ஒரு முத்தம் – ஒரு கடிதம்

அன்புள்ள பாரா,
காலையில் கண் விழித்து அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தேன். பல் விளக்கியிருக்கவில்லை. அப்படியே மொபைலை ஒரு புரட்டு புரட்டலாம் என்று எடுத்தபோதுதான் உங்கள் சிறுகதையின் லிங்க் கண்ணில் பட்டது. அதைப் படிக்க ஆரம்பிக்கும்போது பின் வருமாறு இருந்தது என் மனநிலை: ஒரு இரண்டு பத்திகள் படிப்போம். சுவாரஸ்யமாக போகிறதா என்று பார்ப்போம். இல்லையெனில் ஃபேஸ்புக்கில் அடுத்த மொக்கை நிலைத்தகவலுக்குத் தாவிவிடுவோம்.
ஒரு வித சோம்பேறித்தனமான, மந்தமான, தூக்கம் கலையாத மனநிலை.
ஆனால் உள்ளே நுழைந்ததற்கப்புறம் சரிவில் இறங்கும் ப்ரேக் பிடிக்காத சைக்கிள் போல.. இன்னும் கொஞ்சம் நவீன உவமை வேண்டுமென்றால் ஒரு ஜெண்டில் சிங்குலாரிட்டி ப்ளாக் ஹோல் போல சர்ரென்று தனக்குள் இழுத்து மறுபக்கம் விட்டுவிட்டது. ஒரு சேதாரமும் இல்லை. ஆனால் அந்த ஜிவ்வென்ற உணர்விருக்கிறதே..
தூக்கம் முழுசாகக் கலைந்துவிட்டது.
எந்த ஒரு நல்ல சிறுகதையைப் படித்தாலும் கடைசி வரிக்கப்புறம் ஒரு ‘ஜிவ்’ எஞ்சி நிற்கவில்லையெனில் அது ஒரு கதையே அல்ல. இதில் அது நிகழ்ந்தது. கைகள் பரபரக்க உடனடியாக பல் விளக்கிவிட்டு, டாய்லெட் போய்விட்டு, பெண்டாட்டி கொடுத்த சூடான காப்பியுடன் இதோ இதை எழுத உட்கார்ந்துவிட்டேன். இந்தக் கதையின்  வெற்றி இதுதான்.
அதுதவிர மழையோடு சம்பந்தப்படுத்தி எழுதப்படும் எந்த ஒரு படைப்பும் மனதில் ஒரு லேசான ஒரு குளிரை, சிலிர்ப்பை ஏனோ ஏற்படுத்திவிடுகிறது. மழை கொண்டுவந்து தரும் உணர்வுகள் வேறு மாதிரியானவை. அதையும் இந்தக் கதை செய்கிறது.
//’என் ஹலோவை அவன் செருப்பால் அடித்துவிட்டான். ’, ’வெறும கதை எழுத பொண்டாட்டி போதும். கவிதைக்கு சிநேகிதிகள் அவசியம்’ //
என்ன ஒரு ஃப்ளோ! என்ன ஒரு நடை!
இந்தக் கதையைப் படித்ததற்கப்புறம், மொபைலில் மற்ற எதுவும் இடைஞ்சலாகத் தோன்றியது. மூடி வைத்துவிட்டேன். இன்றைய தினம் அற்புதமாக விடிந்தது.
– சித்ரன் ரகுநாத்
0
சித்ரன், நன்றி.
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி