இன்றைய தினம், என் வாழ்வின் பெருமகிழ்ச்சியான நாள்களுள் ஒன்று. பல வருடக் கனவான எலக்டிரானிக் கீ போர்ட் ஒன்றை [Casio CTK 2200] இன்று வாங்கினேன். பேசிக்குக்குப் பக்கத்து வீட்டு மாடல்தான். ஆனாலுமென்ன. நான் கடையனிலும் கடையன். எனக்கு இது போதும்.
பல வருடங்களுக்கு முன்னர் முதல் முதலில் புல்லாங்குழல் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு வீணைக்கு மாறி ஏழு எட்டு வருடங்கள் அதனோடு போனது. எங்காவது ஹார்மோனியம் கண்ணில் பட்டால் தப்புத் தப்பாக வாசித்துப் பார்ப்பேன். நூற்றுக்கணக்கான தப்புகளுக்குப் பிறகு கொஞ்சம்போல் அதன் சூட்சுமம் பிடிபட்டது. ஒரு ஹார்மோனியம் வாங்கவேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டேன். முடியாமலே போய்விட்டது.
பிறகு கிடார்மீது காதல் ஏற்பட்டது. என் சகோதரி வீட்டில் இரண்டு கிடார்கள் இருந்தன. யாரோ நண்பர் குடிமாறிச் சென்றபோது கொடுத்துவிட்டுச் சென்ற கிடார்கள். ஒன்று பாஸ் கிடார். இன்னொன்று லீட். பாஸை எடுத்து வந்து சுதி கூட்டி வாசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். தந்திக் கருவிகள் அனைத்துக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பது என் தீர்மானம். கிடாரில் கமக சூட்சுமம்தான் பிடிபடவில்லையே தவிர எளிய கிடார் பாடல்களை சுலபமாகவே வாசிக்க முடிந்தது. இன்று காலை கூட பனி விழும் மலர்வனம் வாசித்துப் பார்த்தேன். கேட்கும்படியாகத்தான் இருந்தது.
ஆனால் ஒரு கீ போர்டுக்கான எனது ஏக்கம் தீருவதாக இல்லை. குறிப்பாக, ட்விட்டரில் அறிமுகமான நண்பர் கார்த்திக்குடன் (@karthiktn) பழகத் தொடங்கிய பிறகு, அவர்மூலம் அறிமுகமான ஏராளமான மேற்கத்திய இசை மேதைகளின் படைப்புகளைக் கேட்க ஆரம்பித்த பிறகு கை சும்மா இருக்கமாட்டேனென்கிறது. சற்று ஓய்வு கிடைத்தாலும் கேட்டதை வாசித்துப் பார்க்கச் சொல்லி உள்ளுக்குள் ஒரு குண்டூசி குத்திக்கொண்டே இருந்தது.
இதெல்லாம் எதற்கு என்ற எண்ணம் எழாமலிருப்பதில்லை. மற்றதெல்லாம் மட்டும் எதற்கு என்ற பதில் வினாவும் கையோடு வந்துவிடுகிறது. இசை என்பது போதையல்ல. போதம். தொடக்கம் முதலே அது வெறும் பொழுதுபோக்கல்ல என்ற தீர்மானமான எண்ணமுடன் வளர்ந்தவன் என்பதால் ஒவ்வொரு கருவி சித்திக்கும்போதும் பரவசமாகிவிடுகிறது.
ஒரு முழுநேர இசைக்கலைஞனாகவேண்டும் என்று மிகச் சிறு வயதுகளில் ஆசைப்பட்டிருக்கிறேன். புத்தி தெளிந்தபோது எனக்கு அத்தகுதி இல்லை என்று உணர்ந்தேன். என் மொழி இசையல்ல; எழுத்து என்று கண்டு தேர்ந்தேன். இருப்பினும் செகண்ட் லேங்குவேஜாக இதுவும் இன்றுவரை கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறது.
ஒரு நாளில் சுமார் பதினெட்டு, பத்தொன்பது மணி நேரங்கள் எழுதும் வேலையில் இருப்பவன் நான். கீ போர்டை வாசித்துப் பார்க்க எங்கே நேரமிருக்கும் என்ற சந்தேகம் என் மனைவிக்கு இருக்குமென்று நினைக்கிறேன். ஆயினும் என் எந்த விருப்பத்துக்கும் தடை போடாத அவளது சுபாவம்தான் என்னை இப்படியெல்லாம் எண்ணியபடி வாழவைக்கிறது.
கடந்த அரை மணிநேரமாக என் புதிய கேஸியோ கீ போர்டில் ஹவ் டு நேம் இட்டில் இருந்து ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். அக்கம்பக்கத்தாரிடமிருந்து இன்னும் புகாரேதும் வரவில்லை என்பதால் வாசிப்பு நன்றாக இருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.
மனித வாழ்க்கை அற்ப சந்தோஷங்களால் ஆனது. என் சந்தோஷம், இது.
//கடந்த அரை மணிநேரமாக என் புதிய கேஸியோ கீ போர்டில் ஹவ் டு நேம் இட்டில் இருந்து ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். அக்கம்பக்கத்தாரிடமிருந்து இன்னும் புகாரேதும் வரவில்லை என்பதால் வாசிப்பு நன்றாக இருப்பதாகவே நினைத்துக்கொள்கிறேன்.//
அவர்களின் பொறுமையின் எல்லை இன்னும் அதிக நேரமாக இருக்கக்கூடும். 😉
//கடந்த அரை மணிநேரமாக என் புதிய கேஸியோ கீ போர்டில் ஹவ் டு நேம் இட்டில் இருந்து ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
கடந்த அரைமணிநேரமாக புதிய கீபோர்டில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.ஓகே.அப்புறம் எப்படி இந்தப்பதிவு? கீபோர்ட்ல டைப் அடிக்கமுடியும்னு தெரியும்.இந்தக்கீபோர்ட்லயுமா? ஹி ஹி.
// இசை என்பது போதையல்ல. போதம் //
வக்காலி நீ எழுத்தாளன்!
புது கீபோர்டுக்கு வாழ்த்துகள்! கமகமே இல்லாத கீபோர்டா, பிட்ச் பென்டர் இருக்கும் கீபோர்டா?
முடிந்தால் வாசித்த பிட்டை ரெகார்ட் பண்ணி அனுப்பி வைக்கவும். நோட்ஸ் எல்லாம் எப்படி, நீங்களே எழுதிடுவீங்களா?
பிட்ச் பெண்டர் இல்லை. நான் வாசிக்கிற லட்சணத்துக்கு இது போதும் என்று முடிவு செய்துவிட்டேன். நோட்ஸ் – எனக்கு அது பிரச்னையில்லை. காதில் விழும் இசை, சுரமாகக் கண்ணில் ஓடிக்கொண்டே இருக்கும். சிறு வயது முதலே இது பழக்கம். யாராவது கேட்டால் எழுதித் தரவும் முடியும். நான் எனக்கென்று எழுதி வைப்பதில்லை.
KeyBoard ku POO Super. 🙂
ஒரு உண்மையான சங்கதி.. தேடல் கொண்டவர்கள் எப்போதும் இசையின் மீது அலாதி பிரியத்துடன் இருப்பார்கள் அந்த வகையில் உங்களின் அனுபவங்களைப் போல எனது இசை இன்ப கனவுலகம் விரிந்து நடக்கிறது என் மனவானில்… இப்போது!
அன்பு பாரா எந்த ஒரு இசைக்கருவியாக இருந்தாலும் அதை வாசிக்கும்போது பார்க்க ஆவலாக இருக்கும். நாமும் வாசிக்க வேண்டுமென்றும் உள்ளம் அடித்துக்கொள்ளும். ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் ஒரு ஆசிரியரும் முறையான பயிற்சியும் இல்லாவிட்டால் எந்த ஒரு இசைக்கருவியையும் வாசிக்க முடியாது. வருடக்கணக்கான கடுமையான பயிற்சிக்குதான் எந்த ஒரு இசைக்கருவியும் கட்டுப்படும். தங்களுக்கு தெரியாததல்ல. எனினும் தங்கள் இசையார்வம் தங்களை வல்லுனராக்கும் என நம்புகிறேன்.
ராஷித் அஹமத்: நான் முறைப்படி கீபோர்ட் கற்றுக்கொண்டவனல்லன். ஆனால் சுலபமாகவே வாசிக்க வருகிறது. எப்படி என்று கேட்காதீர்கள். எனக்கே தெரியாது.
வாழ்த்துகள்
ராஷித் அஹமத், என்வரையில் வாய்ப்பட்டோ அல்லது வேறேதோ வாதியக்கருவியோ வாசிக்கப்பயின்றவர்கள் எளிதில் கீ போர்டில் புகுந்து விளையாடுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஏன் நானே கேள்வி ஞானத்தால் கீ போர்டு வாசிப்பவன்தான். வீணை போன்ற தந்தி வாத்தியம் வாசிப்பதே பெரும் சாதனை. பாரா தன்னை கடையனிலும் கடையன் என்று சொல்லிக்கொண்டாலும் கீ போர்டில் வித்தை காட்டுவார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. போகின்ற போக்கில் வசனத்துக்கு பதிலாக இசையமைக்க சொல்லி TV சீரியல் இயக்குனர்கள் வற்புறுத்தாமல் இருந்தால் சரி. அப்படி வற்புறுத்தினாலும் நமக்கு நல்லதொரு இசையமைப்பாளர் கிடைபாறேன்பது சர்வ நிச்சயம்.
பாரா சார் / ஸ்ரீனிவாசன் !! பின்ன ஏன் சார் எனக்கு மட்டும் எதுவுமே வர மாட்டேங்குது ? ஆர்வமும் பொறுமையும் ஒரு காரணமோ ? ஒரு வேளை கடவுள் என்னை மண்டுகமாக படைத்து விட்டானோ என்று தெரியவில்லை. கீ போர்டு தபேலா புல்லாங்குழல் எல்லாவற்றையும் முயற்சி செய்து எனக்கு எதுவும் சரி பட்டு வராது நான் ஒரு ஞான சூனியம் என்று முடிவு செய்து விட்டு விட்டேன்.
hey…..even myself,who is 63 years old,has bought a keyboard just recently and enjoys playing on it .keep iy up ……
இளையராஜா அவர்களின் ஒரு note ஐ ஆவது வாசிக்கவேண்டும் என்று நினைத்துவிட்டாலே நீங்கள் மகா கலைஞன் என்று அர்த்தம். அவர் இசையை எல்லாம் கேட்பதற்கே ஞானம் வேண்டும்.