்டைலைக் கண்டுபிடித்துப் பிரபலப்படுத்தியவர். ஓர் ஆண் பிரபலப்படுத்தி, நவீன தமிழ்ப் பெண்கள் தமதாக்கிக்கொண்ட ஃபேஷன் அது.

இந்த இரண்டாம் வகுப்பு அம்மாக்கள் கழுத்தில் நிச்சயமாக இரண்டு அணிகள் இருக்கின்றன. ஒன்று நீளமாக இருக்கும். ஒன்று சற்றே குட்டையாக. காதுகளில் இவர்கள் அணிவது தோடுகள் அல்ல. போட்டிருக்கும் சுடிதார் மற்றும் வைத்திருக்கும் பொட்டின் நிறத்தை ஒட்டிய பிளாஸ்டிக் சதுரங்கள். மூக்குத்திகள் அபூர்வம். ஏனோ இவர்கள் பெரும்பாலும் தலை பின்னுவதில்லை. நன்கு வாரி, உயரம் கத்திரிக்கப்பட்ட கூந்தலின் தொடக்க முனையில் ஒரு க்ளிப் மட்டும் சொருகியிருப்பார்கள். ராக்கெட் பறக்கச் சரியாகப் பத்து வினாடிகளுக்கு முன்னர் கவுண்ட் டவுன் ஆரம்பித்து நாலு எண் நகர்ந்தபிறகு, அப்படியே பாதியில் விட்டுவிட்டு எழுந்தோடி வந்ததுபோல் ஒரு கணம் தோன்றிவிடும்.

ஆனால் அது உண்மையல்ல. இந்தத் தோற்றத்தை வரவழைக்க இந்த அம்மாக்கள் தினமும் குறைந்தது முக்கால் மணிநேரமாவது உழைப்பார்கள் என்பது நிச்சயம். ஏனெனில், பள்ளி வாசலில் இவர்கள் வந்து நின்றதுமே ஒருவரை ஒருவர் பார்த்து முகமன் சொல்லிக்கொள்வதற்கு முன்னதாக ஒரு சில கணங்கள் செலவழித்து தோற்றச் சிறப்பைத்தான் முதலில் ஆராய்கிறார்கள்.

‘என்ன தீபிகாம்மா, இந்த சுடி உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ? அடிக்கடி போடறிங்களே?’ என்று தருணம்மா கேட்டுவிட்டால் போச்சு. வேலைக்காரி நீண்ட விடுப்பு என்றோ, இஸ்திரிப் பெட்டி ரிப்பேர் என்றோ காரணம் சொல்லியாகவேண்டும். எத்தனை பெரிய சங்கடம்!

ஆனால் இம்மாதிரி சங்கடங்களை இம்மாதிரி இரண்டாம் வகுப்பு அம்மாக்கள் எதிர்கொள்ளும் விதம் முற்றிலும் மாறுபட்டது. நமது ஆகச்சிறந்த அரசியல்வாதிகளுக்கும் சவால்விடக்கூடிய தரத்தைச் சார்ந்தது.

‘என்ன செய்யறது தருணம்மா? இன்னிக்கு மேத்ஸ் டெஸ்ட் இல்லியா? நான் இந்த சுடி தான் போட்டுட்டு வரணும்னு என் பொண்ணு சொல்லிட்டா. இதான் ராசியாம். போன மேத்ஸ் டெஸ்ட் அன்னிக்கு இதைப் போட்டுட்டு வரவும், அவ செண்டம் வாங்கவும் சரியா இருந்திச்சில்ல? ஞாபகமில்லியா? அன்னிக்கு உங்க தருண் ஆறு சம் தப்பா பண்ணியிருந்தான்னு மிஸ் கூப்பிட்டு சொன்னாங்களே…’

தருணம்மா இதற்குமேல் வாயைத் திறப்பார்?

இந்த இரண்டாம் வகுப்பு அம்மாக்களின் உலகில், அதிகம் விமரிசிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பிள்ளைகளின் டீச்சர்களாக இருக்கிறார்கள். இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் கண்டனமெழுப்புவதெல்லாம் எம்மாத்திரம்? அம்மாக்கள் ஆசிரியர்களின்மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அணுகுண்டுகளை நிகர்த்தவை.

‘கேட்டிங்களா தர்ஷினியம்மா? ஆடி வெள்ளிக்கு உங்க வீட்ல பாயசம் வெக்கலியா? எங்க வீட்ல பாயசம் வெக்கலியா? இந்த பாரதியம்மா, மிஸ்ஸுக்கு பாட்டில்ல பாயசம் குடுத்து அனுப்பியிருக்காங்க. டிக்டேஷன்ல பாரதி தப்பு பண்ணாலும் மிஸ் பக்கத்துல வந்து சொல்லிக்குடுக்கறாங்கம்மான்னு எங்க அநிருத் வந்து சொல்றான். என்னடா சமாசாரம்னு பார்த்தா, கதை இப்படிப் போவுது!’

அடுத்தநாள் அநிருத்தம்மா பாட்டிலில் பாலிடால் கொடுத்தனுப்பிவிடாதிருக்க வேண்டுமே என்று நெஞ்சு பதைத்தால் நீங்கள் மனிதர்.

பொதுவாக இரண்டாம் வகுப்பு ஆசிரியைகள் பிள்ளைகளிடையே பேதம் பார்ப்பதில்லை. மூன்று இருபதுக்குப் பள்ளி விடும் நேரம் வாசல் வரை வந்து குழந்தைகளை அவரவர் பெற்றோரிடம் சேர்ப்பிக்கும்போது, அவர்கள் பிள்ளைகளை, நம்மிடம் ஒப்படைப்பதுபோலத்தான் நடந்துகொள்கிறார்கள். ஆனாலும் சில அம்மாக்களுக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

‘குட் ஈவ்னிங் சொன்னாக்கூட பதிலுக்கு சொல்றாங்களா பாருங்க! கடுகடுகடுன்னு எப்பப்பாரு என்ன ஒரு மூஞ்சி! க்ளாஸ்ல என்ன பேசினாலும் ஷட் அப் அண்ட் கீப் கொயட்ங்கறாங்கம்மான்னு எங்க உதயந்திகா அழவே அழறா தெரியுமா? ப்ரொஃபஷனைத் தலையெழுத்தேன்னு எடுத்துக்கறாங்க.’

‘இத சொல்றிங்களே, க்ளாஸ்ல அத்தன பேருக்கும் ஏழு சம் ஹோம் ஒர்க். எங்க விஷாலுக்கு மட்டும் ஒம்போது சம். ஓப்பன் டேல ஏன் இப்படின்னு கேட்டா சிரிச்சிட்டு நகந்து போயிட்டாங்க. ரொம்ப பார்ஷியாலிடி பாக்கறாங்க உதியம்மா.’

இந்த அம்மாக்கள் அதிக பட்சம் பத்து நிமிடங்கள்தான் பள்ளி வாசலில் நிற்கிறார்கள். மணியடித்து பிள்ளைகள் வந்து வரிசையில் நின்று வெளியேறும் வரை மட்டுமே. அதற்குள் இவர்கள் பேசிவிடுவதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் எப்படியோ இருந்துவிடுகின்றன.

ஹரிநந்தனோட அப்பா இப்பொ வேலைக்குப் போகலியாமே? அவங்கம்மா இப்பல்லாம் ஆட்டோல வர்றதில்லை, பஸ்லேதான் வராங்க. கவனிச்சிங்களா?  தர்ஷினியம்மா திரும்பவும் கன்சீவ் ஆயிருக்காங்களாம். மாமியார் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். தருணம்மா வீட்டுல மூணு கார் இருக்கு. ஆனா பாரு, எப்பவும் நடந்துதான் வருவா, நடந்துதான் போவா. ஸ்கூலுக்கு வந்துட்டுப் போறதை ஒரு ப்ராஜக்ட் ஆக்கி, மாமியாரை வீட்டுல வேல செய்ய விட்டுடறாங்க. கெட்டிக்காரி. நம்ம கலா இல்லை? அதான், தீப்தியோட அம்மா. ஜிம்முக்குப் போறாங்களாம். நீங்களும் வரிங்களான்னு கேட்டாங்க. குனிஞ்சி நிமிந்து வீடு பெருக்கி, பாத்திரம் தேய்ச்சா ஜிம் எதுக்கு? பணத்தை வெச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியல.

இந்த அம்மாக்கள் வேலைக்குப் போகாதவர்கள். வேலைக்குப் போகிற அம்மாக்கள் பள்ளிக்கு வருவதில்லை. அவர்கள் பிள்ளைகள் வேன் அல்லது ஆட்டோ ஏற்பாட்டில் போய் வந்துவிடுவார்கள். அவர்கள் சந்தித்துக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடையாது. எனவே இப்படிப்பட்ட நெருக்கமான நட்புகளை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.

அவர்களால் ஆடியல்லாத மாதங்களிலும் தள்ளுபடி விலையில் டப்ரவேர் டப்பாக்களை வாங்க முடியாமல் போகும். தெரியாதா உங்களுக்கு? மனீஷ் கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஓய்வு நேரத்தில் அந்த வேலையும் பார்க்கிறார். பள்ளி வாசலுக்கு அவர் டப்ரவேர்களை எடுத்து வருவதில்லையே தவிர எப்படியோ பிசினஸ் பிடித்துவிடுகிறார். நகரின் உயர்தரமான கோச்சிங் வகுப்புகளின் முகவரிகள் வேண்டுமென்றால் நீங்கள் சிவப்ரியாவின் அம்மாவுக்கு சிநேகிதமாகாமல் முடியாது. நீச்சல் வகுப்புகள், செஸ் வகுப்புகள், ஷட்டில் வகுப்புகள், ஸ்கேட்டிங் வகுப்புகள். தவிரவும் தரமான ஹிந்தி ட்யூஷன் எடுக்கப்படும் இடங்கள். காசைக் கொட்டி ஏ.ஆர். ரகுமான் இசைப்பயிற்சிப் பள்ளியில் குழந்தையைச் சேர்த்ததே தப்பாகப் போய்விட்டது. ஒரு வகுப்புக்கும் ரகுமான் வருகிறதில்லை.

நிச்சயமாக அது பெண்கள் பிரதேசம். அவசர ஆத்திரத்துக்குப் பிள்ளைகளை அழைத்துப் போக எப்போதாவது வர நேரிடுகிற அப்பாக்கள் அங்கே வேற்று கிரக வாசிகளாக நிற்க நேரிட்டுவிடுகிறது.

‘அங்க பாருங்க பூஜாம்மா, அது சுனிதாவோட அப்பாதானே? ஸ்ப்லெண்டர் வெச்சிருந்தார், வித்துட்டாங்க போலருக்கு. சுனிதாம்மா ஸ்விஃப்ட் வாங்கப்போறதா சொல்லிட்டிருந்தாங்க, இவர் என்னடான்னா, சைக்கிள்ள வராரு? நாளைக்கு கேக்கணும். நான் மறந்துட்டா நீங்க ஞாபகப்படுத்துங்க.’

அந்த நடனக் கலைஞரும் நடிகருமான மனிதரை அவ்வப்போது பள்ளி வளாகத்தில் பார்க்க நேரிடுகிறது. அவரது மகன் அல்லது மகள் அங்கே படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் வரும்போதெல்லாம் இந்தப் பெண்கள் அவரைப் பார்க்காத மாதிரி, அல்லது பார்த்தும் அடையாளம் தெரியாத மாதிரி வேறு திசை நோக்கிப் பேசத் தொடங்கிவிடுகிறார்கள். அட, தெரிந்த முகமாயிற்றே என்று ஒரு சிறு வியப்புக்குறியை அவர்கள் விழிகளில் காட்டலாம். அந்தக் கலைஞருக்கு அது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் தவறியும் அவர்கள் தெரிந்த முகமாகக் காட்டிக்கொள்வதில்லை. அவர் புறப்பட்டுப் போனபிறகுதான் அவரை கவனிக்க நேர்ந்ததுபோலப் பேசுவார்கள்.

‘இப்ப ஒண்ணும் சான்ஸ் இல்ல போலருக்கு விஜிம்மா. டெய்லி ஸ்கூலுக்கு கொண்டு வந்துவிட்டுட்டு, கூட்டிட்டுப் போறாரு. பாவம்!’

இந்தப் பரிதாபத்துக்கு அந்தப் பாலிடால் கோபம் பரவாயில்லை என்று தோன்றினாலும் நீங்கள் மனிதர்.

என் வீட்டின் இரண்டாம் வகுப்பு அம்மாவுக்கு எப்போதாவது ஓய்வளித்துவிட்டு மூன்று இருபதுக்கு நான் பள்ளி வளாகத்துக்குப் போவது வழக்கம். நான் எந்த அம்மாவின் வீட்டுக்காரர் என்று அந்தப் பெண்கள் கண்டுபிடித்துவிடாதபடிக்கு ஹெல்மெட் அணிந்தபடிதான் உள்ளே நுழைவேன். டீச்சருக்கு மட்டும் தெரிந்துவிடும். ஹெல்மெட் தலையைப் பார்த்ததுமே குழந்தையை அனுப்பிவிடுவார்.

இந்தப் பெண்களை வேறு எந்த வகையிலும் என்னால் வெல்ல முடியுமென்று தோன்றுவதேயில்லை.

Share

22 comments

 • செம்ம Flow சார் ! சான்சே இல்லை !!!!
  அடுத்த ப்ராஜெக்ட் பத்தி எப்போ அறிவிப்பீங்க ?????

 • ஹெல்மட்டை கழட்டிடாதீங்க. அப்புறம் கிழக்கில் வேலையை விட்ட பின் சும்மா தான் இருக்கிறார் போல் இருக்கு, இங்கே வந்து பெண்களை நோட்டம் விட்டு தன் ப்ளாகிலே எழுதி எழுத்தாளர்னு காட்டிகிறாறு …ம்மா என்று நீங்கள் இருக்கும் வரை பார்க்காதது போல் இருந்துவிட்டு பிறகு சொல்லக் கூடும்.

 • நிச்சயமாக அது பெண்கள் பிரதேசம். அவசர ஆத்திரத்துக்குப் பிள்ளைகளை அழைத்துப் போக எப்போதாவது வர நேரிடுகிற அப்பாக்கள் அங்கே வேற்று கிரக வாசிகளாக நிற்க நேரிட்டுவிடுகிறது.

  உண்மை உண்மை உண்மையை தவிர வேறு இல்லை. அதிலும் தனியாக பள்ளிக்குப் போனால், எந்த அம்மாவாவது வந்து பேசுவார்கள். யார் என்றே தெரியாமலும், நன்றாக இருக்கிறார்கள் என்று வழியாமலும் பேசவேண்டிய கொடுமை இருக்கிறதே !

 • தலைப்பும் கட்டுரையின் ஓட்டமும் மிக அருமை…

  எத்தனை உன்னிப்பான கவனிப்பு உங்களுக்கு… 🙂

 • நல்ல அவதானிப்பு (கால் நகங்கள் வரை :-)); நான் எழுத நினைத்திருந்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள் ! பள்ளி முடிந்து அழைத்து வருவது தாண்டி லஞ்ச் டைமில் டப்பா கொடுக்கச் சென்றால் மேலும் பல சிறுகதைகள் கிடைக்கலாம்!

 • Good one. But para, though you wear helmet and hide yourself, won’t they identify you, by seeing your daughter/son. Or do u take extra helmet for your daughter/son, so that they can’t find, whose father is that.

 • //virutcham
  SEPTEMBER 2, 2011
  ஹெல்மட்டை கழட்டிடாதீங்க. அப்புறம் கிழக்கில் வேலையை விட்ட பின் சும்மா தான் இருக்கிறார் போல் இருக்கு, இங்கே வந்து பெண்களை நோட்டம் விட்டு தன் ப்ளாகிலே எழுதி எழுத்தாளர்னு காட்டிகிறாறு //

  ஹா ஹா ஹா சூப்பர் 🙂

  பாரா சார் நீங்க ஹெல்மெட் போட்டு வருவதைப்பார்த்து உங்களுக்கு ஹெல்மெட் அப்பா என்று பெயர் வைத்து விடப்போகிறார்கள் ஹி ஹி ஹி 😉

 • அது ஒரு விதமான எரிச்சல் படுத்துற சராசரியான கொஞ்சம் நாகரிகம் குறைவான பேச்சுக்கள் தான் நடக்கும்.

 • இது ஒண்ணுமில்லை புள்ளையை கூப்பிடப்போன இடத்திலே கால் கடுக்க நின்னு கடுப்பானதில உங்க மனசுல உள்ளதெல்லாம் அப்படியே குமுறி கொட்டி ஒரு பதிவா கொடுத்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன். பொழுது போகறத்துக்காக அந்த அம்மாக்கள் பல மாதிரி பேசத்தான் செய்வாங்க. அதை கேட்டு உங்களுக்கு ஏன் கோபம் வருது ?

 • வீட்டிலிருக்கும் படித்த அம்மாக்களுக்கு ஒரு நாளின் highlight என்பதே ஸ்கூலுக்கு போகும் அந்த சில மணித்துளிகள் தான். புதிதாக வாங்கிய ஆடை வகைகளை உறவினர் வட்டத்தில் போடடடித்து விட்டு அடுத்தபடியாக ஸ்கூல் அம்மாக்கள் போன்ற மற்ற பெண்களிடம் அணிந்து காட்டி அவர்களின் வார்த்தை இல்லாத கண்களின் மொழியில் தெரிவிக்கும் பொறாமை கலந்த பாராட்டைப் பெறுவது ஒரு இனிய சந்தோஷம். சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று. ஆண்களுக்கு இது புரியாது தான்!
  அதே போல நான் கவனித்த வரையில் ஆண்களுக்கு அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் இருப்பதில்லை, அதை விட ஒபாமா அல்லது அன்னா ஹசாரே என்று பொது வாழ்க்கையில் இருப்பவர்களைப் பற்றி பேசுவதில் தான் ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள். ஸ்கூல் அம்மாக்களாக அறிமுகமாகி இன்றளவும் நெருங்கிய தோழிகளாக இருப்பவர்கள் பலரை நான் அறிவேன். சக வயதுடைய உறவினர் அல்லாத பெண்களின் அறிமுகம் கிடைக்கும் ஒரு இடம் தான் ஸ்கூல். மாமியாரைப் பற்றியோ அல்லது நாத்தனாரைப் பற்றியோ பின்விளைவுகள் பற்றி கவலை கொள்ளாமல் மனதில் பூட்டிப் புழுங்கிக் கொண்டிருப்பதை பகிர்ந்து கொள்ளக்கூடிய தோழிகளை இனம் காண ஒரு நல்ல வாய்ப்பு!

 • //அடுத்தநாள் அநிருத்தம்மா பாட்டிலில் பாலிடால் கொடுத்தனுப்பிவிடாதிருக்க வேண்டுமே என்று நெஞ்சு பதைத்தால் நீங்கள் மனிதர்.//

  பாயசத்துக்கு பாலிடாலே தேவலை போல 🙂

 • Unga veetu amma indha pakkamellam varadhillai pola irukku. Idhaye naan ezhudhi enga vootu aaththa kannula pattirundha kadhai kandhal 😀 “Enna ivlo detailed-a describe panni irukka?” apdinu thodangi adhu baatukkum oru rendu-moonu naal pogum…sigh!

 • வீட்டு திண்ணைல உக்காந்து பொரணி கேட்ட ஃபீலிங்! மிக நன்றாய் இருக்கிறது!

 • செக்கண்ட் கிரேட்டு மம்மீஸ் சூப்பர் சார் ….

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter