அன்றைக்கு என் மனைவி வீட்டில் இல்லை. ஆவக்காய் தேசத்தில் வசிக்கிற தனது சகோதரனின் இல்லத்துக்கு ஒரு விசேஷத்துக்காகப் போயிருந்தாள். எனவே சமையலறையை முற்றுகையிட்டுக் கைப்பற்றுவது எனக்கு எளிதாக இருந்தது. முன்னதாக மனைவி ஊருக்குப் போயிருக்கிற தினங்களில் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் புரியலாம் என்று சிந்தித்து ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருந்தேன். அதன்படி எனது முதல் முயற்சியை பனீர் டிக்காவில் தொடங்கினேன்.
இந்த பனீர் டிக்காவின் ருசிக்கு அடிப்படை, தயிர். தயிர்தான் டிக்காவின் உள்ளுறை பிரம்மம். அந்தத் தயிரானது அதிகமாகவும் ஆகிவிடக் கூடாது, குறைந்தும் போய்விடக் கூடாது. புளித்திருக்கவும் கூடாது, இனிப்பாகவும் இருந்துவிடக் கூடாது. கல்லால் உடைக்க வேண்டிய அளவுக்குக் கெட்டிப் பட்டிருக்க வேண்டியது அனைத்திலும் அவசியம். அந்தக் கெட்டித் தயிரை நீர் சேர்க்காமல் கடைந்து நுங்கு பதத்துக்குக் கொண்டு வரவேண்டியது முக்கியம். ஒரு சிறந்த பனீர் டிக்காவை ருசிப்பதற்கு நீங்கள் முழுக் கொழுப்புப் பாலில் தோய்த்த தயிரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தயிர் உருவாக்கத்தில் நமது பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதால் அன்றைக்கு எனக்கு மிகச் சிறந்த தயிர் வாய்த்துவிட்டது. காஷ்மீரத்து மிளகாய்த் தூள் கொஞ்சம், பொடித்த கடுகு கொஞ்சம். சீரகம் மற்றும் தனியாத் தூள் கொஞ்சம், அரைச் சிட்டிகை மஞ்சள் தூள், அளவோடு உப்பு. சேர்த்துக் கலக்கினால் முடிந்தது கதை.
தயிரைத் தயார் செய்து வைத்துவிட்டுத்தான் வெங்காய நறுக்கலில் உட்கார்ந்தேன். பொதுவாக நமது உணவகங்களில் வெங்காய விற்பன்னர்கள் பனீர் டிக்காவுக்கென சிறப்பு மெனக்கெடல் ஏதும் செய்ய மாட்டார்கள். தடிதடியாகக் கிண்ணம்போல நறுக்கி, அதே அளவு தடிமனில் தக்காளி மற்றும் குடை மிளகாயையும் சேர்த்து நறுக்கில், மூன்றின் இடையே பனீரைச் சொருகி, பல் குத்தும் குச்சியால் அதன் அடி வயிற்றில் ஓங்கி ஒரு குத்துக் குத்தி கொண்டு வந்து வைத்துவிடுவார்கள்.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு தண்டக் கருமாந்திரத் தயாரிப்பு. சற்றும் கலையுணர்ச்சி இல்லாமல் உருவாக்கப்படுவது. அந்த அபூர்வா ஓட்டல் அஸ்ஸாமிய நாரீமணியைப் பற்றிச் சொன்னேனே? அவரைப் போல நூதனமாக ஏதாவது முயற்சி செய்வதே உணவுக்கு நாம் செய்யும் மரியாதை.
ஆச்சா? வெங்காய துவந்த யுத்தம் ஆரம்பமானது. ஒரு வெங்காயத்தை, ஒரு துண்டு கூடக் கீழே விழாமல் முற்றிலும் சுருள் சுருளாக, மெலிதாக ஒரே வளையம் போல் வார்த்தெடுப்பது என்பது ஒரு பெரும் வித்தை. இதற்கென என்னவாவது கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. அந்த அஸ்ஸாமியப் பெண் கையாலேயே வெங்காய மாலை தொடுத்ததைக் கண்ணால் கண்டுவிட்ட படியால் நாமும் முயற்சி செய்யலாம் என்று நினைத்தேன்.
ஆனால் முற்றிலும் காந்தியவாதியான எனக்குக் கத்தியைச் சரியாகப் பயன்படுத்த வரவில்லை. எத்தனை லாகவமாக அதை வெங்காய வடிவத்துக்கு வளைத்து மடித்தாலும் நான் கோக்க நினைத்த மாலையானது இரணிய கசிபு வதைப் படலத்தை உத்தேசித்தே நகர்ந்துகொண்டிருந்தது. சுமார் அரை மணி நேரம் வெங்காயத்தோடு துவந்த யுத்தம் நிகழ்த்திவிட்டு, இறுதியில் துவண்டு தோற்றேன். ரொம்ப அவமானமாகப் போய்விட்டது.
நாராசமாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை வீணாக்கவும் முடியாது. ஒரு சிறந்த பனீர் டிக்காவுக்கு அதை உபயோகிக்கவும் முடியாது. என்ன செய்யலாம்? இந்தத் தீவிர யோசனையில், ஃப்ரிட்ஜில் இருந்த பனீரை வெளியே எடுத்து வைக்க மறந்துவிட்டிருந்தேன். பனீர் ஒரு பத்து நிமிடங்களாவது அறை வெப்பத்தில் இருந்தால்தான் வெட்டுவதற்கு நெகிழ்ந்து கொடுக்கும். ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த வேகத்தில் கத்தியைக் கொண்டுபோய் அதன் கன்னத்தில் வைத்தால் வடிவம் கண்ணராவியாகிவிடும்.
என்ன ஒரு இம்சை! மேலும் பத்து நிமிடங்கள் பனீருக்காகக் காத்திருந்து, அதைச் சதுரங்களாக்கித் தயிரில் போட்டு ஊற வைப்பதற்குள் தயிரின் குணம் மாறிவிடும். இந்தத் தயிரானது, மனைவி இனத்தைச் சேர்ந்த ஒரு பொருள். என்ன செய்தாலும் முகம் சுளிக்கும். பதம் தவறினால் கதம் கதம்.
எனவே எனது கலைத்தரம் மிக்க பனீர் டிக்கா கனவானது அன்று விதியால் கபளீகரம் செய்யப்பட்டது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். நான் ருசித்து உண்பது மட்டுமே இதில் விஷயமல்ல. நான் வசிக்கிற அச்சுவெல்ல அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் எனக்கு கோபால் என்ற நண்பரொருவர் இருக்கிறார். கம்யூனிஸ்டு என்றாலும் அடிப்படையில் கலை மனம் கொண்டவர். அவரைக் கூப்பிட்டுக் கொஞ்சம் ருசி பார்க்கச் சொல்லிவிட்டால் போதுமானது. மனைவி ஊரில் இருந்து திரும்பும்போது வாசலிலேயே நிறுத்தி வைத்து எனது தீர பராக்கிரமங்களைப் பற்றிப் பிரஸ்தாபித்துவிடுவார்.
ஆக, அந்த எண்ணத்திலும் மண். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். டிக்கா முடியாது என்று தெரிந்துவிட்டது. எனவே மாற்றுப்பாதையில் போவதென முடிவு செய்து, எனது அன்றைய நூதனத் தயாரிப்பு ஒரு பனீர் கிச்சடியாக இருக்கும் என்று எனக்குள் அறிவித்துக்கொண்டேன். இப்போது பனீரை நறுக்க வேண்டிய அவசியமில்லை. இளகிய பதம் தேவையில்லை. பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல எனதிரு கரங்களாலும் பனீர்க் கட்டியை ஏந்திப் பிடித்துப் பிசைந்து கொட்டினேன்.
சட்டென்று ஒரு பயம் பிடித்துக்கொண்டது. அடக்கடவுளே, கிச்சடிக்குத் தயிர் எப்படிச் சேரும்? அசகாய மசாலாக் கலவையெல்லாம் தயாரித்து அதன் தலையில் கொட்டி சமாஸ்ரயணம் செய்து வைத்திருக்கிறேனே? அத்தனையும் வீணா?
மீண்டும் யோசித்து கிச்சடி யோசனையைக் களி யோசனையாக மாற்றிக்கொண்டேன். களிப்பூட்டும் களி. செய்கிற விதத்தில் செய்தால் அதன் ருசியும் அபாரமாகவே இருக்கும். எனவே, அடுப்பில் வாணலியை ஏற்றி, இரண்டு கரண்டி நெய்யை ஊற்றி நாலு கடுகு, இரண்டு குண்டு மிளகாய்களைப் போட்டெடுத்து எனது வெங்காய சம்ஹார சரக்கை அவிழ்த்துக் கொட்டி வதக்க ஆரம்பித்தேன். களிக்கு வெங்காயம் உண்டா என்றெல்லாம் கேட்கப்படாது. கலைஞன் ஒரு வினோத ரச மஞ்சரி. அவன் என்னவும் செய்வான். பெரும்பாலும் கிறுக்குத்தனங்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
ஆக, வெங்காயம் வதங்கியது. இப்போது உதிர்த்துப் பிசைந்த பனீரை அதில் போட்டுக் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினேன். சட்டென்று தயிர் நினைவுக்கு வந்தது. ஐயோ தண்ணீர் எதற்கு? நிறுத்திவிட்டு, எடுத்துக் கொட்டு தயிரை.
இந்த உலகில், வாணலியில் வதங்குகிற ஒரு வஸ்துவில் தயிரைக் கொட்டி வேகவிட்ட ஒரே ஜென்மம் நானாகத்தான் இருப்பேன். பிரச்னை என்னவெனில், முதலில் மறந்துபோய் சேர்த்துவிட்ட தண்ணீரும் தயிரும் கலந்து, எனது களியானது மோரில் வேகத் தொடங்கியது. ரொம்பக் கேவலமாக இருக்குமோ என்று பயம் வந்து சட்டென்று அடுப்பை அணைத்தேன். படாதபாடு பட்டு கொதித்துக்கொண்டிருந்த அந்த மோர்க்கரைசலை வடித்து வெளியே கொட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றினேன்.
ஆனது ஆகிவிட்டது. இனி நடப்பது எம்பெருமான் செயல். தக்காளி, குடை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி என்று கிடைத்தது அனைத்தையும் அள்ளிக்கொட்டி என்னமோ ஒன்றைச் செய்து முடித்தேன். நான் செய்ததில் ஒரே நல்ல காரியம், அடுப்பை மிதமான சூட்டிலேயே பத்து நிமிடங்களுக்கு வைத்திருந்ததுதான்.
உண்டு பார்த்தபோது திகைத்துவிட்டேன். உண்மையில் அது ஒரு நூதன பனீர் புர்ஜி. உப்புமாவுக்கும் பொங்கலுக்கும் பிறந்த கலப்புக் குழந்தைபோல் இருந்தது.
இன்னொரு முறை செய்வேனா என்று தெரியாது. அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும்.
(மேலும் ருசிக்கலாம்..)