ரிப்

முன்பெல்லாம் நாளிதழ்களில் என்ன வெளியாகியிருந்தாலும், ‘பேப்பர்லயே போட்டுட்டான்’ என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடும் வழக்கம் உண்டு. இதே போலத் தான் விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் வெளியாகும் எதையும் மறு வினா இன்றி நம்பக்கூடிய ஒரு பெரும் கூட்டம் இருந்தது. சினிமா செய்திகள், வதந்திகளைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையில் வெளியானாலுமே அது சரிதான் என்று நினைப்பார்கள். சிறிது படித்தவர்கள், எதையும் அவ்வளவு எளிதில் நம்ப வேண்டாம் என்று நினைப்பவர்கள், ஆல் இந்தியா ரேடியோவின் மாநிலச் செய்தி அறிக்கையில் வந்தால் நம்புவார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சன் டிவி தொடங்கப்பட்டு அதன் மாலை நேரச் செய்தி அறிக்கை பிரபலமான பின்பு என் தந்தை ஒருநாள் தவறாமல் அதைப் பார்ப்பார். ஆனால், பிறகு தூர்தர்ஷன் செய்திகளைப் பார்த்துவிட்டு, மறுநாள் காலை தினமணியையும் படித்து முடித்து எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே திருப்தி ஆவார். நெடு நாள் அவருக்கு இப்பழக்கம் இருந்தது. எப்போது விட்டார் என்று நினைவில்லை.

செய்தி சானல்களின் பெருக்கத்துக்குப் பிறகு, நாளெல்லாம் செய்தி என்றான பிறகு அதன் மீது பழைய ஈர்ப்பு இல்லாமல் போனது. நாம் இருக்கிறோம்; செய்திகளும் இருக்கின்றன. அவ்வளவுதான். சமூக ஊடகங்கள் வந்த பின்பு இது இன்னும் மாறியது. தொலைக்காட்சிக்கு முன்னதாக சமூக வெளியில் செய்திகள் வரத் தொடங்கின. பொது மக்களே இங்கு செய்தியாளர்கள் ஆகிவிடுவதால் செய்தியும் விமரிசனமும் இரண்டறக் கலந்துவிட்டன. இரண்டும் வேறு என்றே யாருக்கும் தோன்றுவதில்லை.

இதிலும் தொடக்க காலத்தில் ஒரு பாகுபாடு இருந்ததைக் கண்டிருக்கிறேன். ட்விட்டரில் எது வந்தாலும் நம்பலாம்; ஃபேஸ்புக் விடலைகளின் கூடாரம் என்னும் கருத்தாக்கம் சிறிது காலம் இருந்தது. ஒரு கட்டத்தில் ஃபேஸ்புக்கைவிட ட்விட்டரே அக்கப்போர்களின் பேட்டை என்று ஆக, மெல்ல மெல்ல ஃபேஸ்புக்கின் செல்வாக்கு மேலெழத் தொடங்கியது. இன்று தொலைக்காட்சி செய்தி அலசல்களின் ஒளித் துணுக்குகளைக்கூட ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அந்தப் பக்கம் இழுக்கும் அளவுக்கு நிலைமை வேறாகியிருக்கிறது. எஃப்.எம். வானொலிகளில் எப்போதாவது காதில் விழுகிறது. உங்கள் கருத்துகளை நமது ஃபேஸ்புக் பக்கத்தில் சென்று பதிவு செய்யுங்கள். அங்கே உங்கள் கவிதைகளை அளியுங்கள். இங்கே நாங்கள் வாசிக்கிறோம்.

தினசரி, வாரப் பத்திரிகைகளில் பல பக்கங்களை சமூக ஊடகங்களில் இருந்து நன்றியுடனோ, நன்றி இல்லாமலோ எடுத்துப் போட்டு நிரப்பிவிடுகிறார்கள். இங்கே சொந்தமாக சிந்தித்து எழுதியவர், அவரது அனுமதியின்றி வார இதழோ நாளிதழோ ஒரு துணுக்கை எடுத்துப் போட்டால்கூட நெஞ்சம் குளிர்ந்து நன்றி சொல்லி அதையும் எடுத்து மீண்டும் இங்கே போடுகிறார். கணப் பொழுதேனும் செய்தியில் இருப்பது அனைவருக்குமே வேண்டியிருக்கிறது. செய்திகளின் நம்பகத்தன்மையல்ல; செய்தியே பொருட்டு. இம்மனநிலை இருக்கும் வரையிலாவது செய்திகள் நம்பும்படியாக இருக்க வேண்டாமா?

ஆனால், தொலைக்காட்சி செய்தி சானல்களில் வரும் ஃப்ளாஷ் நியூஸ்களைப் படமெடுத்து போட்டோ ஷாப் செய்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதும் அதிகரித்திருப்பதைப் பார்க்கிறேன். சில வினாடி அதிர்ச்சி மதிப்பு ஒன்றே இலக்கு. பிறகு அது பொய் என்று ஒரே நிமிடத்தில் யாராவது கண்டுபிடித்துச் சொல்லிவிடுவார்கள். அதனாலென்ன? அதைக் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தில் இந்த போட்டோஷாப் செய்தி உலகம் சுற்றிவிட்டது. அது போதும். எவ்வளவு பயங்கரம். செய்திகளை ரத்தம் கக்கும் காட்டேரிகளாக்கிவிடுவது தொழில்நுட்பத்தில் சுலப சாத்தியமாகிவிட்டது.

இப்போதெல்லாம் செய்திகளில் இருந்து மிகவும் விலகிப் போய்விட விரும்புகிறேன். எல்லா செய்திகளுமே புனைவுத்தன்மையுடன் இருப்பது போலொரு எண்ணம் எப்போதும் எழுகிறது. இல்லை; இது செய்திதான் என்று நீங்கள் அடித்துச் சொன்னாலும், அது உண்மையாகவே இருந்தாலும் அடுத்த நாளே முதலமைச்சர் போட்ட உத்தரவை மாற்றிப் போட்டு முதல் நாள் செய்தியை மறுநாள் புனைவாக்கிவிடுகிறார். வாழ்வே ஒரு பெரும் மாயப் புனைவாகிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் செய்திகளின் தேவைதான் என்ன?

இந்நாள்களில் நம்புதற்குரிய செய்தி என்றால் அது மரணச் செய்தியாக மட்டும்தான் இருக்கிறது. அதையேகூட ஒரு இருபது முப்பது RIPகளைப் பார்த்த பிறகுதான் துணிந்து நம்ப முடிகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி