நாலு ரன், ரெண்டு விக்கெட்

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு நேற்று மாலை மெரினா கடற்கரையில் அலுவலக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் சந்தர்ப்பம். இடது முழங்கை – வலது கால் முட்டியில் சிராய்ப்பு, இடது கணுக்கால் – வலது கால் முட்டிக்கு ஒன்றரை இஞ்ச்சுக்குக் கீழே சுளுக்கு என்று விழுப்புண்களுடனும், நான்கு ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளுடனும் வெற்றிகரமாக வீடு திரும்பினேன்.

அலுப்பில் அப்போது உறங்கிவிட்டாலும் காலை எழுந்ததும்தான் வலி உயிர் போகிறது. ஒரு கேட்சுக்காக கிலோமீட்டர் கணக்கில் ஓடி, தபாலென்று பாய்ந்து கீழே விழும் வீரர்களை நினைத்துப் பார்க்கிறேன். எத்தனை முறை விழுகிறார்கள், எத்தனை அடி படுகிறார்கள்! பல சந்தர்ப்பங்களில் இருந்த இடத்திலிருந்தே பந்து செல்லும் திசை நோக்கி அறிஞர் அண்ணா மாதிரி கை உயர்த்தி விரல் நீட்டும் இந்திய வீரர்களை டிவியில் பார்த்திருக்கிறேன். முன்னதாக இப்படி ஏதாவது முட்டி பெயர்ந்திருக்கும்.

கிரிக்கெட் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. போங்கடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பங்களை அது தன்னகத்தே கொண்டிருந்தாலும்.

எங்கள் அலுவலகத்தில் கிரிக்கெட் வெறியர்கள், கிரிக்கெட் பைத்தியங்கள், கிரிக்கெட் ரசிகர்கள் பலர் உண்டு. க்ரிக் இன்ஃபோ தளத்தை ஹோம் பேஜாக வைத்துக்கொண்டு ஸ்கோர் கார்டு பார்க்கும் நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தில் வேலை பார்க்கும் பிரகஸ்பதிகள் அதிகம். வண்ணாரப்பேட்டை அணிக்கும் டுமீங் குப்பம் அணிக்கும் இடையே நடைபெறும் மேட்ச் பற்றியெல்லாம் பத்ரி விலாவாரியாகப் பேசுவார். ச.ந. கண்ணனும் கதிரவனும், நடைபெறும் ஒவ்வொரு மேட்சையும் ஒரு மொஹம்மத் அட்டா தீவிரத்துடன் அணுகுவார்கள். அன்பு என்றொரு பையன் இருக்கிறான். லே அவுட் செக்‌ஷன். நடந்து முடிந்த ஐ.பி.எல். மேட்ச்களின்போது தினசரி நண்பர்களுடன் பெட் கட்டி அத்தனை பேருக்கும் பன்னிரண்டு திருமண் சாத்தினான். நாகராஜன் – கேட்கவே வேண்டாம். அலுவலகத்தில் ஒரு கிரிக்கெட் டீம் உருவாக்கி, பேட், பந்து, ஸ்டம்புகள் வாங்கி, சனிக்கிழமை மேட்ச் என்றொரு திட்டத்தைக் கொண்டுவந்ததே அவர்தான். எங்கள் அலுவலகத்தில் க்ரிக் இன்ஃபோ தளத்தின் யு.ஆர்.எல்லை ஒருபோதும் டைப் செய்திராத ஒரே ஜீவன் நானே.

நேற்றைய மேட்ச் நிறைய சந்தோஷம் கொடுத்திருக்கிறது. ஒரு நல்ல தியானம் மாதிரி வேறு சிந்தனைகளில்லாமல் மனம் குவிந்ததை, பிறகு திரும்ப வரும்போது நினைவுகூர்ந்து ரசித்தேன்.

நானும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். கேளம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இருந்த இரண்டு அணிகளில் நான் ஒன்றின் கேப்டனாகவும்கூட இருந்திருக்கிறேன். உலகில் முதல்முதலில் கிரிக்கெட் ஊழல் ஆரம்பமானது அப்போதுதான்.

என் அப்பா, அந்தப் பள்ளிக்கூடத்தின் ஹெட் மாஸ்டர். என்றால் குறுநில மன்னர் என்று பொருள். நான் சின்னப்பையன் என்றபோதும் மன்னரின் மகன். எனவே பி.டி. மாஸ்டர் மாசிலாமணி, எந்த டீம் உருவாக்கினாலும் நான் அதில் இருக்கிறேனா என்று ஒருமுறை அவசியம் கேட்டுக்கொண்டுவிடுவார். எனக்கென்ன போச்சு? மத்தியான வகுப்புகளைத் தவிர்க்க அது ஒரு நல்ல உபாயம். எனவே, கிரிக்கெட் அணி, சாஃப்ட் பால் அணி, கோகோ அணி, கபடி அணி என்று இருக்கிற அத்தனை அணிகளிலும் பெயரைக் கொடுத்துவிட்டு சாப்பாட்டுக்குப் பிறகு நேரே கிரவுண்டுக்குப் போய்விடலாம். சௌகரியம். மகாலிங்க வாத்தியாரின் கணக்கு வகுப்புகளை வேறெந்த விதத்திலும் தவிர்த்துவிட முடியாது. மதிய உணவுக்குப் பிறகு கணக்கு வகுப்புகளை சந்திப்பது போல் ஒரு துர்ப்பாக்கியம் வேறில்லை.

ஆர்வம் உண்டு எனக்கு. ஆனால் ஒருபோதும் தேர்ச்சி இருந்ததில்லை. பள்ளி அணியில் கிரிக்கெட் ஆடத் தொடங்கியபோது ஒன்றிரண்டு மேட்சுகளிலேயே மாசிலாமணி வாத்தியார் என்னை கேப்டனாக்கிவிட்டார். ஒரே காரணம், இருந்த பையன்களில் நான் ஒருத்தன் தான் ஸ்டம்புக்குக் கிட்டத்தட்ட அருகிலாவது பந்து வீசுவேன். ஒரே ஓவரில் மால்கம் மார்ஷல் போலவும் லாரி கோம்ஸ் போலவும் ஓடி வந்தும், இருந்த இடத்திலிருந்தும் வீசுவது என் வழக்கம். ஓடி வந்து வீசும் பந்து பாதி பிட்சில் நின்றுவிடும். இருந்த இடத்திலிருந்து வீசும் பந்து பெரும்பாலும் லெக் அம்பயரை நோக்கிச் செல்லும். உடம்பில் தெம்பு கிடையாது. ‘முட்ட சாப்பிடுடா. நல்லா ஸ்டிரெந்த்து வரும்’ என்று உடன் படித்த மாணவன் கலியமூர்த்தி அவ்வப்போது சொல்லுவான். முட்டை சாப்பிட்டு, அவன் வீசும் பந்துகள் பெரும்பாலும் பேட்ஸ்மனை நோக்கி அல்லாமல் விக்கெட் கீப்பரை நோக்கியே செல்வதைக் கண்டு நான் அதைத் தவிர்த்துவிட்டேன்.

டாஸ் போட்டு பேட்டிங் கிடைத்தால் முதலில் பேட் பிடித்துவிடுவேன். ஒரு கேப்டனுக்கு இந்த சலுகை கூட இல்லாவிட்டால் எப்படி?

பெரும்பாலும் எதிரணி வீரன் மாதவன் வீசும் முதல் பந்து என்னுடைய நடு ஸ்டம்பைப் பிடுங்கிவிடும். மரியாதைக்குரிய மாசிலாமணி வாத்தியார் உடனே இரண்டு கைகளையும் குறுக்கே வீசி, அந்தப் பந்தை டிரையல் என்று சொல்லிவிடுவார். ஹெட் மாஸ்டர் பையன். ஒழியட்டும், இன்னொரு பந்தையாவது அடிக்கிறானா பார்க்கலாம் என்று நினைத்திருக்கலாம்.

ஆனால் பேட்டிங் விஷயத்தில் நான் பெரும்பாலும் மணீந்தர் சிங்காகத்தான் இருந்திருக்கிறேன். மாதவனின் இரண்டாவது பந்தும் நடு ஸ்டம்பைத்தான் காதலுடன் நோக்கியபடி ஓடிவரும். இளம் ஜோடிகள் முத்தமிடுவதைத் தவிர்க்கும் உத்தேசம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை என்பதால் சமர்த்தாக அதற்கு வழிவிட்டு ஒதுங்கிவிடுவேன்.

என்ன பிரச்னை என்றால் நான் அவுட் ஆகி முடித்ததுமே எனக்கு போலிங் போடும் ஆசை வந்துவிடும். ஒரு கேப்டன் என்கிற முறையில் அணியின் ஸ்கோர் இருபதைத் தொட்டால் போதும் எனக்கு. உடனே டிக்ளேர் செய்துவிட்டு மாதவன் கோஷ்டியை ஆட அழைத்துவிடுவேன். சுலபம். நான் முதலில் போலிங் போடலாம்.

அன்றைய எங்கள் பள்ளிக்கூடத்து உலக அழகிகளான வளர்மதி, ராஜாத்தி, ஜெயலலிதா, புஷ்பலதா, சுமதி எல்லோரும் மைதானத்தின் ஓரத்தில் நின்று பால் ஐஸ் சாப்பிட்டபடி எங்களுடைய மேட்சையும் கவனிப்பது எங்களுக்குச் செய்த அதிகபட்ச மரியாதையாகும். மேற்கிந்தியத் தீவுகள் அணி சென்னைக்கு வந்திருந்த சமயம். மால்கம் மார்ஷல், கர்ட்னி வால்ஷ் [இவரை கொரட்டணி வால்ஷ் என்று மாசிலாமணி வாத்தியார் சொல்வார்.], ஜோயல் கார்னர், லாரி கோம்ஸ் போன்ற பெயர்கள் எங்கள் கிராமத்தின் அத்தனை மாவு மிஷின்களிலும் அரைபட்டுக்கொண்டிருந்தன. லாரி கோம்ஸ் மாதிரி முடி வளர்த்துக்கொண்டு குடுமிநாதன் என்கிற பத்மநாபன், பள்ளிக்கூட அழகிகள் அத்தனை பேரையும் மொத்தமாகக் கவர்ந்து எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டிருந்தான் [இப்போது அவன் அமெரிக்காவில் எங்கோ சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுவதாகக் கேள்விப்பட்டேன். பழைய உயிர் நண்பனுடன் தொடர்பே இல்லை. அதற்கு ஜெயலலிதா அவனைப் பார்த்து அடிக்கடி புன்னகை செய்தது நிச்சயம் காரணமில்லை.]

பள்ளிக்கூட அளவில் ஆண்டு முழுவதும் மேட்ச்கள் விளையாடிவிட்டு ஆண்டிறுதியில் ஒரே ஒரு சமயம் திருப்போரூர் பள்ளி அணியுடன்கூட விளையாடிய ஞாபகம். கிரிக்கெட் எனக்கு வரவில்லை. போலிங், பேட்டிங் கூட சமாளித்துவிடலாம். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு முழு ஓவர் கூட நின்று தாக்குப்பிடித்துவிடுவேன். [டொக்கு வைப்பதில் பல சிறந்த உத்திகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டிருந்தேன். அப்போதைய சிறந்த டொக்கு வைக்கும் வீரர்களான மொஹீந்தர் அமர்நாத், ரவி சாஸ்திரி போன்றவர்களை இது விஷயத்தில் எனக்கு ஆதர்சமாகவும் கொண்டிருந்தேன்.] ஆனால் ஃபீல்டிங் என்று ஒன்று இருக்கிறது. ரொம்பக் கஷ்டமான காரியம் அது. பெரும்பாலும் சும்மா இருப்பதற்குத் தோதான தேர்ட்மேன், கல்லி போன்ற இடங்களையே நான் தேர்ந்தெடுப்பேன். அப்படியும் ஒன்றிரண்டு பந்துகள் லட்டு போல் அங்கே பறந்து வரும். பந்து பறக்கும் அழகை ரசித்தபடி கோட்டைவிட்டுவிடுவேன்.

பின்னும் சில சந்தர்ப்பங்களில் மேட்ச் பார்த்திருக்கிறேன். ஜாண்ட்டி ரோட்ஸின் ஃபீல்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு ஹைக்கூவின் தீவிரத்துடன் அவர் பாய்ந்து பந்தைத் தடுக்கும் லயத்தில் என்னை மறந்திருக்கிறேன். வாசிம் அக்ரம் போலிங், ஸ்டீவ் வாவின் பேட்டிங், ஜெஃப் துஜானின் விக்கெட் கீப்பிங் என்று கொஞ்சம் தூசு தட்டினால் பழைய விருப்பங்கள் நினைவுக்கு வருகின்றன [பத்ரி நன்றாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். நேற்றுத்தான் பார்த்தேன்.]

இப்போதெல்லாம் கிரிக்கெட் பார்ப்பதேயில்லை. இங்கே தினசரி கிரிக்கெட் வேள்வி நடந்தபோது, ஒருநாள்கூட யாரிடமும் ஸ்கோர் என்னவென்று கேட்டதில்லை. வீட்டில் என் தம்பி ஒருத்தன் இருக்கிறான். நட்டநடு ராத்திரியெல்லாம் பேய் மாதிரி கண் விழித்து மேட்ச் பார்த்துக்கொண்டே இருப்பான். பக்கத்தில் கொறிப்பதற்குத் தின்பண்டங்களை அடுக்கிவைத்துக்கொண்டு ஈசி சேரில் சாய்ந்துகொண்டு ஒரு சுல்தான் மாதிரி அனுபவிப்பான். ஏனோ எனக்கு ஆர்வமில்லாமல் போய்விட்டது. கிரிக்கெட்டுக்கு நான் செய்த சிறந்த சேவை, கிரிக்கெட் ஆடாமலும் அதில் ஆர்வம் செலுத்தாமலும் இருந்ததுதான் என்று நினைக்கிறேன்.

என் சுதர்மம் அதுவல்ல என்று கண்டுகொள்ள முடிந்ததுதான் என் சிறப்பு. இம்மாதிரி ஆர்வம் ஏற்பட்டு, கவனமாக முளையிலேயே கிள்ளி எறிந்த விஷயங்கள் பல. வீணை வாசிப்பு அதில் இன்னொன்று.

கிரிக்கெட் – வீணை இரண்டு குறித்தும் தலா ஒரு கட்டுரை குமுதத்தில் எழுதியிருக்கிறேன். இந்த இரண்டையும் விட்டுவிட்டு நான் ஏன் எழுதுவதற்கு வந்தேன் என்பது அந்தக் கட்டுரைகளைப் படித்தால் புரியும்.

நேற்றைய மேட்சில் அபாரமாக விளையாடி நான்கு ரன்களையும் இரண்டு விக்கெட்டுகளையும் பெற்ற என்னை ஒருவரிகூடப் பாராட்டாமல் பத்ரி கிளம்பி சினிமாவுக்குப் போய்விட்டார். கடும் கோபத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த சனிக்கிழமை மேட்சில் அம்பயராக நின்று அவரை முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.

Share

1 thought on “நாலு ரன், ரெண்டு விக்கெட்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *