கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 2)

இதோ சூனியன் கிளம்பிவிட்டான்.அவனுக்காக எலும்புகள் கொண்டு செய்யப்பட்ட கப்பல் காத்திருக்கிறது. என்ன எலும்புகளால் ஆன கப்பலா? எனக்கேட்டால் அவன் சொல்வதைக் கேளுங்கள். “சூனியர்களின் உலகில் எலும்புகளுக்கு மதிப்பு அதிகம். வீட்டு விசேடங்களுக்கு ,விழாக்களுக்கு என எல்லா நிகழ்ச்சிகளிலும் எலும்புகள் அலங்காரம் இருக்கும்”.நாம் புராதானப் பொருட்களை சேர்த்து பாதுகாத்து வைப்பதைப்போல இவர்கள் புராதான எலும்புகள் அதாவது சரித்திர புகழ் பெற்ற மனிதர்களின் எலும்புகளில் அணிகலன்கள் செய்து அணிந்து தங்கள் கௌரவத்தை பறைசாற்றிக் கொள்வார்களாம். படிக்கும் போது ஆசிரியரின் நுட்பமான கற்பனையை எண்ணி வியந்தேன். கொஞ்சம் சிரிப்பும் வந்தது. காரணம், சூனியனின் திருமணத்தில் அவன் மாமனார் அவனுக்கு மெர்லின் மன்றோவின் இடது கால் பெருவிரல் எலும்பால் சிகைக் கவசம் செய்து தந்தாராம்.அதேபோல சூனியனின் மனைவி இறந்தபோது அவளுக்கு மிகவும் பிரியமான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் தொடை எலும்புகளால் அவளது பல்லக்கை அலங்கரித்தானாம். மரணமும் திருமணத்தைப் போல கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்று சூனியன் சொன்னாலும் அது எல்லா உலகிற்கும் பொறுத்தமாகவே இருக்கும்.
ஆனால் சூனியனுக்கும் அவனைப் போல தண்டனைக்குரியவர்களுக்கும் துரோகிகளின் எலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட கப்பல்தான் . கப்பல் புறப்படும் போதும் கங்குகளால் ஆன சூனியனை பனிக்கத்திகளால் காவலர்கள் குத்தி வதைப்பதில் ஆச்சரியம் இல்லை.
அந்த கப்பலின் மேற்புறத்தில் திருஷ்டி பிசாசுகள் நிர்வாணமாக படுத்திருக்கும். இங்கு நாமும் வீடுகளில் திருஷ்டிக்காக கோர முகமுடைய பொம்மைகளைப் பயன்படுத்துவோமே.ஒருவேளை அது அதுவாக இருக்குமோ? அந்தப் பிசாசுகள் தங்கள் கூரிய நகங்கள் வழியாக திருஷ்டிகளை சுரண்டி சாப்பிடும் என்பது புதிதான தகவல். ஆனால் அது இங்கு இல்லை. சூனியன் உலகில். அதுமட்டுமின்றி பிசாசுகளின் அம்சங்கள் இன்னும் ஏராளம் உண்டு. ஆனால் அவற்றின் அவலட்சணமான உடல் மட்டுமே சூனியனுக்கு வெறுப்பைத் தருகிறது.
சூனியனின் பாதை சனி கிரகத்தை நோக்கி செல்கிறது. அது குளிர் கிரகம். சூனியர்களுக்கு ஆகாதது. மரணச்சேவகர்கள் மட்டும் சிறப்பம்சம் பொருந்திய அதிக கொதிநிலை உடைய தீக்கவசங்கள் அணிந்திருப்பார்கள். இதில் எனக்கு புன்னகை வரச்செய்தது இந்த வரிகள் தான். ‘ஒருமுறைச் சென்று மரணதண்டனையை நிறைவேற்றி வந்தால் அவர்கள் அவ்வுடையை கழட்டி புதனுக்கு அருகில் காயப்போடுவார்களாம்’. அடடா!அபரிமிதமான கற்பனை.
நிலக்கடலை கூட்டுக்குள் சிறையிருக்கும் சூனியனுக்கு ஏதேனும் ஒரு துருப்பு கிடைத்தாலும் இந்த சூழ்நிலையில் இருந்து பிழைத்து தப்பியோடி தன்னை குற்றமற்றவன் என நிரூபிக்க எண்ணுகிறான். அவன் எண்ணம் போலவே அவர்கள் கப்பலுக்கு எதிரில் நீல நிறத்தில் ஒரு நகரம் மிதந்து வருகிறது. நிறுத்துவிசை இல்லாத அந்தக் கப்பலில் மோதினால் விபத்து நிச்சயம். (எனக்கு இந்த அத்தியாயத்தின் இறுதியில் கொஞ்சம் இடறல் இருப்பதாக தோன்றியது. அது இருள் சூழ நிலக்கடலை கூட்டுக்குள் சிறை இருக்கும் சூனியனால் எப்படி வெளிப்புறத்தைக் காணமுடியும் என்பதுதான்.)
ஏதாவது செய்தாக வேண்டிய சூழலில் ஒரு தீர்க்கமான முடிவை சூனியன் சொல்கிறான். அது அடுத்த அத்தியாயத்தில் தெரியும்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி