ராயல்டி விவகாரம்

ராயல்டி என்பது என்னவென்றே புரியாமல் இளையராஜா விவகாரத்தில் பலபேர் பொங்குவதைக் காண்கிறேன். பாமர ரசிகனுக்கு இந்த காப்பிரைட், ராயல்டியெல்லாம் சம்பந்தமில்லாதவைதான். ஆனால் கருத்துச் சொல்ல வரும்போது மட்டும் எப்படியோ ஒரு சம்பந்தம் நேர்ந்துவிடுவது கருவின் குற்றமல்ல. காலத்தின் குற்றம்.

நான் சில புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். சுமார் அறுபது வரும். அவற்றில் சுமார் இருபது சதவீதப் புத்தகங்கள் எழுதப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஆண்டுதோறும் சில ஆயிரம் பிரதிகள் விற்பவை. இன்னொரு பத்து சதவீதப் புத்தகங்கள் எப்படியாவது ஆயிரம் பிரதிகளைத் தொட்டுவிடும். மற்றவை வருடத்துக்குத் தோராயமாக ஐந்நூறு பிரதிகள் போகும். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மட்டும் எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்றுவரை மொத்தமாக ஆயிரம் விற்றிருக்கலாம்.

எழுதுபவனுக்கு இந்தப் புத்தகங்களின் மொத்த விற்பனையில் பத்து சதவீதம் ராயல்டி என்பது கணக்கு. [சில பதிப்பாளர்கள் 7.5 சதம்தான் தருவார்கள்] இந்த ராயல்டி தொகை ஒவ்வொரு ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்புக்குப் பிறகு ஏதாவது ஒரு சுபயோக சுப தினத்தில் தரப்படும் என்று சொல்லப்படும். சில சமயம் வரலாம், பல சமயம் தள்ளிப் போகலாம். பலபேருக்கு வராமலேகூடப் போவதுண்டு. நேர்மையான பதிப்பாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் கொடுத்துவிடுவார்கள். அவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் கூடக் கிடையாது.

விஷயம் அதுவல்ல. இப்போது நீங்கள் என் புத்தகம் ஒன்றைக் காசு கொடுத்து வாங்குகிறீர்கள். என்றால் அந்தக் குறிப்பிட்ட பிரதி உங்களுக்குச் சொந்தம். நான் காசு கொடுத்து வாங்கியதை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று நினைத்து நீங்கள் அதை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு விற்க ஆரம்பித்தால் அது சரியா?

அதன் பெயர் மீறல். எழுத்தாளன் வழக்குத் தொடர முடியும். ஏனெனில் அவன் அச்சிட்டு விற்கும் உரிமையை ஒரு பதிப்பாளரிடம் கொடுத்திருப்பான். அதற்கான ராயல்டி அவனுக்கு வந்துகொண்டிருக்கும்.

உடனே இணைய சமூகம் என்ன கேட்கும்? நீ ரொம்ப யோக்கியமா? நீ பத்து புத்தகங்களைப் பார்த்துத்தானே எழுதினாய்? இணையத்தைப் பயன்படுத்தித்தானே எழுதினாய்? உன்னுடையது என்ன ஒரிஜினலா? அடிப்படையே ஒரிஜினலாக இல்லாத ஒன்றை யார் என்ன செய்தால் உனக்கென்ன? இலவச பிடிஎஃப் வினியோகித்தால் என்ன தவறு?

இது பதில் தேவையற்ற, வெறும் அக்கப்போருக்கான வினா. கதையற்ற ஓர் எழுத்து யார் எழுதினாலும் அடிப்படை ஒன்றாகவே இருக்கும். சரித்திர, சமகால நடப்புகளைச் சொல்லும்போது பலரும் ஒரே விஷயத்தைச் சொல்லுவது இயல்பானது. அதன்மீதான நமது பார்வை என்ன என்பதில்தான் வித்தியாசம் தெரியும்.

இதே அடிப்படையில்தான் இசையும் அதற்கான ராயல்டியும் பொருந்தும்.

திரை இசை என்பது இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற மூவரின் பணி ஒருங்கிணைப்பில் உருவாகிறது. இந்த மூவருக்கும் சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளரிடம் இசையமைப்பாளர் எம்மாதிரியான ஒப்பந்தம் போடுகிறார் என்பது ஒன்று. முன்னாள்களில் இசை உள்பட அனைத்துக்குமான உரிமை தயாரிப்பாளரிடம்தான் இருக்கும். இன்று அப்படியல்ல. நடிகர்களே ஏரியாவாரியாக உரிமை கேட்டுப் பெறுகிற காலம் இது. இசை உரிமை இசையமைப்பாளரிடம்தான் இருக்கும். வரிகளின் உரிமை கவிஞருக்கே சொந்தம். குரல் உரிமை,அதைக் கொடுத்தவருக்கு.

இளையராஜா என்ன கேட்கிறார்? என் இசையமைப்பில் வெளியான பாடலை நீ தனி மேடைகளில் பாடி சம்பாதிக்கிறபோது இசை உரிமைக்கான ராயல்டி தொகையை எனக்குக் கொடுப்பதுதான் முறை என்று சொல்லுகிறார். இதைக் கவிஞர்களும் கேட்கலாம். பிழையில்லை. என்னைக் கேட்டால், பாடகரானவர் தன்னை முன்னிறுத்தி மேடைக்கச்சேரி செய்யும்போது தயாரிப்பாளர்களிடமும் குறிப்பிட்ட பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கோரவேண்டும் என்பேன்.

இளையராஜா கேட்கும் ராயல்டி என்பது லட்சங்களில் அல்ல. சொத்தை எழுதி வைக்கச் சொல்லவில்லை அவர். பயன்பாட்டுக்கான மரியாதைத் தொகை மட்டுமே. பண்பலை வானொலிகள், தொலைக்காட்சியின் இசை சானல்களுக்கும் இது பொருந்தும்.

இளையராஜா மட்டுமின்றி, இன்று இசையமைப்பாளர்களாக இருக்கும் அத்தனை பேருமே இந்த வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இவர் தாமதமாக விழித்துக்கொண்டவர் என்பது மட்டும்தான் பிரச்னையே தவிர, கேட்டதில் பிழையே இல்லை.

எழுத்தோ இசையோ ஓவியமோ வேறெதுவோ. எந்த ஒரு கலைஞனுக்கும், அவன் பங்களிப்புக்கான ஒழுங்கான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென்ற அடிப்படை அறம் நமது சமூகத்தில் அறவே இல்லாது போய்விட்டதுதான் பிரச்னை.காப்பிரைட், ராயல்டி சம்மந்தமான அடிப்படை அறிவு இல்லை என்பது அடுத்தப் பிரச்னை.

பாரதியாரின் பாடல்களுக்கான உரிமை ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் இருந்தது. தேசிய கவியின் பாடல்கள் இப்படி ஒரு குறிப்பிட்ட நிறுவன முதலாளியிடம் இருப்பது சரியல்ல; அது மக்களுக்குப் பொதுவாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டபோது செட்டியார் அதை ஏற்றுக்கொண்டு நாட்டுடைமை ஆக்கினார் [இதைப் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.]. பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்கு யார் ராயல்டி கொடுத்தார்கள்? ஒருவேளை அவர் எழுத்தின்மூலம் சம்பாதித்திருந்தால் உரிமை செட்டியார் வசம் வந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கலாம். அவரது குடும்பத்தாரிடமே இருந்திருக்கும். அவர்களுக்குக் கொஞ்சம் பயன்பட்டிருக்கும். அதில்லாத சூழலில் பாரதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவரது படைப்புகள் பொதுவுடைமை ஆகவேண்டியதன் அவசியம் கருதி, நல்ல நோக்கமுள்ள ஒரு தனி நபர் விட்டுக் கொடுத்தபடியால்தான் இன்று ஆளாளுக்கு பாரதியை உரிமை கொண்டாட முடிகிறது.

இளையராஜா பாரதிக்குச் சமமான கலைஞர்தாம். அதனாலேயே பாரதியைப் போலவே ஏழைமையில் வாடிச் சாகவேண்டும் என்று சொல்ல நாம் யார்?

இவ்வளவு சொல்கிறேனே, நானே இவ்விஷயத்தில் சில தவறுகள் செய்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இரு பெரும் தவறுகள் செய்தேன். சும்மா இணையத்தில் கிடக்கிறதே என்று ரமணீதரன் கந்தையாவின் டிஜிட்டல் ஓவியம் ஒன்றையும் நந்தா கந்தசாமி என்ற ஓவியரின் ஓவியம் ஒன்றையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி கோரிப் பெறாமல் புத்தகங்களுக்கு அட்டையாகப் பயன்படுத்திவிட்டேன் [என் புத்தகங்களுக்கு அல்ல. வேறு இருவருடைய நூல்களுக்கு].

இது பெரிய பிரச்னையாகி இணைய சமூகம் என்னை நார்நாராகக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்கவிட்டு அழகு பார்த்தது. எனக்கு அதில் அவமானத்தைக் காட்டிலும் குற்ற உணர்ச்சியே பெரிதாக இருந்தது. பலமாத காலம் நிம்மதியின்றி, உறக்கமின்றி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன்.

சத்தியமாகத் திமிரினால் செய்ததல்ல; செய்வது பிழை என்றே உணராமல் செய்த காரியங்கள் அவை. ஆனாலும் பிழை, பிழைதான் அல்லவா? சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் மன்னிப்புக் கோரி, உரிய தொகையை நிறுவனம் அளித்துவிட்டது என்றாலும் காப்புரிமை தொடர்பான அடிப்படைகளை அறிவதற்கு அந்தப் பேரிழப்பும் வலியும் விலையாக வேண்டியிருந்தது. அச்சம்பவங்களுக்குப் பிறகு கனவிலும் நான் அப்படியொரு காரியம் செய்ய முனைந்ததில்லை. என்னுடைய புத்தகங்களுக்கு ஆதாரங்களாகப் பயன்படுத்தும் பிற புத்தகங்களை மட்டுமல்ல; பத்திரிகைச் செய்திக் குறிப்புகள், இணையத்தளத் தகவல்கள் வரை எங்கிருந்து எதற்காக எடுக்கிறேன் என்பதை ஒவ்வொரு புத்தகத்திலும் தவறாமல் தந்துவிடுகிற வழக்கம் அதன்பிறகே வந்தது. மிகவும் அவசியம் என்று நான் கருதிய சில ஆவணங்களைக் காசு கொடுத்தும் வாங்கியிருக்கிறேன்.

கலைஞர்களைக் கொண்டாடாவிட்டாலும் தவறில்லை. ஆனால் துரோகம் இழைக்கக்கூடாது. இலவச எம்பி3 டவுன்லோடுகள், இலவச திருட்டு வீடியோ டவுன்லோடுகள், இலவச பிடிஎஃப் டவுன்லோடுகள் என்பவையெல்லாம் இணைய உலகில் சாதாரணம். இது ஒருவித உழைப்புச் சுரண்டல் என்பது சராசரி ரசிகனுக்கு உறைக்க நாளாகலாம். சக கலைஞர்களுக்குக் கூடாதல்லவா?

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter