கோவிந்தசாமியின் தலையில் இறங்கிய சூனியன், அவன் வம்சத்தின் அருமை பெருமைகளையும், அவனது இல்லற வாழ்வின் இனிமையையும் விவரிப்பது தான் இந்த அத்தியாயத்தின் சுருக்கம்.
அத்தியாயத்தின் இறுதியில் கோவிந்தசாமி அவன் மனைவியுடன் இணைய சூனியன் உதவி செய்கிறார்.
சோறு காணாதவன் கையில் பிரியாணிப்பொதி கிடைத்தால் அது தான் கோவிந்தசாமியின் காதலும் அவன் மனைவி சாகரிகாவும். பெண்ணுக்குரிய இலக்கணத்தையெல்லாம் மீறியது சாகரிகாவின் பாத்திரம் ஆனாலும் அவள் செய்கைகள் யாவும் சரி என்பதற்கில்லை.
மனிதனுக்கு தன்மானம் என்பது சிறிதளவேனும் வேண்டுமென்னும் பட்சத்தில் கோவிந்தசாமி மூடன் மட்டுமல்ல, ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மன் கேட்பது போல் மானங்கெட்டவனே என அவன் முன் உரக்க அவன் மண்டையில் உரைக்குமாறு கேட்க வேண்டும். ஆயினும் ஓர் இனம் புரியாத பரிதாபம் அவன் மேல் தோன்றுகிறது.
சங்பரிவாரின் உறுப்பினர்கள் தாம் சங்கி, அதுவே எங்ஙனம் வசையாக உருவெடுத்தது என்பது கேள்விக்குறி.. இருந்தாலும் உபயோகிக்க எளிதாக உள்ளது என்பதும் உண்மை.
சரி, சூனியன் எதற்கு கோவிந்தசாமிக்கு உதவி செய்கிறான்? வரும் அத்தியாயங்களில் கோவிந்தசாமியும் சூனியனும் ஒன்றாகப் பயணிக்கப் போகின்றனரா?
கபடவேடதாரி தலைப்புக்கு கோவிந்தசாமி புராணம் தேவையற்றது போல இப்போது தோன்றினாலும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் இதுவே விறுவிறுப்பாக மாறுகிறதா…. பார்ப்போம்.