தப்பிப்பதற்கான முதல்படி தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம்தான். அந்த எண்ணம் அவனுக்கு கடந்த அத்தியாயத்திலேயே உதித்துவிட்டது. இப்போது அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்?
அவன் கிடக்கட்டும். வாழ்வின் எத்தனையோ சூழல்களில் இருந்து நாம் தப்பிக்க நினைத்திருப்போம். நாம் ஏன் ஒரு சூழலில் இருந்து தப்பிக்க நினைக்கிறோம்? அந்த சூழல் நமக்கு உவப்பில்லாதபோது. அப்படித்தானே? அப்படி நாம் தப்பிக்க நினைத்த அந்த உவப்பில்லாத சூழலை நாம் இந்த அத்தியாயத்தில் சந்திக்கும் சூழலுடன் ஒப்பிட்டால் நமது ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என நினைப்போம்.
இருக்கட்டும். அவன் பயணிக்கும் ஒரு கப்பல், அந்தக் கப்பலை கட்டுவிக்க உபயோகப்படுத்தியிருக்கும் பொருள், அந்தக் கப்பல் பயணிக்கும் காரணம், அந்தக் காரணத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் சிரமங்கள், கூரையில் இருக்கும் சில விஷயங்கள் என இப்படி பலப்பல விஷயங்கள் இந்த அத்தியாயத்தில் வருகின்றன. அவற்றில் ஒன்றிலேனும் நீங்கள் உங்கள் மனதைப் பறிகொடுத்து விடுவீர்கள். அப்படியோர் பிரமாண்ட உலகம் அது.
அதிகம் பேசும் அவனுக்கு தரப்படும் தண்டனையைக்கூட நம்மால் யூகிக்க முடியாது ஆனாலும் அந்தத் தண்டனை தான் எவ்வளவு கொடூரமானது?
நீல நகரத்தின் நிழல் என்ற சொற்சேர்க்கையே மிகவும் சிறப்பாக இருக்கிறதே என்றால் அந்த நகரத்தைப்பற்றி குறிப்பிடப்படும் விஷயமும் ஆச்சர்யம்தான். அப்படி ஒரு நகரம் உண்மையில் இருக்க முடியுமா?
மிகுபுனைவின் உச்சமாக நகரும் கதையில் அந்தக் கப்பல் பெரும் ஆபத்தில் சிக்குகிறது. சிக்குகிற ஆபத்தை சிதைக்கத் தன்னால் முடியும் என்று நம்புகிறான் அவன். அவன் காப்பாற்றப் போவது யாரை? அவர்களையா? தன்னையா? என்ற கேள்விகளுடன் முடிகிறது இரண்டாவது அத்தியாயம்.