சிறுகதை

அபூர்வ சகோதரிகள்

கலி முற்றிய காலத்தில், மனுஷத்தனம் மரித்துவிட்ட சென்னைப் பட்டணத்தில், ஒரு கூட்டுக் குடும்பத்தில் என்னை உத்தியோகம் பார்க்க விதித்து அனுப்பி வைத்தான் எம்பெருமான்.

பத்தாங்கிளாஸ் படித்தவள் என்பது தெரிந்தால் பெருக்கித் துடைக்கச் சொல்ல அனேகமாக யார் மனமும் இடம் கொடுக்காது என்பது என் அனுபவ ஆசான் போதித்த பாடமாகையால், பணியாற்றப் போகுமிடங்களில் நான் என் கல்வித் தகுதி குறித்து ஒருபோதும் பிரஸ்தாபிப்பதில்லை. அப்படியே துருவித் துருவி கேட்கும் சில ஜீவராசிகளும் உண்டு இவ்வுலகில். அச்சமயங்களில் வழக்கமான வேலைக்காரச் சலிப்பை மேல்போர்வையாகப் போர்த்திக்கொண்டு, ‘ஆமா, படிச்சிக் கிழிச்சேன் போ’ என்றோ, இதற்கொத்த வேறு விதமான சுவாரசியமற்ற சொற்களைக் கொண்டோ பேசுபொருளை மாற்றிவிடுவேன்.

ரொம்ப சுலபம். குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட வயதில் இன்னும் இரண்டு, மூன்றைக் குறைத்துச் சொல்லி, அனுதாப ஓட்டு பெற்றுவிடலாம். ஐயோ, பாவம் சின்னப் பெண் தலையில் இப்படி எழுதிட்டானே.

இருக்கட்டும். உருப்படாத புருஷன் வாய்த்தால் உத்யோகம் பெண்கள் லட்சணம். புரைதீர்ந்த நன்மைக்காக வாய்மையிடத்தில் பொய்யை வைத்தே தீரச் சொல்கிறது வாழ்க்கை.

ஏழெட்டு வீடுகள் பார்த்துவிட்டு, ஒரு மாசம் முன்புதான் இந்த வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்கு அல்ல. ஆத்துக்கு. மாமி மிகவும் ஆசார சீலி. விடிந்தால் போதும், சாமிகளுடன் பிஸினஸ் நிகழ்த்த ஆரம்பித்துவிடுவாள்.

இருபுறமும் சங்கு, சக்கரம் ஏந்தியவனே, துளசி அணிந்தவனே, நெற்றி நிறைய திருமண் தரித்தவனே, அவனே, இவனே, நமஸ்காரம். கட்டத் தொடங்கியிருக்கும் வீட்டுக்கு மேஸ்திரி வஞ்சனை எண்ணாமல் நீ பார்த்துக் கொள்வாய். அழகிய தாமரையின் மேல் அமர்ந்து முறுவல் புரிபவளே, உனக்கும் ஒரு நோட்டீஸ். எண்ட்ரன்ஸ் எழுதியிருக்கும் கடைசிப் பையனுக்கு அண்ணா பல்கலையிலேயே அனுமதி கிடைக்கச் செய்வது உன் பொறுப்பு. ஹிரண்யவர்ணாம் ஹரிணீ, இரு மாட்டுப் பெண்களும் முறைத்துக்கொண்டு நிற்காமல் குடும்ப கவுரவம் காக்கச் செய்வது உன் கடமை.

எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் அந்த நேர்மை. ஆமாம். நான் கடவுளிடம் பேரம்தான் பேசுகிறேன் என்று மிகவும் வெளிப்படையாகச் சொல்வார்.

”வாரத்துக்கு எட்டுநாள் நான் விரதம் இருக்கேன். தினசரி பூஜை பண்றேன். அவனை நினைக்காத நாளே கிடையாது. எனக்கு வேண்டியதைக் கேட்டால் என்ன தப்பு? கேளுங்கள், கொடுக்கப்படும். தட்ஸ் ஆல்” என்பார் மிகத் தீர்மானமாக.

எட்டுபேர் கொண்ட குடும்பம், வாரக் கடைசி நாளின் காலை உணவுக்கு ஒன்றுசேரும். பத்து மணிக்கு நான் துணிகள் துவைத்து என் பிறப்புரிமையை நிலைநாட்டத் தொடங்கும்போது, குடும்பம் குழம்பு சாதத்திலும் கடந்த வாரத் தலைப்புச் செய்திகளிலும் இருக்கும். முக்கால் கிரவுண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அது பற்றிய பேச்சு வரும்போது மாமியின் முகம் ஒரு குழந்தையினுடையது போலாகிவிடும்.

அவருக்கு மூன்று மகன்கள். இரண்டு பேருக்குத் திருமணமாகி விட்டது. மூன்றாமவரின் படிப்பும் முளைத்திருக்கும் வீடும் நல்லபடியாக முடிந்தாக வேண்டும் அவருக்கு. “பாருங்கடா, ஒரே காம்பவுண்ட். ஒரே வீடு. மூணு போர்ஷன். இந்த பைத்தியமும் படிச்சு முடிச்சி, ஒரு கல்யாணம் பண்ணிண்டுடுத்துன்னா, உன் கடமை முடிஞ்சசுடும். அப்புறம் ஒவ்வொருத்தனோடவும் ஒரு வாரம் வந்து இருப்பேன். உட்கார்ந்த இடத்துக்கு சாதம் வந்து விழணும். அப்புறம், இஷ்டப்படி ராமா, கிருஷ்ணான்னு என் ஆத்துக்காரரைக் கூட்டிண்டு கிளம்பிடுவேன்.” என்று ஒரே வசனத்தை 1349வது முறையாக ஒலிபரப்புவார். (நான் வருவதற்கு முன் எத்தனை முறை ஒலிபரப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிய எனக்குமுன் இங்கிருந்த கனக லட்சுமியைக் கேட்க வேண்டும். ஆனால் கனகா இப்போது துபாய் போயிருக்கிறாள்.)

“இந்த தனித்தனி போர்ஷன் சமாசாரமும் தான் பிடிக்கலை. போர்ஷன் தனித்தனியா இருந்தாலும் சமையல் ஒண்ணாவே இருக்கட்டுமே” என்பார் மாமியின் ஹார்ட் அட்டாக் வந்த கணவர்.

நான் மிகவும் ரசித்து அனுபவிக்கும் தருணம் அது. கான்க்ரீட்டில் அவர் ஒரு கட்டடம் கட்டுகிறார். அதை ஒரு வீடாக்கும் பொறுப்பைத் தலையில் சுமந்திருக்கும் இரு மருமகள்களும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஆவலுடன் அவர்களின் முகங்களை கவனிக்கிற விநாடி, என் வாழ்வின் கவித்துவக் கணங்களுள் ஒன்று.

ஆனால் உலகம் தெரிந்த மாமி அந்தப் பேச்சை முளையிலேயே கிள்ளிவிடுவாள். மாமியும் அவரது பழமொழிகளும். தாயும் பிள்ளையும், வாயும் வயிறும். மேலும் உறவு என்பது ஒரு சமையலில் மட்டுமே ஒளிந்திருப்பது அல்ல. ஒத்த உணர்வு என்பது ஒரு லயம். நன்கு இழுத்துக் கட்டப்பபட்ட தம்பூராவின் தந்தியை மீட்டும்போது எழும் நாதத்துக்குச் சமமானது அது. (மாமிக்குக் கொஞ்சம் சங்கீதம் தெரியும். “மாருபல்க” எனும் ஒரு தெலுங்குப் பாட்டை அடிக்கடி சுமாரான சுருதியுடன் பாடுவார். சமயத்தில் குரல் சதி செய்து அவரை அவமானத்துக்கு உள்ளாக்கும்போது ‘வயசாயிடுத்து. இப்பல்லாம் முடியறதில்லை’ என்பார். எப்போதாவது முடிந்திருக்க வேண்டும்.)

என் அனுபவத்தில், நான் வேலை பார்க்கும் வீடுகளில் உள்ளவர்களைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு அதிகபட்சம் மூன்று நாட்கள் போதும். நல்ல மாதிரியா, சிடுமூஞ்சியா, தாராள உள்ளம் படைத்தவர்களா, கஞ்சூஸா, வம்புப் பிரியரா, வதந்திப் பிரியரா, நல்லுறவாளர்களா, அன்புடன் பிரியப் போகிறவரா – என மனக் கண்ணில் விஸ்வரூப தரிசனம் விழுந்துவிடும். அதற்கேற்ற மாதிரி அவர்களுடன் என் பேச்சு வார்த்தை எல்லைகளை வகுத்துக் கொள்வேன்.

ஆனால் என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடியாத பிரகிருதிகளாக இருந்தார்கள், மாமியின் மாட்டுப் பெண்கள். இரண்டு பேர். இரண்டு அழகிய புதிர்கள்.

என் குடிகாரப் புருஷனை நான் சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று, எனக்கு அவர்களின் பெரிய உத்யோகத்துப் புருஷர்களைப் பார்த்ததும் தோன்றிவிட்டது. அட ஒருத்தராவது, ஒரு தினமாவது பார்க்கக் கிடைக்க வேண்டுமே! அவர்கள் எப்போது வீட்டுக்கு வருகிறார்கள், எப்போது கிளம்புகிறார்கள், நள்ளிரவு வீடு திரும்புபவர்கள் பெண்டாட்டி சாப்பிட்டாளா, எத்தனை வேளை சாப்பிட்டாள், என்ன சாப்பிட்டாள், வேறென்ன விசேஷம் என்று விசாரிப்பார்களா, அதற்கெல்லாம் அவகாசம் இருக்குமா? அட, அன்புடன் ஒரு முத்தம்? பாசமுடன் ஒரு பார்வை?

இவர்கள்தான் அன்றைய தினத்தில் நடந்ததைச் சொல்வார்களா, ஒரு முழம் பூ வாங்கி வராதது பற்றி இனிய சண்டை போடுவார்களா… எப்போது, நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கும், ஒரு மணிக்குமா… ரொம்ப ஆச்சர்யமாகத்தான் இருக்கும் எனக்கு. இவர்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்தது அவரவர் கணவர்களையா, மாமியாரையா என்று சந்தேகம் வரும், சமயத்தில். ஆனால் ஒரு முகச்சுளிப்பும் சலிப்பும் அவர்கள் முகத்தில் பார்த்ததில்லை நான். அவரவர் உலகின் கதவு, ஜன்னல்களை இழுத்துச் சாத்தி, கொக்கி மாட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும் நான் அதிகம் கண்டதில்லை. இருக்கியா, இருக்கேன். சாப்டியா, சாப்டேன். சவுக்கியமா, சவுக்யம். கடைக்குப் போறேன், நீ வரியா. இல்லை. நான் வரலை. நீ போயிட்டு வா. காஸ்காரன் வந்தா சொல்லு. சரி, சொல்றேன். நாளைக்கு நான் என் அம்மா ஆத்துக்குப் போகப் போறேன். அப்படியா, சரவணால எனக்கு ஒரு அஞ்சலி கட்டர் வாங்கிண்டு வரியா.

இவ்வாறாகத் தழுவல்களோ, உரசல்களோ அற்ற ஒருவித ஞானகர்ம சந்யாச உறவாயிருந்தது அவர்களுடையது. இதுதான் என் ஆர்வத்தை அதிகம் தூண்டியது. பெண்களால் அன்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் வம்பு வளர்க்காமல் இருக்க முடியாது. பெண்களால் சண்டை போடாமல் இருக்க முடியாது. பெண்களால் சமாதானம் கொள்ளாமல் வாழ முடியாது. ரொம்ப முக்யம், இரு பெண்கள் ஒரு நேர்க்கோட்டில் ஒருவர் பின் ஒருவராகச் செல்ல முடியாது. மோதிக் கவிழ்வதும், கவிழ்ப்பதும், எழுந்து தட்டிக் கொள்வதும், தட்டி விடுவதுமாக உலகம் பெண்களால் பிரசன்னமடைந்து வருகிறது.

ஆனால் மாமியின் மாட்டுப்பெண்கள் இருவரும் இயல்பாக ஒரு புதிய இலக்கணம் எழுதி வந்தார்கள். மானசீக லட்சுமணக் கோட்டின் இருபுறமும் அவரவர் தம் சமஸ்தானங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

பத்து நாட்கள் முன்பு இரண்டாவது மாட்டுப்பெண் வயலின் வாசிக்கக் கற்றுக் கொள்கிறேன் என்று தன் டி.வி.எஸ். 50யில் ஒரு நாள் திடீரென்று கிளம்பினாள். மாமிதான் ஏற்பாடு செய்து தந்தாராம். ‘மூத்தவளுக்கு சங்கீதத்துல ஆர்வம் இல்லை. இவ கத்துக்கறேன்னா. அதான் நானே கூட்டிண்டு போய் பம்மல் விஜயலட்சுமி கிட்ட சேர்த்துவிட்டேன். அவ தூர்தர்ஷன்ல கார்த்தால ப்ரோக்ராம்லாம் குடுத்திருக்கா.’ என்று பக்கத்து வீட்டு கல்யாணியிடம் சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டேன்.

இந்தக் காலத்தில் மாமி இன்னும் தூர்தர்ஷன் பார்த்து வயலின் வாத்தியார் தேர்ந்தெடுக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன். நினைத்ததோடு நிறுத்திக்கொண்டால் அப்புறம் எப்படி வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுவது? நானும் பெண் அல்லவா. ஆகவே இத்தலையாய செய்தியை மூத்தவளிடம் தெரிவித்து அவளது கருத்தை அறிந்துகொள்ள மிகவும் விரும்பினேன். மறுநாள் என் ஜனநாயகக் கடமைகளை முடித்துவிட்டு வீடுதிரும்பும்போது, அவளை வாசலில் பிடித்து, “தங்கச்சி வயலின் க்ளாஸ்க்குப் போகுது போல?” என்று ஸ ப ஸ பிடித்தேன்.

“தெரியலயே” என்றாள் அந்தக் குலவிளக்கு.

“அம்மாதான் சேர்த்து விட்டாங்களாம். இப்பத்தான் வண்டில போகுது” என்று என் சமூக சேவையை முடித்துக்கொண்டு என் வழியே போனேன்.

எனக்குக் கொஞ்சம் வியப்புத்தான். ஒரே வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஒரு சம்பவம் – பின்னாளில் அது சரித்திர முக்கியத்துவம் கொண்ட சம்பவமாகலாம் – நடக்கிறது. அது வீட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியாதோ? அதுவும் உப்பு உறைப்புகள் சரியாக உள்ள ஒரு ‘கூட்டு’க்குடும்பத்தில்?

மறுநாள் நான் என் தொழிலிடத்துக்குப் போனதும் முதல் வேலையாக அந்த மூத்த குல விளக்கிடம், ‘கேட்டியா? நெசந்தானே?’ என்று கேட்டேன். பதில்தான் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. இதுல நான் கேட்க என்ன இருக்கு? அவளுக்கு இஷ்டம். போறா. எனக்குப் பாட்டும் பிடிக்காது. ஒரு மண்ணாங்கட்டியும் பிடிக்காது.” என்றாள்.

“அதுக்கில்லம்மா. நீ மூத்தவ. ஒரு மரியாதைக்காகவாவது உங்கிட்ட சொல்லலாமில்ல?”

“அதெல்லாம் நான் எதிர்பார்க்கல. நீ உன் வேலயப் பார்” என்றாள் தன்னிகரற்ற நிதானமுடன். ஆகவே, நான் என் வேலையான பெருக்கல், கழுவல், துவைத்தலில் என் பிரத்யேக ஈடுபாட்டுடன் மூழ்கிப் போனேன்.

கிளம்பும்போது இம்முறை இளைய குலவிளக்கு சாலையில் எதிர்ப்பட்டது.

“வீணை க்ளாஸெல்லாம் நல்லாப் போகுதாம்மா?” என்றேன் உள்ளார்ந்த அக்கறையுடன்.

“ஐய, வீணை இல்ல கற்பகம், வயலின் க்ளாஸ்” என்றாள் சிநேகப் புன்முறுவலுடன். அப்பாவித்தனம் என்ற போர்வைக்குள் அணுகுண்டு தயாரித்தாலும் யார் கண்ணுக்கும் படாது போலிருக்கிறது. ஆகவே கேட்டேன் :

“அது என்னமோ க்ளாஸ். நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு ஆர்வத்துல உங்க அக்காகிட்ட கேட்டேன். தங்கச்சி என்னமோ கத்துக்குதே, நீ அதுக்கெல்லாம் போகறதில்லையான்னு.”

“என்ன சொன்னா?” என்று வலையைத் தேடி வந்து விழப் பார்த்தது இளைய குலவிளக்கு.

“கெட்டுது போ. அதுக்கு நீ போறதே தெரியாதாமில்ல? என்னாம்மா, ஒரே வீட்டுலதானே இருக்கீங்க, இப்படி சொல்றியேன்னா, உன் வேலையப் பார்’னுடுச்சி.”

“ச்சீ ஆமாப்பா. நானாவது சொல்லியிருக்கணும். தோணலை” என்று ஸேம் சைடு கோல் போட்டுவிட்டு போயே விட்டாள்.

பின்னொரு நாள் மூத்தவள் நல்லிக்குப் போய், தன் மாமியாரின் திருமண நாளை முன்னிட்டு, ரூபா 6850/-க்கு ஒரு பட்டுப்புடவை வாங்கி வந்திருந்தாள். வந்ததும் மாமியாரிடம் விலை விவரமுடன் எடுத்துக் காட்டியவள், உடனே புடைவையை பீரோவில் வைத்துப் பூட்டியதைக் கண்டேன்.

அன்று மாமி வத்தல் பிழிவது எனும் முழுநாள் யாகம் வைத்துக் கொண்டிருந்ததால் நானும் காலை முதல் மாலை வரை உடன் இருக்க வேண்டியதானது. வயலின் வகுப்பை முடித்துவிட்டு மாலை திரும்பிய தன் இளவலிடம் ஒரு ஆர்வத் துடிதுடிப்புடன் தான் வாங்கி வந்த (அதுவும் மாமியாருக்கு) புடைவையை எடுத்துக்காட்டி ஒரு அலட்டு, அலட்டிக்கொள்ள வேண்டாமோ? ம்ஹும்! யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் வம்சாவளிக் கொழுந்தாக “இன்னிக்கு K TVல ராத்திரி என்ன படம் போடறான்?” என்று பேச ஆரம்பித்தாள்.

ஒரு வேளை இரவு குடும்ப உறுப்பினர்கள் கூடும்போது சொல்வாளாயிருக்கும் என்று நினைத்தேன். மறுநாள் பொறுக்க மாட்டாமல் நானே நம்பர் 2விடம் புடைவை பார்த்தியா என்று கேட்டபோது, ‘என்ன புடைவை?’ என்று அவள் அன்று பிறந்த குழந்தை மாதிரி கேட்டாள்.

நல்ல குடும்பம் பல்கலைக் கழகம். எனக்கென்ன போயிற்று என்று நான் சும்மா இருந்திருக்கலாம். நானும் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்த பாவத்துக்கு எவ்வாறு அப்படி இருந்துவிட முடியும்? வாகான ஒரு தினம், மாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தபோது மேற்படி அபூர்வ சகோதரிகளின் குணவிசேஷம் குறித்து சாங்கோபாங்கமாகப் பேச்செடுத்தேன்.

“என்னத்த சொல்றது போ. என் கண்ணு முன்னாடி அடிச்சிக்கிறதில்லை. அவ்வளவுதான். இப்படி விட்டேத்தியா இருக்காதீங்கடி. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, உதவிகரமா இருங்கோ. ஒரு வீட்டுல இருக்கறதைவிட ஒத்துமையா இருக்கறமாங்கறதுதான் முக்கியம்னு நான் சொல்லாத நாள் கிடையாது. சரிம்மாங்கறாளே தவிர ரெண்டுபேரும் சேர்ந்து சிரிச்சு நான் பார்த்து அறியேன்..”

சுய சோகத்தில் மாமியின் மூக்கு சிவந்துவிட்டது.

“நீங்க ஏம்மா கவலைப்படறீங்க? ஊருல உலகத்துல இருக்கற பொண்ணுங்கள விட நம்ம குழந்தைங்க எவ்வளவோ தேவலை.” என்று எதற்கும் இருக்கட்டும் என்று சொல்லி வைத்தேன்.

மாமி சில கணங்கள் பேசாதிருந்தாள். ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் என்று தோன்றியது. கூட்டுக் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளாயிருக்கலாம்.

“பாரு, மூணாவது மனுஷி. வந்து ஒரு மாசமாகலை. உன் வரைக்கும் அவா நடவடிக்கை எட்டியிருக்குன்னா என்ன அர்த்தம்? இதுங்களை வெச்சுண்டு நான் எப்படி குறை காலத்தை ஓட்டப் போறேன்னு கவலையா இருக்குடி.” என்றாள் மாமி.

“எல்லாம் சரியா போயிடும் மாமி. பச்சையம்மாளுக்கு ஒரு தேங்காய் நேர்ந்துக்கங்க” என்று நானறிந்த சாத்வீகத் தீர்வை முன்வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.

மறுநாள் மாமி வீட்டில் ஒரு சம்பவம் – இது நிச்சயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுதான் – நிகழ்ந்தது என்பதை அவர்களது பக்கத்து வீட்டு வேலைக்காரி – என் சக பயணி மூலம் அறிந்தேன். விதி என்னை அன்று விடுமுறை எடுக்கச் செய்திருந்தது.

அன்று காலை மாமி குளித்து முழுகி, பூஜையில் அமர்ந்ததும் வழக்கமான எக்ஸ்பிரஸ் வேக மந்திர உச்சாடணங்கள் புறப்படவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தில் இருப்பவள் போல் வெகுநேரம் கண் மூடி அமர்ந்திருந்தாள். மாமியின் இந்த மாறுபட்ட நடவடிக்கையால் கலவரமடைந்த மருமகள்கள் இருவரும் அக்கறையாக அருகே சென்று, என்ன என்று விசாரித்திருக்கிறார்கள்.

“கட்டிண்டிருக்கற வீடோ, என் புருஷனோ, பிள்ளைகளோ எனக்கு இப்ப முக்கியமில்லை. நீங்க ரெண்டு பேரும் சமத்தா, ஒத்துமையா, ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிண்டு, சிரிச்சிண்டு, சொந்த அக்கா தங்கை மாதிரி இருப்போம்னு சத்தியம் பண்ணுங்கோ. ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பி நடக்கறது, நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு இருக்கறது, ஹாஸ்டல்ல ரூம்மேட்டா இருந்து தொலைக்க விதிச்சவாளாட்டும் நடந்துக்கறது, இந்த வழக்கங்கள் மாறணும்…’

“ஐயோ என்னம்மா என்னென்னமோ பேசறீங்க? இப்ப நாங்க என்ன பண்ணிட்டோம்?” என்று பதறினார்கள் சகோதரிகள்.

“ஒண்ணும் பண்ணலை. ஆனா அவாவா ரூம்ல மாட்டின கடிகாரம் மாதிரி, மணி அடிக்கறதோட கடமை முடிஞ்சி போயிடறதா? வேலைக்காரி கேக்கறா, ஏம்மா உன் மருமகப் பொண்ணுங்க ரெண்டும் இப்படி வடக்கு, தெற்கா இருக்குங்க’ன்னு. ஏண்டி இப்படி மூணாவது மனுஷி பேசற அளவு வெச்சுக்கறீங்க? இந்த வீட்டுல சண்டை போட ஒரு சந்தர்ப்பம் உண்டா? முறைச்சுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கறதா? நான் மாமியார் மாதிரியா நடந்துக்கறேன்? அம்மா இல்லியா?….”

மாமியின் கண்கள் கலங்கிவிட்டன. இரண்டுபேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதானே? முறைத்துக் கொள்வதற்கும் முகமும் அகமும் திருப்பிப் போவதற்கும் என்ன இருக்கிறது? இருவரின் நிலையும் பொதுவானது. இருவரின் கஷ்டங்களும் பொதுவானவை. வீட்டில் இருவருக்கான உரிமைகளும் கூடப் பொதுவானவையே அல்லவா?

“சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்?” என்றார்கள் ஏககாலத்தில்.

“சத்தியம் பண்ணுங்கோ. நீ யாரோ, நான் யாரோன்னு இருக்க மாட்டோம்னு..” மாமி தீர்மானமாகச் சொன்னாள்.

சில வினாடிகள் அவர்கள் பேசாமல் இருந்தார்கள். நாடகத் தன்மை கூடிவிடும் சந்தர்ப்பம் குறித்த சிந்தனையாயிருக்கலாம். பிறகு மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுவிட்டு, “சரி, சத்தியம். இனிமே ஒத்துமையா இருப்போம். போதுமா?” என்றார்கள்.

“நிஜமா” என்று சந்தேகம் தீரமாட்டாத மாமி கேட்கவே, “ஆமா, ஆமா, ஆமா” என்று அழுத்திச் சொன்னவர்கள், “இனிமே வீட்டு விஷயங்களைக் கூட ரெண்டுபேரும் சேர்ந்தே முடிவுசெய்து, செயல்படுத்தறோம்” என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

மாமியின் மாட்டுப்பெண்கள் சொன்ன சொல் காப்பதில் அரிச்சந்திர புத்திரிகள் போலிருக்கிறது. மறு நாளிலிருந்தே அவர்களின் ஒற்றுமை நடவடிக்கைகள் அமலுக்கு வந்துவிட்டதில் மாமி மிகுந்த சந்தோஷத்துக்கு உள்ளானாள்.

எனக்குத்தான் சங்கடம். கூட்டணி ஆட்சியின் முதல் உத்தரவு, என் வேலை நீக்கம் சம்பந்தப்பட்டதாயிருந்தது.
[முன்பு எப்போதோ அமுதசுரபியில் வெளியானது.]

Share

8 Comments

 • நல்ல கதை. நல்ல எழுத்து. நல்ல முடிவு. மீண்டும் நீ கதை எழுத வந்தால், நாம் மிகவும் மகிழ்வேன்!

  நேசமுடன்
  வெங்கடேஷ்

  • //மீண்டும் நீ கதை எழுத வந்தால், நாம் மிகவும் மகிழ்வேன்!//

   எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். எழுதும் இடமும் எழுத்து முறையும்தான் வேறு.

 • முற்றிலும் ஆணீயச் சிந்தனையுடன் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையையும் அதன் ஆசிரியரையும் வன்மையாகக் கண்ணடிக்கிறேன். ச்சே கண்டிக்கிறேன்!!

 • கதை பெண்குலத்தின் யதார்த்த குணநலன்களை சொல்லுகிறது.

 • அந்த மூத்த மருமகள் தற்போது கோடம்பாக்கத்தில் ஆஸ்கர் நாயகன் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கபோய்விட்டதாய் யாரோ மண்டபத்துல சொன்னாங்க 🙂

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி