யாளிமுட்டை

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரியை உதைக்கவேண்டும். அவன் முன்குடுமியைப் பிடித்து உலுக்கி, ‘படவா, என்னத்துக்காக இப்படியொரு முழுப்புரளியைக் கிளப்பிவிட்டு, மேலிடத்தை உணர்ச்சிமேலிடச் செய்து, எங்கள் பிராணனை வாங்குகிறாய்?’ என்று ஜிம்பு ஜிம்பென்று ஜிம்பவேண்டும். பிடி மண்ணை அள்ளி அவன் முகத்தில் வீசி, ஆத்திரம் தீர அவன் வம்சத்தையே சபிக்கவேண்டும். முடிந்தால் ஏதாவது ஒரு பழைய காளி கோயிலாகப் பார்த்து இழுத்துக்கொண்டுபோய், தூணில் கட்டிவைத்து, சாட்டையால் அடித்தே பலி கொடுத்தாலும் பாதகமில்லை. ஆடு, மாடு பலி கொடுத்தால் தான் பாவம். ஆசாமியைக் கொடுத்தால் தப்பில்லை. அதுவும் சோதிடத்தை வைத்து ஏமாற்றுகிற ஆசாமி.

இப்படியெல்லாமும் விநோதமான பரிகாரங்கள் இருக்கமுடியுமா தெரியவில்லை. கற்பனை வளம் மிக்க சோதிடர்களும் சில்லறை சோழிச் சித்தர்களும் தெருவுக்கு நாலுபேரெனப் பெருகி விட்டார்கள். இந்தப் பயல்களெல்லாம் ஆரம்பத்தில் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சுளைகளுடன் சேர்த்துப் பிள்ளையார் பொம்மை எடுத்துக்கொண்டிருந்தபோதே பிடித்து நாலு சாத்து சாத்தியிருந்தால் இத்தனை தூரத்துக்கு இப்போது வளர்ந்திருக்கமாட்டார்கள்.

வெற்று மார்பில் ருத்திராட்சம் பளபளக்க, நெற்றியில் துலங்கிய ஹோமரக்ஷையிலிருந்து வியர்வை ஒழுக, நடுக்கூடத்தில் என்னமோ கட்டங்கள் வரைந்து , சோழிவைத்து எதிரே அமர்ந்து கண்மூடி ஆவேசம் வந்தவன்போல் ராஜீவன் நம்பூதிரி உச்சாடணம் பண்ணிக்கொண்டிருந்தபோதே அகழ்வாராய்ச்சித்துறைத் தலைவருக்குக் கவலை வந்துவிட்டது.

சென்றமுறை இப்படித்தான், எட்டுக்கோடியே தொண்ணுத்தேழு லட்சத்து நானூத்தி இருபத்திமூன்று பச்சை மிளகாய்களை அரைத்துச் சட்னி செய்து கங்காளம்பாளையம் அங்காளபரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனான் தடியன். ஒரு சம்பிரதாயத்துக்குக்கூட அம்மனுக்கு நாலு இட்லி வைக்காமல் வெறும் பச்சை மிளகாய்ச் சட்னியை கொட்டு கொட்டென்று கொட்டினால் பாவம் அவள் தான் என்ன ஆவாள்?

ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க அவகாசமில்லை. உடனே நாட்டிலுள்ள அனைத்து விவசாயத்துறை அதிகாரிகளூம் விஞ்ஞானிகளும் வரவழைக்கப்பட்டார்கள்.

தேசம் முழுக்க எங்கெங்கே உயர்தர பச்சை மிளகாய் பயிரிட்டிருக்கிறார்கள் என்று அனைத்து கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் விசாரிக்க உடனடியாக உத்தரவிடப்பட்டது. மூட்டை மூட்டையாகக் கொள்முதல் செய்து, தனியே பச்சைமிளகாய் கணக்கெடுப்புத்துறை என்று ஒன்றை உருவாக்கி, ஆயிரத்தெட்டுப் பேருக்குப் புதிதாக அரசாங்க உத்தியோகம் கொடுத்து உதிரி உதிரியாக எண்ணி, பெட்டி பெட்டியாக அடுக்கச் சொன்னார்கள். நாட்டுமக்கள் யாரும் அடுத்த ஏழு மாதங்களுக்குப் பச்சை மிளகாயையே கண்ணால் பார்க்கமுடியாதபடி ஆகிவிட்டது.

ஐநூறு ஆட்டுரல்களில், பெண்கள் அழுதவண்னம் சட்னி அரைக்க, அதை அங்காள பரமேஸ்வரிக்கு அபிஷேகம் செய்தால் பிரச்னைகள் யாவும் தீரும்  என்று நம்பூதிரி சொன்னான்.

ஏன் அதை இவன் தலையில் கொட்டித் தேய்க்கக் கூடாது? என்று கேட்டார் பக்கத்திலிருந்த உதவி ஆணையர்.

“உஷ். பேசாம இருமய்யா.  பெரிய இடத்து விவகாரம்.”

இவ்வாறு, பெரிய இடத்து விவகாரம் முதல் முதலில் பச்சை மிளகாயில் தான் ஆரம்பித்தது. அப்புறம் இன்னொருத்தன் வந்து ஒரு கோடியே எட்டுத் தேங்காயை ஒரே கோயிலில் உடைக்கச் சொன்னான். வேறொருத்தன் பத்தாயிரம் கோயில் அம்மன்களுக்குப் பட்டுப்புடைவை வாங்கி சாத்தச் சொன்னான். இந்தப் பக்கம் அருள்வாக்கு சொல்லிவிட்டு அந்தப் பக்கம் ஒரு புடைவைக்கடையும் திறந்துவைத்தான். தேர்கள். குதிரைகள். யானைகள். எடைக்கு எடை தங்கம். வைரம். வைடூரியம். அன்னதானம், ரத்ததானம், ஆயிரத்தெட்டு அசுவமேத யாகங்கள்.

சே, எத்தனை பக்தி, எத்தனை பரோபகாரம் என்று தேசம் வியந்தது. பிரச்னைகள் தான் தீர்ந்தபாடில்லை. வாழ்க்கை கண்ணாமூச்சி காட்டிக்கொண்டே இருக்கிறது. எதிரிகள் பெருகிவிட்டார்கள். எல்லாம் அந்த வைடூரிய சிம்மாசனத்துக்காக. ஆயிரத்தி நாநூறு வருஷங்கள் முன்னால் விக்கிரமாதித்த மன்னன் விட்டுப்போன சிம்மாசனம் அது. எங்கோ கிராமத்தில் அகழ்வாராய்ந்துகொண்டிருந்தபோது ணங்கென்று இடிபட்டு, அகப்பட்டது.

பயபக்தியுடன் எடுத்துவந்து, தூசுதட்டி சமர்ப்பித்தது தொல்பொருள் துறை.

ஒருதரம் சுற்றி நின்ற அத்தனைபேரையும் புன்னகையுடன் பார்த்துவிட்டு கம்பீரமாக ஏறி அமர்ந்தார் அவர். மக்கள் தம்மையறியாமல் கைதட்டிவிடவே சிம்மாசனம் அன்றிலிருந்து அவருடையதாகிப்போனது.

சிம்மாசனம் கிடைத்ததில் பெரிய சிக்கல் ஏதும் வரவில்லை. ஆனால் வைத்துக் காப்பாற்றுவதில் தான் தாவு தீர்ந்துபோகிறது. தொன்மத்தின் வாசனை பூசிய சிம்மாசனம் அது. கால்கள் லொடலொடத்துக்கொண்டிருக்கின்றன. மரகதப் பூண்போட்ட கைப்பிடி ஆடுகிறது. வெல்வெட் வேலைப்பாடுகள் மிக்க உட்காருமிடத்தில் நிறைய மூட்டைப்பூச்சிகள் குடிபுகுந்துவிட்டன. மேலும் ஆண்டாண்டு காலமாக முகலாய மன்னர் காலத்து மதுப்புதையல்களுடன் சேர்ந்து புதைந்து கிடந்ததில், மதுச்சாடிகள் உடைந்து அதன் வெல்வெட் பாகங்களில் ஊறிப்போய், உட்காரும்போதெல்லாம் ஒருவித போதை தலைக்கேறிப்போய்விடுகிறது. உட்காருமிடம் உறுத்தினாலும் எழுந்திருக்கத் தோன்றாத போதை அது. பெருமை அல்லவா? கம்பீரம் அல்லவா? யாருக்குக் கிடைக்கும்?

ஆனால் எதிரிகள் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். அந்த வைடூரிய சிம்மாசனத்தைக் கைப்பற்றியே தீருவோமென்று வானமண்டலத்து தேவர்கள் சாட்சியாக பதினொருபேர் கூடி நின்று நெருப்பு மூட்டி வீர சபதம் செய்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது.

நல்ல கதையாக இருக்கிறதே? விலைமதிப்பே இல்லாத சிம்மாசனம் அது. உலக அதிசயங்கள் அத்தனையையும் விட மதிப்புமிக்கது. பார்க்கக் கிழடுதட்டிக் கிடந்தாலும் உட்கார்ந்து பார்த்தவர்களுக்குத்தான் அதன் அருமை புரியும். ஆ, அந்த போதை! அதைப்போய் எதிரிகள் கையில் கிடைக்கவிடுவதாவது?

மேலிடத்திலிருந்து உடனே உத்தரவுகள் வரத்தொடங்கின. சிம்மாசனக் காவலர்கள் என்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. கற்கால ஆயுதங்கள் தொடங்கி அத்தனை ஆயுதங்களையும் அவர்களுக்குத் தாராளமாக விநியோகித்தது சிம்மாசனப் பரிபாலனத்துறை. அந்தப் படையைச் சுற்றி இன்னொரு பெரும்படை. சோழர்காலத்து ஆபத்துதவிப் படையினரின் வம்சத்திலிருந்து தேடித் தேர்ந்தெடுத்த படை இது. அவர்களைச் சுற்றி மேலும் ஒரு படைவரிசை.  அவர்களைச் சுற்றி இன்னொன்று, இன்னொன்று என்று ஒன்பது அடுக்குகளாகப் பச்சைச் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டும், கிழக்கில் சூரியன் உதிக்கிற நேரத்தில் எங்கிருந்தோ வந்து இருமுறை சிம்மாசனத்தை எடுத்துப் போய்விட்டார்கள். மீட்டுக்கொண்டுவருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது.

இம்முறை விடக்கூடாது. விடவே கூடாது என்று உறுதியுடன்தான் ஏறி உட்கார்ந்தார் அவர். குளிப்பது, சாப்பிடுவது, உறங்குவது, நீதி விசாரிப்பது, மனுக்கள் பெறுவது, சொற்பொழிவாற்றுவது, தீர்ப்புகள் வழங்குவது, ஓய்வெடுப்பது, பொழுதுபோக்காகத் தாயம் உருட்டுவது, இயற்கைக்கடன் கழிப்பது என எல்லாக்காரியங்களையும் சிம்மாசனத்தில் அமர்ந்தபடியே செய்யத்தொடங்கினார். தீராத முதுகுவலி வந்தபோதும் எழுந்திருக்கவே முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

மருத்துவர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். தொடர்ந்து மூட்டைப்பூச்சிகளிடம் கடிபட்டுக்கொண்டே இருந்தால் உடம்பில் ரத்தமே இருக்காதே என்று எடுத்துச் சொன்னார்கள். அதற்குப் பிரதியாக தினசரி மூட்டைப்பூச்சிகள் உறிஞ்சும் ரத்தத்தின் இருமடங்கை உடலில் ஊறச்செய்யும் பச்சிலை மூலிகைகளை எட்டு கடல் தாண்டி எங்கிருந்தோ எடுத்துவரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.

செலவு கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. ராஜ்ஜிய நிர்வாகத்துக்கு ஆகிற செலவைப்போல் மும்மடங்கு அந்த வைடூரிய சிம்மாசனத்தைக் காப்பாற்றுவதற்கே ஆகிறது. இது சரியல்ல என்று ஆங்காங்கே பலர் முணுமுணுக்கத் தொடங்கியதும்தான் மந்திரவாதிகளிடம் யோசனை கேட்கிற திட்டம் உருவானது.

ஒற்றப்பாலம் எமகண்டத்து ராஜீவன் நம்பூதிரி. அவந்தான் இப்போது ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறான். எப்படித்தான் பரிகாரங்களை அவன் தொடர்ந்து, சளைக்காமல் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறானோ?

“தலைநகருக்கு அறுநூறு மைல் வடமேற்கில் இருக்கிற கானகத்தில் எட்டாவது சூரிய வட்டத்தில் அகழ்ந்து ஆராய்ந்தால் அகப்படப்போகிற முதுமக்கள் தாழிக்குள் இருக்கிற ஒரு யாளியின் முட்டை உடைந்து, குஞ்சு பொறிந்திருக்கும். அதை எடுத்துக்கொண்டுபோய் தென் கிழக்கில் முன்னூறு மைல் தொலைவில் இருக்கிற மருதநிலத்துத் திருநிலக்குன்ற ஆலயத்தில் வைத்து பூஜித்து அப்படியே சுற்றித் தூண் எழுப்பிவிட்டால் போதும். எதிரி பலமிழந்து போவான். பகை அழியும். சத்ரு நாசம் நிச்சயம். வழக்கு வியாஜ்ஜியங்கள் இருந்த இடந்தெரியாமல் ஓடிப்போகும்.. இந்தமுறை தப்பு நடக்க வாய்ப்பே இல்லை…” தீர்மானமாகச் சொன்னான் நம்பூதிரி.

“யாளியா?” அதிர்ந்து கேட்டார் தொல்லியல் துறை உதவி ஆணையர்.

“ஓம். யாளிதான். சிங்க முகமும் யானையுடெயெ துதிக்கையுமா இருக்கும். சிற்பங்கள்ளெ பார்த்திருப்பீரே? பகவதியுடெயெ வாகனமாக்கும் அது.”

“நாசமத்துப் போவே நீ!”

“எண்டஜோலி இவிடெ முடியுதம்மே.” என்று சொல்லிவிட்டு மறக்காமல் தட்சணை பெற்றுக்கொண்டு பகவதீ என்று எழுந்து கிளம்பிப் போயே விட்டான்.

உம், கிளம்புங்கள். யாளி. யாளிவேண்டும் உடனே. அந்தக் காட்டில் போய்த் தோண்டித் தேடுங்கள் என்று உத்தரவிட்டார் பாதுகாப்புத்துறை மகாமந்திரி.

பெரும்படையொன்று திரட்டிக்கொண்டு குதிரைகளும் கூடாரங்களுமாகக் காட்டுப் பகுதிக்கு வந்து முகாமிட்டது தொல்லியல் துறை ஆய்வாளர் குழு.

யாளி. சிற்பங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கிற ஒரு விநோத முகம். மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் விநோத விளைவு. மனித உடலும் யானை முகமும். சிங்கமுகமும் யானையின் துதிக்கையும். குதிரை உடலும் சிங்க முகமும். சிங்க முகமும் யானை உடலும். சிற்பிகளின் கவிதாபூர்வமான கற்பனைகள் பல நூற்றாண்டுகள் கழித்து இப்படியொரு விபரீதத்துக்கு வித்திடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமுடியாது. கடவுளே, மன்னர்களெல்லாரும் ஏன் சிற்பிகளை ஆதரித்தார்கள்? சிற்பிகளெல்லாரும் ஏன் இப்படி விபரீத உருவங்களைப் படைத்தார்கள்? அந்த உருவத்தையெல்லாம் இந்த இழவெடுத்த ராஜீவன் நம்பூதிரி எங்கிருந்து பார்த்து கவனித்துக் குறித்துக்கொண்டு வருகிறான்?

“ஒரு காலத்தில் யாளி இருந்திருக்கிறது. புராணங்களில் அதுபற்றிய குறிப்பு கிடைக்கிறது. மாகாளி பராசக்தி தன் வாகனமாக அதைப் பயன்படுத்தியிருக்கிறாள்…. இதோ பாருங்கள்… சிங்க முகமும் யானையின் துதிக்கையும் கொண்ட ஒரு மிருகம்…மேற்குதேசத்துப் புராணங்களில் வருகிற டிராகன் என்கிற மிருகத்துடன் பலவகையிலும் உருவ ஒற்றுமை கொண்டது….”

“என்னது அது?”

“யாளி – வரலாறும் தொன்மமும். நூற்று எழுபது வருஷத்துப் புஸ்தகம். நூலகத்திலிருந்து எடுத்தேன்.”

“அந்த நம்பூதிரியுடன் சேர்ந்து நீயும் நாசமாகப் போ. அவன் ஒரு முட்டாள். ஏமாற்றுக்காரன். மோசடிப் பேர்வழி. முதுமக்கள் தாழியில் யாளியின் முட்டை இருக்குமாம். இத்தனை வருஷம் கழித்து அது உடைந்து குஞ்சு பொறிக்குமாம். இவன் போய்ப் பார்த்தானா, யாளி முட்டைபோட்டுக் குஞ்சு பொறிக்கிற ஜாதி என்று?”

“ஏன், நீங்கள் சபையிலேயே கேட்டிருக்கலாமே இதை?”

தொல்லியல்துறைத் தலைவர் உடனே மௌனமாகிவிட்டார். அவரைப் போலவே தான் அத்தனை பேரும் சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். யாரைக் கடிந்துகொண்டு என்ன பயன்? ஒரு யாளி கிடைத்துவிட்டால் போதும். அல்லது யாளியின் முட்டை.

“யாளி முட்டை கோழிமுட்டை மாதிரி இருக்குமா?”

“அபிஷ்டு. என்னத்தையாவது எடுத்துவந்து யாளிமுட்டை என்று ஏமாற்றிவிடலாம் என்று நினைக்காதே. யாளிமுட்டை சதுர வடிவில் இருக்குமாம். சதுரமுட்டை! ஹும். என்னஒரு முரண்!”

அவர்களுக்கு இன்னொரு கவலையும் மிச்சம் இருந்தது. முதலில் யாளியின் முட்டை இருக்கிற முதுமக்கள் தாழியைத் தேடிப்பிடித்தாகவேண்டும். அப்புறம் அந்த முட்டையை எடுத்துக்கொண்டு எங்கேயோ போகவேண்டும் என்று சொன்னானே… அது எந்த இடம்… என்னவோ தென் கிழக்கில் முன்னூறு மைல் தொலைவில் இருக்கிற மருதநிலத்துத் திருநிலக்குன்ற ஆலயமாமே? அது எங்கே இருக்கிறது?

மருதநிலம்…திருநிலக்குன்றம்….இந்தப் பேரெல்லாம் செத்துப்போய் எத்தனையோ நூற்றாண்டுகளாகிவிட்டன. எங்கிருந்து அந்த தடித்தாண்டவராயன் தேடி எடுக்கிறான், ஒருத்தருக்கும் புரியாமல்?

“அது சாதாரணக்கோயில் இல்லே கேட்டியோ? பரமேஸ்வரன் லிங்கரூபத்திலே இருந்தாலும் முன்னந்தலையிலே சிகை இருக்கும் பார்த்துக்கோ…”

நம்பூதிரியின் குரல் மீண்டும் ஒலித்தது காதுகளில். சிகை வைத்த லிங்கம். எங்கே இருக்கிறது அது?

“என்னெக்கேட்டா? நீ தேடிப்பிடிச்சிக்கோ. அது உங்களது ஜோலியாக்கும். ஞான் கிளம்பட்டே? மனசிலிருக்கட்டும். தென்கிழக்கே முன்னூறு மைல். சிகை வெச்ச லிங்கரூபேஸ்வரன் ஆலயம். மருத நிலத்துத் திருநிலக்குன்றம் எண்டு பேரு. வரட்டே?”

“ஒழிடா கடங்காரா” என்றார் தொல்லியல் துறை ஆணையர்.

நம்பூதிரி குறிப்பிட்ட கானகத்தை அடைவதில் அவர்களுக்குச் சிரமம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் அவன் தோண்டச் சொன்ன இடத்தைக் கண்டுபிடித்ததுதான் பெரிய காரியமாக இருந்தது. அடர்ந்து மரங்கள் ஓங்கியிருக்கும். ஆனாலும் சூரியனின் கிரணங்கள் மிகத்தெளிவாகத் தரையில் வந்து விழும். முன்னொரு காலத்தில் கபிலர் அங்கே இருந்து தான் பூமியைக் குடைந்துகொண்டு போய் பாதாளத்தில் குகை அமைத்துத் தவம் செய்திருக்கிறார் என்று நம்பூதிரி சொன்னான்.

மேலிடத்துப் பெரியவர்களெல்லாம் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆகவே அகழ்வாராய்ச்சித்துறைத் தலைவரால் எதிர்த்துக் கேள்வி ஏதும் கேட்க முடியாமல் போய்விட்டது. யார் கண்டது? கபிலர் பாதாளம் தோண்டியபோது இந்த நம்பூதிரிதான் பக்கத்திலிருந்து மண் அள்ளிப்போட்டானோ என்னவோ? அப்போதே அந்த யாளி முட்டையை எடுத்துவந்து பத்திரமாக வைத்திருக்கமாட்டானோ கழிச்சல்ல போறவன்?

அடர்ந்த காட்டுக்குள் மூங்கிலும் சந்தனமும் தேவதாருவும் இன்னபிற வானுயர்ந்த மரங்களும் வெட்டப்பட்டு, வெயில் சுள்ளென்று விழுந்த இடமாகப் பார்த்துத் தேடி இது தான் என்று ஏகதேசமாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

“சரி, தோண்டலாமா?”

“ஆகட்டும்”

காளியை வேண்டிக்கொண்டு கடப்பாறையால் முதல் குத்துப் போட்டார் அதிகாரி. அடுத்தடுத்த மூன்று குத்துகளில் அவருக்கு வியர்த்துவிட்டது. பக்கத்திலிருந்த கூலி ஆட்களிடம் கடப்பாறையைக் கொடுத்துவிட்டு கூடார வாசலில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டு பார்வையிட ஆரம்பித்தார். மிகவும் கவலையாக இருந்தது அவருக்கு. ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. நல்லபடியாக வீடுபோக முடியுமானால் ஓய்வு ஈட்டுத்தொகை ஒழுங்காக வந்து சேருவதில் சிக்கல் இருக்காது. அபசுரமாக இந்த யாளி முட்டை விஷயத்தில் ஏதாவது நடந்துவிட்டால் பிறகு திருவோடு ஏந்தவேண்டியதுதான். மேலும் எதிரிகள் மீண்டும் படையெடுக்கத் தயாராகிவருவதாகச் செய்தி வந்திருக்கும் நேரம். ஒரு பரிகாரத்தில் சிம்மாசனம் பிழைக்க முடியும் என்று எத்தனை தீர்மானமாக நம்புகிறார்கள்.

யாளி முட்டை. சதுர முட்டை

மாலைக்குள் அந்தப் பிரதேசத்தை சுமார் நூறுபேர் தொடர்ந்து தோண்டியதில் கணிசமான அளவு பள்ளம் உருவாகி, நீரூற்று தென்படத் தொடங்கியது. பெரிய பெரிய மர வாளிகளில் கயிறுகட்டி நீரை முகர்ந்து முகர்ந்து இறைப்பதற்குத் தனியே நூறுபேர் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். தலைநகரிலிருந்து சிறப்புப் பார்வையாளராகப் பாதுகாப்புத்துறை மகாமந்திரி கிளம்பிவந்து எல்லையில் முகாமிட்டிருப்பதாகவும் நாளை பொழுது விடிந்ததும் அவர் காட்டுக்குள் பிரவேசிப்பார் என்றும் பணியாள் வந்து சொன்னான்.

அதிகாரிக்கு அழுகை வந்தது. நிலத்தைத் தோண்டும் பணியாளர்களை மேலும் வேகமாகத் தோண்ட உத்தரவிட்டுவிட்டு மேலே எழுந்து வந்து குவியும் கற்களையும் மண் கட்டிகளையும் புரட்டிப் புரட்டி ஆராய ஆரம்பித்தார். நாசமாப்போற ராஜீவன் நம்பூதிரி எத்தனையடி ஆழம் தோண்டியபின் யாளி முட்டை தென்படும் என்பது பற்றி ஏதும் தகவல் தந்திருக்கவில்லை. இதுவரை ஐம்பதடி ஆழத்துக்கு – முப்பது சதுர அடிகள் பரப்புக்குத் தோண்டியிருக்கிறது. அசப்பில் பிரதேசமே ஹரப்பா மாதிரிதான் காட்சியளிக்கிறது. கொஞ்சம் நம்பிக்கை கொள்ளுமாறு ஏதாவது செப்புக்காசு, இரும்புப் பட்டயம் என்றாவது அவ்வப்போது வரத் தொடங்கியிருக்கலாம். ஊற்றெனப் பெருகிய நீர் கூட வற்றி மீண்டும் பாறை பாறையாகவே வருகிறது. எப்போது கிடைக்கும் யாளி முட்டை?

கவலையிலும் அலுப்பிலும் அவர் உட்கார்ந்தபடிக்கே உறங்கிப்போனார்.

உறக்கத்தில் அவருக்கொரு கனவு வந்தது.

ஆயிரம் அடி ஆழப்பள்ளத்தில் ஒரு பெரிய மரவாளி கயிறு கட்டி இறங்குகிறது. வாளிக்குள் உட்கார்ந்திருப்பது யார்? அவரா? அட, அவரேதான். கையில் பூதக்கண்ணாடியும் சுரண்டிப்பார்க்கும் கொல்லூரும் இன்னபிற புதைபொருள் உபகரணங்களும் இருக்கின்றன. எதனைத்தேடி அத்தனை ஆழத்தில் அவரை இறக்குகிறார்கள்?

“பாத்து, பாத்துப்பா. பயமா இருக்கு. கயிறு போதுமான அளவுக்கு இருக்கா?” தொண்டை கிழித்துப் புறப்படுகிற அவரது குரல் பாதி உயரத்திலேயே கரைந்து போய்விடுகிறது. பூதம் மாதிரி கவிந்த நிசப்தத்தினூடாக மரவாளி மெல்ல மெல்ல இறங்கிக்கொண்டே இருக்கிறது. கையோடு எடுத்து வந்த மெழுகு வர்த்தியைக் கொளுத்தி சுற்றுப்புறத்தைப் பார்க்கிறார் அதிகாரி. தோண்டிய பக்கமெல்லாம் மண்ணாலான யாளியின் உருவங்கள் கூர்மையான பற்களை நீட்டிச் சிரிக்கின்றன. சில யாளிகள் அபூர்வமாக பேண்ட் அணிந்திருக்கின்றன. சில கூலிங் கிளாஸ் அணிந்திருக்கின்றன. அட கிரகச்சாரமே. இந்த யாளி என்ன அழிச்சாட்டியமாக சிகரெட் பிடிக்கிறது. குப்பென்று நாசியில் மோதிய புகையில் அவருக்குத் தும்மல் வந்துவிடுகிறது. சில வினாடிகளில் அந்த நெடி சிகரெட்டின் நெடியல்ல என்பது அவருக்குப் புரிகிறது. விஷ வாயு! ஐயோ என்று அலறிக்கொண்டு கண் விழித்தார் அதிகாரி.

“ஐயா!”

“ஒண்ணுமில்லை. தோண்டறாங்களா?” அநிச்சையாகக் கேட்டுக்கொண்டார் அவர்.

“ஆமாங்க. எழுபதடி போயிருக்குது…மந்திரி வந்துட்டாருங்க…”

அவர் அவசரமாக எழுந்துகொண்டார்.

“என்னய்யா அதிகாரி? என்ன நடக்குது இங்க? யாளி முட்டை கிடைச்சிதா இல்லியா?” எகத்தாளமாகக் கேட்டார் மந்திரி.

“ஐயா, தேடிக்கிட்டு இருக்கங்க.” என்றார் அதிகாரி.

“நல்லா, நல்லா தேடணும். முட்டை இல்லாம இங்கேருந்து கிளம்ப முடியாது, பாத்துக்க.”

“சரிங்க”

பிரும்மாண்டமாக உழுது அகன்றிருந்த நிலத்தின் விளிம்பில் போய் நின்று சுற்றிப்பார்த்தார் மந்திரி. ஆழத்தில் உழைப்பாளிகள் கற்களைப் பிளந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் முதுகுகளில் துளிர்த்த வியர்வை, அம்மைக் கொப்புளங்கள் போல் மேலிருந்து பார்க்கத் தெரிந்தது. அடுத்த வினாடி அகப்பட்டுவிடக்கூடிய முதுமக்கள் தாழிக்காக அவர்கள் உக்கிரமாகப் பாறைகளைப் பிளந்துகொண்டிருந்தார்கள். ஒரு தாழி. அது மூடியிருக்குமா, திறந்திருக்குமா என்று தெரியவில்லை. உள்ளே இருந்த எந்த முதுமகனைத் தூக்கிக் கடாசிவிட்டு யாளி தன் முட்டையை அங்கே போட்டுவைத்தது என்று தெரியவில்லை. தாழியிலிருந்து யாளியால் தூக்கி எறியப்பட்ட முதுமகன் பிறகு என்னவாகியிருப்பான்? மண்ணோடு மக்கிப் போயிருக்கக்கூடும். அல்லது அந்த யாளியே அவனைத் தின்றிருக்கும். யாளி பிணம் தின்னுமா? தேசத்தில் இப்போதெல்லாம் சாத்திரங்கள் மட்டும்தான் அதனைத் தின்னுகின்றன. அசைவ சாத்திரங்கள்.

மந்திரி கேட்டார் “உங்கள்ள யாரானா யாளி முட்டையை முன்னால பாத்திருக்கிங்களாய்யா? வருசக்கணக்கா இதே நோண்டிப்பண்டார வேலைதானே பாக்குறிங்க?”

“இல்லிங்க… பாத்ததில்லிங்க” என்றார் அதிகாரி.

“தத்திங்க….தத்திங்க…” மந்திரி காறித்துப்பினார். “கிணறு தோண்டப்போங்கய்யா. எதுக்கு தொல்பொருள் ஆய்வுன்னு பெரிசா பேரு வெச்சிருக்கிங்க?”

மிகவுமே சரி. எத்தனை புனிதமான பணி! கிணறு தோண்டலாம், குழாய் ரிப்பேர் செய்யலாம். செருப்புத் தைக்கலாம். காய்கறி விற்கலாம். மூட்டை தூக்கலாம். சாக்கடை சுத்தம் செய்யலாம். சாலை போடலாம். வீதி பெருக்கலாம். விளக்கு விற்கலாம்….

அடிவயிற்றிலிருந்து பெருகிய ஓலத்தை அடக்கமாட்டாமல் கதறியவண்ணம், பள்ளத்தின் விளிம்பில் நின்று கையாட்டிப் பேசிக்கொண்டிருந்த மந்திரியைப் பாய்ந்து அறைந்து, அவர் எதிர்பாராத விதமாக இழுத்துத் தள்ளினார்.

ஓவென்று அலறியபடி விழுந்த மந்திரியின் குரல் வினாடிகளில் அடங்கிப்போனது. காற்று நின்று வீசிய கணத்தில் அதிகாரி ஒரு தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

“….கண்டெடுத்த முதுமக்கள் தாழியை மேலெடுத்துவந்து திறந்ததும், முட்டையை உடைத்துக்கொண்டு பூதம் மாதிரி சீறியெழுந்த யாளிக்குஞ்சு மந்திரியைத் தாக்கித் தள்ளிக்கொன்றது. சிம்மாசனத்தைக் காப்பாற்ற யாளிமுட்டை உதவுமென்று சொன்ன நம்பூதிரி ஒரு முட்டாள். திரேதாயுகத்து அன்னப்பறவையின் அலகைத் தேடியெடுத்து அதனைக்கொண்டு நெய்யால் ஹோமம் செய்து ஆகுதி வளர்த்தால் போதுமானதென்று சொல்லிவிட்டு விண்ணில் சீறிப்பறந்து மறைந்தது. ஆகவே தொல்பொருள் ஆய்வுக்குழு இப்போது அன்னப்பறவையைத் தேடி வடக்கே பயணம் மேற்கொண்டிருக்கிறது….” என்று எழுதி எல்லோரிடமும் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்.

***

[பின்குறிப்பு: சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கதை. எழுதிய தேதி, வருடம், இதழ் அனைத்தும் மறந்துவிட்டது. இந்தக் கதையே தொலைந்துபோய்விட்டதாகக் கருதி எள்ளும் தண்ணியும் தெளித்துவிட்ட நிலையில் தற்செயலாக நேற்று என் நண்பர் இனாயத்துல்லா இதனை நினைவுகூர்ந்து பேச, என்னிடம் பிரதி இல்லாத விவரம் சொன்னேன். தன்னிடம் மென்பிரதி இருப்பதாகச் சொல்லி உடனே அனுப்பிவைத்தார். இது படித்துறையில் வெளியானது என்கிற தகவலையும் நினைவூட்டினார். எதிர்பாராதது. அவருக்கு என் நன்றி. எதையாவது எழுதினால் உடனே நண்பர்கள் சிலருக்கு அனுப்பிவைக்கிற வழக்கத்தை வைத்துக்கொண்டிருப்பதுதான் எத்தனை உதவிகரம்! இப்போதெல்லாம் எழுதுகிற அனைத்தையும் என் மின்னஞ்சலிலேயே ஒரு பிரதி தனியே சேமிக்கிறேன். அது  திரும்பவும் தொலையாமல் இருக்கவேண்டும்.]

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter