கிழக்கு ப்ளஸ் – 3

பகுதி 1 | பகுதி 2 

தமிழ் பதிப்புலகம் ஒரு தாயற்ற குழந்தை. இங்கு எடிட்டர்கள் என்னும் இனம் இருந்து தழைத்ததில்லை. அவர்களது அவசியம் அல்லது முக்கியத்துவம் யாரும் உணரக்கூடியதாக இருந்ததில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பதிப்பாளர்களுக்கு மட்டும் இங்கு எடிட்டிங் ஓரளவு தெரியும். எடிட்டிங் என்றால் ப்ரூஃப் ரீடிங் என்பதே பொதுவில் அறியப்பட்ட நுட்பம். நூல்களுடன் வருடங்களைக் கழித்த அனுபவம் அவ்வப்போது போதித்த நுட்பம் அது. பதிப்பகத்துக்கு என்ன தேவை? எழுதுபவர்கள். மேலும் ஒரு வெளியீட்டாளர். புத்தகங்களை பார்சல் கட்டிக் கடைகளுக்கு அனுப்ப ஒரு பையன். போதும்.

கிழக்கு தொடங்கப்பட்டபோது நாங்கள் வகுத்துக்கொண்ட மிக முக்கியமான விதி, எந்த ஒரு புத்தகமும் கச்சிதமாக எடிட் செய்யப்படாமல் வெளியே போகக்கூடாது என்பது. ஓர் அத்தியாயம் தேவைப்படும் விஷயத்தை ஒரு பத்தியில் சொல்லத் தெரிந்த, ஒரு பத்தி விவரிப்பதை ஒரு வரியில் சுருக்கத் தெரிந்த, ஒரு வரி விஷயத்தை ஒரு சொல்லில் புரியவைக்கத் தெரிந்த, ஒரு சொல் செய்தியை ஓர் இடைவெளி மௌனத்தில் வெளியிடும் நுட்பம் அறிந்த நபர்களைத் தேடிப்பிடிப்பது எங்களுக்குச் சவாலாக இருந்தது. நூலாசிரியர் கொண்டுவந்து கொடுக்கும் பிரதியில் விடுபட்டிருப்பவற்றைக் கண்டுபிடித்துச் சேர்த்தும், அதிகம் விவரிக்கப்பட்டிருப்பதை வெட்டியும், முக்கியமாக –  வாசகரை வருத்தாத மொழி கையாளப்பட்டிருக்கிறதா என்று விழிப்புணர்வுடன் ஆராய்ந்தும் சரி செய்யவேண்டிய மாபெரும் பொறுப்பு எடிட்டர்களுடையது.

தவிரவும் நாங்கள் உருவாக்கிக்கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவும் நல்ல எழுத்தில் சுவாரசியம் சேர்க்கவும் நல்ல எழுத்துக்கும் கெட்ட எழுத்துக்கும் வித்தியாசம் கற்றுத் தரவும் அவர்கள் அவசியம் தேவைப்பட்டார்கள்.

ஒரு நல்ல புத்தகத்துக்கு அதன் ஆசிரியரைவிட, அதன்மீது பணியாற்றும் எடிட்டருக்கான உரிமைகள் அதிகம். உன்னதங்கள் என்று உலகம் கொண்டாடும் பல பிரதிகளின் பூர்வ சரித்திரத்தை முன்வைத்து இதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல இயலும். பர்வேஸ் முஷரஃபின் In The Line of Fire மூலப்பிரதியின் மெய்ப்பில், அந்நூலின் எடிட்டர்கள் நிகழ்த்தியிருந்த தாண்டவத்தை – மொழிபெயர்ப்புக்கு அது வந்திருந்தபோது காண நேரிட்டது. அமெரிக்கப் பதிப்புக்குத் தனி எடிட்டர். பிரிட்டன் பதிப்புக்குத் தனி எடிட்டர். இருவரின் பார்வையும் வேறு. இருவரின் மொழிச் சங்கீதமும் வேறு. இருவரின் சொல்லாட்சிகளும் வேறு. ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் அனுபவங்களைக் கேட்டு, ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதிய புத்தகம் அது.

ஆனாலும் குறை இருந்தது. பிரச்னைகள் இருந்தன. எடிட்டர்கள் இருவரின் நோக்கமும் அந்நூலின் தரத்தை, துல்லியத்தை உயர்த்துவது ஒன்று மட்டுமே. இயற்கையின் உந்துதலால் யாரோ பெற்றுப்போட்ட குழந்தைகளுக்கு உயிரும் உருவமும் உணர்வும் சிந்தனையும் செயல் மேன்மையையும் ஒரு பள்ளி ஆசிரியர் அளிப்பது போலத்தான். துரதிருஷ்டவசமாக இங்கே பெற்ற குழந்தையைச் சரியாக வளர்த்தும் வார்த்தும் எடுக்கத் தெரிந்த பெற்றோர் குறைவு.

எனவே நாங்கள் எடிட்டர்களுக்காக மேலதிகம் கவலைப்பட்டோம். தமிழ்ச் சூழலில் எடிட்டர்கள் என்னும் இனத்தார் இரு இடங்களில் மட்டுமே உண்டு. பத்திரிகை மற்றும் திரைப்படம். எனவே, எங்கள் எடிட்டர்களைக் குமுதத்திலிருந்தும் சப் எடிட்டர்களைக் கல்கியிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். குமுதம், நுட்பங்களை போதிக்கும் பள்ளி. கல்கி, உழைப்பைக் கற்றுத்தரும் பள்ளி.

பார்த்தசாரதியும் [ஆசிரியர், நலம் வெளியீடு] வாசுதேவும் [ஆசிரியர், வரம் வெளியீடு] ஏ.ஆர். குமாரும் [ஆசிரியர், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்]  தளவாய் சுந்தரமும் [ஆசிரியர், இலக்கியப் பிரிவு] குமுதத்திலிருந்து வந்தார்கள். Prodigy என்னும் குழந்தைகளுக்கான தனிப் பதிப்பைத் தொடங்கியபோது கோகுலத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சுஜாதா அதன் ஆசிரியர் பொறுப்பேற்க வந்தார். முன்னர் சயின்ஸ் ஃபோரத்தில் இருந்தவர் அவர்.

பயிற்சி நிலை, தன்னார்வப் பத்திரிகையாளர்களாகக் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த மருதன், முகில், கண்ணன், முத்துக்குமார் ஆகியோரும் அசோகமித்திரன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு, தொடக்கத்திலிருந்தே என்னுடன் இருக்கும் முத்துராமனும் உதவி ஆசிரியர்களாக அமர்ந்தார்கள். [சேர்ந்த சில காலங்களில் தன் தரத்தை நிரூபித்து மருதன், கிழக்கின் ஆசிரியரானார்.] பிறகு எத்தனையோபேர் வந்து, எங்கள் சூழலில் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.

ஒரு கட்டத்தில் தமிழ்ப் பத்திரிகை உலகில் எங்கு, யார் ராஜினாமா செய்தாலும் ‘கிழக்குக்குப் போகிறாயா?’ என்கிற கேள்வி தவறாமல் அவரவர் நிர்வாகத்தால் கேட்கப்பட்டது.

இன்றைக்கும் கிழக்கில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து தினசரி யாராவது கேட்கிறார்கள். கடிதங்கள் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் நேரிலும். வெறும் கோரிக்கை மட்டுமல்லாமல் பல முக்கிய மனிதர்களின் சிபாரிசுகளுடனும். வருகிற விண்ணப்பங்களின் எண்ணிக்கை மலைப்பேற்படுத்தும் அளவுக்கு உள்ளது. ஆனால் தொடக்கத்தில் ஒவ்வொரு இடத்தை நிரப்பவும் நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்ல. ஒரு பதிப்பகத்துக்கு எதற்கு ஆசிரியர் குழு என்றே பெரும்பாலும் கேட்டார்கள். எத்தனை நாள் இந்தத் தெருக்கூத்து என்று கேலி பேசினார்கள். இருக்கும் வேலையிலிருந்து விலகி வந்து இங்கு சேர்வதில் உள்ள அச்சத்தையும் தயக்கத்தையும் சாங்கோபாங்கமாகத் தெரிவித்தார்கள்.

சற்றும் தயங்காமல் நாங்கள் கல்லூரி மாணவர்களில் எழுத்து ஆர்வம் உள்ளவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்து தேர்வாகிறவர்களைப் பயிற்சியளித்துப் பயன்படுத்த முடிவு செய்தோம். எங்கள் பயிற்சி முகாமுக்கு வந்தவர்களில் சிலர் இன்றைக்கு எங்கள் மதிப்புக்குரிய நூலாசிரியர்கள். அந்தப் பயிற்சி முகாம் வழியேதான், அன்றைய கல்கி பயிற்சியாளர்களாகவும் இன்றைய எங்கள் துணை ஆசிரியர்களாக உள்ளவர்களையும் கண்டடைந்தோம்.

இந்த ஆசிரியர் குழுவினரின் தனிப்பட்ட தொடர்புகள் வழியே எங்களுக்கான நூலாசிரியர்களை நாங்கள் பெற்றோம். அரசியல் எழுதுபவர்கள். பொருளாதாரம் எழுதுபவர்கள். வரலாறு எழுதுபவர்கள். தன்னம்பிக்கை எழுதுபவர்கள். அறிவியல் எழுதுபவர்கள். ஆன்மிகம் எழுதுபவர்கள். மருத்துவம் எழுதுபவர்கள். சிறுவர்களுக்காக எழுதுபவர்கள்.

யார் என்ன எழுதினாலும் எங்கள் ஆசிரியர்களால் துல்லியமாக எடிட் செய்யப்படாமல் எதுவும் இங்கு வெளியாகாது. என் படைப்பு அமர காவியம், இதில் கைவைக்க நீ யார் என்று இங்கு யாரும் கேட்க இடமில்லை. [தமிழில் மட்டுமே இந்நிலைமை உண்டு. சற்று அதிகமாகவே உண்டு.] அப்படிச் சொல்பவர்களிடம் மரியாதையாகப் பிரதியைத் திருப்பியளித்துவிடுகிறோம்.

எழுதுபவர்களுக்கு அவர்களுடைய எழுத்து முக்கியம். தவறே இல்லை. அம்மாதிரியே நிறுவனத்துக்கு அதன் தரக் கட்டுப்பாடுகளும் வாசகர்களும் முக்கியம். எங்களது எடிட்டர்களின் புத்தகங்களைக் கூட இன்னொரு எடிட்டர் பார்த்து சம்மதம் சொல்லாமல் பிரசுரிப்பதில்லை. என்னுடைய அரசியல் புத்தகங்களை முத்துக்குமார் எடிட் செய்வார். அரசியல் நீங்கலான பிற புத்தகங்களைப் பார்த்தசாரதி செய்வார்.

பெருமை கொள்வதல்ல இதன் நோக்கம். வாரத்துக்குப் பத்து புத்தகங்கள் வெளியிடுகிறீர்களாமே? ஏதாவது மேஜிக் மெஷின் வைத்திருக்கிறீர்களா? என்று சிரித்துக்கொண்டே முகத்துக்கு நேராகவும் அசெம்ப்ளி லைன் தயாரிப்புகள் என்று முதுகுக்குப் பின்னாலும் பேசுவோருக்குப் புரியவைக்கும் எளிய முயற்சி.

இத்தனை மூளைகளும் இத்தனை உழைப்பாளர்களும் ஒருங்கிணைந்து ஒரே சிந்தனையுடன் பணியாற்றும்போது இப்போது நாங்கள் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை ஒரு பெரிய விஷயமே அல்ல. பெங்குயினும் டிசி புக்ஸும் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் நூல்களின் எண்ணிக்கைக்கு அருகேகூட இது வராது.

எண்ணிக்கையல்ல எங்களுக்கு முக்கியம். எண்ணியது எண்ணியபடி அமைவதற்காக மட்டுமே மெனக்கெடுகிறோம்.

NHM புத்தகங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம், அத்தனை அழகு என்று ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் நூற்றுக்கணக்கான வாசகர்கள் என்னிடமும் பத்ரியிடமும் வாய் ஓயாமல் புகழ்ந்துவிட்டுப் போவார்கள். ஒண்டுக் குடித்தனவாசிகளாக நாங்கள் மயிலாப்பூரில் கடை விரித்த காலத்தில் என் மீது கொண்ட நம்பிக்கை ஒன்றின் அடிப்படையில் மட்டுமே தாங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு வந்து இணைந்துகொண்ட குமரனும் கதிரவனும் எங்கள் நூல்களின் உருவத் தரத்துக்குப் பொறுப்பாளிகள். அவர்கள் மூலம் வந்து சேர்ந்த லே அவுட் கலைஞர்கள் அநேகம்பேர்.

எனக்கோ பத்ரிக்கோ, எங்கள் நிறுவனத்தில் வேறு யாருக்குமோ பதிப்புத் துறை அதற்குமுன் பரிச்சயமானதில்லை. ஒரு புத்தகம் எப்படி இருக்கலாம், எப்படி இருக்கவேண்டும், என்னென்ன எழுதலாம், எப்படித் தரம் சேர்க்கலாம் என்கிற யோசனைகள் மட்டுமே இருந்தன. பத்திரிகைப் பின்னணி இருந்ததால் உள்ளடக்கம் குறித்த தெளிவு எனக்கும், முன்னதாக ஒரு நிறுவனத்தைப் பிறப்பித்து, கட்டி, உருவாக்கி வளர்த்து, வெற்றி கண்ட அனுபவம் இருந்ததால் அமைப்பை நிறுவும் திறமை பத்ரிக்கும், விற்பனை மற்றும் மார்க்கெடிங் துறையில் தேர்ச்சி இருந்ததால், தயங்காமல் எதையும் செய்துபார்க்கும் துணிவு சத்யாவுக்கும் இருந்தது.

இங்கு வந்துதான் இந்தத் துறையைக் கற்கத் தொடங்கினோம். இதன் நெளிவு சுளிவுகள். கஷ்ட நஷ்டங்கள். முக்கியமாக, காப்பிரைட் குறித்த அடிப்படைகள்.

ஒற்றையடிப் பாதையில் சர்க்கஸ் சைக்கிள் ஓட்டும்போது விழுந்து சிராய்க்காமல் கற்றல் சாத்தியமில்லை.

நாங்களும் விழுந்தோம். செமத்தையாக அடிபட்டுக்கொண்டோம். ஒருமுறை, இரு முறை அல்ல. மூன்று முறை.

[தொடரும்]
Share