இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான்.
நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ் பீரியடுக்கு மூன்று மாத விடுமுறை விண்ணப்பம் அனுப்பிவிட்டேன். வேலை பார்த்த எட்டு வருட காலத்தில் மொத்தமாக நான்கு நாள்கூட லீவு போட்டதில்லை. எனவே என் கணக்கில் விடுமுறைக்குப் பஞ்சமே இல்லை. அப்படியும் முடியாது என்றால் சம்பளம் பிடித்துக்கொள்ளட்டும் என்ற தெனாவட்டு.
நான் விலகியது, ஒரு தீபாவளி மலர் சமயம். கல்கியில் அப்போது நான் மட்டும்தான் துணை ஆசிரியர். இவன் இல்லாவிட்டால் அவன் என்று வேலையை இன்னொருவரிடம் தர முடியாது. மிக நிச்சயமாக நிறுவனத்துக்கு அது நெருக்கடிதான். தெரிந்தேதான் அப்படிச் செய்தேன். ஏனெனில் எனக்கு அப்போது இருந்த உள நெருக்கடி அதனைக் காட்டிலும் பெரிது. துரதிருஷ்டவசமாக, என் பிரத்தியேகப் பிரச்னைகளை அடுத்தவர்களிடம் சொல்லும் வழக்கம் எனக்கு என்றுமே இருந்ததில்லை என்பதால் அன்றைய என் அவஸ்தையை நிர்வாகத்துக்குச் சொல்லவில்லை. எளிதான ஒரு html code போல ராஜினாமாக் கடிதம் எழுதினேன். அதிலேயே நோட்டீஸ் பீரியடை விடுமுறையாக எடுத்துக்கொள்வதாக ஒரு வரி சேர்த்தேன். அவ்வளவுதான்.
அது எவ்வளவு பெரிய தவறு என்று சுட்டிக்காட்டி கல்கி ராஜேந்திரன் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். கடிதத்துக்கு பதில், பதிலுக்கு பதில் என்று அது வளர்ந்து, சகிக்க முடியாததொரு கசப்பு இரு தரப்புக்கும் இடையே சாக்கடை போல அடைத்துக்கொண்டு நின்றுவிட்டது. இப்போது தெரிகிறது. சிக்கலை நான் பேசித் தீர்த்திருக்கலாம். கல்கி ராஜேந்திரனைப் போல ஒரு ஜெண்டில்மேன் உலகத்திலேயே இருக்க முடியாது. எதையும் புரிந்துகொள்ளக் கூடியவர். எல்லா சிக்கல்களுக்கும் கணப் பொழுதில் தீர்வு தரக்கூடியவர். சொன்னேனே. அந்த வயது. அந்த வயதின் வேகம். நான் இன்னொரு வேலை – அதிக சம்பளத்தில் – கிடைத்ததால்தான் கல்கி வேலையை விடுகிறேன் என்று அவர் நினைத்துவிட்டார். அது உண்மையில்லை என்று சொல்லியும் அவர் நம்பாததுதான் என் கோபங்கள் அனைத்துக்கும் உச்சம்.
சிறு வயதில் நான் நிறையப் பொய் சொல்லியிருக்கிறேன். எல்லாமே என் பெற்றோரிடம் சொன்னவை. இது குறித்து 154 கிலோ பைட் தொகுப்பில் ஒரு கட்டுரை கூட இருக்கிறது. ஆனால் என் பொய்கள் என் நிரந்தர அவமானமாகிவிடும் என்று எப்போது புரிந்ததோ, அன்று பொய் சொல்வதை நிறுத்தினேன். அதன் பிறகு விளையாட்டுக்குக் கூடப் பொய் சொல்வதில்லை. இன்று வரை நான் கடைப்பிடிக்கும் ஒரே விரதம் அதுதான். அதனால்தான் என் உண்மைகளை யாராவது பொய் என்று நினைத்தால் கடும் கோபம் வந்துவிடும். தூக்கிப் போட்டு மிதிக்கும் அளவுக்கு ஆவேசமாகிவிடும். இது என் பலவீனம். வேறு வழியில்லை. என்னால் இப்படித்தான் இருக்க முடிகிறது. (ஒரு பெரிய சோகம் என்னவென்றால், குமுதமே நான் அங்கு வேலை கிடைத்ததால்தான் கல்கி வேலையை விட்டேன் என்று நினைத்தது. அன்று என்னை அறிந்த பத்திரிகை உலக நண்பர்கள் அனைவரும் அப்படித்தான் நினைத்தார்கள். ஒவ்வொருவரிடமும் சென்று தன்னிலை விளக்கமா தந்துகொண்டிருக்க முடியும்? சரி ஒழி என்று அப்படியே விட்டுவிட்டேன்.)
இத்தனைக்கும் நான் ராஜினாமா கடிதம் அனுப்பிய அன்றுதான் கல்கியில் என் தொடர்கதைக்கான அறிவிப்பு வெளியாகிறது (அலை உறங்கும் கடல்). எனக்கு இருந்த கோபம் கல்கி ராஜேந்திரனுக்கு இருந்திருந்தால் அந்தக் கதையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ராகவனுடன் தானே பிரச்னை? அவர் எழுத்துடன் இல்லையே? என்று சொல்லியிருக்கிறார். சிறிய வருத்தத்துக்குக் கூட இடம் தராமல் அந்த நாவலைக் கல்கி அழகாகப் பிரசுரிக்க ஆரம்பித்தது. இரு தரப்புக்குமே மிக நல்ல பெயர் வாங்கித் தந்த கதை அது.
இன்று அலை உறங்கும் கடலின் மறு பதிப்பு வந்திருக்கிறது. பிரதியை எடுத்து முகர்ந்து பார்க்கும்போது, நியாயமாக ராமேஸ்வரத்தின் மண் வாசனையைத்தான் நான் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் கல்கி ராஜேந்திரன் மனத்தின் வாசனை வருகிறது. என்னை முதல் முதலில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பியவர் அவர்தான். பத்திரிகை வேலையாகத்தான் போனேன். ஆனால் ராமேஸ்வரத்துக்குப் போவது என் வேலைகளில் ஒன்றாகிவிடும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 1994-97 வரையிலான காலக்கட்டத்தில் அநேகமாக மாதம் ஒரு முறை அங்கே போய்க்கொண்டிருந்தேன். யாரிடமும் சொல்ல மாட்டேன். போகும்போதும் சரி; திரும்பி வந்த பிறகும் சரி. அங்கு போய் வருவது என் அந்தரங்கங்களில் ஒன்றானது. வெள்ளி மாலை ரயில் ஏறினால் சனி மதியம் போய்ச் சேருவேன். மீண்டும் ஞாயிறு மாலை ரயிலேறி திங்களன்று சென்னை வந்துவிடுவேன். மொத்த ராமேஸ்வரத்தையும் நடந்தே சுற்றினாலும் இரண்டு நாள் போதும். ஆனால் நூறு முறை போன போதும் அந்த மண்ணில் புதிது புதிதாக ஏதோ ஒன்று கிடைத்துக்கொண்டே இருந்தது.
எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அலை உறங்கும் கடலில் ராமேஸ்வரத்தின் ஆன்மாவை முழுதாக எடுத்துக் காட்டிவிட்டதாக அப்போதெல்லாம் ஒரு திமிர் இருக்கும். இந்த மண்ணில் மீனும் மந்திரமும் மட்டுமே விலை போகும் சரக்கு என்ற ஒரு வரிதான் அந்த நாவலின் அடித்தளம். மொத்தத் தீவின் ஆன்மாவும் அதற்குள் அடங்கிவிடுகிறது என்ற எண்ணம். அதற்குமேல் அந்த ஊரைப் பற்றிப் பேச ஒன்றுமே இல்லை என்று அப்போது நினைத்தேன். பின்னாளில் யதி எழுதியபோது என்னையறியாமல் அதில் ஒரு ராமேஸ்வரக் காட்சி வந்து அமர்ந்தது (சொரிமுத்து சித்தர், வினய்க்கு ஒரு பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுத்துக் காட்டி ஞானம் தரும் கட்டம்). அலை உறங்கும் கடல் எழுதிய காலத்துக்கு முன்பே நிகழ்ந்த சம்பவம்தான் அது. இருந்தாலும் அந்நாவலுக்குள் அது வரவில்லை. ஒளிந்திருந்து பின்னால் நிதானமாகத்தான் வெளிப்பட்டது. சமீபத்தில் Bcak Nair நான் ஏன் விபூதி வைக்கிறேன் என்று கேட்கப் போக, அதற்கு பதிலளிக்கும் விதமாக எழுதிய கட்டுரையிலும் ராமேஸ்வரம் வந்துவிட்டது. என் காலம் முழுதும் அந்தத் தீவை நினைவில் தொட்டுக்கொண்டேதான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
அவ்வளவு எளிதாக மீனுக்குள்ளும் மந்திரங்களுக்குள்ளும் அடங்கிவிடுகிற ஆன்மா அது இல்லை என்று இப்போது தோன்றுகிறது.
அலை உறங்கும் கடல் நாவல் வாங்க இங்கே செல்லவும்.