ஒரு காதல், ஒரு கவிதை ஆகிய இவற்றைக் கொண்டு 17ஆவது அத்தியாயத்தை எழுதியுள்ளார் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள்.
அது கவிதையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். அது காதற்கவிதையா என்பதே இந்த அத்தியாயத்தில் வாசகர்கள் எதிர்பார்ப்பது.
‘காதலர்தினம்’ குறித்த விமர்சனம் ஒருபுறமிருந்தாலும் பேரிகை இதழ் குறித்துப் பேசும் போது தமிழ்ச் சிற்றிதழ்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டார் பா.ரா. பெரும்பாலான தமிழ்ச் சிற்றிதழ்களின் உருவ, உள்ளடக்கங்கள் இப்படித்தானே!
பாவம் கோவிந்தசாமி!. அவன் எழுதிய கவிதையை முதலில் வெறுத்தது அவனுடைய நிழல்தான். தன் நிழலுக்கே பிடிக்காத அந்தக் கவிதை எப்படி அவனின் காதலிக்குப் பிடிக்கப்போகிறது? அதைவிட முதன்மையாகப் ‘பேரிகை’ இதழ் வாசகருக்கு அது எந்த வகையில் பொருள்தரும்?
கோவிந்தசாமி அந்தக் கவிதைக்காகப் படும் பாட்டினை ‘உலகக்கவிஞர்’களின் கவிதை முயற்சிக்கு ஒப்பாகக் கூறலாம்தான். ஒரு சொல்லுக்காகத் தவிக்கும் எத்தனையோ எழுத்தாளர்களின் மனவேட்டத்தை நினைவூட்டும் வகையில்தான் இந்த அத்தியாயத்தில் கோவிந்தசாமி காட்டப்பட்டுள்ளான்.