வாசக அனுபவம்

இன்னொரு முறை வாழ்வது – அபுல் கலாம் ஆசாத்

‘ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்’இற்குள் வெறித்தனமாக வாழத் துவங்கியிருக்கிறேன்.

‘சொல்லுங்க பாய்’ எனும் அவருடைய இயல்பான உரையாடலை எழுத்திலும் வைத்து, ‘வூடு’ கட்டி அடித்துச் செல்லும் பகுதிகள் ஒவ்வொன்றிலும் நானும் கொஞ்சமாவது வாழ்ந்திருக்கிறேன். அவர் எழுத்து ‘எனது’ சென்னைக்கு உள்ளே சில நிமிடங்கள் சென்று உட்கார்ந்து மெதுவாக சிலவற்றை அசைபோட வைக்கிறது.

உங்களுக்கு சென்னையில் செல்லம்மாள் தோட்டம் தெரியுமா?

லாயிட்ஸ் ரோடு?

அவ்வை ஷண்முகம் சாலை?

அவ்வை ஷண்முகி திரைப்படம் பார்த்திருந்தால் இந்தச் சாலையின் பெயர்ப்பலகையைப் பார்த்திருக்கக்கூடும்.

அவ்வை ஷண்முகம் சாலையின் பழைய பெயர் லாயிட்ஸ் ரோடு.

லாயிட்ஸ் ரோடில், லாயிட்ஸ் குடியிருப்பின் அருகில் செல்லும் கிளைச்சாலையின் பெயர் முத்தையாமுதலி தோட்டம், இப்போது முத்தையா தோட்டம். முத்தையா தோட்டத்தில் உள்ளே சென்றால், சிறிது தூரத்தில் வலப்புறம் முத்தையா தெரு (aka முத்தையா முதலி தெரு) பிரியும், தோட்டத்தைத் தொடர்வது பெரிய மலையப்பன் தெரு. இந்த முத்தையா தோட்டத்தில் சென்றால் முத்தையா தெருவை அடையுமுன் இடப்பக்கம் இருந்தது செல்லம்மா தோட்டம்.

செல்லம்மா தோட்டத்தை அடையுமுன் தொழுநோயாளிகளின் மறுவாழ்வு மையம் ஒன்று இருந்தது.

அந்நாள்களில் (எழுபதுகள்) வியாழக்கிழமைகளில் மட்டுமே அவர்கள் வெளியே வருவார்கள்.

காலையிலிருந்து மாலைவரையில் அவர்களுடைய நடமாட்டம் அந்தப் பகுதியில் இருக்கும். குறிப்பாக கிருஷ்ணாம்பேட்டை, ஐஸ்ஹவுஸ், இராயப்பேட்டை, மீர்சாகிப்பேட்டை, ஜாம்பஜார், பகுதிகளில் அவர்களை அதிகமாக காண முடிந்தது. காலையில் மறுவாழ்வு மையத்திலிருந்து வெளியே புறப்படுபவர்கள் மாலையில் திரும்பிவிடுவார்கள்.

மறுவாழ்வு மையத்தின் சுற்றுச் சுவரில் பெரிய இரும்புக் கதவு இருந்தது. வியாழக்கிழமைகளில் கதவு திறக்கப்படும் நேரங்களில் உள்ளே இருக்கும் தோட்டம் தெரியும். மிகப்பெரிய தோட்டமெல்லாம் கிடையாது செம்மண் சாலை, கொஞ்சம் மண் அங்கங்கே விளைந்திருக்கும் செடிகள். சிலர் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருப்பார்கள். நிச்சயமாக வாசலில் காவலாளி கிடையாது.

இன்று பாரா அவர்களின் ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் படித்ததும், மேலே சொன்னதுபோல் சிலநிமிடங்கள் அமைதியாக அமர்ந்துவிட்டேன்.

மீர்சாகிப்பேட்டை ஜாம்பஜார் பகுதிகளில் வியாழக்கிழமைகளில் சுற்றிய தொழுநோயாளிகள் நினைவுக்கு வந்தார்கள்.

ஐஸ்ஹவுஸ் பம்ப்பிங் ஸ்டேஷனுக்கு அருகில் இருந்த அரசு தோல் மருத்துவ சுகாதார மையத்தில் துவக்க நிலைத் தொழுநோயாளிகள் களிம்பு வாங்க வரிசையில் நின்றிருந்தது நினைவுக்கு வருகின்றது.

நகரத்தின் வரலாறென்பது அதில் வாழ்பவர்களின் வாழ்க்கையையும் பார்வையையும் உள்ளடக்கியதுதானே?

வரலாற்றுப் புத்தகங்களில் நகரத்தின் தோற்றமும் வளர்ச்சியையும் படித்துக்கொள்ளலாம். ஆனால், நகரத்தின் வரலாற்றை அதில் வாழ்ந்தவரின் அனுபவங்களின் வழியாகப் படிப்பது இன்னொருமுறை அந்த நகரத்தில் வாழ்வதைப் போன்றது.

அவசியம் அனைவரும் படிக்கவேண்டுகிறேன்.

2.
இன்று காலை பாரா அவர்களுடன் தொலைபேசியில் பேசுகையில் திருவொற்றியூர் குறித்த கீற்று ஓடியது.

சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், முனர்தீன், ரவி, எத்தனை ஸ்டண்ட் மாஸ்டர்கள் வடசென்னையிலிருந்து…

திருவொற்றியூரிலிருந்து எண்ணூர் வரையில் கடற்கரையையொட்டிய பகுதிகளில் இருந்த உடற்பயிற்சிக்கூடங்களையும் சண்டைப் பயிற்சியாளர்களையும் நினைவுகூர்ந்தார். மொத்தத் தமிழகத்திலும் இத்தனை பயிற்சிக்கூடங்கள் இப்படி அருகருகில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.

என்னுடைய வடசென்னை நண்பர்களுள் இப்படியான பயிற்சியில் இருந்த சிலருள் ஒருவன் இப்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பொறியாளர். இன்னொருவன் பியெஸ்ஸென்னில் பொறியியல் மேலாளர், அடுத்தவன் ரெயில்வேயில், மற்றவனும் எந்திரவியலாளன்தான். அனேகமாக அனைவரும் ஓய்வுபெறும் வயதை எட்டியிருப்பார்கள்/ஓய்வுபெற்றிருப்பார்கள் 😉

ஃபேஸ்புக்கில் இருவர் உள்ளார்கள், ஆனால், என்னைப்போல் இப்படிப் பழியாய்க்கிடப்பவர்களல்லர் 😉

இப்பொழுது இந்தப் பயிற்சி நினைவுகளிலிருந்து எப்படி வெளியேறி கொரோனா செய்திகளுக்குள் நுழைவது?

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி