அழகும் பொருத்தமும் (எஸ். கார்த்திகேயன்)

“ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்” என்றொரு தொடரை எழுத்தாளர் Pa Raghavan அவரது டாட் காமில் எழுதி வருகிறார். தினம் ஒன்று எழுதுகிறார் போல – இன்று 7 வது அத்தியாயம். ஃபேஸ்புக் ஸ்கிரால் செய்கையில் அவர் பக்கத்தில் 6 வது பாகத்தின் லிங்க் பார்த்து உள்ளே நுழைந்தேன். ஒவ்வொரு அத்தியாயமாகப் படித்து 6 வதை அடையும்போது 2 மணியைத் தாண்டியிருந்தது. தேதி பார்த்து “பேஜ் ரிஃப்ரெஷ்” செய்தால் நான் எதிர்பார்த்த மாதிரியே 7 வது அத்தியாயத்தை ஏற்றியிருந்தார். அதையும் படிச்சாச்சு.

அவரை ஒரு வாசகனாக கிழக்கு பதிப்பகம் மூலமும், அவரது புத்தகங்கள் மூலமும், கின்டில் புத்தகங்கள் மூலமும் தான் அறிவேன். அவர் நானிருக்கும் வாட்ஸ் அப் குரூப் ஒன்றிலும் இருக்கிறார். நாங்களெல்லாம் மொக்கை போட்டுக் கொண்டிருக்கும் போது அமைதியாகக் கவனிப்பார் (என்று நினைக்கிறேன்). அவ்வப்போது அவரது பக்கங்களிலும், கமெண்ட்களிலும் நண்பர் “Selva Murali” – யை மென்ஷன் செய்வார். அவர் வெறும் முரளி யாக இருந்த போதே தினமலரில் என்னுடன் பணி மூலம் பழக்கம். எனவே போனில் எப்போதாவது பேசும்போது பா.ரா பற்றியும் இரண்டொரு நிமிடங்கள் பேசுவோம்.

சரி. மெயின் மேட்டருக்கு வருவோம். சென்னை நகரத்துடனான தனது உறவைச் சொல்லி ஆரம்பிக்கும் இந்த “ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்” தொடரில் அப்படியே மெள்ள வேகமெடுத்து வேலிக்காத்தான் புதர்கள், குரோம்பேட்டை மண் சாலைகள் எனச் சென்னையின் அந்தக்கால (1980கள்) சித்திரத்தை வரைந்து கொண்டே சென்று, அக்காலத்தில் தான் கண்ட மனிதர்களை விவரித்து, சென்னையின் குரோம்பேட்டை, பர்மா பஜார், சைதாப்பேட்டை என சில ஏரியாக்களை தன் அனுபவத்தினூடே வர்ணித்து அலைந்து திரிந்து பத்திரிகைப் பணியில் சேர்ந்த அனுபவத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார். இடையில் எல்டாம்ஸ் சாலை பைங்கிளி அனுபவங்களும் சுவாரஸ்யக் கோவையுடன். பைங்கிளிப் புத்தகங்கள் என்பது இவர் வைத்த பெயரா? அல்லது முன்பே உள்ளதா என்பது தெரியவில்லை.

2007 முதல் 2010 வரை மூன்று வருடங்கள் சென்னையில் நானும் குப்பையை அங்கங்கு கொட்டினேன் என்ற வகையில் இத் தொடரில் எனக்கு சில பகுதிகள் நெருக்கமாகத் தோன்றின. அவரது பர்மா பஜார் அனுபவத்தைப் படித்தபோது, நான் சென்னையில் இருக்கையில் பர்மா பஜாரில் 15 ரூபாய் 20 ரூபாய் என்று எல்லா மொழிப் பட சி.டிக்களும் விற்ற காலத்தில் பல கடைகள் ஏறி இறங்கி பேரம் பேசி ஒரு சி.டி 12 ரூபாய் என்று மூட்டை கட்டி வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அதிலும் காசு மிச்சம் பண்ண வேண்டி ஒரே சிடியில் 2 ஹாலிவுட் படம், 4 படம் கலெக்ஷன் என்றெல்லாம் வாங்கிய அந்த மூட்டை இன்னும் அப்படியே கிடைக்கிறது. அமேசான்களும், நெட்பிளிக்ஸ்களும் கடை விரித்த பிறகு அந்த மூட்டை விரிக்கப்படவில்லை.

அதே போல சைதாப்பேட்டை பற்றிய வர்ணனையும். நான் சென்னையில் இருந்த போது சைதாப்பேட்டை தாண்டி தான் கிரீம்ஸ் ரோடில் இருந்த என் அலுவலகம் செல்ல வேண்டும். பல முறை பஸ் மாற வேண்டி சைதாப்பேட்டையில் இறங்கி வெகுநேரம் நின்று குரோம்பேட்டைக்கு அடுத்த பஸ் கிடைத்துப் போவேன். அவர் ஜாகையும் குரோம்பேட்டை என்று தெரியாது. ஒரு வேளை தெரிந்திருந்தால் போய்ப் பார்த்திருப்பேனோ, என்னவோ?

சைதாப்பேட்டை ஆறு, பன்றிகள் பகுதிகளில் அசிங்கம் என்று ஒருவர் தாண்டி வரும் பகுதிகளைக் கூட அருவருப்பில்லாமல் எழுதியிருக்கிறார். காரணம் அவரது மொழி ஆளுமை. அவருக்கென்று ஒரு தனிப் பாணி. அழகான பொருத்தமான சொற்களைப் புகுத்தி விடுகிறார்.

பேட்டையின் கல்விக் காவலர் ஜெகத் ரட்சகன் என்று அவர் பற்றி ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டதும் எனக்கு ஒரு விதத்தில் நெருக்கமே. அவரது பாரத் யுனிவர்சிடியில் ஆங்கில விரிவுரையாளராக சிலகாலம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அது ஒரு கொடுங்கனவு. அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

நல்ல, ரசிக்கும் படியான கட்டுரைகள். இத் தொகுப்பு ஒருநாள் கண்டிப்பாக நூலாக வரும், குறைந்த பட்சம் கின்டில் மின் நூலாகவேனும் வரும் என்று எதிர் பார்க்கிறேன். ஆனாலும் ஹோட்டலில் இருந்து பேக் செய்து பார்சல் வாங்கி வீட்டில் வந்து சாப்பிடும் பண்டத்தை விட மாஸ்டரின் கல்லுக்குப் பக்கத்திலேயே நின்று சுடச்சுட அப்படியே தட்டில் வாங்கிச் சாப்பிடும் பண்டத்திற்கு ருசியதிகம் அல்லவா? ஆகவே, feedburner மூலம் சந்தா ஆப்ஷனைக் க்ளிக்கி வைத்திருக்கிறேன். வரவரப் படித்து விட வேண்டும்.

நன்றி: Karthikeyan Yeskha

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி