மனெ தேவுரு

இன்னொரு மொழி சீரியலுக்கு நான் வசனம் எழுதுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. விரைவில் உதயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மனெ தேவுரு’ [குல தெய்வம்] தொடருக்கு என்னை எழுத எம்பெருமான் பணித்தான். நேற்று பெங்களூரில் அதற்கான பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு. கலந்துகொண்டு திரும்பினேன். [திரைக்கதை – அமிர்தராஜ், இயக்கம் – வ. கௌதமன்]

அங்கே வேறொரு கன்னட ஷூட்டிங்குக்கு வந்திருந்த ‘முத்தாரம்’ இயக்குநர் எஸ்கேவி பூஜைக்கு வந்திருந்து வாழ்த்து சொன்னது எதிர்பாரா இனிப்பு. கன்னட நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களை முதல் முறையாகச் சந்தித்து அறிமுகம் செய்துகொண்டேன். மனெ தேவுருவுக்கு நான் எழுதும் வசனங்களை மொழி மாற்றம் செய்யவிருப்பவர் சாரக்கி மஞ்சு. பத்தாண்டுகளுக்கு மேலாக கன்னட சீரியல் உலகில் முக்கியமான எழுத்தாளராக அறியப்படுபவர்.

மனெ தேவுரு வரவிருக்கும் பத்து மணி ஸ்லாட் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக ‘மாங்கல்யா’வால் ஆளப்பட்டு வந்தது. ஆசியாக் கண்டத்தில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிக அதிக எபிசோடுகளைத் தாண்டியது அது. (இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேலே.) ‘மாங்கல்யா’, தமிழ் மெட்டி ஒலியின் கன்னட வடிவம். ஒரிஜினல் கதை எழுநூற்று சொச்ச எபிசோட்களில் முடிந்துவிடும். ஆனால் கன்னடத்தில் மக்கள் அதை முடிக்க விரும்பவில்லை. எனவே திரைக்கதையை வளர்க்கும் பொறுப்பை சினி டைம்ஸ் ராஜ் பிரபுவிடம் அளித்தது.
முடியவிருந்த ஒரு கதையை மேற்கொண்டு ஆயிரத்தி ஐந்நூறு எபிசோடுகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றார் அவர்.

டிவிக்கான திரைக்கதைக் கலையில் ராஜ்பிரபு ஒரு பிரம்ம ராட்சசன். நம்பமுடியாத திறமைசாலி. ஒரே சமயத்தில் நாலு, ஐந்து, ஆறு – எத்தனை ப்ராஜக்டுகளை வேண்டுமானாலும் சுவாரசியக் குறைபாடின்றி, அநாயாசமாகக் கையாளக்கூடியவர். இந்த வகையில் எனக்கு அவர் பெரிய இன்ஸ்பிரேஷன்.

மாங்கல்யா இப்போது நிறைவுக்கு வருகிறது. அந்த இடத்தில் மனெ தேவுரு. தாலியை வெளியே தெரியும்படி அணிந்தால் கன்னட சீரியல், புடைவைக்குள்ளே போட்டுக்கொண்டால் தமிழ் சீரியல் என்று விளையாட்டுக்கு முன்பொரு சமயம் ட்விட்டரில் சொல்லியிருந்தேன். இல்லை. நிறையவே கலாசார வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்தது. என் எழுத்தில் கோடிடப்படவிருக்கும் அந்த இடங்களை அவர் நிரப்பிச் செல்வார்.

ஒரே சமயத்தில் இப்போது நான்கு எழுதவேண்டிய கட்டாயமாகியிருக்கிறது. இரண்டாவது, மூன்றாவது வந்தபோது மிகவும் பயந்தேன். முடியுமா என்று திரும்பத் திரும்ப யோசித்துத்தான் ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த நாலாவதில் எனக்கு அத்தகைய அச்சம் ஏதுமில்லை. இட்டமுடன் என் தலையில் இதனை எழுதுபவன் அதனையும் அப்படியே எழுத வைப்பான்.

அக்டோபர் 15 முதல் உதயா டிவியில் காணத் தவறாதீர்கள்!

Share

12 comments

 • ரொம்ப ச்ந்தோஷம்.கன்னடத்திலும் கொடி கட்டிப் பறக்க எனது வாழ்த்துகள் ( வயது இருக்கிறது) உங்களுக்கு இப்போது மிக்வும் தேவை தூக்கப் பழக்கம். நினைத்த நேரத்தில் தூங்கிப் பழகிக் கொள்ள வேண்டும். இது எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம். பழக்கத்தின் மூலமும் இதைக் கைக்கொள்ள முடியும்.இத்திற்னை ஏற்படுத்திக் கொண்டால் நிறைய நேரம் கிடைக்கும்.
  பிறகு ஞாபக சக்தி. அலெக்சாண்ட டியூமாஸ் தனது கேர்ல் பிரண்ட்சுடன் இருக்கும் போது அவரது நாவலின் அடுத்த வாரத்துக்கான பகுதியை — அவரைத் தேடிக்கண்டு பிடித்துக் கேட்பார்களாம். மனுஷன் போன வாரம் எழுதிய பகுதியின் கடைசி வரி என்ன என்ப்தை மறக்காமல் தொடர்ச்சிக்கு இடைவெளி இல்லாமல் எழ்திக் கொடுப்பாராம். ஆகவே கேர்ல் பிரண்ட்ஸ் இல்லாமலேயே அந்த ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  ஒன்றை மறந்து விடாதீர்கள். தெலுங்கு உலகம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது

 • பாரா சார், மனதேவுரு வேறு குலதேவுரு வேறு. எடுத்து வளர்த்த அத்தை, குடும்பத்தையே நல்ல வழிக்கு கொண்டு வந்த அக்கா, மாமா, பாட்டி போன்றோர் இறந்த பிறகு மனதேவூராய் வணங்கப்படுவார்கள். ஆனால் குலதெய்வம் என்பது திருப்பதி பெருமாள், மகரநெடுங்குழைகாதன்,
  மாரியம்மன் போன்ற தெய்வங்கள். பொதுவாய் மன தேவூரூ என்று கதைகளிலும், கிராம வீடுகளில் சொல்லப்படுவது அவ்வப்பொழுது கண்ணில் படும், யாரையும் தொந்தரவு செய்யாத நாகம். உங்க “மன தேவூரூ” கதைபில் நாகபாம்பு வருகிறதா என்றுக் கேட்டு சொல்லவும் 🙂

 • வாசகர்கள் மேல் உள்ள அன்பினால் தாங்கள் தவறாமல் உதயா டீவி பாருங்கள் என சொல்லிவிட்டீர்கள். ஆனால் மொழி தெரியாமல் நாங்கள் எப்படி தங்கள் வசனத்தை ரசிக்க முடியும் ? தமிழும் கன்னடமும் தெரிந்த தங்கள் வாசகர்களுக்கு தான் இதை ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் தெலுங்கு, மலையாளம் இவற்றிலும் தாங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.

 • வாழ்த்துக்கள் சார்!!!!உங்கள் மூவர் சிறுகதை தொகுப்பும் நிலாவேட்டை நாவலும் சமீபத்தில் படித்தேன்.நிலாவேட்டை மிக விறுவிறுப்பாக இருந்தது.சிறுகதைத் தொகுப்பில் எல்லா கதைகளும் அருமை.பத்திரிக்கைகளிலும் எழுதுங்க சார்.

 • பாரா சீரியல் வசனகர்த்தாவாக மாறியது தமிழ் நான்-ஃபிக்சன் உலகிற்கு இழப்புதான் என்றாலும், தமிழைத் தாண்டி கன்னட சீரியல் உலகிற்கும் அவர் செல்வது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. கன்னடமும் அறிந்த பாரா ரசிகன் என்ற முறையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

 • You are wasting your knowledge and energy in dissolvable projects. No one is going to remember these works of you. Kizhakku was your peak. Don’t waste your time on mega serials.

 • விரைவில் நீங்கள் தாய்லாந்து, சீனப் படங்களுக்கு வசனம் எழுதினாலும் ஆச்சரியப்படப் போவதில்லை 🙂

 • Sir,
  One doubt. Is in it more time and money consuming effort in terms of production value to write dialogues in one language and have some one to translate into another one..

  Ofcourse you are the best, just trying to understand the reason behind this.

  Thanks
  Rajaraman

 • அன்பின் பா.ரா,

  எனக்கு உங்கள் மேல் எவ்வளவு நல்ல மதிப்பு உண்டோ, அந்த அளவிற்கு T.V Serial கள் மீது வெறுப்பு உண்டு.ஏற்கனவே குழப்பத்திலிருக்கும் மனித மனதில், மேலும் எதிர்மறை எண்ணங்களையும், துவேஷங்களையும் பெருக்குவதில் இந்த தொடர்கள் பெறும் பங்கு வகிக்கின்றன.அதுவும் குறிப்பாக Sun TV தொடர்கள்.

  எனவே நீங்கள் முழு நேர பணியாக இதை மேற்கொண்டிருப்பது எனக்கு வருத்ததைதான் தருகிறது.
  சீரியல் எழுதி சம்பாதிப்பதை விட கள்ள சாராயம் விற்று சம்பாதிப்பது மேல் என்பது என் கருத்து.அதை உங்கள் பேனா மாற்றிவிட்டால் நான் மிக மகிழ்வேன்.
  ஆனால்,இப்போதைக்கு “The stomach has won over the mind” என்றுதான் தோன்றுகிறது.

  நீங்கள் உங்கள் வழியில், பொறுப்பாக, நல்ல முறையில் எழுதி,ஒரு trend setter ஆக வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

  நன்றி,

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter