மனித மனமானது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் மனமானது செம்மையாகும் வழியே இல்லையே. கோவிந்தசாமியின் மனம், உடல், ஆன்மா ஒன்றுடன் ஒன்று இணைய மறுக்கிறது. மறுத்தலுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். கோவிந்தசாமியின் மன அலைகளைச் சூனியன் உள்ளுக்குள் இருந்தே பார்த்தே உள்ளூர ரசிக்கிறான். சூனியன் தன் நிலைநிறுத்தலை எண்ணிக் கொண்டே இருக்கிறான்.
செம்மொழிப்ரியா எனும் உருக்கொண்டு சூனியன் சாகரிகாவைக் குறித்த செய்தியை உலாவ விடுகிறான். அந்தச் செய்தியானது பலரைக் வருத்தமுறச் செய்கிறது. காட்சி மட்டுமல்லாது சொல்லும் ஒருவரைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கி விடுகிறது. அந்தச் செயலை மிக அழகாகச் சூரியன் செய்கிறான். அதில் வெற்றியும் கிடைக்கிறது. செம்மொழிப்ரியாவிற்குக் காதல் விண்ணப்பம் அனுப்புவதை வாசித்தவுடன், ‘காதலென்ன பகல் கனவா? நினைத்த உடனேயே வருவதற்கு?’ எனத் தோன்றுகிறது. இந்த அத்தியாயம் முழுவதும் பல தத்துவார்த்தங்களை ஆசிரியர் கூறியுள்ளார்.