ரத்தம் சொட்டச் சொட்ட காயம் பட்டபிறகு, செய்த தவறின் அடிப்படைக் காரணம், அறியாமை என்று தெரியவரும்போது வலியை மீறிய வேதனை ஒன்று வரும். ரத்த காயத்தைவிடத் தீவிரமானது அது. அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே இது விளங்கும்.
நாங்கள் தமிழ் பத்திரிகைச் சூழலில் பயின்றவர்கள். எல்லாம் கற்றுத்தரும் இந்த உலகம், காப்பிரைட் என்று ஒன்று இருப்பதை மட்டும் எப்போதும் மறைத்தே வைத்துவந்திருக்கிறது. படங்கள் விஷயத்தில் இது இன்னும் விசேஷம். Time, News Week, New Yorker, People, Mad என்று தொடங்கி, சந்தா செலுத்தி வாங்கும் பத்திரிகைகள் அனைத்தும் நாம் கத்தரித்து உபயோகிப்பதற்காகவே மேற்கத்திய உலகத்தால் உருவாக்கப்படுபவை என்பது விளக்காமல் புகட்டப்பட்ட விஷம்.
இவர்கள், அவர்கள் என்று பெயர் குறிப்பிட்டு சுட்டவேண்டிய அவசியமே இல்லை. You name it. எல்லோரும் அப்படித்தான். எங்கேயும் அப்படித்தான். கிழித்து ஸ்கேன் செய்துவிட்டால் அது நமது சொத்து. இதன் விபரீதம் என்னவென்றால் ஒரு கட்டத்தில் இந்த ஓவியங்கள், புகைப்படங்களையெல்லாம் முகமறியாத யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார், எடுத்திருக்கிறார், அவரது உழைப்பை நாம் சுரண்டுகிறோம் என்கிற எண்ணமே மனத்தில் எழாதவண்ணம் அது தினசரி நடவடிக்கைகளுள் ஒன்றாகிப் போய்விடுகிறது. வார இதழ்களின் உயிர் ஒருவாரம். செய்த பாவத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கரைத்துவிட்டுத் திங்கள் முதல் புதிய பாவம்.
நமது படைப்புகளை வேறு யாராவது இப்படி எடுத்தாள்வது தெரியவந்தால் எப்படி React செய்திருப்போம் என்று ஒரு கணம் – ஒரே ஒரு கணம் முன்னோர்களால் எண்ணிப் பார்க்க முடிந்திருந்தால் இந்தப் பெரும்பிழை இங்கு நேர்ந்திருக்காது. ‘படைப்பு’ என்று சொல்லும் தரத்தில் நாம் பிறப்பிக்கும் சரக்குகள் இருக்கிறதா இல்லையா என்கிற அடிப்படைச் சந்தேகம் எல்லோருக்குமே இருந்திருக்கும் போலிருக்கிறது.
தமிழ் பத்திரிகை உலகுக்கு இண்டர்நெட் என்கிற ஒன்று அறிமுகமானபோது இது விஷயத்தில் இன்னும் தீவிரம் உண்டாகிவிட்டது. ஆபுத்திரன் கை அமுதசுரபியே கிடைத்துவிட்டாற்போன்ற உணர்வில் ஒரு மாபெரும் Right Click – Save As வேள்வி இங்கு தொடங்கியது.
அறியாமை.
உண்மை அதுதான். திமிர், தெனாவட்டு, கொழுப்பு, அகங்காரம், பிறரது படைப்புரிமையை மதிக்காத குணம், கேவலமான புத்தி, திருட்டுத்தனம், சண்டாளத்தனம் என்று எந்தச் சொல்லில் திட்டினாலும் தலை குனிந்து ஏற்றுத்தான் ஆகவேண்டும். கோபத்தைக் குறை சொல்ல யோக்கியதை இல்லை.
எப்படியானாலும் கேவலம். எப்படியானாலும் பெரும்பிழை. அது சூழல் பயிற்றுவித்தது. ஆர். வெங்கடேஷின் ‘நேசமுடன்’ புத்தகத்துக்கு ரமணிதரனின் டிஜிட்டல் ஓவியத்தை அட்டைப்படமாகப் பயன்படுத்தியதும் , புதுவை ரஜினியின் ‘மழை ருசி’ சிறுகதைத் தொகுப்புக்கு நந்தா கந்தசாமியின் ஓவியம் ஒன்றை எடுத்தாண்டதும் இந்த வகையிலான பிழைகள் அல்லது குற்றங்கள்தாம்.
ரமணி பெருந்தன்மையுடன் மன்னித்தார். எடுத்தாண்ட படத்துக்கான விலையை உதவும் கரங்களுக்கு அனுப்பச் சொன்னார். அப்படியே செய்தோம். புதுவை ரஜினி புத்தக விஷயத்தில், புத்தகம் வெளியான சில நாள்களிலேயே தவறு சுட்டிக்காட்டப்பட்டதால் படத்தின் காப்பிரைட் சொந்தக்காரரான நந்தா கந்தசாமியைத் தொடர்புகொண்டு, பிழைக்கு மன்னிப்புக் கேட்டு, எஞ்சிய பிரதிகளில் அவர் பெயரைச் சேர்த்து, காம்பன்சேஷன் தொகை அளித்தோம். சிங்கப்பூர் குறித்த புத்தகத்தில் உள்ளடக்கத்திலேயே காப்பிரைட் வயலேஷன் இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டதால், புத்தகத்தையே தடை செய்தோம். கடைகளுக்குச் சென்றுவிட்டிருந்த ஆயிரக்கணக்கான பிரதிகளைத் திரும்பப் பெற்று அழித்தோம்.
சந்தேகமில்லாமல் பெரும்பிழைகள். சாஷ்டாங்க மன்னிப்பு தவிர வேறு வழி கிடையாது. அதைத்தான் செய்தோம்.
சிறு பிழையும் இல்லாத நேர்த்தியான வாழ்க்கை என்று ஒன்று இல்லை. குறையொன்றுமில்லாத மனிதப் பிறவிகள் கிடையாது. பிழைகளும் பிசிறுகளுமற்ற வாழ்வில் புதிதாகக் கற்க எதுவும் இருந்துவிட இயலாது.
நாங்கள் செய்த இந்த மூன்று பெரும் பிழைகளும் எங்களுக்குச் சிறந்த பாடங்களைக் கற்றுத்தந்தன. பல உண்மைகளையும் புரியவைத்தன. தமிழில் சிறிதும் பெரிதுமாகச் சுமார் ஐந்நூறு பதிப்பகங்கள் இருக்கின்றன. நூறு வருடங்களாக இத்துறை ஒரு தொழிலாக இம்மாநிலத்தில் இயங்குகிறது. பல்லாயிரக்கணக்கான பிரதிகளும் அட்டைப்படங்களும் உருவாகி, சந்தைக்குச் சென்றிருக்கின்றன. எத்தனை முறை இந்தப் பிழைகள் அரங்கேறியிருக்குமோ தெரியாது. பாவம், மகா பாவம். பிரதிநிதிகளாக நின்று முதல் அடியையும் முதல் அவமானத்தையும் நாங்கள் பெற்றுக்கொண்டதன் பலன் – இன்றைக்கு காப்பிரைட் குறித்த அடிப்படை விழிப்புணர்வு இங்கே ஓரளவு உருவாகத் தொடங்கியிருக்கிறது.
ஐந்நூறு பேர் இயங்கும் துறையில் கவனிக்கப்படும் நபர்களாக நாம் இருக்கிறோம் என்கிற உணர்வு எங்கள் பொறுப்பை எங்களுக்குச் சுட்டிக்காட்டியது. அவமான உணர்வைத் துடைத்து எறிந்துவிட்டு, ஆக்கபூர்வமான சில முடிவுகளை எடுத்துச் செயல்படத் தூண்டியது.
அட்டைப்படங்கள் விஷயத்திலும் உள்ளடக்க விஷயத்திலும் மிகக் கடுமையான தணிக்கை முறைகளைக் கொண்டுவந்தோம். சட்டதிட்டங்களை வகுத்தோம். போட்டோ லைப்ரரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம். பரிசீலனைக்கு வரும் பிரதிகளின் ஒவ்வொரு வரிக்கும் ஆதாரம் கேட்க ஆரம்பித்தோம். எடுத்தாளப்படும் வரிகள் என்றால், சம்பந்தப்பட்ட காப்பிரைட் உரிமையாளர்களின் ஒப்புதல் கோரத் தொடங்கினோம்.
செய்த பிழைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். இல்லாது போனால் சிறந்த சில பாடங்கள் கிடைத்திருக்காது.
ஒரு நிறுவனத்தை உருவாக்கி, கட்டிக்கொண்டு செல்லும்போது இம்மாதிரியான சறுக்கல்களும் பிழைகளும் தவறுகளும் தவிர்க்கமுடியாதவை. இது ஒரு நபர் பணியல்ல. குழுப்பணி. எங்களுடையது மாபெரும் குழு. தமிழ் பதிப்புலகம் தன் சரித்திரத்தில் இத்தனை பெரிய குழுவை இதற்குமுன் கண்டது கிடையாது. ஐந்து பேருடன் ஆரம்பிக்கப்பட்ட NHMல் இன்றைக்கு நூற்றைம்பது பேர் பணியாற்றுகிறார்கள். நாளை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியே கிடையாது. சந்தை அத்தகையது. அதன் தேவை அத்தகையது.
எடிட்டோரியலைச் சேர்ந்த நாங்கள் கண்ணால்கூட ஒருமுறையும் பார்த்தறியாத பல இளைஞர்கள் எங்கள் புத்தகங்களைச் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள். நடமாடும் புத்தக வண்டிகளும் திடீர்க் கடைகளுமாக நாளுக்கொரு புதிய யோசனையுடன் எங்கள் மார்க்கெடிங் பிரிவு இளைஞர்கள் ஆர்வத் துடிதுடிப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஹோட்டல்களிலும் மருந்துக் கடைகளிலும் கோயில்களிலும் பெட்டிக் கடைகளிலும் டீக்கடைகளிலும் கூட கிழக்கு, வரம், நலம், Prodigy புத்தகங்கள் கிடைக்கின்றன என்று பார்த்த மக்கள் ஆர்வமுடன் போன் செய்வார்கள்.
புத்தகங்களைத் தேடி வருபவர்களல்ல எங்கள் நோக்கம். வாசிக்கத் தெரிந்த அனைவரையும் நாங்கள் சென்றடைவது ஒன்றே குறிக்கோள். இம்முயற்சிக்கான உற்சாகத்தை உள்ளுக்குள் ஓர் ஆர்வம் கலந்த வேகமில்லாமல் பெற இயலாது. வேகம் சமயத்தில் காலை இடறிவிடுகிறது. விழுந்து சிராய்த்துக்கொள்ள நேரிடுகிறது. நேர்ந்த பிழைகள் அதனால்தான்.
கற்றுக்கொண்டுவிட்டோம்; இனி தவறுகளே நேராது என்று கண்டிப்பாகச் சொல்லமாட்டேன். நிச்சயம் தவறுகள் நடக்கும்.
அவை புதிய தவறுகளாக மட்டுமே இருக்கும்.
வாழ்க்கையின் ஆகப்பெரிய சூட்சுமமே அதுதானே? Trial and error. அல்லது trial by error.
[தொடரும்]கிழக்கு ப்ளஸ் – பகுதி ஒன்றினை வாசிக்க .